இருத்தல்நிலை உளவழி மருத்துவம்
iruttalnilai uḷavaḻi maruttuvam
இருத்தல்நிலை உளவழி மருத்துவம் என்பது உளக்கோளாறுகளுக்கு உளவழி முறையில் அளிக்கப்படும் மருத்துவத்தைக் குறிக்கும்.
இருத்தல்நிலை உளவழி மருத்துவம் என்பது உளக்கோளாறுகளுக்கு உளவழி முறையில் அளிக்கப்படும் மருத்துவத்தைக் குறிக்கும். இருத்தல் நிலைக் கொள்கையினர் மனிதனின் உயிர் வாழ்க்கைக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளனர். மரபுவழி வந்த பழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியன மறைந்து போவதற்குக் காரணமாக இருக்கும் சமுதாய மாற்றங்களை அவர்கள் விரும்புவதில்லை. மனித வாழ்க்கை எந்திரமாக மாறிவிட்டது. மனிதனின் தனித் தன்மைக்குச் சமூகத்தில் இடம் இல்லை. மனிதன் தன்னுடைய சமூகத்திலேயே தன்னை ஓர் அயலான் போன்று உணர்கிறான். மற்ற உயிரினங்கள் போலன்றி, மனிதன் மட்டுமே தன்னுடைய உயிர் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றுள்ளான். நாம் ஏன், எங்கு, எதற்காக உயிர் வாழ்கிறோம் என்பதை மனிதன் மட்டுமே எண்ணிப் பார்க்க முடியும்.
தனிமனிதனுக்குத் தன் வாழ்க்கையின் பயன், மதிப்புகளை உணர்ந்து, தன் வாழ்க்கைப் பாணியைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் வேண்டும். தன் உள்ளார்ந்த திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தித் தன்னிறைவு அடைவதற்கு வாய்ப்புகள் வேண்டும். இத்தகைய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளாதவர்களும், சுதந்திர உணர்வு இல்லாதவர்களும், மிகையான சார்பு நிலை வயப்- பட்ட வாழ்க்கை நடத்துபவர்களும் உளக்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். இருத்தல் நிலை உளமருத்துவர்கள் இத்தகைய உளநோயாளிகளிடம் வாழ்க்கையின் உட்கருத்து, பயன்மதிப்புப் பொருள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கின்றனர். நோயாளிகள் தாமே தம்முடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் தம் நிலையில் இருந்து உணர்ந்து கொள்ளுமாறு தூண்டப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி இருத்தல் நிலை உளமருத்துவரிடம், ‘என் தந்தையிடம் நான் வெறுப்புக் கொண்டதைப் போல உன்னிடமும் வெறுப்புக் கொள்கிறேன்’ என்று கூறினால், மருத்துவர், ‘நான் உன் தந்தையல்லன், நான் உளமருத்துவர்; என்மீது நீ வெறுப்புக் கொள்வதற்கு எவ்வகைக் காரணமும் இல்லை’ என்று நோயாளியிடம் உடனடியாகக் கூறுகின்றார். இதன் மூலம் அவர் நோயாளிக்கு மெய்ந்நிலை உணர்வு ஏற்படுமாறு செய்கிறார். இதுவே இருத்தல் நிலை உளவழி மருத்துவத்தின் (Existential Therapy) அடிப்படை அணுகு முறையாகும்.
சந்திரா என்னும் 22 வயதுப் பெண் ‘நாட்பட்ட உளச்சிதைவு நோய்’ (Chronic Schizophrenia) என்ற குறிப்புடன் ஓர் உளவழி மருத்துவரிடம் அனுப்பப்பட்டாள். உளவழி மருத்துவர் ஒரு பெண். சந்திரா மூன்று முறை மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, அப்போதைக்கப்போது ‘குணமாகி விட்டாள்’ என்று வீட்டிற்கு அனுப்பப்பட்டவள். இம்முறை உளவழி மருத்துவரிடம் வந்தாள்.
சந்திரா பெண்களுடன் நல்ல உளத்தொடர்பு கொள்ளமுடியாதவள், ஆண்களுடன் நெருக்கமும் பாலுறவு சார்ந்த பழக்கமும் கொண்டவள், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும், தன் மீது நம்பிக்கையின்மையும் கொண்டவள். உரத்தகுரலில் பேசி யாரேனும் மறுத்துப்பேசினால், அவர்களைச் சொற்களால் வசைமாரி பொழிந்து துன்புறுத்துவாள். எப்பொழுதும் கற்பனை உலகில் வாழ்ந்து வருபவள். முதல் முறையாக அவளுக்குப் பல பொறுப்புகள் தரப்பட்டன. இதனால், அவள் தன்னைவிடப் பெரியவர்களிடமும், தன்னைவிட வயதில் சிறியவர்களிடமும் பழகுவதற்குத் தெரிந்து கொண்டாள். அவளுடைய வாழ்க்கைக்குத் தகுந்த பயன்மதிப்புகள் பற்றி மருத்துவர் அவளிடம் உரையாடினர். அவள் 2 மாதங்களில் குணமாகி வீடு திரும்பினாள். இது இருத்தல் நிலை உளவழி மருத்துவத்தின் சிறப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். என்.மா.
துணை நூல்
Kolb & Brodie, Modern Clinical Psychiatry, W.B. Saunders Co., London, 1982.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 195)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9cykdj7e/
தமிழ்“இருத்தல்நிலை உளவழி மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9cykdj7e/APA
Oliyon Research. (2026). இருத்தல்நிலை உளவழி மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9cykdj7e/MLA
"இருத்தல்நிலை உளவழி மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9cykdj7e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment