அரையர் சேவை
araiyar cēvai
அரையர் சேவை என்பது வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை இசையுடன் பாடி அபிநயம் செய்து அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க் கலையாகும்.
அரையர் சேவை என்பது வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை இசையுடன் பாடி அபிநயம் செய்து அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க் கலையாகும். இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்த இலக்கியவிழா எனத்தகும். நாத முனிகள் உடன்பிறந்தாள் மக்களும் மாணவர்களுமாகிய கீழை அகத்தாழ்வானும் மேலை அகத்தாழ்வானும், திருவரங்கத்து அழகிய மணவாளப் பெருமாள் திருமுன்பு இச்சேவை செய்தபோது பெருமாள் உகந்து இவர்களுக்கு அரையர் என்ற சிறப்புப் பெயரை அளித்தார் எனக் கூறப்படுகிறது. இவர்களை ‘விண்ணப்பம் செய்வார்’, ‘நம்பாடுவான்’ என்று கோயிலொழுகு குரு பரம்பரை என்ற நூல்களும் கல்வெட்டுகளும் கூறும்.
அரையர் சேவை கொண்டாட்டம், பாசுரம் பாடுதல், அபிநயம் செய்தல், உரை கூறுதல், கொண்டாட்டம் என்று ஐந்து பிரிவுகளாக அமையும். கொண்டாட்டம் என்பது இறைவன் புகழ்பாடுதல் என்பதாகும். இது ‘கண்ணும் மனமும் அழகிய பெருமாள்’ என்பது போன்ற பாசுரங்களில் வரும் சொற்றொடர்களால் அமையும். பெருமாளைப் பாடும் கொண்டாட்டம் ‘பெருமாள்’ என்றும் நாச்சியாரைப் பாடும் கொண்டாட்டம் ‘நாச்சியார்’ என்றும் முடியும். அரையர் சேவையில் சில பாசுரங்கள் உரையோடு வழங்கப் பெறுவதுண்டு. அவ்வுரை தம்பிரான்படி என்று கூறப்படுகிறது. அரையர் ‘தம்பிரான்மார்’ எனப்படுவதால் அவர்கள் கூறும் உரை தம்பிரான்படி எனப்பட்டது.
திருவரங்கப் பெருமாளும் நாச்சியார்களும் எழுந்தருளியிருந்த திருவோலக்கத்தில் ஒரு கார்த்திகைத் திருவிழாவின்போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகம் முதலிய ஆறு பாசுரங்களையும் பண்ணுடன் அபிநயித்துப் பாடியருளினார். அதனைக் கேட்டுகந்த பெருமாள் ஆழ்வாருக்குச் சிறப்புகள் செய்து, வேண்டும் வரம் கேட்கப் பணித்தார். அவர் பெருமாளிடம் ‘மார்கழி மாத ஏகாதசி முதல் பத்து நாட்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதத்திற்கு ஒப்பாகக் கேட்டருளவேண்டும்’ என்று வரம் வேண்டினார். பெருமாளும் அருளினார்.
நம்மாழ்வார் திருநாட்டை அலங்கரித்த பிறகு, ஆழ்வார் திருநகரியில் மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் திருமேனியை நிறுவி வழிபட்டுத் திருவாய் மொழி முதலிய பிரபந்தங்களை உலகோர் அறியப் பரப்பும் தொண்டு மேற்கொண்டிருந்தார். திருவரங்கர் அழைப்பினைப்பெற்ற மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் திருமேனியோடு, மார்கழித் திங்கள் வளர்பிறை பத்தாம் நாளன்று திருவரங்கம் வந்தடைந்தார். மறுநாள் ஏகாதசி தொடங்கி வேதம் விண்ணப்பித்ததற்குப்பின் நாளொன்றுக்கு ஒரு பத்தாகப் பத்து நாள் இரவுகளில் திருவாய்மொழி முழுவதையும், பெருமாள் திருமுன்னர் இன்னிசையில் வழங்கினார். இறுதியில் பெருமாள், ஆழ்வாரைத் தமக்கு ஒப்பாக ஒரே இருக்கையில் அமரச் செய்து, வரிசைகள் நல்கி மறுநாள் ஆழ்வார் திருநகரி போக விடுத்தார். இவ்வாறு பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற இவ்விழா இடையில் நின்று போயிற்று. கோயிலொழுகு கூறும் இவ்வரலாற்றின் அடிப்படையில், இக்கலை வழிபாட்டு விழாத் தோன்றிய காலம் திருமங்கை ஆழ்வார் காலம் (கி.பி. 8–ஆம் நூற்றாண்டு) ஆகும்.
நாதமுனிகள் இதனைத் தோற்றுவித்தார் என்பதை வைணவ குரு பரம்பரை நூல்கள் கூறுகின்றன. ஆழ்வார்கள் காலத்திற்குப் பின் சில நூற்றாண்டுகளுக்குள் அவர்களுடைய அருளிச் செயல்களை ஓதுவாரும் ஓதுவிப்பாரும் அருகி இலராயினர். கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் விளங்கிய நாதமுனிகள் அரிதின் முயன்று, திவ்வியப் பிராந்தப் பாசுரங்களைத் தொகுத்தார். அவற்றை அழியாமற் காக்கவேண்டித் திருவரங்கத்தில் அப்பாசுரங்களை ஆண்டுதோறும் சேவிக்கும் முறையை உருவாக்கினார். நம்மாழ்வாரை ஆண்டுதோறும் திருக்குருகையிலிருந்து எழுந்தருளப் பண்ணும் வழக்கத்தை மீண்டும் உண்டாக்கினார். அதனால் இவர், ‘வலம்புரி அன்ன நற்காதல் அடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்’ என்று வேதாந்த தேசிகரால் பாராட்டப் பெற்றார். மார்கழித் திங்கள் அமாவாசை நாளுக்கு மறுநாள் பிரதமை முதல் தசமி முடியப் பத்து நாட்களில் முதலாயிரம் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் ஆகியவற்றைப் பண்ணுடன் பாடி, அபிநயிக்கும் மரபினைத் தோற்றுவித்தார். பத்து நாட்கள் பகல் வேளையில் நடைபெறுவதால் இவ்விழா பகல்பத்து எனவும், திருமொழித் திருநாள் எனவும் அழைக்கப்பெற்றது. திருமங்கையாழ்வாரால் தொடங்கப்பெற்று மார்கழித் திங்கள் ஏகாதசி (பதினோராம் நாள்) முதல் உள்ள பத்து நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய் மொழியைப் பண்ணுடன் பாடி அபிநயிக்கும் மரபினையும் நாதமுனி தொடர்ந்து நடைபெறச் செய்தார். பத்து நாட்கள் இரவு வேளையில் நடைபெற்றதால் இவ்விழாப் பகுதி இராப்பத்து எனவும், திருவாய்மொழித் திருநாள் எனவும் பெயர் பெற்றது. இவ்வாறு இருபது நாட்கள் ‘அத்தியயன உற்சவம்’ என்னும் திவ்வியப் பிரபந்த இலக்கியப் பெரு விழாவைத் தோற்றுவித்துப் பலகாலம் தொடர்ந்து நிகழ்த்தி வந்தார் நாதமுனிகள். தமக்குப்பின் இக்கலை தொடர, இதனைத் தம் மருமக்களும் சீடர்களுமாகிய கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் ஆகிய இருவருக்குப் பயிற்சியளித்தார். அவ்விருவரும் மணவாளப் பெருமாள் அரையர், நானா வினோத அரையர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனர். இறைவன் நம்பெருமாளே இவ்விருவருக்கும் அரையர் என்ற பட்டமும், தலையில் அணியும் தலையணியும், தொங்கும் பரிவட்டமாகப் பட்டும் பருத்தியும், சாத்திக் களைந்த திருமாலையும் ஆகியவற்றை அளித்தார்.
உற்சவரின் முன்பு மட்டுமே அரையர் சேவை நடைபெறும். அப்போது பெருமாளுடன் ஆழ்வார்கள் அனைவரும் எழுந்தருளியிருப்பர். இவ்விழா மார்கழித் திங்கள் வளர்பிறை முதல்நாள் தொடங்கிப் பகல் பத்து, இராப்பத்து என இருபது நாட்கள் நிகழும். ஒரு காலத்தில் தமிழக வைணவக் கோயில்கள் அனைத்திலும் நடைபெற்ற இவ்விழா, இப்போது ஆழ்வார் திருநகரி, திருவில்லிப்புத்தூர், திருவரங்கம் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் நடைபெறுகிறது. மைசூரில் உள்ள மேல்கோட்டையில் அரையர் இசையுடன் பாடுவது மட்டும் உண்டு; அபிநயம் இல்லை.
அரையர் பாசுரங்களை உணர்ச்சியோடு பாடி அபிநயம் செய்வர். அப்போது அவர் தம்மை ஆழ்வாராகவே கருதுவர், தாய், தோழி முதலியவர் கூற்றாக வரும் துறைப் பாசுரங்களில் அரையரே அந்தந்த மாந்தரோடும் நிகழ்ச்சிகளோடும் மனம் மொழி மெய்களால் ஒன்றிவிடுவர். அதனைக் காண்பவர்களும் அரையரை ஆழ்வாராகவும் தாயாகவும் தோழியாகவும் கருதி ஈடுபடுவர். பாசுரங்களை அரையர் மனமுருகப் பாடுவர்.
சேவைக்காகத் தனியே ஒப்பனை, உடை ஏதும் அரையர் அணிவதில்லை. கூம்பு வடிவிலான தலையணி (குல்லாய்) ஒன்றை அவர் தலையில் அணிகிறார் இறைவன் சூடிக்களைந்த இருமாலைகளை அவர் அணிகிறார். அரையர் தம் கைகளில் இரு தாளங்களை வைத்துள்ளார். தாளத்தை ஆழ்வார் என்றே அழைப்பர். ஆழ்வார்திருநகரியில் அரையர் பயன்படுத்தும் தாளத்தை நாதமுனி பயன்படுத்திய தாளம் என்பது வைணவ மரபு. அத்தாளம் வடிவில் பெரியது. இவை தவிர, வேறு உடையோ ஒப்பனையோ அணிகலன்களோ துணை இசைக்கருவிகளோ சேவையின்போது இடம்பெறா. பள்ளுப்பாட்டுப் பாடும்போது மட்டும் அரையர் மத்தளத்தைப் பயன்படுத்துவர்.
சேவை நிகழ்த்தும்போது, பாசுரத்தைப் பண்ணுடன் பாடி, அதற்கேற்பத் தாளங்களைத் தட்டி இசைக்கிறார். அடுத்து, பாசுரத்தின் முழு விளக்கம் வெளிப்படுமாறு அபிநயம் செய்கிறார். கால்களால் தாள அறுதியிடுவது, கைகளால் முத்திரை காட்டுவது, முக பாவம். அங்க அசைவு ஆகியவற்றால் முழுமையான அபிநயம் வெளிப்படுகிறது. முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் தாள அறுதியிட்டுக் கைகளை இயக்கி அரையர் அபிநயம் செய்கிறார். பரதரின் நாட்டிய சாத்திரம் கூறும் நுட்பமான அபிநய வகைகளை ஆழ்வார்திருநகரி அரையரிடம் காணமுடிகிறது. திருவரங்கத்தில் அரையர் இருந்தவிடத்திலே இருந்து அபிநயம் செய்கிறார்.
பாசுரத்தினைப் பாடுகையில் இரு அரையர்களும் பாடினாலும், ஒருவர் மட்டுமே அபிநயம் செய்கிறார். அப்போதும் மற்றவர் பாடுகிறார். அபிநயம் செய்த பின், அரையர் உரை கூறுகிறார். இடையிடையே வரும் உரையாடல்களைக் குரலில் ஏற்ற இறக்கம் தந்து அரையர் பேசுகிறார். ஒருவரே பல பாத்திரங்களாக மாறிமாறிப் பேசும் பாங்கில் இது அமைகிறது. உரை கூறிவருகையில் மற்றவர் அதனை மூலத்துடன் சரிபார்த்து வருவார், தடங்கல் ஏற்படின்மட்டும் அடியெடுத்துக் கூறுவார்.
அரையர் கூறும் உரையில் காட்சி மாற்றம், நிகழ்ச்சி இயைபு, நிகழ்ச்சித் தொடர்பு, நிகழ்ச்சி முடிபு, உரையாடல் இயைபு, உரையாடல் தொடர்பு ஆகியன சொற்களின் வழியே காட்டப்படுகின்றன. நாட்டுப்புறக் கூத்து மரபில் மாந்தரின் கூற்று வழியே புலப்படுத்தப்படும் இவ்வியல்புகளை, அரையர் சேவையிலும் அரையரின் (அவர் மாறிக்கூறும் மாந்தரின்) கூற்று வழியே காணமுடிகிறது. அரையர் சேவை நிகழும்போது, அவர் உற்சவரின் முன்னே நிகழ்த்த, பார்வையாளர் மூன்று புறமும் அமர்ந்து இருப்பர். அரையர் நடுவில் இருந்து நடித்துப்பாட அதனை அடியார்கள் முப்புறங்களிலும் இருந்து காண்பதால் அரையர் அடியார் ஆகியோர்க்கிடையே நெருக்கம் ஏற்படுகிறது. இப்பாங்கு நாட்டுப்புறக் கூத்தரங்கின் கூறாகும். சரிசமமாக இருந்து காணும் சனநாயகப் பண்பை நாட்டுப்புறக் கூத்து அரங்கம் வளர்த்தது. தமிழரின் பொதுவியல் கூத்தில் காணப்பட்ட இப்பாங்கை – நாட்டுப்புறக் கூத்து மரபை–அரையர் சேவையில் இன்றும் காணலாம். முத்துக்குறி நிகழ்ச்சியில் அரையர் ஒருவரே தாயாகவும் மகளாகவும் குறத்தியாகவும் மாறிமாறி அபிநயம் செய்கிறார். வேடப்புனைவு எதுமின்றி, தம்முடைய அபிநயம் வழி இதைச் செய்கிறார். மகள் நிலையிலிருந்து கூடல் இழைக்கிறார்; தாயாக நின்று மருகுகிறார்; குறத்தியாகப் பேசுகிறார். தம் கையில் உள்ள பட்டுத்துண்டைத் தலைவியாக எண்ணி, உற்சவரிடம் (தலைவனிடம்) காட்டிக் காட்டிப் பேசும் தாயாக அரையர் உருகுகிறார். ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைவியாக நின்று கூடலிழைக்கையில் அது தவள மண்ணாகவும், கட்டுவிச்சியாக நின்று குறி சொல்லுகையில் முத்தாகவும் கொள்ளப்படுகிறது.
அரையரின் நடனம் நாடகமுறையில் பொதுவியல் நெறி சார்ந்தது; முத்திரை, அடவு, தாளஒத்து ‘சதி’, அபிநயம், முகபாவம் முதலியவற்றால் விளக்கும் ஆடற்கலை முறையில் அமையும். பேரின்பத்தை மையமிட்ட அரையர் சேவையில், கட்டுவிச்சி தத்துவக் குறி- யீடாக, உயிரையும் இறையையும் இணைக்க உதவும் ஞானாசிரியராகச் செயற்படுகிறாள்.
அரையர் சேவையில் பாசுரத்திற்கு மட்டுமே அபிநயம் உண்டு. ஆனால் முத்துக்குறி நிகழ்ச்சியில் மட்டும் பாசுரத்துடன் உரைக்கும் அபிநயம் உண்டு. திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சி முத்துக்குறி. இந்நிகழ்ச்சியின் போது அரையர் குறத்தியாக முத்துக்குறி பார்ப்பார். அக்குறி பார்க்க அரையர் பெருமாளிடம் தீர்த்தமும், திருவடி நிலையான திருசடகோபமும் பெற்று அங்குக் கூடியுள்ள ஆழ்வார் ஆசாரியர்களுக்கும் குழுவினர்க்கும் வழங்குவர். இது, பகல் பத்தின் ஒன்பதாம் நாளில் திருவரங்கத்திலும், பத்தாம் நாளில் ஆழ்வார் திருநகரி, திருவில்லிபுத்தூர் ஆகிய தலங்களிலும் நிகழும். இப்பாசுர உரை மிக நீண்டதாயிருப்பதால், ஏனைய நாட்களைவிட அரையர் சேவை நிகழும் காலமும் நீண்டதாக இருக்கும். திருவில்லிபுத்தூரில் மட்டும் முத்துக்குறி நிகழ்ச்சி, மூன்று பிரிவுகளாக நிகழும். ஆடித்திங்களில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்த மறுநாளிலும், மார்கழித் திங்களில் அத்யயன உற்சவத்தில் பகல்பத்தின் இறுதி நாளிலும், தைத்திங்களில் பொங்கலுக்கு மறுநாளிலும் நடைபெறும், திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் உள்ள பதினோராம் பாசுரமான ‘பட்டுடுக்கும்’ என்பதன் ஈற்றடியில் ‘கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள்’ என்று வருகிறது. இப்பாசுரத்திற்கு அரையர் கூறும் தம்பிரான்படி உரையில் குறம், குறவஞ்சிச் கூறுகள் மிக்குள்ளன. பாசுரத்தின் அமைப்பு அகப்பொருள் இயல்பிலானது. கடல் வண்ணன் மையலில் சிக்குண்ட தலைவி நிலைகண்டு தாய் புலம்புவது, கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப்படுத்தித் தன் மகளுக்கு மையல் செய்தவன் திருமால் என உணர்வது ஆகியன ஆழ்வார் பாடலிலே உள்ளன. அரையர் கூறும் தம்பிரான் படியில் பல்வேறு நிலைகள் நாடகப் பாங்குடன் உள்ளன. குறத்தியாக வந்து பேசுமிடங்களில் அரையர் கூறும் உரைமுழுவதும் வடசொற் கலப்பு ஏதுமின்றி, வழக்குச்சொற்கள் மிக்க பேச்சுத் தமிழில் உள்ளது. உடையில்–புனைவில்–மாற்றம் ஏதுமின்றித் தம்முடைய அபிநயம், உரை வழியே தாயாகவும் மகளாகவும் குறத்தியாகவும் அரையர் நடிக்கிறார்.
பகல்பத்து, இராப்பத்து நாட்களில் அரையர் சேவைக்கு எடுத்துக்கொள்ளும் பாசுரங்கள் மாற்றம் பெற்று வந்துள்ளன. முன்னர் அளவில் மிகுதியாகவிருந்து பின்னர்க் குறைந்துள்ளது. இச்செய்திகளைக் குருபரம்பரை நூல்கள், உரைகள் வழி அறியலாம். ஆழ்வார்திருநகரி, திருவில்லிபுத்தூர் ஆகிய இரு தலங்களிலும் இன்று அரையர் சேவை நடைமுறையில் மாற்றம் ஏதுமில்லை. திருவரங்கத்தில் பகல் பத்தில் மட்டும் அரையர் சேவிக்கும் பாசுரங்கள், ஏனைய இரு இடங்களுடன் சிறிது மாறுபடுகின்றன. திருவரங்கத்தில் பகல்பத்தின் நான்காம் நாளில் ‘கம்சனைக் காய்ந்த கருவில்லி’ என்னும் தொடர் வரும்போது அப்பதிகத்தை அதனோடு நிறுத்தி அடுத்த பதிகத்தைத் தொடர்வர். பிற்பகலில் கம்சனைக் காய்ந்த கருவில்லி என்ற பாசுரத்திற்குத் தம்பிரான்படி கூறிக் கம்ச வதத்தினை அரையரே நாடகமாக நடித்துக் காட்டுவார். ஏழாம் நாள், ‘மண்ணளந்த தாளான்’ என்னும் பகுதி வரும்போது நிறுத்தி, பிற்பகலில் அதற்குத் தம்பிரான்படி கூறி வாமன அவதார நிகழ்ச்சியையும், எட்டாம் நாள் ‘ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்’ என்னுமிடத்தில் நிறுத்திப் பிற்பகுதியில் கடல் கடைந்த நிகழ்ச்சியினையும் நடித்துக் காட்டுவர். இறுதிநாள் பிற்பகலில் ‘குன்றாத வலி அரக்கர்கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றான்’ என்னும் பாசுரம் வரும்போது இராவண வதம் நிகழ்ச்சி நடித்துக் காட்டப்பெறும்.
அரையர் சேவையில் பள்ளுப்பாட்டு பாடும் வழக்கம் உள்ளது. இன்றும் இவ்விழா நடைபெறும் மூன்றிடங்களிலும் இது வழக்கில் உள்ளது. அரையர் ஒருவர் கூடா ஒழுக்கத்தால் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பறைச்சேரியில் தங்கியிருந்தார். அங்கிருந்தே அவர் பள்ளும் பறையும் சூழ இசையுடன் பாடுவதனை அரங்கப்பெருமாள் கேட்டுகந்து, அவரை வரவழைத்து ‘வரம் தரும் பெருமாள் அரையர்’ எனப் பட்டப்பெயர் வழங்கினார். அன்றுமுதல் பறைஇசையுடன் பள்ளுப்பாட்டுப் பாடும் பழக்கம் அரையர் சேவையில் இடம்பெற்றது. இப்பள்ளுப்பாட்டு இன்றும் மூன்றிடங்களிலும் படியேற்றம், திருமுடிசேவை, திருவூறல் ஆகிய விழாக் காலங்களில் பாடப்படுகின்றன. இப்பள்ளுப்பாடல்கள் எளிய சொற்களில் திருமால் புகழ் பாடும் பாடல்கள். கவிஞன் கூற்றாகவும், அகப்பொருள் அமைப்பில் தலைவி கூற்றாகயும் அமைந்த பாடல்கள் இவை. இப்பள்ளுப்பாட்டிற்கும் தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இன்று ஆழ்வார்திருநகரியில் அரையர் ஒருவர் உள்ளார். அவருடன் அவருடைய மூத்த மைந்தரும் இணைந்து இச்சேவையில் பங்காற்றுகிறார். திருவரங்கம், திருவில்லிபுத்தூர் ஆகிய ஈரிடங்களிலும் இரு அரையர் குடும்பங்கள் உள்ளன. விழா நாட்களில் இவ்விரு குடும்பங்களும் தம்முன் முறைவைத்துக் கொண்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும். நாள்தோறும் நாள்வழிபாட்டில் திவ்வியப் பிரபந்தம் பாடும் பணியையும் அரையர் செய்கிறார், விழா நாட்களில் (பகல்பத்து, இராப்பத்து) அரையர் பாசுரத்தைப் பாடி, அபிநயம் செய்து உரை கூறியபின், குழுப்பாடலாகப் பாடும் வைணவர்கள் தொடர்ந்து ஓதுவர். முடித்து வைப்பதும் அரையரின் பணி, அரையர் பண்ணுடன். இசைக்க, வைணவர்கள் குழுப்பாடலாகப் பாடுகையில் இசையின்றி ஓதுவர். இராமாநுசர் காலம் வரை, நாலாயிரம் முழுவதும் கோயிலுள் ஓதும் உரிமை அரையர்களிடம் இருந்தது. இராமாநுசர் காலந்தொட்டு, இயற்பா மட்டும் திருவரங்கத்தமுதனார் மரபினரால் பாடும் முறை வந்தது. இன்றும் இசையுடன் கூடிய மூவாயிரம் அரையராலும், இயற்பா ஆயிரம் மட்டும் அமுதனார் வழித்தோன்றல்களாலும் பாடும் மரபு தொடர்கிறது.
அரையர் சேவை நிகழ்த்தத் தலைப்படுமுன் 12 முதல் 18 ஆண்டுகள் வரை அரையர் பயிற்சி பெறுகின்றார். தந்தைவழி மைந்தருக்கு என்று தலைமுறை மரபு வழியில் – பயிற்சி அளிக்கப்பெறுகிறது. நாலாயிரம் பாசுரங்கள், அவற்றின் உரை, கொண்டாட்டம், பள்ளுப் பாடல்கள் ஆகியவற்றை மனனம் செய்வது, பண்களை முறையாகப் பயில்வது, அபிநயம் கற்பது என்பன பயிற்சியில் அடங்கும். பயில்பவர் தம் ஆசிரியராகிய தந்தையுடன் இணைந்து அரையர் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பயிற்சி பெறுகிறார். அரையர் சேவையாகிய இக்கலை, மரபாகத் தந்தையிடமிருந்து அவருடைய மூத்த மைந்தருக்கு என்று தொடர்கிறது. ஆண்களுக்கு மட்டுமே இக்கலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்பிள்ளை இல்லாதபோது, தக்க ஒரு ஆண்பிள்ளையை எடுத்து அவனுக்குப் பயிற்சி அளித்து அவனைச் சேவைக்கு உரியனாக்குவர். விழாவில் பாடப்பெறும் திவ்வியப் பிரபந்தம் பூசைக்குரிய மந்திரமாக இருத்தலாலும், விழா நடைபெறுமிடம் தூய்மையும் புனிதமும் மிக்க இறைவன் திருமுன்பாக இருந்தவாலும் பெண்களுக்கு இதில் பயிற்சி அளிப்பதில்லை. அரையர்களுக்கு முற்காலத்தில் மன்னர்கள் முற்றூட்டுகளாக நிலங்களை அளித்த செய்திகளைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இப்போது அரசு இவர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
அரையர் சேவை என்னும் பத்திக் கலையின் நோக்கம், எளிய மக்களும் உணரும் வண்ணம் ஆழ்வார் பாசுரங்களைப் பண்ணும் கூத்துமாக வெளியிட்டு அவர்களைப் பத்தி நெறியில் ஈடுபடச் செய்வதேயாகும். இந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ஆழ்வார்திருநகரி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம் ஆகிய ஊர்களில் ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் பகல் பத்து இரவுப்பத்து என்னும் பெயரில் இலக்கியப் பெருவிழா சிறப்புற நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.சு.வே.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 833)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9uavtyhd/
தமிழ்“அரையர் சேவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9uavtyhd/APA
Oliyon Research. (2026). அரையர் சேவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9uavtyhd/MLA
"அரையர் சேவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9uavtyhd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment