சுருளுயிரி உறுதியான, உறையற்ற சுருள் வடிவப் பாக்டீரியா சுருளுயிரி (Spirochaetes) எனப்படும். போரிலியா (Borrelia), லெப்டோஸ்பைர்ஸ் (Leptospires), டிரிபோனீமா (Treponema) ஆகிய மூன்றும் இவ்வகையைச் சார்ந்தவை. டிரிபோனீமா, மனிதனின் இரைப்பை-சிறுகுடலிலும், பிறப்புறுப்புகளிலும் காணப்படுகிறது. இதன் மூன்று வகையான டி. பல்லிடம், டி. பெர்டெனியூ, டி. கராடியம் ஆகியவை நோயூக்க வல்லன. இவை, நுண்ணியனவாகச் சுருள் வடிவத்துடன் உள்ளன. இவற்றிற்கு மூன்றடுக்கு உறை உண்டு. ஆனால், இவை அக நச்சை (endotoxin) வெளியிடுவதில்லை; ஆகாய வளியிலும், வறட்சி நிலையிலும், மிகையான வெப்ப நிலையிலும் இவை உயிர் வாழ்வதில்லை. ஆகவே, டிரிபோனீமாக்கள் நேரடியாகவே தாக்குகின்றன. மேக நோய் (syphilis) டிரிபோனீமாவால் பரவும் பால் வினை நோயாகும். மேக நோய், குருதி ஆய்வு மூலமாக அறுதியிடப்படுகிறது. மேக நோய் கொண்ட நோயாளியுடன் புணர்ந்த மூன்று வாரங்களுக்குள் பிறப்புறுப்பில் புண்ணுடன் இந்நோய் தொடங்குகிறது. அருகேயுள்ள நிணக் கட்டியும் வீங்கி விடுகிறது. எந்த மருத்துவமுமின்றி இந்த மேகப் புண் (chancre) 4—6 வாரங்களில் மறைகிறது. இது முதல் நிலை மேக நோயாகும், இரண்டாம் நிலை மேக நோயில் (முதல் நிலை தோன்றிய 6 மாதங்களுக்குப் பின் தோன்றுகிறது) தலைவலி, காய்ச்சலுடன் நிணக் கட்டி வீக்கம், தோல் சிலேட்டுமப் படல நைவு ஆகியன தோன்றுகின்றன. முறையான மருத்துவம் பெறாதவரின் தோல், எலும்பு, கண், மூட்டு, இதயக் குருதி நாள மண்டலம் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இது மூன்றாம் நிலையாகும். குருதி நாளப் பாதிப்பில் மிகவும் முக்கியமானதும், ஆபத்தானதும் பெருந்தமனியின் விரிவு நிலையாகும். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுச் சீர் கேடு அடைகிறது. இத்தகையோருக்குப் பிறக்கும் குழந்தை பிறவி மேக நோயுடன் காணப்படுகிறது. ஹட்சின்சன் என்பார் கண்டு பிடித்த மூன்று குறைபாடுகளான விழிப் பளிங்குப் படல அழற்சி, முன் வாய் வெட்டும் பற்களில் பிளவு, செவிட்டுத் தன்மை ஆகியன இத்தகைய குழந்தைகளிடம் காணப் படுகின்றன. நோய் அறுதியிடல். நோய், சுருளுயிரிகளைக் குருதியில் பார்ப்பதன் மூலமும், பால்வினை நோய் (VD) ஆய்வின் மூலமும் கான் ஆய்வின் மூலமும் உறுதியாகும். இதற்குச் சிறந்த மருத்துவம் பென்சிலினேயாகும். பெனிசிலின் ஒவ்வாமை இருந்தால், அனைத்து வகை நுண்ணுயிர் எதிர் மருந்துகளையும் கையாளலாம். லெப்டோஸ்பைரோசிஸ். நுண்ணுயிரி மெல்லியதாக நூல் போன்று சுருண்டு காணப்படும். எலெக்ட்ரான் உருப்பெருக்கியில் பார்க்கும் போது, ஒரு வெளி உறையும், நூல் இழையும் காணப்படும். இது உண்டாக்கும் முக்கியமான நோய் இக்டெரோ ஹெமராஜிகா (Ictero haemorrhagica) ஆகும். இதையே வீல்ஸ் நோய் என்பர். இக்டெரோ (ictero) என்றால், கல்லீரல் அழற்சியுடன் கூடிய காமாலை எனப் பொருள். ஹெமராஜிகா (haemorrhagica) என்றால் குருதிப் பெருக்கு என்று பொருள். அதாவது, இந்நோயில், காமாலையுடன் குருதிப் பெருக்கு உண்டாகும். இதற்கு மருத்துவமாகப் பெனிசிலின் அல்லது அனைத்து வகை நுண்ணுயிர் எதிர் மருந்துகளையும் அளிக்கலாம். போரிலியா, மறுக்களிப்புக் காய்ச்சலை (relapsing fever) உண்டாக்குகிறது. போரில்லா நுண்ணுயிரிகள் 10-25 மைக்ரோ மீட்டர் நீளமும், 0.2-0.5 மைக்ரோ மீட்டர் அகலமும் கொண்டவை. லெப்டோஸ்பைராவை விட, இவற்றின் சுருள்கள் குறைந்தே இருக்கும்; 3-10 சுருள்கள் ஒழுங்கற்றுக் காணப்படும். இவை வளைந்து, வளைந்து விரைவாக அசையும் தன்மையுடையவை. போரிலியா ரெகெரன்டிஸ் (Borrelia recurrentis) பேன் மூலம் பரவி மனிதனில் மறுக்களிப்புக் காய்ச்சலை உண்டாக்குகிறது. பஞ்சம், போர் போன்ற சூழ்நிலைகளிலேயே இந்நோய் பரவுகிறது. பேன் மனிதனைக் கடிக்கும் போது, நமைச்சல் ஏற்படுகிறது. இதை மனிதன் நசுக்கும் போது, போரில்லியாக்கள் வெளிப்பட்டு, தோலுள் செல்கின்றன. இவை, குருதியில் இனப் பெருக்கமடைந்து கல்லீரல், மண்ணீரல், மூளை உறை ஆகியவற்றையும் பாதிக்கின்றன. கல்லீரல் அழற்சி ஏற்படும் போது, காமாலையும், குருதிப் பெருக்கும் ஏற்படுகின்றன. சிறுநீரில் அல்புமினும், குருதியும் வெளிப்படுகின்றன. இந்நோயின் மறை காலம் 2-12 நாள். அதன் பின் திடீரென்று காய்ச்சலுடன் நோய் தொடங்குகிறது. மண்ணீரலும், கல்லீரலும் வீக்கமடைகின்றன. நோய்க் காரணிகளை, குருதியில் இருள் தள ஆய்வு (dark ground illumination) மூலம் கண்டுபிடிக்கலாம். பெனிசிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகள் பயனளிக்கன்றன. நோயாளியின் துணிமணிகள், பிற பொருள்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட வேண்டும். போரிலியா டட்டோனி (Borrelia Duttoni). இது உண்ணிகளால் பரப்பப்படும் நுண்ணுயிரி. இந்நோயின் அறிகுறி பேனால் பரவிய நோய் போன்று இருப்பதால், மருத்துவமும் அது போன்றே இருக்கும். எலிக்கடி காய்ச்சல். இது ஸ்பிரில்லம்மைனஸ், ஸ்ட்ரெப்டோபெசில்லஸ் மோனிலிஃபார்மிஸ் என இரண்டு வகைச் சுருளுயிரிகளால் உண்டாகிறது. குருதியில் இந்நுண்ணுயிர்களைக் கண்டு பிடித்து, நோய் பற்றி முடிவு செய்து மருத்துவம் அளிக்க வேண்டும். போரில்லியா வின்சென்டி. இது வளப்பப் புண்ணை (tropical ulcer) உண்டாக்குகிறது. இத்தகைய புண்களுக்குப் புரோகைன் பெனிசிலினும், மெட்ரோநிடசாலும், டெட்ராசைக்கிளினும் பயனளிக்கின்றன. நாட்பட்ட புண்களுக்கு ஒட்டு மருத்துவம் இன்றியமையாதது. வாய் அழுகல் (Cancrumoris). இந்நோயில் வாய், உதடு, கன்னம் ஆகியவை பாதிக்கப்பட்டு அருவெறுப்பாகத் தோற்றமளிக்கும். இப்புண்களில் போரில்லியா வின்சென்டியும், வளி வேண்டா நுண்ணுயிரிகளும் காணப்படுகின்றன. பென்சிலினும், சல்ஃபனமைடும் பயனளிக்கின்றன. இந்நோய் பரவல் தற்போது அருகியுள்ளது. —மு. கி. பழநியப்பன் நூலோதி. A. B. Christie, Infection Diseases, Third Edition, Churchill Livingstone, Edinburgh 1980; J. H. Stein, Internal Medicine, First Edition, Little Brown Co., Boston, 1983.