உண்டாட்டு
uṇṭāṭṭu
புறப்பொருள் திணைகளுள் ஒன்றாகிய வெட்சித்திணையில் அமைந்த ஒரு துறை.
புறப்பொருள் திணைகளுள் ஒன்றாகிய வெட்சித்திணையில் அமைந்த ஒரு துறை. இதன் நேர்பொருள் ‘உண்டு மகிழ்ந்து ஆடுதல்’ என்பதாகும். தொல்காப்பியர் கருத்துப்படி, பகைவர்தம் ஆநிரைகளைக் கவர்தலும், அவ்வாறு கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டலும் வெட்சித் திணையாகும். ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வீரர்களும், அவற்றை மீட்டுக்கொண்டு வந்த வீரர்களும், தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியால் தம் சுற்றத்தாருடன் கள்ளுண்டு மகிழ்ந்து ஆடுவது இயல்பு. இதுவே உண்டாட்டு எனப்படும். இதனை நச்சினார்க்கினியர், ‘நிரை கொண்டார் தாம் கொண்ட நிரையைப் பகுத்துத் தாம் கொண்ட மகிழ்ச்சியால் சுற்றத்தோடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தால் உண்டாடுதலும்’ என்று விளக்கியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக, மதுரைப் பேராலவாயார் பாடியுள்ள ‘நறவுந் தொடுமின்’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலையும், பிறிதொரு பாடலையும் காட்டியுள்ளார்.
நிரைகவர்தலை வெட்சி என்றும் அதனை மீட்டலைக் கரந்தை என்றும் இருவேறு திணையாகக் கொண்ட புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர், இத்துறையினை வெட்சித் திணையில் மட்டும் கூறி, அதற்குத் ‘தொட்டிமிழுங் கழல் மறவர், மட்டுண்டு மகிழ்தூங்கின்று’ என்று இலக்கணம் வகுத்துள்ளார். அதன் உரையாசிரியர் இத்துறையினைக் ‘கட்டியார்க்கும் வீரக்கழலினையுடைய தறுகண்ணர் மதுவையுண்டு மனங்களித்து ஆடியது’ என்று விளக்கியுள்ளார். நிரைகோடலில் நிரையினைக் கவர்ந்து கொள்ளுதலும் அடங்கும் எனக் கருதிய நச்சினார்க்கினியர், ‘இருவர்க்கும் கோடல் தொழில் உளதாயிற்று ஆதலின், அடித்துக் கோடலும், மீட்டுக் கோடலும் வெட்சியாயின’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், உண்டாட்டு என்பது தொல்காப்பிய அடிப்படையில், ஆநிரைகளைக் கவர்ந்தும் மீட்டும் பெற்ற வெற்றியால் வீரர்கள் உண்டு மகிழ்ந்து ஆடுவதனையும் புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையில் ஆநிரைகளைக் கவர்ந்தோர் உண்டு மகிழ்ந்து ஆடுவதனையும் குறிக்கிறது. புறநானூற்றில் சில பாடல்கள் (257, 258, 269, 297) இத்துறையில் அமைந்துள்ளன. அதன் பழைய உரையாசிரியர் இத்துறையினை விளக்கப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தையே எடுத்தாண்டுள்ளார் (புறம். 257, 258. பழைய உரை).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 834)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gbuszfj/
தமிழ்“உண்டாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9gbuszfj/APA
Oliyon Research. (2026). உண்டாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9gbuszfj/MLA
"உண்டாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9gbuszfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment