இலாங்டன், இசுடீபன்
ilāṅṭaṉ, icuṭīpaṉ
இங்கிலாந்தில் காண்டர்பரித் தலைமைக் குருவாக (Archbishop) இருந்தவர்.
இங்கிலாந்தில் காண்டர்பரித் தலைமைக் குருவாக (Archbishop) இருந்தவர். இலாங்டன் (Langton Stephen) பாரிசுப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்; அங்குப் படித்த காலத்தில் மூன்றாம் இன்னசெண்டு என்னும் போப்பாண்டவரின் நண்பரானார். அங்கேயே தொடர்ந்து தங்கிக் கற்பித்த இலாங்டன் உரோமாபுரி சென்று கி.பி. 1206–ஆம் ஆண்டு வரை கற்பித்தார். போப்பாண்டவர் மூன்றாம் இன்னசெண்டு இவருக்குக் ‘கார்டினல்’ (Cardinal) என்னும் பதவியை அளித்துக் காண்டர்பரிக்கு அனுப்பினார். அடுத்த ஆண்டில் இவர் தலைமைக்குருப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது இங்கிலாந்தின் அரசராக இருந்த சான் அரசர் (King John) காண்டர்பரித் தலைமைக் குருவாகச் சான் டி கிரே (John de Grey) என்பாரை அமர்த்த விழைந்தபடியால் இலாங்டனை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்த மறுத்து விட்டார். சினங் கொண்ட போப்பாண்டவர் இங்கிலாந்து கிறித்தவச் சமய நாடாக இருப்பதற்குத் தடை விதித்தார்; சான் மன்னர் சமய விலக்கம் செய்யப் பெற்றார்; அவரைப் பதவியிலிருந்து விலக்கப் போவதாகவும் அச்சுறுத்தினார். இறுதியில் அரசர் போப்பாண்டவருக்குப் பணிந்துவிட்டார். இலாங்டன் கி.பி. 1213–ஆம் ஆண்டில் தம் பதவியை ஏற்க இங்கிலாந்துக்குச் சென்றார்.
அங்கு கி.பி. 1213–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் கலகஞ் செய்த பிரபுக்களுடன் இலாங்டன் இணைந்து கொண்டர். அப்பிரபுக்கள் கி.பி. 1215–ஆம் ஆண்டில் மகா சாசனம் (Magna Carta) என்னும் பட்டயத்தில் சான் மன்னரைக் கையொப்பமிடும்படி வற்புறுத்தினர். அரசருக்கும் போப்பாண்டவருக்கும் நடைபெற்ற இப்போராட்டத்தின் பின்விளைவாக இலாங்டனைப் போப்பாண்டவர், தலைமைக்குரு பதவியிலிருந்து நீக்கினார். இவர் பிரபுக்களுடன் இணைந்து கொண்டதைப் போப்பாண்டவர் விரும்பாததே இதற்குக் காரணம், பதவியை இழந்த இவர் கி.பி. 1218–ஆம் ஆண்டுவரை உரோமாபுரியிலேயே வாழ்ந்து வந்தார். மூன்றாம் என்றி (Henry III) இங்கிலாந்தின் அரசராக முடிசூட்டிக் கொண்ட இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் இலாங்டன் தலைமைக்குருவாக இங்கிலாந்து திரும்பினார். அடுத்த பத்தாண்டுகள் இலாங்டன், பிரபுக்களும் முடியரசரும் இணைந்து செயற்பட அரும் பணியாற்றினார். போப்பாண்டவரின் தலையீட்டைத் தடுத்து, ஆங்கிலத் திருச்சபையின் தன்னுரிமையை நிலைநாட்ட இவர் பெரிதும் முயன்றார். ஆசுனி திருச்சபைக் கூட்டத்தில் (Synod of Osney) ‘அரசியைைமப்புத் திட்டங்கள்’ என்னும் பெயருடன் இவர் கி.பி. 1222–ஆம் ஆண்டில் வெளியிட்ட சட்டங்கள் ஆங்கிலத் திருச்சபைச் சட்டத்தின் (English Canon Law) சிறப்பான பகுதியாக அமைந்துள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவராகவும் சமயத் தத்துவஞானிகளுள் ஒருவராகவும் இலாங்டன் கருதப் பெறுகிறார். விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டிற்கு இலாங்டன் எழுதிய பரந்த விளக்கங்கள் சிறப்பானவையாகும். பழைய ஏற்பாட்டில் காணப்படும் இயல் பிரிவினைகள் இவரால் ஏற்படுத்தப்பட்டவை என்று கூறுகிறார்கள். பிசப்புகளின் அதிகாரங்கள் பற்றியும் இவர் எழுதியுள்ளார்.
இசுடீபன் இலாங்டன் கி.பி. 1228–ஆம் ஆண்டு சூலை மாதம் 9–ஆம் நாள் இங்கிலாந்து சசெக்சியிலுள்ள (Sussex) சிலிண்டன் (Slinden) என்னுமிடத்தில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 357)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9srngmhq/
தமிழ்“இலாங்டன், இசுடீபன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9srngmhq/APA
Oliyon Research. (2026). இலாங்டன், இசுடீபன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9srngmhq/MLA
"இலாங்டன், இசுடீபன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9srngmhq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment