தோலுக்கான இயற்கைப் பதனிடு பொருள்களுக்குப் பகுதி அல்லது முழுப் பதிலீடாகவோ, சேர்க்கைப் பொருள்களாகவோ, பயனாகும் தொகுப்பு வழிப் பொருள்கள் செயற்கைப் பதனிடு பொருள்கள் (synthetic tanning materials) எனப்படும். பொதுவாக, இவை படிகத் தன்மையற்ற நீரில் கரையும் வேதிப் பொருள்களாகும். தூள் வடிவிலோ, கரைசல் நிலையிலோ கிடைக்கும் இவை, நிறமற்ற வகை முதல் அடர் பழுப்பு நிறம் வரை தயாரிக்கப் படுகின்றன. பெரும்பாலான செயற்கைப் பதனிடு பொருள்கள் ஃபார்மால்டிஹைடை ஃபீனால்கள், நாஃப்தலீன் சல்ஃபோனிக் அமிலங்கள், டை அரைல் சல்ஃபோன்கள், யூரியா, மெலமின், டைசயன்டை அமைடு, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் குறுக்க வினைப் படுத்திப் பெறப் படுகின்றன. சில செயற்கைப் பதனிடு பொருள்கள் ஃபார்மால்டிஹைடை ஈடு படுத்தாமலே தயாரிக்கப்படுகின்றன. காட்டாக, ஸ்டைரீன்–மலியிக் நீரிலி, அரைல் டைஐசோ சயனேட்டுகள், லிக்னின் சல்ஃபோனேட்டுகள் ஆகியன. 1905இல் நீரின்ஸ்டீன் என்பார், ஃபீனால்–ஃபார்மால்டிஹைடு குறுக்க வினை பற்றிய தன் ஆய்வுகளின் போது, சில வினை விளைப் பொருள்கள் ஊன்பசை யுடன் வீழ் படிவைத் தருவதுடன், மர வகை டானின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளமையையும் அறிந்தார். இவருடைய கண்டு பிடிப்பை ஸ்டியஸ்னீ என்பார் உறுதி செய்தார். 1913இல் ஸ்டியஸ்னீ ஓர் உரிமைப் பட்டயம் வேண்டிப் பெற்றார். பல ஆண்டுகளுக்கு நெரடால் என்னும் வணிகக் குறியுடன் இவருடைய தயாரிப்பு, தோல் பதனிடு பொருளாக விற்கப் பட்டு வந்தது. நாஃப்தலீன் α–அல்லது β–சல்ஃபோனிக் அமிலத்தை ஃபார்மால்டிஹைடுடன் வினைப் படுத்திப் பெறப் படும் தோல் பதனிடு பொருளின் இயற்கைப் பதனிடு பொருள்களில் இடம் பெறுவது போலன்றி, ஃபீனாலிக் தொகுதிகள் இடம் பெறுவதில்லை. எனவே, ஏனைய பதனிடு பொருள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செயல் முறை கொண்டிருக்கும். இப்பொருள் முழுதும் அயனி இயக்கமாகவே செயல் படுகிறது. எதிர்க் குறியீடு கொண்ட சல்ஃபா தொகுதிகள் தோலின் புரதத் தொகுதிகளுடன் வினையுறுகின்றன; மாறாக, பயிரின டானின்கள் ஃபீனாலிக் தொகுதிகள் வாயிலாக வினையுறுகின்றன. நாஃப்தலீன் வகைப் பதனிடு பொருள்கள் மிகக் குறைந்த pH மதிப்புக் கொண்ட கரைசல்களுக்கு மட்டுமே ஏற்றவை. எனவே, பயிரினப் பதனிடு பொருள்களுக்குப் பதிலீடாகவோ, அவற்றைப் பயன்படுத்தும் உத்தியைக் கொண்டோ நாஃப்தலீன், வகைப் பதனிடு பொருள்களைப் பயன்படுத்த இயலாது. பெரும்பாலும், இவை அமில அல்லது உப்பு வடிவில் பயன் படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பயன்கள். (அ) குரோமியப் பதனிடலுக்குப் படுத்தப்பட்ட தோலின் மீது, பதனிடு முதனிலையாக, நடு நிலையாக்கப் பொருளாக, நிற நீக்கியாக, ரெசின் வகைப் பதனிடலின் சிதறச் செய்யும் பொருளாக, அமில மற்றும் நேரடிச் சாயங்களுக்குச் சம மட்டப்படுத்தும் பொருளாக, காரச் சாயங்களுக்கு ஊன்று பொருளாகப் பல வகைகளிலும் ஈடுபடுத்தலாம். (ஆ) பயிரினப் பதனிடலுக்குப் படுத்தப்பட்ட தோலின் மீது, பதனிடு முதனிலையாக, வீழ் படிதலைத் தடுப்பதற்குப் பயிரினப் பதனிடு பொருள் சாற்றுடன் சேர்க்கைப் பொருளாக, பயிரினப் பதனிடு பொருள் தோலினுள் ஊடுருவுவதை ஊக்குவிக்கும் பொருளாகப் பயன்படுத்தலாம். அரோமாடிக் ஹைட்ராக்சி அமைப்புகள் (ஃபீனாலிக் அமைப்புகள்). நாஃப்தலீன் வகைகளை விட ஃபீனாலிக்குகள் பதனிடு திறனைக் கூடுதலாகக் கொண்டவை. கனத்த தோல் தயாரிப்பில் பயிரினப் பதனிடு பொருள்களுக்கு முழுப் பதிலீடாக, இவற்றைப் பயன் படுத்தலாம். வினை படு பொருள்கள், குறுக்க வினை, கரைசலாக்கம் ஆகியவற்றில் வேறுபட்ட பல பதனிடு பொருள்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இச்செயற்கைப் பதன பொருள்களைத் தயாரிப்பதற்கு இரு பொது வழி முறைகள் உள்ளன; (அ) ஒரு ஃபீனாலிக் சேர்மத்தைச் சல்ஃபோனேற்றம் செய்து, பின்பு ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினையாக்கம் செய்தல். (ஆ) ஃபீனாலிக் சேர்மத்தை ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைக்குட் படுத்தி, பெறப் படும் பொருளைச் சல்ஃபோனேற்றம் செய்தல், சல்ஃபோனேற்றம் செய்தல் என்பது. பதனிடு பொருளின் நீரில் கரையும் திறனைக் கூடுதலாக்கும் முறையாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தொழிலக அளவில் தயாரிக்கப்படும் தொகுப்புப் பதனிடு பொருள்களுக்கு, தொடக்க வினைப்படு பொருள்களாக ஃபீனால்கள், கிரசால்கள், நாஃப்தால்கள், பிஸ்ஃபீனால்கள் ஆகியன பயனாகின்றன. ஃபீனால் சல்ஃபோனிக் அமிலங்களுடன், ஃபார்மால்டிஹைடைக் குறுக்க வினைப் படுத்தித் தோற்றுவிக்கப் படும் பதனிடு பொருள்களுக்குப் பதனிடு திறன் கூடுதலாகவுள்ளது. இட்டு நிரப்பும் பண்பு குறைவாக உள்ளமையால், இவை கனத்த தோல் தயாரிப்பில் பயிரினப் பதனிடு பொருள்களுக்கு மாற்றாகப் பயன் படுத்தத் தக்கவையல்ல. இக்குறையை நீக்கும் பொருட்டுச் சல்ஃபோனேற்றத்தை முழுமையாகச் செய்யாதிருத்தல் வழக்கம். பாலிஃபீனால்களுடன் ஃபார்மால்டிஹைடைக் குறுக்க வினை செய்து கிடைக்கும் பதனிடு பொருள்கள் சல்ஃபோனேற்றம் செய்யப் படாமலேயே, நீரில் கரைய வல்லவை; பதனிடு திறன், நிரப்பும் தன்மை ஆகியவற்றையும் கூடுதலாகக் கொண்டவை. ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினையூக்கம் செய்யும் அளவைக் கூடுத- லாக்குகையில் தொடக்கத்தில், பதனிடு திறன் கூடுதலாகி, பின்பு சரிகிறது. சல்ஃபோனேற்றத்தின் அளவு கூடுதலாக்கப் பட்டால், பதனிடு திறன் குறையக் கூடும். எனவே, பதனிடு பொருளின் நீரியக் கரை திறனை அறுதியிடும் அளவுக்கு மட்டுமே சல்ஃபோனேற்றம் நிகழ்த்தப் பட வேண்டும். சல்ஃபோனேற்றத்திற்குப் பிறகு ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைப் படுத்தும் வழி முறையில் உருவாகும் செயற்கைப் பதனிடு பொருள்களிலுள்ள ஃபீனாலிக் தொகுதிகள் பதனிடு திறனைப் பாதிப்பதில்லை. –OH தொகுதிக்குப் பதிலாக –OCH₂ தொகுதியைக் கொண்ட பதனிடு பொருள்களும் பதனிடு திறனில் ஃபீனாலிக்குகளிலிருந்து வேறுபடுவதில்லை. மாறாக, ஃபார்மால்டிஹைடுடன், ஃபீனாலைக் குறுக்க வினை செய்து, பின்பு, சல்ஃபோனேற்றம் செய்து பெறப்பட்ட பதனிடு பொருள்களில் ஃபீனாலிக் தொகுதிகள் பதனிடு தன்மையைப் பாதிக்கின்றன. ஃபீனாலிக் தொகுதியை மெத்திலேற்றம் செய்தால், பதனிடு தன்மை அழிக்கப் படுகிறது. ஃபீனாலிக் தொகுதியின் அமிலத் தன்மையைக் கூடுதலாக்கிப் பதனிடு திறனை உயர்த்தலாம். எடுத்துக் காட்டாக, சல்ஃபோன் தொகுதியைப் புகுத்தி, பின்பு, ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினை நிகழ்த்தலாம்.சல்ஃபோனேற்றம் செய்யப்பட்ட சேர்மத்தையும், சல்ஃபோனேற்றத்திற்குட் படுத்தப் படாத சேர்மத்தையும் கலவையாக்கி, அக்கலவையை ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைப் படுத்திப் பதனிடு பொருளைத் தொகுக்கலாம். பதனிடு திறன் ஃபீனாலிக் தொகுதிகள் எண்ணிக்கை, இருக்கை இரண்டையும் பொறுத்ததாகும். ஒரு மூலக் கூறுக்கு, ஓரிரு சல்ஃபோனேற்றமடையாத ஃபீனாலிக் வளையங்கள் இடம் பெற்றிருத்தல் பதனிடு திறனை உயர்த்த உதவும். அரோமாட்டிக் ஹைட்ராக்சி (செயற்கைப்) பதனிடு பொருள்களுடன், லிக்னின் சல்ஃபோனேட்டுகளைக் கலந்து, தயாரிக்கப்படும் கூட்டமைப்புகள் விலை குறைவாக இருப்பதுடன், பயிரினப் பதனிடு பொருள்களுக்கு முழுமையான பதிலீடாகவும் பயனாகின்றன. ஃபர்ஃபியூரால்–ரெசார்சினால் குறுக்க வினை விளைப் பொருளைத் தொடக்கமாகக் கொண்ட ஃபீனாலிக் அமைப்புகள் இவ்வகையில் சிறந்தவை ஆகும். டைஃபீனைல் சல்ஃபோன் வகைப் பதனிடு பொருள்கள் சாதாரண ஃபீனால் வகையைப் போன்று, நாளடைவில் பழுப்பு நிறமேற்பதில்லை. எனவே, வெள்ளை நிற மற்றும் வெளிர் நிறத் தோல் தயாரிப்பில் இப்பொருள் ஈடு படுத்தப் படுகிறது. ஃபார்மால்டிஹைடுக்குப் பதிலாக, யூரியா-ஃபார்மால்டிஹைடைப் பயன் படுத்தினால், ஒளி எதிர்ப்புத் திறன் கூடுதலாகக் கொண்ட பதனிடு சேர்மத்தைப் பெறலாம். யூரியா, மெலமீன், டைசயன்டைஅமைடு ஆகிய N–தொடர்புடைய செயற்கைப் பதனிடு பொருள்கள், ஃபீனாலிக் நாஃப்தலீன் வகைப் பொருள்களிலிருந்து பெருமளவு வேறுபட்டுள்ளன. மேற்கூறிய (நைட்ரஜன் கொண்ட) சேர்மங்களை ஃபார்மால்டிஹைடுடன் பகுதிப் பல்லுறுப்பாக்கம் (polymerisation) செய்து, தோலினுள் புகுத்தி, பின்பு, அமில வினையூக்கிகளைக் கொண்டு, பல்லுறுப்பாக்கத்தை முழுமையாக்க வேண்டும். குரோமியம் பதனிடப் பட்ட தோலை மீள் பதனிடல் செய்வதற்கு இது ஏற்ற முறையாகும். இலேசான, வெளிர் நிறங்கொண்ட தோல்களுக்கு ஸ்டைரீன்–மலியிக் நீரிலி வகை ஏற்றதாகும். ஓர் உலோக உப்பினால், தோலில் நிலை நிறுத்தப் படும் இப்பொருள் தோலின் நுண் துளைகளைச் செவ்வனே நிரப்புகிறது. நீரில் கரையா செயற்கைப் பதனிடு பொருள்கள். பதனிடு பொருளைப் பால்மமாக்கி, பின்பு தோலின் மீது ஏற்ற வேண்டும். நீருக்குப் பதிலாகக் கரிமக் கரைப்பானை அலிஃபாட்டிக் ஐசோசயனேட்டை பயன் படுத்தலாம். நீள் சங்கிலி அலிஃபாட்டிக் சல்ஃபோனைல் குளோரைடுகள் பால்ம வடிவத்தில் இடப் பட்டால், பதனிடு தன்மை பெறுவதும் அறியப் பட்டுள்ளது. சல்ஃபோனைல் குளோரைடுகள் தோலிலுள்ள காரத் தொகுதிகளுடன் வினைப் பட்டுச் சல்ஃபோனமைடு தொகுதிகளை உருவாக்குவதே பதனிடு செயலுக்கு அடிப்படையாகும். இரண்டாம் உலகப் பெரும் போரின் போது, தோன்றிய தோல் பதனிடு பொருள் பற்றாக் குறையை நீக்கும் பொருட்டு, ஜெர்மனியில் செயற்கைப் பதனிடு பொருள் தயாரிப்பு உத்திகளில் ஆய்வு நிகழ்த்தப் பட்டது. செயற்கைப் பதனிடு பொருள்கள் மூன்று நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் பட்டன. துணை நிலைச் செயற்கைப் பதனிடு பொருள்கள். இவை பயிரினச் செயற்கைப் பதனிடு பொருள்களுடன் சேர்ப்பதற்கு ஏற்றவை. கிரசால், நாஃப்தலீன், சல்ஃபோனிக் அமிலம் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இவை pH =1 கொண்டவை. பரிமாற்ற வகை. இவை பயிரின வகையைப் பதிலீடு செய்ய வல்லன. pH = 3 கொண்ட இவை ஃபீனால், டைஹைட்ராக்சி டைசல்ஃபோன் ஆகியவற்றை ஃபார்மால்டிஹைடுடன் குறுக்க வினைப் படுத்தி, பின்பு சல்ஃபோனேற்றம் செய்து பெறப் பட்டவை. உயர் வகை (supra). இவை வெண் தோல் போன்ற சிறப்பு வகைத் தோல் தயாரிப்புக்கானவை. டைஹைட்ராக்சி டைஃபீனைல் சல்ஃபோன், ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் இப்பொருள் pH = 1.4 கொண்டது. மெட்டா டைஹைட்ரோபென்சீன், சல்ஃபோனைல் குளோ- ரைடை, பென்சிடீன் டைசல்ஃபோனிக் அமிலத்துடன் வினைப் படுத்தி, நைட்ரோ தொகுதிகளை அமினோ தொகுதிகளாக ஒடுக்கி, இறுதியாக 2,6 டைகுளோரோபென்சீன் சல்ஃபோனைல் குளோரைடுடன் குறுக்க வினைப் படுத்தி வெண் தோலைத் தயாரிக்கலாம். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. J.M. Coulson and J.F. Richardson, Chemical Engineering, Third Edition, Pergamon Press, Oxford, 1978,