செல்லுலோஸ்
cellulōs
இதுவும் ஒரு கார்போஹைட்ரேட் என்னும் கரிமச் சேர்ம வகையைச் சேர்ந்தது.
இதுவும் ஒரு கார்போஹைட்ரேட் என்னும் கரிமச் சேர்ம வகையைச் சேர்ந்தது. 100இல் இருந்து 800 குளுகோஸ் மூலக்கூறுகள் இணைந்து நீண்ட சங்கிலித் தொடராகி செல்லுலோஸாக உருவாகிறது. தாவர செல் சுவர்கள் இச்சேர்மத்தால் ஆனது. இது ஒரு உயிரியல் பல்படிச் சேர்மமாகும்.
செல்லுலோஸ் ஒருவகை மரப்பொருளாகும். இது தரவரங்களின் உள்ளமைப்பில் அடங்கியுள்ளது. எனவே, தாவரங்களிலிருந்து இது ஏராளமாகக் கிடைக்கிறது. மரத்தில் லிக்னின் என்ற பசைப் பொருள் உண்டு. இது மரத்திலுள்ள செல்லுலோஸ் நார்களை மரத்துடன் நன்கு ஒட்டிக்கொள்ளச் செய்கிறது.
தாவரங்கள் வளையவோ அல்லது வேண்டியவாறு நெகிழ்ந்து கொடுக்கவோ இயலும் வகையில் இயங்கச் செய்வது செல்லுலோசேயாகும். தாவரங்களில் ஏற்படும் மிருதுத்தன்மைக்குச் செல்லுலோசே காரணமாகும்.
பசுந்தாவரங்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காகவே செல்லுலோசை உருவாக்குகின்றன. செல்லுலோஸ் உருவாக அடிப்படை வேதியியற் பொருட்களாக அமைவன சர்க்கரைச் சத்து, கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியனவாகும். இவற்றைத் தாவரங்கள் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் பெறுகின்றன. இவைகள் மூலம் உருவாகும் சர்க்கரைப் பொருள் கரைக்கப்பட்டு, சாறு வடிவில் உட்கவரப்பட்டு, தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இவற்றின் பெரும்பகுதி தாவரத்தில் எது வளர்ச்சிப் பகுதியாக அமைந்துள்ளதோ அங்கேயும் எங்கு பழுதான பகுதியுள்ளதோ அங்கேயும் செல்கிறது. இந்தச் சர்க்கரையிலிருந்து சத்தின் ஒரு பகுதி செல்லுலோசாக மாற்றமுறுகிறது. தாவரங்கள் இதைப் புதிய உயிரணுக்களின் சுவர்களை உருவாக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றன.
செல்லுலோஸ் இயற்கையாக உருவாகும் ஒரு பொருளாகும். இதை மனிதர்கள் வேதியியல் முறையில் சோதனைச் சாலையில் உருவாக்க இயலாது. செல்லுலோசை நாம் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி பலனடைந்து வருகிறோம், தாவரங்கள் மடிந்தபின், அதிலுள்ள ஈரப்பசையெல்லாம் உலர்ந்த பின்னர் செல்லுலோசைப் பெறுகிறோம். பருத்தி இயற்கையில் கிடைக்கும் தூய செல்லுலோசுக்கு நல்ல சான்றாகும், பருத்தியை நூலிழைகளாகத் துணி தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தூய பஞ்சையோ, சணலையோ நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடனும் நீருடனும் ஆல்கஹாலுடனும் ஈதருடனும் ஒன்றன்பின் ஒன்றாக வினைப்படுத்தி செல்லுலோசைத் தூய நிலையில் தயாரித்துப் பெற முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் செல்லுலோஸ் படிக உருவமற்ற பொருளாகத் தோற்றமளிக்கும். பலவகையான வேதி வினைப்பொருட்களில் செல்லுலோஸ் கரையும் தன்மை கொண்டது. சான்றாக நாக குளோரைடு கலந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்திலும் தாமிர ஹைட்ராக்சைடின் அம்மோனியாக் கரைசலிலும் செல்லுலோஸ் கரையும்.
கார்பனாகிய கரிமப் பொருள்களுக்குள் செல்லுலோசே தொழில் துறைகளுக்கு மிகவும் பயன்படும் பொருளாக விளங்குகிறது. பருத்தி மற்றும் சணல் சம்பந்தமான நெசவுத் தொழில் இழை வடிவில் இது பெரிதும் பயன்படுகிறது. காகிதத் தயாரிப்பிற்கும் இது ஏராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெடி மருந்துத் தொழிலும் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைப் பட்டுத் தொழிலைப் பொறுத்தவரை செல்லுலோசே அடிப்படைப் பொருளாக அமைந்துள்ளது. செல்லுலாய்டு எனும் குழைமப் பொருள் (பிளாஸ்டிக்) தயாரிப்பிலும் இதுவே முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படச் சுருள்கள் (Photofilm}தயாரிக்கவும் செலோஃபேன் தாள் தயாரிக்கவும் செல்லுலோஸ் பெரிதும் பயன் படுகிறது.
மனிதர்களால் செல்லுலோசை ஜீரணிக்க முடியாது. ஆனால், ஆடு, ஒட்டகம் போன்ற மிருகங்கள் தங்கள் வயிற்றில் ஒருவகை நுண்மங்களாகிய பாக்டீரியாக்களைப் பெற்றுள்ளன. அவற்றின் உதவி கொண்டு செல்லுலோசை உண்டு சீரணம் செய்து கொள்கின்றன.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 173)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a334v47s/
தமிழ்“செல்லுலோஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a334v47s/APA
Oliyon Research. (2026). செல்லுலோஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a334v47s/MLA
"செல்லுலோஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a334v47s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment