இராமாமிர்த அரங்கநாதன்
irāmāmirta araṅkanātaṉ
நூலகவியலில் தனிச் சிறப்புற்று விளங்கிய அரங்கநாதன் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீர்காழியின் அருகிலுள்ள உபயவேதாந்த புரத்தில் (9.8.1892) பிறந்தார்.
நூலகவியலில் தனிச் சிறப்புற்று விளங்கிய அரங்கநாதன் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீர்காழியின் அருகிலுள்ள உபயவேதாந்த புரத்தில் (9.8.1892) பிறந்தார். இராமாமிர்த அய்யருக்கும் சீதாலட்சுமிக்கும் பிறந்த இவர், தம் ஆறாம் வயதில் தந்தையை இழந்து, பள்ளி ஆசிரியரான தம் பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.
அரங்கநாதன் அக்கால முறைப்படி இளமையிலேயே உருக்குமணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். உருக்குமணி அம்மையார் 1928–இல் இயற்கை எய்தினார். பின்னர்ச் சாரதா அம்மையாரை 1929–ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.
அரங்கநாதன் சீர்காழியிலுள்ள சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியில் 1908–ஆம் ஆண்டு வரை கல்வி பயின்றார். பின்னர், இவர் கல்லூரிப் படிப்பிற்காகச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் 1909–ஆம் ஆண்டு சேர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கினார். அரங்கநாதன் 1913–இல் பி.ஏ. பட்டப்படிப்பையும் 1916–இல் கணிதத்தில் பட்ட மேற்படிப்பையும் பயின்று தேர்ச்சி பெற்றார். பின்னர், இவர் 1917–இல் சென்னைச் சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலூரியில் கல்வி பயிற்றுவித்தலில் சான்றிதழைப் (Professional Certificate) பெற்றார். இவர் கணிதத்துறையில் பட்ட மேற்படிப்பை முடித்ததும் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியின் கணிதத் துறையில் 1921–ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராகத் தம் ஆசிரியப் பணியினை மேற்கொண்டார்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் நம் நாடு அன்னியர் ஆளுகையில் இருந்தபோது அவர்களுடைய கல்விக் கொள்கையின்படி சென்னையில் கி.பி. 1857–ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம் கி.பி. 1857–இல் தொடங்கப்பட்டிருந்த போதிலும், 1907–இல் தான் அதற்கென்று தனி நூலகம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர்த் தக்க நூலகரை நியமிக்கப் பல்கலைக்கழகத்தார் எண்ணினர். அப்பொழுது சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அரங்கநாதனை, நூலகத் துறையில் சிறிதும் அனுபவமில்லாதவராகவிருந்த போதிலும், தக்கவர் இவரே எனக் கருதி, 1924–இல் சென்னைப் பல்கலைக்கழக நூலகராக நியமித்தனர். அரங்கநாதன் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகர் பணியை ஏற்றுக்கொண்டதும், இவர் தம்மை நூலகத்துறையில் தகுதிப் படுத்திக்கொண்டதால், அத்துறையில் முழுமையாகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் தானாகவே கிட்டியது. நூலகத் துறையில் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பல்கலைக் கழகம் இவரைப் பயிற்சிக்கென்று இங்கிலாந்திற்கு அனுப்பியது. அதன்பின்னர்ப் பயிற்சியின் முடிவில் ஆனர்சு (Honours Certificate) சான்றிதழையும் பெற்றார்.
எல்லோராலும் ‘நூலகமேதை’ என்று அந்நாளில் போற்றப்பட்ட டபிள்யு.சி. பெர்விக்கு சேயர்சின் (W.C. Berwic Sayers) நூலகக் கருத்துகள் இவரை மிகவும் ஈர்த்தன. இவர் இங்கிலாந்தில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ நூறு நூலகங்களைப் பார்வையிட்டு, அவற்றின் அமைப்பு, செயல்திறன், படிக்க வருபர்களுக்கு ஆற்றிய தொண்டுகள் ஆகியவை குறித்து மிகவும் நுட்பமாக அறிந்து கொண்டார். அங்குள்ள கிராய்டன் பொது நூலகத்தில் நூலகப் பயிற்சியினையும் மேற்கொண்டார். அந்நூலகத்தில் நடைபெறும் பணியினையும் தெரிந்து கொண்டார்.
மேலை நாட்டு நூலகங்களின் சமுதாய உணர்வு இவரை மிகவும் ஈர்த்தது. இருப்பினும் அங்கும் பல்வேறுபட்ட பணிச் சிக்கல்கள், தொழில் முறை உத்திகள், வாய்ப்பு வசதிகள் முதலானவற்றில் குறைபாடுகள் இருத்தலை உணர்ந்தார்.
தாம் மேற்கொண்ட பணிக்குரிய பயணம் முடிந்து சென்னை திரும்பியபின் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தை முழுமையாகப் பயன் தரும் நூலகமாக மாற்றும் முயற்சியில் தம்மை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார். நூலகத்துறையில் தாம் கற்ற அறிவையும், பெற்ற அனுபவத்தையும் ஆய்ந்து பார்க்கும் ஆய்வுக் கூடமாகச் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தைப் பயன்படுத்தி, மக்கள் நுகரும் நூலகமாக மாற்றினார்.
இங்கிலாந்திலிருந்து திரும்பியபின் நூலகவியலுக்குரிய ஐந்து நூலகச் சட்டங்களை (Five Laws of Library Science) உருவாக்கிப் பின்னர், அவற்றை நூலாக வெளியிட்டார். மேலும் தொடர்ந்து நூல்களைப் பொருள்வாரியாகப் பாகுபடுத்தி அடுக்குவதற்காகக் கோலன் பகுப்பு முறையினையும் (1933) நூல்களைப் பட்டியலிடும் முறையினையும் (1934), நூலக ஆட்சிமுறையினையும் (Liberary Administration - 1935) இவர் நூலகவியலுக்கு வழங்கினார்.
அரங்கநாதன் நூலகப் பயன்பாட்டுக்கு ஐந்து விதிகளை உருவாக்கினார். அவையாவன:
:: நூல்கள் படிப்பதற்கே (Books are for use).
:: ஆளுக்கு ஒரு நூல் (Every reader his/her book).
:: நூலுக்கு ஓர் ஆள் (Every book its reader). :: வாசகர், நூலகப் பணியாளர் காலங் கருதுக (Save the time of the reader staff).
:: நூலகம் வளரும் ஓர் அமைப்பு (Library as Growing Organization).
அறிவியல் அடிப்படையில் அரங்கநாதன் உருவாக்கிய இந்த ஐந்து விதிகளின் செயல்முறையை அவரே தாம் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் செயற்படுத்தத் தொடங்கினார்.
அரங்கநாதனால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கோலன் பகுப்பு முறை நூலகத்துறையைச் சேர்ந்த பல மேநாட்டு அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இப்பகுப்புமுறை முன்பு கையாளப்பட்டிருந்த பகுப்பு முறைகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாகவும் தனித்தன்மையுடையதாகவும் விளங்கியது.
கோலன் பகுப்புமுறை பல்வேறு வகைப்பட்ட பொருள்களில் எழுதப்பட்ட நூல்களைப் பிரித்து, நூலகத்தில் அந்தந்தப் பொருளுக்குரிய இடத்தில் அந்தந்த நூல்களைச் சேர்த்து வைக்கவும், நூலகத்திற்கு வரும் படிப்பாளிகள் தாம் விரும்பும் பொருள் பற்றிய நூலை எளிதில் எடுத்துப் படிக்கவும், படித்து முடித்தபின் அந்த நூலுக்குரிய இடத்தில் அடுக்கி வைக்கவும், நூற்றொகை தயாரிப்பதற்கும் பெரிதும் உதவியாக அமைந்தது. நூலகப் பொருட்பட்டி சீரிய முறையில் அமைய சங்கிலிக் சுட்டுமுறையும் (Chain Indexing) நாலகத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். கோலன் பகுப்புமுறை பற்றியும், சங்கிலிச் சுட்டு முறை பற்றியும் பல நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல், பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெலியிட்டுள்ளார்.
சென்னைப் புத்தகாலயச் சங்கம் 1928–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் மூன்றாம் நாள் அறிஞர் பெருமக்களால் சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தில் அரங்கநாதன் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
அரங்கநாதன் இந்திய நூலகக் குழுவின் தலைவராக 1944–ஆம் ஆண்டு முதல் 1955–ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இக்கால கட்டத்தில் இவருடைய முயற்சியினால் சென்னைப் பொது நூலகச் சட்டம் (Madras Public Library Act) 1948–ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களிடையே நூலக உணர்வினைத் தோற்றுவிக்கப் பல வழிமுறைகளைக் கையாண்டார்.
வடஇந்தியாவில் காசியிலுள்ள இந்துப் பல்கலைக்கழக நூலகத்தின் நூலகராகவும், நூலகத்துறைத் தலைவராகவும் 1944–ஆம் ஆண்டு முதல் 1947–ஆம் ஆண்டுத் தொடக்கம் வரை பணியாற்றினார். பின்னர்த் தில்லிப் பல்கலைக்கழக நூலகத்துறைத் தலைவராகவும் 1947–ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றினார். 1957–ஆம் ஆண்டு முதல் உச்சயினியில் உள்ள விக்கிரம் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் (Visiting Professor) பணியாற்றினார். இந்திய அரசு 1967–ஆம் ஆண்டு இவரை நூலகத் துறையின் தேசியப் பேராசிரியராக நியமித்துச் சிறப்பித்தது. பெங்களூரில் நிறுவப்பட்ட நாகை ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பியற் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இந்தியப் பல்கலைக்கழக மானிய நிதிக் குழுவின் சார்பில் அரங்கநாதன் அவர்களைத் தலைவராகக் கொண்டு நூலகத்துறைக்கு 1957–இல் பல்கலைக்கழகக் கல்லூரிக் குழு அமைக்கப்பட்டது. இவர் தலைமையிலமைந்த குழுவின் பரிந்துரையை முன் மாதிரியாக ஏற்றுக் கொண்டு பல்கலைக்கழக நூலகங்களும், கல்லூரி நூலகங்களும் சிறந்த முறையில் இயங்கத் தொடங்கின.
அரங்கநாதன் பேரரசு நூலகக் குழுவின் அங்கத்தினராக 1932–ஆம் ஆண்டு முதல் 1934–ஆம் ஆண்டுவரை இருந்தார். இவர் உலக அமைப்புகளான ‘யுனெசுகோ’ (UNESCO) நூலகச் சங்கங்கள் நிறுவனங்கள் (International Federation of Library Associations, International Standard Organizations) ஆகியவற்றிற்குத் தம் கருத்துரைகளை வழங்கியுள்ளார். ஐக்கிய நாடு (United Nations) நூலகக் கொள்கைளை உருவாக்கியதில் இவர் இன்றியமையாத இடத்தைப்பெற்றார். உலக ஆவணத்தர நிருணய முறைக்கு (International Standardisation of Documentation) இவர் பெரு முயற்சியுடன் உழைத்தார். உலக ஐக்கிய ஆவண அமைப்பில் (International Federation for Documentation) பல்வேறு அங்கங்களில் (FID, FID COUNCIL, FID COMMITTEE) துணைத்தலைவராகவும், மதிப்பியல் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்து தொண்டாற்றியுள்ளார். இரண்டாம் உலகப் பகுப்பு ஆய்வுமாநாடு (Second International Conference on Classification Research) 1964–ஆம் ஆண்டு தென்மார்க் எசுக்கினோரில் (Denmark Eskinore) இவரை மதிப்பியல் தலைவராக ஏற்றுச் செயற்பட்டது.
அரங்கநாதனுக்கு, இந்திய அரசு 1935–இல் இராவ் சாகிபு (Rao Sahib) என்ற பட்டத்தினை வழங்கியது; தில்லிப் பல்கலைக்கழகம் 1948–இல் டி.லிட். (D. Litt) பட்டம் வழங்கியது; பீட்சுபர்கு (Pittusburg) பல்கலைக்கழகம் 1957–இல் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
மகாத்மா காந்தியின் காலத்தில் வாழ்ந்த அரங்கநாதன் உணவிலும் உடையிலும் காந்திய முறையைப் பின்பற்றினார். தம் வாழ்க்கையில் சிக்கனமாக வாழ்ந்து சேமித்த பணத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டார். 1925–இல் தாம் பயின்ற சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தம் கணிதப் பேராசிரியர் எட்வர்டு பிரோசு {Edward Bross) என்பவரின் பெயரால் கணித ஆய்வு மாணவருக்கான அறக்கட்டளையை (Mathematics Fellowship) ஏற்படுத்தினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா 1957–ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பல்கலைக்கழகம் தன் பழைய மாணவர்களிடம் நன்கொடை வேண்டி அறிக்கை அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட அறிக்கையினைப் பெற்ற டாக்டர் அரங்கநாதன் தம் வாழ்நாள் முழுவதும் சிக்கன வாழ்க்கையைக் கடைபிடித்துச் சேர்த்து வைத்த ஓர் இலட்சம் ரூபாயினைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தம் மனைவி சாரதா அரங்கநாதன் பெயரில் அறக்கட்டளை நிறுவித் தனி நூலகத் துறையினை அமைக்க நன்கொடை அளித்தார். நிதியினைப் பெற்றுக் கொண்ட சென்னைப் பல்கலைக் கழகம் தனி நூலகத்துறையினை 1960–ஆம் ஆண்டு தொடங்கியது.
அரங்கநாதன் நூலகத்துறையைப் பற்றி ஒன்றுந் தெரியாத நிலையில் நூலகராகப் பதவி ஏற்று, நூலகத்துறையில் தம்மை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டு, நூலகத் துறைக்குரிய எல்லாப் பிரிவுகளைப் பற்றியும் ஆராய்ந்து, பல அரிய நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். அவ்வாறு இவர் நூலகத்துறைக்கு வழங்கிய நூல்கள் நூலக அமைப்பு, நூலக ஆட்சி, பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களிலுள்ள நூலகங்களின் அமைப்பு முறை, நூலகப் புத்தகத் தேர்வு, குறிப்புதவி நூற்றொகை ஆகியன பற்றிச் சுமார் 50 நூல்களை எழுதியுள்ளார். நூலக இதழை 1956–ஆம் ஆண்டிலும் (Annals of Library Science) ஆவணச் சார்புடைய நூலக அறிவியல் இதழை (Library Science with a Slant to Documentation) 1965–ஆம் ஆண்டிலும் தொடங்கி, நூலக அறிவை எல்லோரிடமும் வளர்த்தார். அரங்கநாதன் வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை இளைஞரைப் போலத் துடிப்போடு வாழ்ந்தார்; தமது 80–ஆம் பிறந்தநாளுக்குப்பின், 1972–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ஆம் நாள் காலமானர். பி.ஏ.மோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 141)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9wy6u9cb/
தமிழ்“இராமாமிர்த அரங்கநாதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9wy6u9cb/APA
Oliyon Research. (2026). இராமாமிர்த அரங்கநாதன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9wy6u9cb/MLA
"இராமாமிர்த அரங்கநாதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9wy6u9cb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment