இறப்பு நிலை
iṟappu nilai
மக்கள்தொகை மாற்றத்துக்கான மூன்று கூறுகளுள் ஒன்று இறப்பு எனப்படுவது.
மக்கள்தொகை மாற்றத்துக்கான மூன்று கூறுகளுள் ஒன்று இறப்பு எனப்படுவது. இது கருவளம் (Fertility), இடப்பெயர்வு (Migration) ஆகிய மற்ற இரு கூறுகளுடன் இணைந்து, மக்கள் தொகையின் அளவு, வயது, பால் ஆகியவற்றின் அடிப்படையில், அதன் அமைவு, இனம் சார்ந்த பண்புகள், எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சிக்கான ஆற்றல் ஆகியவற்றை முடிவு செய்கிறது. ஐக்கிய நாடுகளின் உலக நலவாழ்வு நிறுவனம் (United Nations World Health Organisation) இறப்புக்கான விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகிறது. ‘இறப்பென்பது பிறப்புக்குப் பின்னர் உயிர் இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் நிலையாக மறைந்து போவதே’. ஆகவே இறப்பு (Mortality) உயிருடன் பிறந்ததற்குப் பின்னால் நிகழக் கூடிய ஒன்று, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் வாழுங் காலமாகும்.
இறப்புத் தொடர்பான புள்ளி விவரங்கள் சட்டமுறைப்படி அமைந்த இறப்புப் பதிவின் துணைப் பொருள்களாகும். இவ்விவரங்கள், மக்கள் தொகை வளர்ச்சியை மதிப்பிடுதல், மக்கள் தொகைத் தெரிவைத் தயாரித்தல் (Population Projection), நல்வாழ்வுச் சிக்கல்களை அறிவித்தல், பொதுநல வழிக்குத் திட்டமிடல், நல்வாழ்வின் வளர்ச்சியை மதிப்பிடுதல், நோய்களின் இயற்கை வரலாற்றை அறிதல் ஆகியவற்றுக்குப் பயனுடையனவாய் அமைகின்றன.
இறப்பின் முழுமையான எண்ணிக்கை, இறப்பின் காரணத்தால் நிகழும் மக்கள் தொகை மாற்றத்தை அறியப் பயன்படும் ஒரு நேரடி அளவையாகும். இருப்பினும், பகுத்தாய்வதன் நோக்கத்தால் இறப்பு விவரங்கள் பொதுவாக விகித அமைப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஒழுங்கு முறைப்படி கணிக்கப்பட்ட இறப்பு வீதம், இடர்தாங்கு மக்கள்தொகையின் மீதான இறப்புத் தன்மையின் ஆற்றலைப் புலப்படுத்தும்.
இறப்பு வீதத்தின் வகைகள்
செப்பமற்ற இறப்பு வீதம் (Crude Death Rate) மொத்த அல்லது பொது இறப்பு வீதம் (General Death Rate) எனப்படும். ஆண்டில் இது ஒரு குறிப்பிட்ட அல்லது கால கட்டத்தில் ஒரு பகுதியின் 1000 மக்களும் எத்தனை சாவுகள் நிகழும் என்பதைக் கூறுகிறது. ஏனெனில், இப்போது இறப்பு வீதம் வயது, பால், நிறம், மக்கள் தொகை ஆகியவற்றின் அமைவின்படி நிறையிடப்பட்ட சில மாறிகளின் (Variables) வழியால் கணிக்கப்படும் இறப்பு வீதங்களின் சராசரியாகும். எடுத்துக்காட்டாக, இளைய மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பகுதி குறைந்த பொது இறப்பு வீதத்தையும், முதியமக்கள்தொகையைக் கொண்ட பகுதி மிகுதியான பொது இறப்பு வீதத்தையும் கொண்டிருக்கும். இவ்விரு பகுதிகளுக்குமான வயது சார் இறப்பு வீதங்கள் (Age Specific Death Rate) ஒன்றாயிருப்பினும் இந்நிலையே காணப்படும். வயது, பால் அல்லது மற்ற மக்கள் தொகையியல் மாறிகளின்படி அமைந்த வேறுபாட்டு இறப்பைக் (Differentia Mortality) கருத்திற் கொண்டு, குறிப்பிட்ட மக்கள் தொகைக்குப் பொதுவாக இறப்பு வீதம் கணிக்கப்படுகிறது. வயது சார் இறப்பு வீதம் இவ்வகையிலேயே கணிக்கப்படும். சிலவற்றில் மக்கள் தொகை அமைவின் வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டு அதன்மூலம் கணிக்கப்படும் இறப்புவீதம் ஒப்பீட்டுக்கு (Comparison) அடிப்படையாய் அமைகிறது. இருமக்கள் தொகைகளின் வயது அமைவுகளின் (Age Compositions) வேறுபாட்டால் இறப்பு வீதம் தரப்படுத்தப்படுமெனில் (Standardisation) இது வயது சரிசெய்த இறப்புவீதம் (Age Adjusted Death Rate) எனப்படும்.
ஆயுள் அட்டவணை இறப்பு வீதம் சிறப்புமிக்க ஒருவகையாகக் கருதப்படுகிறது. இது இடப்பெயர்வு அல்லது பிறப்புகளால் மாற்றும் பெறாத, வாழும் மக்கள் தொகையின் இறப்பு நிலை தொடர்பாகச் சில எடுகோள்களின் (Assumptions) அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒரு கருத்தியல் இறப்பு வீதத் தொகுப்பு (A Hypothetical Set of Derived Death Rates) ஆகும்.
ஆயுள் எதிர்பார்ப்பு, ஆயுள் அட்டவணையின் சிறப்புமிக்க பணிகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட வயதை வந்தடைந்த ஓர் எண்ணிக்கையர் சராசரியாக எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக உயிர் வாழ முடியும் என்பதை இது விளக்குகிறது. பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் (Life Expectancy) என்பது. 100,000 எண்ணிக்கை கொண்ட ஒரு குழுமத்தின் அத்தனை பேருடைய சராசரி இறப்பு வயது ஆகும். இவர் அனைவரும் ஆயுள் அட்டவணைப்படி ஒரே காலத்தில் உயிர் வாழத் தொடங்கியவர்களாவர்.
ஆயுள் அட்டவணையின் அடுத்த பயன்மிகு பணியாகக் கருதப்படுவது உயிர்வாழ் வீதம் (Survival Rate) ஆகும். குறிப்பிட்ட வயதினர் குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக ஓர் ஆண்டுக்கு) உயிர் வாழ்வதற்கான நிகழ்தகவைக் (Probability) கூறுகிறது. காண்க: ஆயுள் அட்டவணை.
இறப்புச் சான்றிதழ்களில் கொடுக்கப்படும் மருத்துவ விவரங்கள் இறப்புப் புள்ளி விவரத்தின் சிறப்புக் கூறுகளாகும். இறப்புக்கான காரணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் கடந்தகாலப் பொதுநல வாழ்வுத் திட்டங்களுக்குப் பெருமளவில் உதவி வந்துள்ளன.
இறப்புக்கு நேரடியாக வழிகோலும் நோய்களும் தீங்குகளும் இறப்புக்கான அடிப்படைக் காரணங்கள் என்ற கூற்றால் இப்போதைய புள்ளி விவரங்களில் சேர்க்கப்படுகின்றன. விபத்து அல்லது கலவரம் தொடர்பாக இறப்பு நிகழுமெனில், அதன் நிகழ்வுச் சூழ்நிலைகளும் சேர்த்தெழுதப்படுகின்றன. இப்புள்ளி விவரங்கள் கடந்தகாலப் பொது நலவாழ்வுத் திட்டங்களுக்குப் பல வகைகளிலும் துணைபுரிந்துள்ளன. இருப்பினும், இறப்புக்கான அனைத்துக் காரணங்களும் ‘இறப்புக்கான அடிப்படைக் காரணங்கள்’ என்ற வகைப்பாட்டில் வருவதற்கில்லை. ஆகவே, இவ்வாறு அறியமுடியாக் காரணங்களால் நிறைவற்ற இப்புள்ளி விவரம் முழுப் பயனையும் தருவதாக இல்லை என்பது ஒருகுறையாகவே உள்ளது.
இவ்வாறே பன்னாட்டு இறப்புப் புள்ளி விவர ஒப்பீடும் சிக்கலான ஒன்றாகும். பல நாடுகளின் இறப்பு விவரங்களும் முழுமையின்றி வேறுபாடுகளுடன் காணப்படுவதால் இவ்வொப்பீடு கடினமாய் அமைகிறது. ஆக, கண்டிப்பான, நிறைவுமிக்க பன்னாட்டு இறப்புக் காரணப் புள்ளி விவர ஒப்பீடு நடைமுறையில் இயலாத ஒன்று. இந்நிலையில் நாடுகளுக்கிடையே தோன்றும் வீதங்களின் சிறுவேறுபாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதை அறிய வேண்டுவது இன்றியமையாதது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 517)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9cuusyde/
தமிழ்“இறப்பு நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9cuusyde/APA
Oliyon Research. (2026). இறப்பு நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9cuusyde/MLA
"இறப்பு நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9cuusyde/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment