உத்தம சோழப் பல்லவர்
uttama cōḻap pallavar
உத்தம சோழப் பல்லவர் என்பது தொண்டை நாட்டின் 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்திற் சிறந்த குன்றத்தூரில் தோன்றிப் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் சிறப்புப் பட்டப் பெயராகும்.
உத்தம சோழப் பல்லவர் என்பது தொண்டை நாட்டின் 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்திற் சிறந்த குன்றத்தூரில் தோன்றிப் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் சிறப்புப் பட்டப் பெயராகும். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித் தேவர் என்பது. இவருக்குப் பாலறாவாயர் என்ற தம்பி ஒருவரும் இருந்தார். இருவரும் இளமையிலேயே நன்கு கற்பன கற்று விற்பன்னராயினர். இருவருள்ளும் அருண்மொழித் தேவரின் கூரிய அறிவு மேம்பாட்டை அக்காலத்துச் சோழநாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்த அநபாயசோழர் (இரண்டாம் குலோத்துங்கன் கி.பி. 1133–1150) அறிந்து இவரைத் தம் முதல் அமைச்சராக ஆக்கிக் கொண்டார். அருண்மொழித் தேவர் அரசியற் பணிகளை சிறப்பாய் ஆற்றுவது கண்டு மெச்சி அவ்வரசரால் கொடுக்கப் பெற்ற பட்டமே ‘உத்தம சோழப் பல்லவன்’ என்பதாகும். இரண்டாம் குலோத்துங்க சோழனுக்குரிய பல பெயர்களுள் உத்தம சோழப் பல்லவராயன் என்பதும் ஒன்றாகும். அருண்மொழித் தேவரிடம் கொண்ட பேரீடுபாட்டின் காரணமாகத் தம் பெயரையே சிறந்த பட்டமாகச் சூட்டிய பெருமை குறிப்பிடத்தக்கது. ‘அருண்மொழித் தேவர்க்குத் தத்துபரிவலவனுந்தன் செங்கோ லோக்சுந் தலைமையுமளித்து அவர் தமக்குத் தனது பேரும் உத்தம சோழப் பல்லவன் தான் என்றும் உயர் பட்டமும் கொடுத்திட’ என்று சேக்கிழார் புராணம் கூறுகிறது. சேக்கிழார் குடியில் தோன்றியதால் ‘சேக்கிழார்’ என்றும், பெரிய புராணத்தில் அடியார்களின் பெருமையைச் சிறப்பித்துக் கூறியதால் ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்றும் இவர் வழங்கப் பெற்றார்.
அச்சிறப்புகள் எல்லாவற்றுளும் மிக்க சிறப்பினதாகக் கருதப்பெற்றது, அரசன் தன் பெயரையே பட்டமாகக் கொடுத்ததாகும். இப்பட்டத்தையே உத்தம சோழப் பல்லவராயர், உத்தமசோழப் பல்லவரையர் என்றும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் திருநாகேச்சுரப் பெருமான் மீது பேரீடுபாடு கொண்டிருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என ஒரு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அநபாய சோழனைப் பத்தி வழியில் ஈடுபடுத்திப் பெரியபுராணம் உலகிற்குக் கிடைக்க வழி செய்தார். பெரிய புராணத்தை இயற்றித் தலையாய ‘சைவ வரலாற்றுக் காப்பியம்’ எனப் புலவர்கள் போற்றும் நிலையை ஏற்படுத்தினார். இரா.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 872)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9t69mkz6/
தமிழ்“உத்தம சோழப் பல்லவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9t69mkz6/APA
Oliyon Research. (2026). உத்தம சோழப் பல்லவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9t69mkz6/MLA
"உத்தம சோழப் பல்லவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9t69mkz6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment