சீனக் கடல்
cīṉak kaṭal
ஆசியாவின் கிழக்கு தென் கிழக்குப் பகுதியின் பெரும் நிலப் பரப்பையொட்டி அமைந்துள்ள மேற்குப் பசிஃபிக் பெருங்கடலின் பகுதியில், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் என இரு பகுதிகள் உள்ளன.
ஆசியாவின் கிழக்கு தென் கிழக்குப் பகுதியின் பெரும் நிலப் பரப்பையொட்டி அமைந்துள்ள மேற்குப் பசிஃபிக் பெருங்கடலின் பகுதியில், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் என இரு பகுதிகள் உள்ளன. இவை இரண்டும் தைவானுக்கும், சீனக் குடியரசு நாட்டிற்கும் இடையிலுள்ள ஆழங்குறைந்த ஃபார்மோசா நீர்ச் சந்தியால் இணைக்கப்பட்டுள்ளன.
தென் சீனக் கடலின் மேற்கே, ஆசியாவின் பெரும் நிலப் பரப்பும், தெற்கே தாய்லாந்து வளைகுடாவின் கிழக்கெல்லையும், மலேயா முந்நீரகத்தின் கிழக்குக் கடற்கரையும் அமைந்துள்ளன. சுமத்ராவிற்கும், போர்னியோவிற்கும் இடையிலுள்ள கடல் தரை தெற்கெல்லையாக உயர்ந்துள்ளது. தைவானின் வட முனையிலிருந்து, சீனாவின் ஃபயூகியன் மாநிலம் வரை உள்ள பகுதி வடக்கெல்லையாக அமைந்துள்ளது.
மேற்குப் பசிஃபிக்கின் பெருங்கடலான இது 2,197,300 ச. கி. மீ. பரப்பும், 1140 மீ. சராசரி ஆழமும் கொண்டது. இக்கடலின் கிழக்குப் பகுதியில் ஆழமான செவ்விணைவக உருவமுடைய வட்டத் தட்டு நிலமும், தட்டின் உட்பகுதியில் தெற்கு தென் மேற்கே ஆழமற்ற நீரடி மணல் திட்டுகளும் அமைந்துள்ளன. சீனக் கடல் தட்டு எனப்படும் ஆழ்பகுதி 5015 மீ. ஆழம் கொண்டது.
பெரும் நிலப் பரப்பிற்கும், தட்டின் வடமேற்குப் பகுதிக்கும், இடையில் ஆழம் குறைந்த மணல் தட்டு 240 கி.மீ. உள்ளது. இதில் டோன்கின் வளைகுடாவும், ஃபார்மோசா நீர்ச் சந்தியும் அடங்கும். இம்மணல் தட்டு, தெற்கு வியட்நாமுக்குத் தெற்கே குறுகி, உலகிலேயே மிகப் பெரிய மணல் தட்டான சுந்திரா தட்டுடன் இணைகிறது. போர்னியோ, சுமத்ரா, மலேசியா ஆயெவற்றுக்கு இடையிலுள்ள பகுதியும், தென் சீனக் கடலின் தென் பகுதியும் இதில் அடங்கும்.
இக்கடலில் மெகாவ் அருகில் கலக்கும் சிசியாங், வியட்நாமில் கலக்கும் ரெட், மெகாங் ஆகிய பெரிய நதிகள் குறிப்பிடத் தக்கவை. இப்பகுதியில் எப்போதும் வெப்ப நிலை மிகுதியாகவே இருக்கும். ஆண்டுக்கு 2000 மி.மீ. மழை பெய்கிறது. அடிக்கடி கடும் புயல் ஏற்படும். கடற்பரப்பு நீரோட்டம், தென் சீனக் கடல் நீர் அண்மையிலுள்ள நீர்ப் பரப்பு ஆகியவற்றில் பருவக் காற்றால் பரிமாற்றம் ஏற்படுகிறது.
தென் சீனக் கடலிலிருந்து வட கிழக்கே பரவியுள்ள கிழக்குச் சீனக் கடல், மேற்கே ஆசிய நிலப் பரப்பு, கிழக்கே ருயூகியூ தீவுத் தொடர், தென் கொரியாவையடுத்த செஜு-டு தீவு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. செஜு--டு தீவிலிருந்து சீனாவுக்குக் கிழக்கு மேற்காக ஒரு கற்பனைக் கோடிட்டால் அது தெற்கே, தென் சீனக் கடலையும், வடக்கே, மஞ்சள் கடலையும் பிரிக்கும், கிழக்குச் சீனக் கடல் ஏறத் தாழ 4,50,000 ச.கி.மீ. பரப்பளவும் சராசரி 300 மீ, ஆழமும் கொண்டது. ருயூகியூ தீவுத் தொடர்களையடுத்த ஓக்கினாவா ஆழ் பள்ளம் 2800 மீ. உடையது. இக்கடலின் மேற்குக் கரை, தென் சீனக் கடலிலிருந்து மஞ்சள் கடல் வரை பரவியுள்ளது.
இரு கடல்களிலும் பற்பல மீனினங்கள் காணப் படுகின்றன. சூறை, மேக்கரல், குரோக்கர், அன்கோவி போன்ற பல வகை மீனினங்கள் குறிப்பிடத் தக்கவை. தென் கிழக்கு ஆசியக் கடலோரம் வசிக்கும் மக்களுக்குத் தேவையான புரதச் சத்தில் 50% தென் சீனக் கடலிலிருந்து கிடைக்கிறது இரு கடல்களும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. தென் சீனக் கடலும், மலாக்கா நீர்ச் சந்தியும், பசிஃபிக் பெருங்கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துத் தடமாக உள்ளன. தென் சீனக் கடலிலிருந்து ஜப்பான், வடக்குப் பசிஃபிக் துறைமுகங்களுக்குச் செல்லும் நீர்த் தடமாகக் கிழக்குச் சீனக் கடல் விளங்குகிறது. —கு. அருணாசலம் —ம. அ. மோகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 447)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kqjdh79/
தமிழ்“சீனக் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9kqjdh79/APA
Oliyon Research. (2026). சீனக் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9kqjdh79/MLA
"சீனக் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9kqjdh79/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment