இரண்டு உயிர்கள் தொடர்ந்து வருங்கால் அவற்றை ஒலிப்பதற்கு ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கவும், மொழியின் ஒட்டுநிலைத் தன்மையைக் காக்கவும் இவ்வுயிர்களிடையே மெய்யெழுத்துகளைச் சேர்ப்பதுண்டு. இங்ஙனம் உயிர்களை உடன்படுத்தும் மெய்யே உடம்படுமெய் எனப்படும். ஒலித்தசை (Vocal Cord) மூடப்பெறும்போது உயிரொலிகள் ஒலிக்கப் பெற்றால், விட்டிசை தோன்றும். இத்தகு விட்டிசையினைத் தவிர்க்கவே உடம்- படுமெய்கள் சேர்க்கப்பெறுகின்றன. சில மொழிகளில் இரண்டு உயிர்கள் தொடர்ந்து வரும்பொழுது அவை இணைந்து ஓர் உயிராக ஒலிக்கும். இதனால், இவ்விரு உயிர்களுக்கிடையே நேரும் விட்டிசை (Hiatus) தடுக்கப்பெறும். ஒலிக்கும் முயற்சியை எளிதாக்கவும், அடிச்சொல், விகுதி முதலியவற்றைத் தெளிவாகக் காக்க வேண்டியும் அனைத்துத் திராவிட மொழிகளிலும் எல்லா உயிரொலிகளும் தனித்தனியே ஒலிக்கப்படுகின்றன. இரண்டு உயிரொலிகளை விட்டிசைத்தால் ஒலிக்கும் முயற்சி அரிதாகுமாதலின், அது நேராதவாறு தமிழிலும் இரு உயிர்களுக்கிடையே உயிரோடு ஒத்த ‘ய்’, ‘வ்’ என்னும் இரண்டு மெய்களுள் ஒன்று சேர்க்கப்பெறுகிறது. இந்தோ–ஐரோப்பிய மொழிகளிலும், சமசுகிருத மொழியிலும் ‘த’ கரமே உடம்படுமெய்யாகச் செயற்படுகிறது. கூய், நாய்கி என்னும் திராவிட மொழிகளில் குரல்வளை வெடிப்பொலி (Glottal Stop) உடம்படு மெய்யாகச் செயற்படுகிறது. தமிழ்மொழியில் உயிர்முன் பிறிதோர் உயிர் வருதலில்லை. இவ்விடங்களில் உடம்படுமெய்கள் தோன்றுகின்றன; அல்லது ஓர் உயிர் மறைந்துவிடுகிறது. பெரும்பாலும் யகர உடம்படுமெய் இ, ஈ, ஐ, ஏ என்னும் உயிர்களின் முன்னரும் (கோழி+இறகு = கோழியிறகு) வகர உடம்படுமெய் அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ என்னும் உயிர்களின் முன்னரும் (பலா + இலை = பலாவிலை) வருகின்றன. தமிழ்மொழி வரலாற்றில் உடம்படுமெய்களைப் பொறுத்த மட்டில் மூன்று நிலைகளைக் காணலாம். முதல் நிலையில் உயிர் மயக்கங்கள் (Vowel Clusters) அனுமதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலையில் இரண்டாம் உயிர்களை அடிப்படையாகக் கொண்டு உடம்படுமெய்கள் சேர்க்கப் பெற்றிருக்கலாம் (ஆ + இரு = ஆயிரு). மூன்றாம் நிலையில் முதல் உயிரை அடிப்படையாகக் கொண்டு உயிர்மெய்கள் சேர்க்கப் பெறுகின்றன. ஏ.ஆ.