அராபிய இசுரேலியப் போர்கள்
arāpiya icurēliyap pōrkaḷ
இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் மேற்கு ஆசியாயைத் தாக்கிய பெரும்போர்களாகும்.
இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் மேற்கு ஆசியாயைத் தாக்கிய பெரும்போர்களாகும். இசுரேல் என்பது, பாலசுதீனத்தில் 1948–ஆம் ஆண்டு மே திங்கள் 15-ஆம் நாளில் யூதர்கள் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட ஒரு தனி நாடாகும். பண்டைக் காலத்தே கி.மு. 1100–ஆம் ஆண்டளவில் யூதர்கள் பாலசுதீனத்தில் ஒரு சுதந்திர நாட்டை ஏற்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களே இயேசுநாதர் சிலுவையிலறையப்படுவதற்குக் காரணமானவர்கள். எனினும், கிறித்தவச் சமயத்தின் முக்கியக் கொள்கையை உருவாக்கியவர்கள் அவர்களே. ஆனால் நல்வினையின்மையால் அவர்கள் நாடு எகிப்தியர்கள், பாரசீகர்கள், சிரியர்கள், உரோமானியர்கள் முதலியோரால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டதோடு பெரிதும் கொடுமைப்படுத்தவும்பட்டனர். இறுதியில் வந்த உரோமானியர்கள், தமக்கு அடங்காத யூதர்களைப் பூண்டோடு ஒழிக்க முயன்றனர். எனவே யூதர்கள் தம் தாய்நாட்டைவிட்டு வெளியேறிப் பல நாடுகளிலும் சென்று அடைக்கலம் புகுந்தனர்.
ஆனால் சென்றவிடமெல்லாம் அவர்கள் அங்கே வாழ்ந்த மக்களை விஞ்சும் அளவுக்குப் பல துறைகளிலும் முன்னேறலாயினர். அதைக்கண்டு பொறாமையுற்ற அந்தந்த நாட்டு மக்கள் அவர்களைத் துன்புறுத்தவும் நாட்டைவிட்டு வெளியேற்றவும் முனைந்தனர். ஆசுதிரியாவிலும் உருசியாவிலும் குறிப்பாக இட்லர் காலத்துச் செருமனியிலும் யூதர்கள் கணக்கின்றிக் கொல்லப்பட்டதோடு வெளியேற்றவும் பட்டனர். இதைக்கண்ட யூதர்கள் தம் பழைய சொந்த நாட்டுக்கே சென்று தமக்கென ஒரு நாட்டை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தனர். இந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடச் சியானிசுடு இயக்கம் (Zionist Movement) ஒன்றைத் தியோடர் கெர்செ (Theodor Herze) என்பார், கி.பி 1897–இல் பாரிசு மாநகரில் தோற்றுவித்தார். அவ்வியக்கம் விரைவில் ஐரோப்பாவெங்கும் பரவியது.
முதல் உலகப் போரில் யூதர்கள் நேச நாடுகளுக்கு முழு ஆதரவையும் நல்கியதன் விளைவாக அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பிரிட்டன் உதவி செய்வதாகக் கூறி, 1917–இல் பால்பர் (Balfour) அறிக்கை ஒன்றை விடுத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு யூதர்களில் பெரும்பாலோர் பாலசுதீனத்தில் குடிபுகுந்தனர். போருக்குப்பின் பாலசுதீனம் ஆங்கிலேயரின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது. பல வட்டமேசை மாநாடுகளைக் (Round Table Conference) கூட்டி யூதர்களுக்குத் தனிநாடு வழங்க அது பல திட்டங்களை வெளியிட்டது. ஆனால் அராபியர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் நேச நாடுகளுக்குப் பெரிதும் உதவினர். எனவே அவர்களது தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகள் துணை நின்றன. 1947–இல் பிரிட்டன் பாலசுதீனக் கோரிக்கையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது. ஐ.நா.வினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைக்குழு பாலத்தீனம் மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டுமென்றும், ஒரு பகுதி யூதருக்கும், இன்னொரு பகுதி அராபியர்க்கும் எருசலேம் நகர்ப்பகுதி மட்டும் ஐ.நா. சபைக்கும் வழங்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. யூத, அரபு நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின் எருசலத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு கூட்டமைப்பு நாடாகப் பாலசுதீனம் அமைக்கப்படலாமென்றும் அது மற்றொரு கருத்தைக் கூறியது. முன்னதை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் 1948-ஆம் ஆண்டு மே 14–இல் பிரிட்டன் பாலசுதீனத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. அதே நாளில் யூதர்கள், தன்னுரிமை பெற்ற இசுரேல் நாடு நிலைநாட்டப்பெற்று விட்டதாக அறிவித்தனர். ஐ.நா.வின் பரிந்துரை ஓரளவு செயன்முறைக்கு வந்தது. ஆனால் பாலசுதீன அராபியர்களுக்கு நாடு வழங்கப்படவில்லை. பாலசுதீன அராபியார்களின் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. அரபு இசுரேலியப் போராட்டம் விட்டுவிட்டு நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
அரபு நாடுகளுக்கிடையே ஓர் உரிமை பெற்ற யூத நாடு தோற்றுவிக்கப்பட்டதை அராபியர்கள் அடியோடு வெறுக்கலாயினர். 1948–இல், ஐந்து அரபு நாடுகள் சேர்ந்துகொண்டு இசுரேலைத் தாக்கின. யூதர்களைவிட 25 மடங்கு எண்ணிக்கை மிகுதி கொண்ட அராபியர்களின் படை தோற்கடிக்கப்பட்டது. பாலசுதீனத்தின் பெரும்பகுதியை இசுரேல் தன்வசமாக்கியது. யூதர்களும் அராபியர்களும் ஓர் இடைக்கால ஒப்பந்தத்தைத் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள். யூதர்கள் வசப்பட்ட பாலசுதீனத்திலிருந்து மிகுதியான அராபியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
எகிப்தில் பரூக் மன்னரைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த கர்னல் நாசர் என்பார், 1965–இல் சூயெசுக் கால்வாயை நாட்டுடைமையாக்கினார். அதனால் பிரிட்டனும் பிரான்சும் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே அவை இசுரேல் நாட்டின் உதவியோடு 1956–இல் எகிப்தைத் தாக்கின. இது ஒரு தகாத செயல் என இந்தியா கண்டித்தது. அமெரிக்கா வாளா இருந்தது. வல்லரசுகள் தம் படைகளைப் பின்வாங்காவிட்டால் தான் எகிப்துக்கு உதவி செய்ய நேரும் என உருசியா அறிவித்தது. இதைக் கண்ட பிரிட்டனும் பிரான்சும் போரை நிறுத்திவிட்டன. பிரிட்டனின் தலைமை அமைச்சர் ஈடன் பதவி விலகினார். சூயெசுக் (Suez) கால்வாய் ஓரளவு மூடப்பட்டது. ஐ.நா. அவசரக் காலப்படை ஒன்று கால்வாய்க்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டது. யுதாண்டு (U Thand) எனும் ஐ.நா. செயலர் இருநாடுகளுக்கும் சமாதானம் செய்துவைக்கப் பெரிதும் முயன்றார். நாசரின் விருப்பத்துக்கிணங்க, ஐ.நா. படைகள் சூயெசுக் கால்வாய்ப் பகுதியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
1967–ஆம் ஆண்டில் நாசர் திடீரென இசுரேல் மீது பாய்ந்து தாக்கினார். இசுரேல் ஒருகணம் திகைத்துவிட்டது. எனினும் அமெரிக்காவிடமிருந்து பெற்ற புதிய போர்க் கருவிகளைக் கொண்டு இசுரேல் திருப்பித் தாக்கியது. ஆறு நாளில் எகிப்தியப் படைகள் முறியடிக்கப்பட்டன. செருசலம் நகரம் யூதர்கள் வசமாயிற்று. சினாய்த் தீபகற்பமும் சிரியாவில் ஒரு பகுதியும் யூதர்களிடம் சிக்கின.
இத்தோல்வியால் மனமுடைந்த நாசர் விரைவிலேயே இறந்தார். அவருக்குப் பின்வந்த சதாத்து (Sadat) என்பார், வல்லரசுகளைச் சாராது நிற்க முயன்றார். உருசிய வல்லுநர்களை எல்லாம் நாட்டைவிட்டு ஓட்டினார் (1972). அமெரிக்கர்களையும் அவர் நாடவில்லை; பகைத்துக் கொள்ளவுமில்லை. யூதர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான முறையிலேயே இழந்த சினாய்த் தீபகற்பத்தை மீண்டும்பெற அவர் முயன்றார். ஆனால் கிடைத்த பகுதியை விட்டுவிட இசுரேலுக்கு எண்ணமில்லை. எனவே சதாத்து பொறுமை இழந்தார். 1973–ஆம் ஆண்டு அக்டோபர் 6–இல் இசுரேல்மீது திடீரெனப் படையெடுத்தார். இசுரேலியர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் திக்குமுக்காடினர். சூயெசுக் கால்வாயும் சினாய் நாட்டின் ஒரு பகுதியும் எகிப்தியர்கள் வசமாயின. யூதர்கள் யாம் கிப்பூர் (Yam Kippar) என்னும் சடங்கில் ஈடுபட்டிருக்கும்போது தொடங்கப்பட்டதால், இப்போர் யாம் கிப்பூர் போர் எனப்பட்டது. 1973 நவம்பர் 11–இல் இருநாடுகளும் தமக்குள் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டன. அமெரிக்க அறிஞர் என்றி கிசிஞ்சர் (Henry Kissenger) என்பார், இரு நாடுகளிடையே அமைதி நிலவச் செய்யப் பெரும்பாடுபட்டார்.
யூதர்கள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கில் வெளியேற்றப்பட்ட அராபியர்கள் இருக்க இடமின்றி ஏதுமிலிகளாய் அலைந்தனர். அவர்கள் அல்பட்டா (Al Fatah), பெடயீன் (Fedayeen), கருஞ் செப்டம்பர் (Black September) ஆகிய கலகக்காரத் குழுக்களாகப் பிரித்தனர். அக்குழுக்களை இணைத்துப் பாலசுதீன விடுதலை அணி (Palestinian Liberation Organisation) என்னும் பெயரில் அராபத்து (Arafat) என்ற தலைவர் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன் வீரர்கள் அடிக்கடி யூதர்கள் மீது கொரில்லாப் போரை நிகழ்த்தி வந்தனர். தெற்கு இலெபனான், சிரியா ஆகிய நாடுகளில் ஏதுமிலிகளாய் அராபத்தின் ஆதரவாளர்கள் வாழ்ந்து வந்தனர். தம் நாட்டின் மீது கொரில்லாப் போர் நிகழ்த்தி வந்த அராபிய ஏதுமிலிகளை ஒழித்துக்கட்டத் தெற்கு இலெபனான் மீது இசுரேலியர் படையெடுத்து, 1982–இல் அதனைக் கவர்ந்து கொண்டனர். கோலான் மலைகளுக்கு அப்பால் அவர்களைத் துரத்திவிட்டனர். அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே மேலும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கப் பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு முதலிய நான்கு நாட்டுப் படைகள் இலெபனானுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இலெபனானில் இருந்த பாலன்சிசுடுகள் (Phalangists) என்னும் கிறித்தவக் கட்சியினர், இசுரேலியர்களுக்கு உடந்தையாக இருந்து, திடீரென்று கலகம் செய்த அராபிய ஏதுமிலிகளைக் கொன்று குவித்தனர். வல்லரசுகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. விரைவிலேயே அராபத்துக்கெதிராக ஒரு கட்சி பாலசுதீன விடுதலை அணியில் தோன்றியது. அது கலகம் செய்து அராபத்தையும் அவர் துணைவர்களையும் முறியடித்து இலெபனானை விட்டே வெளியேற்றி விட்டது. அராபத்து நேராக எகிப்து சென்று முபாரக் (Mubarak) என்னும் குடியரசுத் தலைவரிடம் அடைக்கலம் புகுந்தார். அராபத்தின் முயற்சியால் அரபு சங்கத்திலிருந்து (Arab league) வெளியேற்றப்பட்ட எகிப்து, மீண்டும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலெபனானின் தலைவர் அமீன் கெமாயல் (Amin Gemayel) என்பாரின் பதவிக்கே கேடு ஏற்பட்டு விட்டது. கிறித்தவர்களல்லாதாரும் முசுலிம்களும் அவருக்கு ஆதரவு தர மறுத்தனர். அவர் படைகளிலேயே அவருக்கு ஆதரவில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் தம் படைகளைத் திருப்பி அழைத்துக் கொண்டன. எனவே இசுரேலியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த அவர் சிரியாவின் ஆதரவை நாடியுள்ளார். சிரியக் குடியரசுத் தலைவர் ஆசாத்தின் செல்வாக்கு இலெபனானில் பெருகி வருகிறது. இசுரேலின் செல்வாக்கு அங்குக் குறைந்து வருகிறது. இந்நிலையில் பாலசுதீன அராபிய முசுலிம் அகதிகளின் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றன என்பதற்குக் காலந்தான் பதில் சொல்லவேண்டும்.கி.ர.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 763)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9q2n44xw/
தமிழ்“அராபிய இசுரேலியப் போர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9q2n44xw/APA
Oliyon Research. (2026). அராபிய இசுரேலியப் போர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9q2n44xw/MLA
"அராபிய இசுரேலியப் போர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9q2n44xw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment