ஒரு வகை மீ நுண்ணுயிரி (Virus) வகையைச் சேர்ந்த நுண்ணுயிருண்ணி (bacteriophage) நுண்ணுயிரிகளைத் தாக்குகிறது. நுண்ணுயிர் வடிப்பிகளாலும் வடித்தெடுக்க முடியாது. இவை மிகச் சிறிய உயிரினங்களாகும். அமைப்பு. நுண்ணுயிருண்ணிகள் மிகவும் சிக்கலான உருவ அமைப்புக் கொண்டவை. இவை தலைப் பிரட்டைகளின் வடிவத்தை ஒத்துள்ளன. நுண்ணுயிருண்ணிகளின் உடலைத் தலை, வால் என இரு பிரிவாகப் பிரிக்கலாம். தலை. இது அறுகோண வடிவில் DNAகளை உள்ளடக்கி உள்ளது. DNAஐச் சுற்றிப் புரதத்தால் ஆக்கப் பட்ட ஒரு சுவர் (capside) காணப் படுகிறது. வால். வால் பகுதியில் நார்களும், சுருள் போன்ற அமைப்பும் காணப் படுகின்றன. வால் நார்கள் நுண்ணுயிருண்ணிகளை, நுண்ணுயிரிகளின் உடலில் ஒட்டப் பயன் படுகின்றன. வாழ்க்கைச் சுழற்சி. நுண்ணுயிருண்ணிகள் முதலில் வால் நார்களின் உதவியுடன், நுண்ணுயிரிகள் மீது அமர்கின்றன. பின்னர், சுருள் அமைப்பு சுருங்குகிறது. இதன் மூலம், அடித் தட்டு, நுண்ணுயிரியின் செல் வரைத் துளைக்கும் வகையில், சுருள் ஒட்டுகிறது. மேலும், சுருளமைப்பு சுருங்குவதால், நுண்ணுயிருண்ணியின் தலைப் பிரட்டை உள்ள DNA நுண்ணுயிரியின் உடலுக்குள் செலுத்தப் படுகிறது. உட்செலுத்தப்பட்ட DNA நுண்ணுயிரியின் DNA உடன் இணைந்து, அதன் செயலமைப்பை மாற்றுகிறது. மாறுபட்ட செயலால், நுண்ணுயிரி, நுண்ணுயிருண்ணி நன்கு வளரத் தேவையான தாதுக்களை உற்பத்தி செய்கிறதேயன்றித் தனக்கு தேவையானதை உற்பத்தி செய்வதில்லை. இவ்வாறாக, நுண்ணுயிரியின் உடலைச் சிதைத்துக் கொண்டு, பல மடங்காக வெளியேறுகின்றது பிறகு, வேறு புதிய நுண்ணுயிரிகளைத் தாக்குகின்றது. ஒரு சுழற்சியாகச் செயல் படத் தொடங்கி விடுகிறது. —ச. ஆதித்தன் துணை நூல். R. Ananthanarayan and C.K.Jayaraman Panicker, Text book of microbiology, Orient Longman Ltd., Madras, 1985.