இராமானந்தர்
irāmāṉantar
கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 15–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த சமயச் சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவர்.
கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 15–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த சமயச் சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவர். வட இந்தியாவில் வைணவ சமயத்தைப் பரப்பக் காரணமானவர்களுள் இவருக்குப் பெரும் பங்குண்டு. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாது எனப்படும் பிரயாகையில் அந்தணர் குடும்பம் ஒன்றில் பிறந்தார்; பிரயாகையிலும் வாரணாசியிலும் கல்வி கற்றார்; இந்தியாவிலிருந்த அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் சென்று வைணவ சமயத்தைப் பரப்பப் பாடுபட்டார். இவர் இராமனையும் சீதையையும் வணங்கினார்; இராமனை விட்டுணுவின் அவதாரம் என்று கருதினார்; சாதி அமைப்பையும் உணவு உண்பதில் இருந்த தடைகளையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சாதி, சமய வேறுபாடின்றி அனைவரையும் தம் சீடர்களாக இராமானந்தர் ஏற்றுக் கொண்டார். காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி அனைத்துக் சாதி மக்களுக்கும் பக்தி இயக்கத் கொள்கைகளை இவர் போதித்தார். இவருடைய சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர் பன்னிருவர். அவர்களுள் ஒருவர் நாவிதர்; ஒருவர் சக்கிலியர்; ஒருவர் இசுலாமிய நெசவுத் தொழிலாளி, இறைவன் முன்னர் அனைவரும் சமம் என்னும் கருத்தை இவர் விளக்கினார். தம் கொள்கைகளை எளிய மக்களுக்குப் போதிக்க இந்தி மொழியைப் பயன்படுத்திய முதல் சமயச் சீர்திருத்தவாதி இவரே ஆவார். இதனால், இவரை எளிய மக்கள் விரும்பி ஏற்றனர். குறிப்பாகத் தாழ்ந்த வகுப்பு மக்களை இவர்தம் போதனைகள் பெரிதும் கவர்ந்தன. வட இந்தியப் பக்தி இயக்கத்திற்கும் தென் இந்தியப் பக்தி இயக்கத்திற்கும் பாலமாக அமைந்தவர் இராமானந்தர் ஆவார். வழிபாட்டை எளிமையாக்கி வாழையடி வாழையாக வந்த சாதிக் கட்டுப்பாடுகளிலிருந்து இடைக்காலத்தில் சமயச் சிக்கல்களைத் தீர்த்தது இவருடைய தலையாய நற்பணி என்று கூறலாம். இவருடைய சீடர்களுள் ஒருவரே கபீர்தாசர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 153)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dncvnbv/
தமிழ்“இராமானந்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9dncvnbv/APA
Oliyon Research. (2026). இராமானந்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dncvnbv/MLA
"இராமானந்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9dncvnbv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment