இறைவழி உரிமைக் கொள்கை
iṟaivaḻi urimaik koḷkai
அரசு என்ற சமுதாய அமைப்பு எவ்வாறு, எப்போது தோன்றிற்று என்ற கேள்விக்கு அல்லது ஆராய்ச்சிக்கு விடைகாணும் முயற்சிகளுள் முதன் முதலில் தோன்றிய கொள்கைதான் இறைவழித் தோற்றக் கொள்கை ஆகும்.
அரசு என்ற சமுதாய அமைப்பு எவ்வாறு, எப்போது தோன்றிற்று என்ற கேள்விக்கு அல்லது ஆராய்ச்சிக்கு விடைகாணும் முயற்சிகளுள் முதன் முதலில் தோன்றிய கொள்கைதான் இறைவழித் தோற்றக் கொள்கை ஆகும். அரசைப் பற்றிய இந்தத் தெய்விக வகையான கருத்து அரசு (State) என்ற சமுதாய அமைப்பு உருவான காலத்திலேயே தோன்றிற்று. இந்த இறைவழித் தோற்றக் கொல்கையானது கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இறைவழி உரிமைக் கொள்கையாக (The Theory of Divine Right of Kings) மாறிற்று.
இறைவழித் தோற்றக் கொள்கையின் சாரம்: 1. இறைவனுடைய அல்லது கடவுள் விடுத்த ஓர் ஆணையின் விளைவாகத் தோன்றியதே அரசு ஆகும். 2. அரசை ஆளுபவர்கள் இறைவனால் அமர்த்தப்பட்டவர்களே ஆவர். 3. அரசர்கள் கடவுள் ஒருவருக்குத்தாம் தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்புடையவர்களே தவிர, வேறெருவருக்கும் மக்களுக்கும் கூட, அரசர்கள் பொறுப்புடையவர்களல்லர். இக்கொள்கை பண்டைக்காலத்திய மக்கட் சமுதாயங்களிலே பரந்து காணப்பட்டது. அரசருடைய ஆளும் அதிகாரத்துக்கு ஆதாரம் எது என்பதனை எவரும் காணவோ உணரவோ இயலாது என்ற கருத்து பண்டைக் காலத்திலிருந்தது. இக்காலத்தில் இறைவழித் தோற்றக் கொள்கையும் (The Divine Origin Theory) இறைவழி உரிமைக் கொள்கையும் கி.பி. 18– ஆம் நூற்றாண்டு வரையிலும் பலரால் ஒப்புக் கொள்ளப்பட்டு வந்தன. பண்டைக்காலத்தில் யூதமக்கள் கடவுளே அரசர்களை அமர்த்தவும் நீக்கவும் கொல்லவும் கூடிய அதிகாரங்களைக் கையாண்டார் என்று கருதினர். புனித பவுல் என்னும் கிறித்தவஞானி உரோமானிய மக்களை நோக்கி, ‘ஒவ்வொருவரும் மேல் நிலை அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பாராக; ஏனெனில், கடவுளைத் தவிர வேறு எந்த ஓர் அதிகாரியும் கிடையாது. இப்பொழுது நடைபெறுகின்ற ஆட்சிகள் அல்லது அரசாங்கங்களெல்லாம் கடவுளின் ஆணையால் தோன்றியவையே. ஆகையால், எவரொருவர் நடைமுறை அரசாங்கத்தை எதிர்க்கிறாரோ அவர் கீழ்ப்படிய மறுப்பவரே ஆவர்; அவ்வாறு கீழ்ப்படிய மறுப்பவர் தண்டனை பெறுவார்’ என்று அறிவுறுத்தியதாக ஒரு குறிப்பு கிறித்தவச் சமய நூலாகிய விவிலியத்தில் காணப்படுகிறது. பண்டைக் காலத்தில் கிறித்தவத் திருச்சபையை ஒழுங்குபெற அமைத்த பெரியோர்கள் (Church Fathers) புனித அறிவுரையை ஆதாரமாக வைத்துத் திருச்சபையை வலுவாக்கினார்கள். பழங்காலத்தில கிரேக்கர்களும் உரோமானியர்களும் மறைமுகமாகத்தான் அரசு தெய்விக இயல்புடையதென்று கருதினர். இடைக் காலத்தில் திருச்சபைத் தலைவர்களான போப்புகளுக்கும் (Popes), புனித உரோமானியப் பேரரசர்களுக்குமிடையே (Holy Roman Emperors) ‘எவர் உயர்ந்த அதிகாரி’? என்ற கேள்வி எழுந்து, பூசல் விளைந்தபொழுது சில அரசியற் சிந்தனையாளர், இறைவழித் தோற்றக் கொள்கைக்குப் புதியதொரு விளக்கம் கொடுத்து, அரசை விடத் திருச்சபையே மேலான அதிகாரம் உடையது என்றும், வேறு சில அரசியற் சிந்தனையாளர், திருச்சபையைவிட அரசு தான் உயர்ந்த அதிகாரம் உடையது என்றும் விளக்கங்கள் கொடுத்தனர். உலகத்தில் இயற்கை நிலையில் குழப்பமும் நிறைந்திருந்த பழங்காலத்தில் துன்புற்ற மக்கள் இறைவனை அணுகி, ‘இறைவா! ஒரு தலைவன் இல்லாமல் நாங்கள் துன்புறுகிறோம். எங்களைப் பாதுகாக்க வல்ல ஒரு தலைவரைத் தந்தருளும்’, என்று முறையிட, இறைவன் இரங்கி, அவர்களை ஆளும்பொருட்டு மனுவை அமர்த்தினாரென்று இந்திய இதிகாசமாகிய மாபாரதம் (சாந்தி பருவம்) கூறுகிறது. ஆகையால், கடவுளுடைய விருப்பமானது, இந்நிலவுலகில் அவருடைய சார்பாளர்களாக (Vice–regents) அமர்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படுமென்றும், அவர்களிடமிருந்து மக்களுக்கு அறிவிக்கப்படுமென்றும், அரசினுடைய ஆணைக்குக் கீழ்ப்படிதலென்பது சட்டவகையாக மட்டுமன்றிச் சமய வகையாகவும் ஒரு கடமை ஆகுமென்றும் யாவரும் நம்பினர். அரசுக்குக் கீழ்ப்படிய மறுத்தல் இறைவனுக்கு இழைக்கப்படும் குற்றமாகக் கருதப்பட்டது.
கிறித்தவத் திருச்சபையில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் என்பவரால் சீர்திருத்த இயக்கம் (Reformation Movement) நடத்தப்பட்டபோது, இறைவழித் தோற்றக் கொள்கைக்கு ஆதரவு வலுவாயிற்று. அரசாங்க அதிகாரத்துக்கு யாதொரு மறுப்பும் தெரிவிக்காமல் கீழ்ப்படிதல் வேண்டுமென்றும், அரசாங்கத்தை எவரும் எதிர்த்தல் கூடாதென்றும் பலரும் கருதினர். இச்சூழ்நிலையில்தான் இறைவழித் தோற்றக் கொள்கையானது இறைவழி உரிமைக் கொள்கையாகத் திட்டவட்டமான வடிவம் பெற்றது. இறைவழி உரிமைக் கொள்கையை ஒரு நூல் வடிவில் முதன்முதலில் வகுத்த அரசர் இங்கிலாந்தை கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட இசுடூவர்ட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த முதலாம் சேம்சு (King James I) ஆவார். அவர் தாம் எழுதிய ‘சுதந்திர முடியாட்சிகளைப் பற்றிய உண்மையான சட்டம்’ (The True Law of Free Monarchies) என்னும் நூலில், ‘அரசர் தமது அதிகாரத்தைக் கடவுளிடமிருந்து பெறுகிறார். எனவே, அவர் மக்களையும் சட்டத்தையும்விட உயர்ந்த நிலையிலுள்ளவர் அவர் தம் செயல்களுக்குத் தம் மனச்சான்றுக்கும், இறைவனுக்கும் மட்டுமே பொறுப்பானவர். சட்டவகையாக அரசர் மக்களுக்குக் கடமைப்பட்டவரல்லர். மக்களுக்கு நல்லாட்சி வழங்குதலுக்கு மட்டுமே அவர் கடவுளுக்கு ஒழுங்கு முறைப் பொறுப்புடையவர். அரசர்கள்தாம் சட்டங்களைச் செய்கிறார்களே தவிர, சட்டங்கள் அரசர்களைத் தோற்றுவிக்கவில்லை. குடிமக்கள் ஒவ்வொருவரையும் வாழவைக்கவும் கொல்லவும் கூடிய முழு அதிகாரம் படைத்த ஒரு தலைவராசு அரசர் இருக்கிறார்’ என்றெல்லாம் எழுதியுள்ளார். வரிவிதிப்பு, சமயக்கோட்பாடு, அயல் நாட்டுக் கொள்கை முதலிய சிக்கல்களிலே ஆங்கிலப் பாராளுமன்றமானது தம்மோடு பூசலிட்டபோது சேம்சு அரசர் அதை நோக்கி, ‘அரசர் என்பவர் ஒருபோதும் கொடியவராகவும் தீயவராகவும் இருத்தல் இயலாது. அப்படியே ஓரரசர் தீயவராக இருந்தாலும், மக்களுடைய தீவினைகளுக்காக அவர்களை ஒறுக்கும் பொருட்டுக் கடவுளால் அனுப்பப்பட்டவரே அத்தீய அரசர் என்பதுதான் பொருளாகும்; ஆகையால், கடவுளால் மக்கள் மீது சுமத்தப்பட்ட அரசர் என்னும் சுமையை மக்கள் உதறி எறிந்துவிட முயலுதல் சட்டத்துக்கு மாறான செயலாகும். மக்கள் தங்களுக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட கொடிய சாபத்தினின்று விடுதலை பெறுதற்கு, பொறுமைப்பண்பை வளர்த்தலும், இடைவிடாமல் இறைவனை வழிபாடு செய்தலும், தங்களுடைய வாழ்க்கை முறைகளைக் குற்றங்களினின்று நீங்கிய செம்மை நெறியாக ஆக்குதலுமே சட்டத்துக்குகந்த வழிகளாகும் என்று அறிவுறுத்தி விரிவுரை செய்தார்.
இறைவழி உரிமைக் கொள்கை நான்கு முடிபுகளைச் சுட்டிக்காட்டுகிறது என்று ஆசிரியர் சி.பி. கூச்சு (G.P. Gooch) என்பவர் கூறுகிறார். 1. முடியாட்சி என்பது இறைவனுடைய ஆணையால் தோன்றிற்று. 2. பரம்பரை அரசுரிமையானது மறுக்கப்படமுடியாத ஒன்று. 3. அரசர்கள் தங்கள் செயல்களுக்காகக் கடவுள் ஒருவருக்குத்தான் பொறுப்புடையவர்களாவர். 4. ஒரு சட்டப்படியான அரசரை எதிர்ப்பது தீவினையே ஆகும். கடவுளால் முதலில் படைக்கப்பட்ட மனிதராகிய ஆதாமின் பின்தோன்றல்களே அல்லது வழிவந்தவர்களே இக்கால அரசர்களென்று இராபர்ட்டு பில்மர் என்ற ஆசிரியர் தமது பாட்ரியார்க்கா என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பிரான்சில் எல்லா அதிகாரங்களையும் தம் கையில் வைத்துக்கொண்டு, எவருக்கும் பொறுப்பில்லாமல் தம் மனம் போனவாறு சீர்கேடான ஆட்சி செய்த எதேச்சாதிகார அரசராகிய பதினான்காம் லூயியும் இறைவழி உரிமைக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உடையவரே. சுருங்கக் கூறின் இறைவழி உரிமைக் கொள்கை எதேச்சாதிகாரமான முடியாட்சிக்கு (Tyranny) வழிவகுத்தது. ஆங்கிலப் பாராளுமன்றம் கி.பி. 1688–ஆம் ஆண்டிலும், பிரஞ்சுப் புரட்சி கி.பி. 1789–ஆம் ஆண்டிலும், இதற்குப் பிற்பட்ட காலங்களில் ஆசுத்திரியா, செருமனி, உருசியா ஆகிய நாடுகளும் எதேச்சாதிகார முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இறைவழி உரிமைக் கொள்கையும், அரசின் தோற்றத்தையும், அரசாங்கத்தின் தோற்றத்தையும் அறிவியலுக்கு ஒத்தவகையில் விளக்கும் ஓர் கொள்கை என்று எவராலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒழிந்தது. மக்களே அரசின் அதிகாரங்களுக்கெல்லாம் தோற்றுவாயாவர் என்றும், எனவே மக்களுக்குப் பொறுப்பாகத்தான் அரசு இருத்தல் வேண்டும் என்றும் குடியாட்சி அரசியற் கருத்துகள் தோன்றின. மேலும், சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு ஓரளவேனும் அரசின் அல்லது அரசாங்கத்தின் தோற்றத்தைச் சரியாக விளக்குவதற்குத் தோன்றியதாலும், உலகியலதிகாரத்தினின்று ஆன்மிக அதிகாரத்தையும், திருச்சபையினின்று அரசையும் பிரித்து வரையறை செய்கின்ற போக்குத் தோன்றியதாலும், குடியாட்சிக் கோட்பாடு எதேச்சாதிகார முறைக்கு ஒரு மறுப்பாகத் தோன்றியதாலும் இறைவழி உரிமைக் கொள்கை மறைந்தது எனலாம். இந்தக் கொள்கையை மறுத்த ஆசிரியர்கள் குரோசியசு (Grotius), ஆப்சு (Hobbes), இலாக்கு (Locke) முதலியோர் ஆவர்.
இறைவழி உரிமைக் கொள்கை எதேச்சாதிகார ஆட்சிக்கு வழி செய்ததனால், இப்போது கைவிடப்பட்டபோதிலும், அதற்குச் சில மதிப்பீடுகள் உண்டு. 1. மக்கள் சமுதாயம் இக்காலத்தில் ஓர் உலகியல் ஆட்சியாளருக்கு (Secular Ruler) அல்லது தனக்குத்தானே விதித்துக் கொண்டுள்ள சட்டமுறைக்குக் (Self imposed Law) கீழ்ப்படிந்து வாழும் நிலையில் இருக்கிறது; ஆனால், அமைப்பு ஒன்றுமில்லாமல் நாகரிகமற்ற நிலையில் மக்கள் இருந்தபோது, ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுவதற்கு ஒரு வலுவான காரணியாக இருந்தது இறைவழித் தோற்றக் கொள்கை அல்லது இறைவழி உரிமைக் கொள்கைதான். 2. மேலும், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் போற்றும் இயல்பு மனிதனிடம் இயற்கையாகவே உள்ளது என்ற கருத்தை இறைவழி உரிமைக்கொள்கை எடுத்துக்காட்டுகிறது. 3. எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலமைப்புக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்க இயல் கருத்தே (Moral basis of Political Order) என்ற உண்மையை இக்கொள்கை வலியுறுத்துவதால் இது மதிப்பு உடையதாகவே கருதப்படுகிறது. அரசாங்கம் என்பது ஆளப்படுவோரின் நலனுக்காகவே இருக்கிறதென்றும், எதேச்சாதிகார ஆட்சியாளரும் தனது அதிகாரத்தைக் கையாளும் முறையைப் பொறுத்தமட்டில் கடவுளுக்கு ஒழுக்க இயலில் பொறுப்பு உடையவர் என்றும் இக்கொள்கைக்குப் பொருள் விளக்கம் கூறப்படுகிறது.
துணை நூல்கள்
Ghettel, R.G., Introduction to Political Science, Ginn, 1933.
Willoughby, W.W., The Ethical Basis of Political Authority, Macmillan, 1930.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 545)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gcsnukz/
தமிழ்“இறைவழி உரிமைக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9gcsnukz/APA
Oliyon Research. (2026). இறைவழி உரிமைக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9gcsnukz/MLA
"இறைவழி உரிமைக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9gcsnukz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment