இனத்தொடர்பு
iṉattoṭarpu
ஒரே மொழிக் குடும்பத்தைச் (Language Family) சார்ந்த மொழிகளுக்குள் காணப்படும் தொடர்பே இனத் தொடர்பு (Genetic Relationship) எனப்படும்.
ஒரே மொழிக் குடும்பத்தைச் (Language Family) சார்ந்த மொழிகளுக்குள் காணப்படும் தொடர்பே இனத் தொடர்பு (Genetic Relationship) எனப்படும். குடும்ப அடிப்படையில் மொழிகளைப் பிரிப்பது எப்படி என்பதை ஒப்புமை மொழியியல் (Comparative Linguistics) மிகத் தெளிவாக விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, மலையாளமும் தமிழும் பழந்தமிழிலிருந்து (Proto Tamil) பிரிந்ததைப் பின்வருமாறு விளக்கலாம்.
அதாவது, இருமொழிகள் ஒரே ஒரு முந்தைய மொழியிலிருந்து கிளைத்திருந்தால் அவற்றை ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்பர். இவ்விரண்டு மொழிகளும் உருவாகக் காரணமாக இருந்த மொழியைத் தொல்–மொழி/அம்மா மொழி (Proto language) என்றும் அதிலிருந்து கிளைத்துத் தனிமொழிகளாக வழங்குவனவற்றை இனமொழி/மகள் மொழி (Cognate daughter language) என்றும் சொல்வர். மேலே கண்ட படத்தில் தொல் தமிழ், அம்மா/தொல் மொழியாகிறது; தமிழும் மலையாளமும் இனமொழிகளாகின்றன. இதுபோன்ற தொடர்பு கொண்ட மொழிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மொழிக் குடும்பமாகச் செயற்படுகின்றன. இவற்றிடையே நிலவும் தொடர்பே இனத்தொடர்பு என்று சொல்லப்படுகிறது.
இன்று வழங்கி வரும் 25 திராவிட மொழிகள் (தென், நடு, வட திராவிட மொழிகள்) அனைத்தையும் சேர்த்துத் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கின்றனர். இவையனைத்தும் தொல் திராவிட மொழி (Proto Dravidian) யிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தனித்தனி மொழிகளாகப் பிரிந்தவை காணப்படும் என்பதை அம்மொழிகளுக்கிடையே மொழியியல் ஒற்றுமைகளை (Linguistic Similarities) அடிப்படையாகக் கொண்டு விளக்க முடிகிறது.
ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளுக்கிடையே காணப்படும் தொடர்பை இருவகையாகப் பிரித்து விளக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் இவ்வகை உறவை விளக்குகிறது.
இப்படத்தில் ‘எ’ மொழியும், ‘ஏ’ மொழியும் “A” என்ற மொழியிலிருந்து கிளைத்திருக்கின்றன. இவ்விரு மொழிகளும் நேரடி உறவைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால், ‘ஒ’ மொழியையும் ‘கா’ மொழியையும் எடுத்துக்கொண்டால், இவற்றில் ‘ஒ’ மொழி ‘இ’ மொழியிலிருந்து கிளைத்திருப்பதைக் காணலாம். ‘கா’ மொழியோ என்ற மொழியிலிருந்து உருவாகியுள்ளது. இவ்விரண்டு மொழிகளும் ஒரே மொழியிலிருந்து கிளைக்கவில்லை. ஆனாலும், இரண்டும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே. இவ்வகை உறவை மறைமுக உறவு எனலாம்.
ஒரு மொழி இன்னொரு மொழியுடன் இனத் தொடர்பு கொண்டுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிவது தனிக்கலையாகும். இதனை ஒப்பியல் மொழிக்கலை (Comparative Method) என்பர். இது கி.பி. 17, 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் பலராலும் விரும்பிப் பயிலப்பட்ட, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கலையாகும். கல்கத்தாவில் அரசப் பேராளராக இருந்த வில்லியம் சோன்சு என்பவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வடமொழியும் ஐரோப்பிய மொழிகளும் ஒரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற வாதத்தைக் எழுப்பினார். இதன் அடிப்படையில் மொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து (மொழியமைப்பை மொழிக் கூறுகளை) அவற்றின் மூதாதை மொழிகளைக் (Ancestral Languages) காணும் முயற்சி தொடங்கியது. இதற்குத் துணை செய்யும் நிலையில் உயிரியல் துறையில் பெரும் புரட்சிகரமான கருத்துகள் தோன்றிய வண்ணம் இருந்தன. இக்கருத்துகளுள் முக்கியமானது ‘பரிணாமத்தத்துவம்’ அல்லது ‘கூர்தல் அறம்’ என்பதாகும். தாவரங்கள், பிற உயிர்கள் ஆகியவற்றைப் போலவே மொழிகளும் பல மாற்றங்கள் அடைவது இயல்புதான் என அறிஞர்கள் கருதலாயினர். ஒப்பியல் மொழிக் கலையால் பல உண்மைகள் வெளிவரலாயின. இனத்தையும் மொழியையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் நோக்கும், மொழிகளுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறியும் நோக்கும் தலைதூக்கின. என்றாலும், மொழியை விளக்கும் முறை செம்மைப்படுத்தப்பட்ட பின்னர், ‘ஒப்பியல் கலை’ சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த ஒரு கலையாகக் கருதப்படலாயிற்று.
அகச்சான்றுகளின் அடிப்படையில் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மொழிகளையும் எல்லா நிலைகளிலும் விளக்கிட இயலாது. ஒரு மொழியில் ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் எவ்விதச் சாயலையும் விட்டுவிடாமல் மொழியோடு இயல்பாக ஒன்றிவிடக்கூடும். அந்நிலையில், ஒரு மொழியின் பழங்காலத்தை விளக்குவது கடினமாக அமையும். மேலும், எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட வரலாறு (Written History) இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களின் (பழங்குடியினர்) மொழிகள் எழுத்து வழக்கைப் பெற்றிருக்கவில்லை. இதுபோன்ற நிலை பல திராவிட மொழிகளிலும் காணப்படுகிறது. ஆகவே, அகச் சான்றுகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயல்.
அகச்சான்றின் அடிப்படையைத் தவிர்த்து, இன்னொரு முறை மொழிகளுடைய பழைய உருவத்தைக் கணிக்கப் பயன்படுகிறது. இம்முறையில் சில மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இருமொழிகள் தங்களுக்குள் மற்ற மொழிகளைவிட அதிக ஒற்றுமை (மொழி அமைப்பு, கூறுகள் அடிப்படையில்) கொண்டிருந்தால் அவை இரண்டும் ஒரு துணைக் குடும்பத்தைச் (Sub–group) சேர்ந்தவை என்று சொல்லப்படும். திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில், முதலில் இம்மூன்று மொழிகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமை உடையனவாகத் தென்படுகின்றன. எனவே, இம்மூன்றும் ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என முடிவு செய்ய முடிகிறது. இனி, இம்மூன்றில் தமிழும் மலையாளமும் தம்முள் அதிக ஒற்றுமை உடையனவாகவும், தெலுங்கு ஓரளவு ஒற்றுமை குறைந்து காணப்படுவதாகவும் அறிய முடிகிறது. ஆகவே, தமிழும் மலையாளமும் ஒரு துணைக்குடும்பத்தைச் சார்ந்தவை என்று முடிவு செய்யலாம். இவ்வாறு, ஒன்றுக்கொன்று இனத்தொடர்பு கொண்ட மொழிகளை ஒப்பிட்டு, அம்மொழிகளின் தொல்மொழியையும், இவற்றிடையே காணப்படும் மொழிக் கூறுகளின் ஒற்றுமை வேற்றுமைகளையும் முறையாகக் கண்டறிய உதவும் துறையே ஒப்புமை மொழியியலாகும். பலகாலமாக, இம்முறையில் முழுக்க முழுக்க ஒலி – ஒலியன் கோட்பாடுகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஏனென்றால், மொழியின் முதல் வெளிப்பாடு ஒலியாக (Phone) இருக்கிறது. ஒலியடிப்படையில் பல மொழிகளில் வழங்கும் ஒலிகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவை வழங்கும் ஒலி விதிமுறைகளைக் கணிப்பதே (Phonetic Correspondences) வழக்கமாக இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால், ஒலிகளை மட்டும் ஒப்பிடுவது போதாது. மொழியில் வழங்கும் பல்வேறு உருபன்கள் (Morphemes), தொடர்கள் (Phrases), ஆகியவற்றின் அமைப்புப் (Structure) போன்றவற்றையும் ஒப்பிட்டு நோக்கி இனத் தொடர்பினை இன்னும் சிறப்பாக அறிய முடியும். இவ்வாறு, ஒலிக்கும் மேலே சென்று ஆராய்வதுதான் ஒப்புமை மொழியியல் முறைக்கு ஒருவித உயிர்த் தோற்றத்தைத் தருகிறது என்று இப்போது பரவலாகக் கருதப்படுகிறது. அதற்கேற்பப் பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுப் பல வெளியீடுகள் வந்துள்ளமையும் காணலாம். எடுத்துக்காட்டாக, திராவிட மொழிகளில் வினைச் சொற்கள்–ஒப்பாய்வு; திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள்–ஒப்பாய்வு; திராவிட மொழிகளில் செயப்பாட்டு வினையமைப்பு; திராவிட மொழிகளில் வேற்றுமையமைப்பு; திராவிட மொழிகளில் துணைவினையமைப்புப் போன்ற ஆய்வுகள் இக்கோட்பாட்டினை நன்கு வலியுறுத்துவதோடு, ஒப்புமை மொழியியலாய்வுக்கு உரமிடுவதாகவும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. கி.க.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 611)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9k3n4feu/
தமிழ்“இனத்தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9k3n4feu/APA
Oliyon Research. (2026). இனத்தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9k3n4feu/MLA
"இனத்தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9k3n4feu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment