இராணுவச் சமூகப்பணி
irāṇuvac camūkappaṇi
இராணுவச் சமூகப்பணி என்பது படையினருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் செய்யப்படும் பணிகளைக் குறிக்கும்.
இராணுவச் சமூகப்பணி என்பது படையினருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் செய்யப்படும் பணிகளைக் குறிக்கும். படையினருக்குப் பல்வேறு பணிகளைச் செய்யும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே பல்வேறு நாடுகளிடையே இருந்து வந்தது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் படையினரின் உடல் உளத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பினை மன்னர்களே ஏற்று வந்தனர் என்பதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறியலாம். பண்டைத் தமிழகத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் காலத்தில் தம் படையினரின் தேவைகளுக்காகப் பாணரும் விறலியரும் பண்ணிசைத்து மனமகிழ்வித்தனர். மருத்துவர்களும் உடன் சென்றனர். மக்கள் தம் நாட்டுப் படையினர் செல்லும் வழியில் அவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தனர். ஆனால் இத்தகைய பணிகள் அக்காலத்தில் ஒரு துறையாக அமையவில்லை.
அலெக்சாந்தர் தம் படையினரின் பல்வேறு தேவைகளைத்தாமே கவனித்து வந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகளினின்று அறியலாம். பண்டைக் காலத்தில் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு மருத்துவமும் மறுவாழ்வும் கிடைக்கப்பெற்ற போதிலும், தோல்வியுற்ற நாட்டைச் சேர்ந்த புண்பட்ட படைவீரர்கள் பெரும்பாலும் நன்கு கவனிக்கப்படவில்லை. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரென்சு நைட்டிங்கேல் என்பவர் கி.பி. 1854–ஆம் ஆண்டு கருங்கடற் பகுதியில் கிரிமியாப் போரில் பங்கு கொண்ட ஆங்கிலேயப் படையினருக்கு மருத்துவ உதவி அளித்துப் படையினரின் இன்னல் நீக்கினார். நைட்டிங்கேல் அம்மையார் போர்க்களத்தை அடுத்த இருண்ட பாசறைகளில் புண்பட்டுக் கிடந்த படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தார். நைட்டிங்கேல் அம்மையார் இராணுவச் சமூகப் பணியின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இதனையடுத்து இங்கிலாந்தில் புனித சான் ஆம்புலன்சு (St. John's Ambulance) என்னும் அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கமும் இராணுவச் சமூகப் பணியை மேற்கொண்டன.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1042-ஆம் ஆண்டு நியூசெர்சியிலுள்ள போர்ட்டு மான்மவுத்து (Fort Monmouth) என்னுமிடத்தில் படை அதிகாரியைத் தலைமையாகக் கொண்டு, உளநலப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டது. இதன்பிறகு இராணுவச் சமூகப் பணி ஒரு தனி உறுப்பாகப் பல நாடுகளிலும் தொடங்கப்பட்டது. அமெரிக்கப் படைத் துறையில் 1942–ஆம் ஆண்டு உளநோய் நீக்கு சமூகப் பணி ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. உளநோய் நீக்கு சமூகப் பணி பற்றிய செய்தித் திரைப்படம் 1945–ஆம் ஆண்டில் எலிசபெத்து இராசு (Elizabeth Ross) என்னும் சமூகப்பணியாளரால் வெளியிடப்பட்டது. எலிசபெத்து அம்மையார் இராணுவச் சமூகப் பணி வளர்ச்சிக்குச் சிறந்த கொண்டாற்றினார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலத்தில் 700 பேர்களுக்கு மேற்பட்ட பயிற்சி பெற்ற சமூகப்பணியாளர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்தனர். இக்காலத்தில் பல நாடுகளில், இராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாகச் சமூகப் பணித் துறை அமைக்கப்பட்டுள்ளது. காலாட்படையில் மிகுந்த சமூகப் பணியாளர்சள் பணிபுரிகின்றனர். விமானப்படையில் குறைந்த அளவே சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலாட்படையில் பல்வேறு வகையான சமூகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காலாட்படையினருக்கு மறுவாழ்வுத் திட்டப்பணியும் மக்கள் சமூகப் பணிகளும் மருத்துவச் சமூகப்பணியும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் விமானப்படையில் மருத்துவமனை சார்ந்த பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. அண்மைக் காலத்தில் முப்படைகளுக்கான சமூகப் பணிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் சமூகப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இராணுவ அதிகாரிகளின் மனைவியர் சங்கங்கள், படையினர் நல மையங்கள் போன்ற அமைப்புகள் இராணுவத்தினரின் நலனைக் கவனித்து வருகின்றன. முன்னாள் இராணுவத்தினரின் நலனுக்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பணிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை முன்னாள் இராணுவத்தினர் சங்கம் (Ex–Service Men's Association) என்னும் பொது மையத்தின் கிளைகளாக இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் முன்னாள் இராணுவத்தினர் தொழில் நடத்துவதற்காகத் தனிப்பட்ட வாரியம் அமைப்பது பற்றித் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இராணுவத்திற்குத் தேவையான உதிரிப்பாகங்களை இதுவரையில் தனியார் தொழிற்சாலைகளே தயாரித்து வந்தன. இவற்றை முன்னாள் இராணுவத்தினர் தயாரிப்பதற்கெனத் தமிழக அரசு நிதி உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், அதிகாரிகளுக்குத் திறன்வளப் பயிற்சியளித்தல், மருத்துவச் சமூகப்பணி, உளநோய்ச் சமூகப் பணி போன்ற பணிகள் ஆற்றப்படுகின்றன. இந்தியாவில் 1940–ஆம் ஆண்டில் இராணுவச் சமூகப்பணி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் இது இராணுவ மருத்துவச் சமூகப்பணி என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்திய அரசு முப்படையினருக்கும் தேவையான மருத்துவ, சமூக, உளநோய் நீக்கு பணிகளைச் செவ்வனே செய்வதற்குப் பல அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ‘குழந்தைகளின் திறமை’ (Children Have a Potential, CHAP) என்ற அமைப்பு, விமானப்படையில் பணிபுரிபவர்களின் ஊனமுற்ற குழந்தைகளுக்காக 1961–ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பில் பணியாற்றுபவர் அனைவரும் முறையாகப் பயின்ற சமூகப் பணியாளர்களாவர். ஊனமுற்ற குழந்தைகளுக்குத் தேவையான அறிவுரை பகர்தல், மருத்துவ, பொருளாதார, கல்வி சார்ந்த தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை இவ்வமைப்பு கவனித்து வருகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 82)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pc38e9a/
தமிழ்“இராணுவச் சமூகப்பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9pc38e9a/APA
Oliyon Research. (2026). இராணுவச் சமூகப்பணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9pc38e9a/MLA
"இராணுவச் சமூகப்பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9pc38e9a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment