சீத்தா
cīttā
இதன் தாவரவியல் பெயர் அன்னோனா ஸ்குவாமோசா (Annona squamosa) ஆகும்.
இதன் தாவரவியல் பெயர் அன்னோனா ஸ்குவாமோசா (Annona squamosa) ஆகும். இம்மரம் அன்னோனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் மேற்கிந்தியா ஆகும். இந்தியாவில், இதைத் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வளர்க்கின்றனர். தென்னிந்தியப் பகுதிகளில் இது பெரும்பான்மையாக வளர்க்கப்படுகிறது.
மரம். இது 6 மீ. உயரம் வரை வளரும் சிறு மரமாகும். மரம் பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் நீள்வட்ட அல்லது ஈட்டி வடிவில் மெலிந்தும், நொறுங்கும் தன்மையுடனும், பளபளப்பாகக் காம்பருகே ஆப்பு வடிவத்தில் இருக்கும். இலை ஓரம் பற்களோ, வளைவோ இல்லாமல் முழுமையாக இருக்கும்.
பூக்காம்பின் நீளம் 1.5 செ. மீ; பூக்கள் 2-4 கொத்தாகவோ, தனித் தனியாகவோ இருக்கும். பூக்காம்பின் நீளம் 1.5 செ. மீ; புல்லி இதழ்கள் மூன்றும் 3 மி, மீ நீளத்தில் முக்கோண வடிவிலிருக்கும். அல்லி இதழ்கள் 3 (+3), பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும். வெளிப் புறமுள்ளவை தடிப்பாக 2-3 X 0.5-0.7 செ.மீ அளவில் இருக்கும். உள்புறமுள்ள அல்லி இதழ்கள் மிகச் சிறியவை. மகரந்தக் கேசரங்கள் நூறுக்கு மேல் இருக்கும். சூலக இலைகள் (carpels) ஐம்பதுக்கு மேல் இருக்கும், இலை பிப்ரவரி மாதத்தில் உதிரும். புதிய இலைகள் மார்ச் மாதத்திலிருந்து உண்டாகும். மார்ச் முதல் பூக்கள் உண்டாகி, ஜூலை—செப்டம்பரில் உச்ச நிலையை அடையும். பழங்கள் நவம்பரில் கிடைக்கும்.
சீத்தாப்பழம் ஒரு பூத்திரள் கனி (aggregate fruit) ஆகும், பூவில் பல சூலக இலைகள் இருக்கும். வெவ்வேறு சூலிலைகளிலிருந்து உண்டாகும் தனித் தனிச் சதைக் கனிகளும் சதைப் பற்றான பற்றுக் கோடில் அழுந்தி, ஒன்றாகக் கூடிச் சூலக அறைகள் இணைந்த (syncarpous) கனியாக இருக்கும். பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இதய வடிவில் 7.5-10
செ.மீ விட்டத்திலிருக்கும். மஞ்சளான சதையில் சாறு நிறைந்திருக்கும். இனிப்பான, நல்ல மணம் தரக் கூடிய இக்கனிச் சுளைகளைத் தனித் தனியாகப் பிரித்து உண்ணலாம். விதைகள் செம்பழுப்பாகவும், வழவழப்பாகவும் நீள் சதுரமாகவும் இருக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வறட்சியான வெப்ப நிலத்தில் இது நன்கு வளரும். பச்சை மண்ணிலும், மலை அடிவாரத்திலும் பயிர் செய்யலாம். ஆனால், இம்மரம் உறை பனியைத் தாங்காது. இயற்கையான நிலையில் 15-20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இது காட்டு வகையாகவும், வளர்க்கும் வகையாகவும் காணப்படுகிறது. விதை ஏழு ஆண்டு வரை முளைப்புத் தன்மையுடன் இருக்கும். விதையை நீரில் ஊற வைத்தால், கடினமான விதையுறை மென்மையடைந்து, எளிதில் விதை முளைக்க வாய்ப்பாகும். இது விதை, நெருக்கு ஒட்டு, மொட்டு ஒட்டு (budding) ஆகியவை மூலம் வளர்க்கப் படுகிறது. நெருக்கு ஒட்டிற்கு இராம சீத்தா கன்று பயன்படுகிறது. இது வறட்சியைத் தாங்கி வளரும். விதை மூலமாகச் சாகுபடி செய்யப்பட்ட மரம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் நெருக்கு ஒட்டு அல்லது மொட்டு ஒட்டு மூலம் சாகுபடியாகி இரண்டாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஒட்டுச் செய்வதற்குச் சீத்தாக் கன்றுகளை விட, முள் சீத்தாக் கன்றுகள் சிறந்தவை. விதைகள் மூலம் இனப் பெருக்கமடைந்தவை தாய் மரத்தைப் போல இரா.
சாகுபடி. கன்றுகளை 5X5 மீ. இடைவெளியில் நட வேண்டும். ஒவ்வொரு குழியிலும், 10 கி.கி. தொழு உரம், 1 கி.கி. வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். கறையானால் செடி பாதிக்கப்படாமலிருக்க, குழி ஒன்றுக்கு 100 கிராம் B.H.C. 10% தூளை மண்ணுடன் கலக்க வேண்டும். காய்ப்புக்கு வந்த மரங்களில், மரம் ஒன்றுக்கு 250 கிராம் தழைச் சத்து, 150 கிராம் மணிச் சத்து, 250 கிராம் சாம்பல் சத்து உரத்தை இட வேண்டும். பழங்கள் ஆகஸ்ட்—நவம்பர் வரை கிடைக்கும். ஏப்ரல்—மேத் திங்கள் வரை பூக்கிறது. கையால், மகரந்தச் சேர்க்கை செய்தால், காய்ப்பு மிகும். பூக்கும் போது, வீசும் வெப்பக் காற்றால் காய் உண்டாவது குறையும். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 25-30 கி. கி. பழம் கிடைக்கும். சீத்தாவில் பாலா நகர் என்னும் வகை சிறந்தது. சீத்தாப் பழங்களை 3.89-5.56°C வெப்ப நிலையும், 85-90% ஈரப் பசையும் கொண்ட குளிர் சேமிப்பு அறைகளில் வைத்தால், 5-6 நாள் வரை கெடாமலிருக்கும். பழத்தில் சர்க்கரைச் சத்து மிகுந்துள்ளது. சீத்தா மரத்திலிருந்து காய்களைப் பறித்துப் பழுக்க வைத்து உண்ணலாம். பழத்திலிருந்து சாறு எடுத்தும் அருந்தலாம்,
மருத்துவப் பண்புகள். இதன் இலை, பட்டை, காய், பழம், விதை ஆகியன மருந்தாக உதவும். காய் துவர்ப்பாக இருப்பதால், கழிச்சல், சீதக் கழிச்சல் நீங்குவதற்குத் தரலாம். பழுக்காமல், காய்ந்த காய்களைத் தூளாக்கி, அதை மாவுடன் கலந்து புழுக்களைக் கொல்லலாம். பழம் இனிப்பாகவும், சுவையாகவும், குருதியைப் பெருக்கும் தன்மை கொண்டதாகவும், தசையை உறுதியாக்குவதாகவும், குளிர்ச்சியைத் தருவதாகவும் உள்ளது.
பழத்திலிருந்து கிடைக்கும் இனிப்பான பழக் குழம்பில் சுவை நீர் தயாரிக்கலாம். காலை, மாலை இரண்டிரண்டு பழம் உண்ண, காச நோய் நீங்கும். விதைகளுக்குப் பேன்களைக் கொல்லும் தன்மை உண்டு. விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், பூச்சி கொல்லியாகப் பயன்படுகிறது. வேருக்குச் சிறுநீர்க் கழிவைத் தூண்டும் ஆற்றலுமுண்டு. விதையைப் பொடித்துப் புண்களின் மீது தூவ, எளிதில் அவை குணமாகும். இலையை நீர் விடாமல் அரைத்துப் புண்களுக்குப் பூச, விரைவில் குணம் தெரியும். இலைகளை அரைத்துப் பற்றுப் போட்டால், கொப்புளங்கள், சீழ்ப் புண்கள் ஆகியவை குணமாகும் என்று பிரேசில் நாட்டினர் நம்புகின்றனர்.
இராம சீத்தா. இதற்கு மணிலா சீத்தா என்ற பெயரும் உண்டு. இராம சீத்தாப் பழங்கள் எருதின் இதயம் போன்றிருப்பதால், இதற்கு ஆங்கிலத்தில் bullock’s heart என்று பெயர் வந்தது. இம்மரத்தின் தாவரவியல் பெயர் அன்னோனா ரெட்டிக்குலேட்டா (Annona reticulata). பழத்தின் மேல் தோலில் சூலிலைகளைக் குறிக்கும் எல்லைகள் வலை (reticulum) போன்ற கோடுகளாகத் தெரிவதால், இம்மரத்திற்கு அன்னோனா ரெட்டிக்குலேட்டா என்று பெயர் வந்தது. இம்மரத்திலிருந்து, ஓரளவிற்கு இலைகள் உதிர்வதைக் காணலாம். இம்மரத்தில் பூக்களும்,பழங்களும் ஆண்டு முழுதும் உற்பத்தியாகின்றன.
மருத்துவப் பண்புகள். பழத்திற்குக் குருதியைத் தூய்மையாக்கும் தன்மை உண்டு. காய், புழுக்களைக் கொல்லும். சீத பேதியைக் குணப்படுத்தும். இதன் விதைகளும், இலைகளும் பூச்சிகளைக் கொல்லும்.
முள் சீத்தா. முள் சீத்தாவிற்கு (sour sop), புள்ளு பலா,புளிப் பலா, புலிப் பலா என்ற பெயர்களும் உண்டு. பழத்தின் மேல் தோலில் முள்கள் (murex) உள்ளமையால், இதை அன்னோனா மியூரிகேட்டா (Annona muricata) என்கின்றனர். இது 6 மீ. உயரம் வளரும் இலையுதிராத சிறு மரமாகும். தென் அமெரிக்காவிலிருந்து பெரு வரை இது வளர்க்கப்படுகிறது. சமவெளியில் நன்கு வளரும். இந்தியாவில் தமிழ்நாடு, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் வளர்கிறது. ஜாவா, பர்மாவிலும் இம்மரத்தைக் காணலாம். இதில் இஸ்ரேல் ஒட்டு (Israel hybrid) என்பது சிறந்த வகை. இப்பழ மரம், தமிழகத்தில் நீலகிரி, சேர்வராயன், பழனி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இலைகளிலிருந்து ஒரு வகை ஆவியாகும் எண்ணெயைத் தயாரிக்கலாம். பழத்தில் சிறு சிறு முள் இருக்கும். இதன் பழத்தில் 12.7% சர்க்கரைப் பொருளும், 0.4% புரதமும் உள்ளன, ஜாவா நாட்டினர் முள் சீதாப் பிஞ்சுகளைக் காய்கறியாகப் பயன்படுத்துகின்றனர். பழம் இதய வடிவிலிருக்கும். பழச் சதை வெள்ளையாகச் சாறு நிறைந்ததாகப் புளிப்பாயிருக்கும். விதை கறுப்பாக இருக்கும்.
மருத்துவப் பண்புகள். இதன் பழம், விதை, பூ, இலை முதலியவை மருந்தாகின்றன. பழத்திற்குச் சொறி, சிரங்குகளைக் குணமாக்கும் தன்மை உண்டு. நாட்பட்ட சீத பேதிக்குக் காயை உலர்த்திப் பொடி செய்து தரலாம். இருமலுக்குப் பூ மொட்டுகளும், பூக்களும் பயனாகின்றன. இதன் வேருக்கு வலிப்பை நீக்கும் ஆற்றல் உண்டு. விதைகளுக்குப் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உண்டு. இலைகள் கொப்புளங்களைப் பழுக்க வைக்க உதவுகின்றன. நஞ்சூட்டி மீன் பிடிக்க விதைகள் உதவும்,
அனுமான் சீத்தா. அனுமான் சீத்தாவை (cherimova) அனுமான் பழம் என்றும் கூறுவர். இம்மரத்தின் தாவரவியல் பெயர் அன்னோனா செரிமோலியா (Annona cherimolia) என்பதாகும். இம்மரம், இலைகளை உதிர்க்கும் சிறு மரமாகும். இது 4.5-7.5 மீ உயரம் வளரும். பெருவிலிருந்து மெக்சிகோ வரையுள்ள பகுதிகளில், இம்மரத்தை வளர்க்கின்றனர். இதை உயர்ந்த மலைகளில்தான் வளர்க்க முடியும். இந்தியாவில் தமிழகத்தின் ஏற்காட்டுப் பகுதியில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் முட்டை வடிவும், அடிப்பகுதி வெல்வெட் போன்று மயிர்களைப் பெற்றும் இருக்கும். சீத்தாக் கன்றுகளைப் பயன்படுத்தி, நெருக்கு ஓட்டு மூலம் இது இனப் பெருக்கம் செய்யப் படுகிறது. நடவு செய்த ஆறாம் ஆண்டிலிருந்து பழம் கிடைக்கும். ஆண்டொன்றுக்கு ஒரு மரத்திலிருந்து 100 பழங்கள் கிடைக்கும். இதில் மம்மூத் (mammoth) வகை சிறந்தது.
அனுமான் சீத்தா மரம் ஆண்டு முழுதும் பூக்கும். ஏப்ரல்—ஜூலை வரையிலான காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பூக்கும். கனிகள் செப்டம்பர் மாதத்திலிருந்தே கிடைக்கும். இதன் பழம் மிகச் சுவையாக இருக்கும். பழங்களில் முள் இருப்பதில்லை. உருண்டையாக இதய வடிவில் பச்சை நிறத்தில் 8-15 செ.மீ. குறுக்களவைக் கொண்டு, ரேகை போன்ற பள்ளத்துடன் இருக்கும், —ஜானகி கிருஷ்ணன் —கோ. அர்ச்சுணன் நூலோதி. H.M. Lawrence George, Taxonomy of Vascular Plants, The Macmillian Co., New York, 1957.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 404)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9uw3ux7m/
தமிழ்“சீத்தா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9uw3ux7m/APA
Oliyon Research. (2026). சீத்தா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9uw3ux7m/MLA
"சீத்தா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9uw3ux7m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment