இலாயிடு சார்சு, தாவீது
ilāyiṭu cārcu, tāvītu
இங்கிலாந்தின் தலைமை அமைச்சராயிருந்தவர்.
இங்கிலாந்தின் தலைமை அமைச்சராயிருந்தவர். இலாயிடு சார்சு கி.பி. 1863–ஆம் ஆண்டில் மான் செசுட்டரில் பிறந்தார் இவர் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவர் கி.பி. 1890–ஆம் ஆண்டில் இலிபரல் கட்சியின் சார்பாகக் கார்னார்வன் பாராளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியில் உறுப்பினராக இவர் ஐம்பத்தைந்து ஆண்டுகள் பதவி வகித்தார். தென் ஆப்பிரிக்காவிலிருந்த போயர்களுக்கு ஆதரவு காட்டியவர் என்பதாக இவர் குறை கூறப்பட்டார். எனினும், தீவிரவாதிகளின் பேராளராக இருந்தமையால் இவர் அமைச்சரவையில் வணிக வாரியத்தின் தலைவராக 1905–ஆம் அமைச்சரானார். பின்னர் ஆண்டில் 1908–ஆம் ஆண்டில் கருவூலத் தலைவராகப் (Chancellor of the Exchequer) பொறுப்பேற்றார்.
இலாயிடு சார்சு (Lloyd George) சமூகச் சீர்திருத்தங்கள் பலவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றிப் புகழ்பெற்றார். மக்கள் வரவு செலவுத் திட்டம் 1909–ஆம் ஆண்டு வெளியாயிற்று. அத்திட்டத்திற்கு இவரே பொறுப்பானவர் என்று சொல்லலாம். அவ்வாண்டில் வந்த மிக உயர்ந்த வரியும், நில மதிப்பு வரிகளும் பிரபுக்கள் அவையால் நீக்கப்பட்டன. இதன் விளைவாகப் பொதுமக்கள் அவைக்கும் பிரபுக்கள் அவைக்குமிடையே பெரும் மோதல் நிகழலாயிற்று. இம்மோதலைத் தவிர்க்க வந்ததுதான் 1911–ஆம் ஆண்டைய பாராளுமன்றச் சட்டமாகும். முதல் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் (1915–இல்) ஆசுகுவித்து என்பாரின் தலைமையில் இயங்கிய கூட்டாட்சியில் படைத்தளவாடங்களின் அமைச்சராக இலாயிடு சார்சு நியமிக்கப் பெற்றார். ஆனால், பழமைப்பற்றாளர் (Conservative) கட்சியுடன் இவர் இணைந்துகொண்டு ஆசுகுவித்தின் அரசை 1916–ஆம் ஆண்டு திசம்பரில் கவிழ்த்தார். இலாயிடு சார்சு பின்னர்த் தலைமை அமைச்சராகி 1922–ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். போர்க்காலத் தலைவராக ஆற்றல் மிக்கவரென அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்ற இவர், தாமே நேரடியாகப் பாரிசு அமைதி மாநாட்டில் பங்கு கொண்டார். அயர்லாந்தில் ஏற்பட்ட சிக்கலும் இவரால் தீர்த்துவைக்கப்பட்டது. இவரது கூட்டாட்சி அரசு பழமைப் பற்றாளர்களின் கைப்பாவையாயிற்று. முந்தைய இலிபரல் ஆட்சி நண்பர்கள் இவரை நம்ப மறுத்தனர். சனக் நெருக்கடியின் போது (Chanak Crisis) இவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இவச் 1945–இல் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 374)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9w35qyre/
தமிழ்“இலாயிடு சார்சு, தாவீது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9w35qyre/APA
Oliyon Research. (2026). இலாயிடு சார்சு, தாவீது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9w35qyre/MLA
"இலாயிடு சார்சு, தாவீது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9w35qyre/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment