செல் அமைப்பு
cel amaippu
உயிரிகள் அனைத்தும் ஒரு செல் உயிரிகள் (unicellular organisms) எனவும், பல செல் உயிரிகள் (multicellular organisms) எனவும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.
உயிரிகள் அனைத்தும் ஒரு செல் உயிரிகள் (unicellular organisms) எனவும், பல செல் உயிரிகள் (multicellular organisms) எனவும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. இவ்வகைப்பாடு, உடற் கட்டமைப்பில் பங்கு கொள்ளும் செல்களின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
ஒளி நுண்ணோக்கி (light microscope) கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே, உயிரிகள் செல்களால் ஆனவை என்ற உண்மையை, உயிரியல் வல்லுநர் எடுத்துக் கூறினர். இதை ராபர்ட் ஹூக் என்பார் 1665இல் முதன் முதலாகக் கண்டறிந்தார். பின்னர், 1838 இல் எம்.ஜே.ஷ்லீடன் என்பாரும், ட்டி. எஸ். ஷ்வான் என்பாரும் இணைந்து, செல் கோட்பாடு (cell theory) ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். தாவரங்களும், விலங்குகளும் செல்களால் ஆனவை என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாகும்.
செல்கள் நியூக்ளியஸ் கொண்டவையாகக் கருதப் படுகின்றன. இவற்றில் சவ்வினால் சூழப்பட்ட தெளிவான நியூக்ளியஸ் காணப் படுவதில்லை. நியூக்ளியசுள்ள செல்கள், அனைத்து உயர் உயிரினங்களிலும் காணப் படுகின்றன. இவற்றில் சவ்வினால் சூழப்பட்ட தனித்த நியூக்ளியஸ் காணப் படுகிறது. செல்களிலுள்ள நியூக்ளியசின் எண்ணிக்கையை வைத்து, அவற்றை ஒற்றை நியூக்ளியச் செல் (mononucleate cell) இரு நியூக்ளியச் செல் (binucleate cell), பல நியூக்ளியச் செல் (multinuleate cell) என வகைப் படுத்தலாம்.
தாவரச் செல்களுக்கும் விலங்குச் செல்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. முன்னவற்றில் செல் சுவர் நுண் குமிழ்கள் (vacuoles), பச்சையங்கள் (chloroplasts) ஆகியவை காணப் படுகின்றன. மேலும் மைய அமைப்பு (central body) தாவரச் செல்களில் காணப் படுவதில்லை. விலங்குச் செல்களில், செல் சவ்வும், மைய அமைப்பும் காணப் படுகின்றன; நுண் குமிழ்களும், பச்சையங்களும் காணப் படுவதில்லை.
செல்கள் வட்ட வடிவம், முட்டை வடிவம், ஐங்கோண வடிவம், அறுங் கோண வடிவம் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன. தோன்றும் முறை, செயற்பாடுகள், உருவமைப்பு ஆகியவற்றால், செல்கள் பல வகைப் படினும், அனைத்து வகைச் செல்களிலும் காணப்படும் சில இன்றியமையாத நுண் உறுப்புகளின் (cell organelles) அடிப்படையில், அவை யாவும் ஒத்த அமைப்புடையன. எலெக்ட்ரான் நுண்ணோக்கி (electron microscope) வழக்கத்துக்கு வந்த பின்னர், செல்களின் மிகு நுண் உறுப்புகளும் (ultra structures), அவற்றின் செயல்களும் தெளிவாகக் கண்டறியப் பட்டன. பொதுவாகச் செல்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து அறியலாம். அவை செல் சவ்வு (cell membrane), செல்பிளாசம் (cytoplasm), நியூக்ளியஸ் என்பன.
செல் சவ்வு. செல்லைச் சூழ்ந்து காணப் படும் மெல்லிய சவ்விற்குச் செல் சவ்வு என்று பெயர். இதைப் பிளாஸ்மா சவ்வு (plasma lemma) என்றும் குறிப்பிடுவர். இச்சவ்வு நெகிழ் தன்மையுடையது. ஒளி நுண்ணோக்கி வாயிலாகப் பார்க்கும் போது, இச்சவ்வு கண்ணிற்குப் புலப் படுவதில்லை. நகேலி என்பார் 1855இல் இச்சவ்விற்குப் பிளாஸ்மா சவ்வு (plasma membrane) என்று பெயரிட்டார். இச்சவ்வின் மிகு நுண் அமைப்பு, வேதித் தன்மை ஆகியவை எலெக்ட்ரான் நுண்ணோக்கி வாயிலாகவும், நுண் ஆய்வு முறைகளாலும் கண்டறியப் பட்டன. செல்லினுள் காணப் படும் செல் பிளாசம், சவ்வைப் பாதுகாக்கிறது. சில செல்களில், பிளாஸ்மா சவ்வைச் சூழ்ந்து, செல் சாந்து (cell cement) காணப் படுகிறது. செல் பிளாசத்திலுள்ள மைட்டோகாண்ட்ரியங்கள் (mitochondria) மைய அமைப்பு, கோல்கை நுண் உறுப்பு ஆகியவற்றின் புற உறையும் நியூக்ளியச் சவ்வும், பிளாஸ்மா சவ்வினால் ஆனவை; எனினும், இவற்றினுள் செல் பிளாசம் காணப் படுவதில்லை. செல் சவ்வு பெரும்பாலும் 75 ஆங்ஸ்ட்ராம் (ஒரு ஆங்ஸ்ட்ராம் 1/1,000000 மி.மீ.) தடிமனுடன், கிளைக்கோ புரதத்தால் ஆனது.
சில செல்களில் இச்சவ்வைச் சூழ்ந்து, கிளைக்கோ புரதத்தாலும், பாலி சாக்கரைடுகளாலும் (poly-saccharide) ஆன கிளைகோகேலிக்ஸ் காணப் படுகிறது. செல் சவ்வின் மேற்பரப்பில், ஆங்காங்கே வெளிப் பக்கம் நீண்டும், உள் பக்கம் மடங்கியுமுள்ள விரல்கள் போன்ற பல நீட்சிகள் காணப் படுகின்றன. இவற்றிற்கு நுண் விரல் நீட்சிகள் (micro villi) என்று பெயர். இவை உள்ளேற்புப் பரப்பை (absorptive surface) அதிகப் படுத்தப் பயன் படுகின்றன. மேலும், இச்சவ்வு சில இடங்களில் தடித்தும், மெல்லிய
இழைகளோடும் காணப்படும். இப்பகுதிகளுக்குச் செல்லிணைப்பிகள் (desmosomes) என்று பெயர். இவற்றின் வாயிலாகச் செல்கள் ஒன்றோடொன்று இணைகின்றன. சில இடங்களில் செல் சவ்வு உட்குழிவுற்றுச் செல் பிளாசத்தின் நுண்பைகளாகக் காணப்படும். இவற்றிற்கு உட்குழிவுப் பைகள் (pinocytic vesicles) என்று பெயர். இவற்றின் வாயிலாக, நீர்மப் பொருள்கள் செல்லினுள் செல்கின்றன. செல் சவ்வு, செல் நுண் பொருள்களைப் பாதுகாப்பதுடன், சவ்வூடு பரவுதலுக்கும், மூலக் கூறுகள் ஊடு செல்வதற்கும் பயன்படும். இச்சவ்வின் உருவ, உயிரியல் பண்புகளை ஈரடுக்கு உருப் படிவம் (bilayer model), பல அடுக்கு உருப் படிவம் (sub unit model) ஆகியவற்றால் விளக்கலாம்.
செல் பிளாசம். செல் சவ்விற்கும், நியூக்ளியச் சவ்விற்கும் இடையில் காணப்படும் செல் பொருள் உயிரியக்கமும், கூழ் போன்ற தன்மையும் கொண்டுள்ளது. இதற்குச் செல் பிளாசம் என்று பெயர். செல் சவ்வை ஒட்டிய பகுதியிலுள்ள செல் பிளாசம் துகள்கள் அற்று, ஒளி ஊடுருவக் கூடிய மிகு செறிவுப் பொருளாகவும், செல்லிற்கு நிலையான உரு அமைப்பைத் தருவதாகவும் உள்ளது. இப்பகுதிக்குப் புறப் பிளாசம் (ectoplasm) என்று பெயர். இப்பகுதி களி நிலையிலிருந்து (gel) கரைசால் நிலைக்கும் (sol), கரைசால் நிலையிலிருந்து, களி நிலைக்கும் மாறும் தன்மையது. இத்தன்மை ஓரணு உயிரிகளில் போலிக்கால்கள் (pseudopodia) உண்டாகப் பயன் படுகிறது. புறப் பிளாசத்திற்கும், நியுக்ளியச் சவ்விற்கும் இடையில் காணப் படும் பகுதி அகப் பிளாசம் (endoplasm). நுண் துகள்கள் நிறைந்து, ஒளியூடுருவல் (transluscent) தன்மையுடன் காணப் படும் இப்பகுதியில், பல செல் நுண்ணுறுப்புகள் உள்ளன. ரிபோசோம்கள் (ribosomes), அகப் பிளாச வலை (endoplasmic reticulum), மைட்டோ காண்ட்ரியங்கள், மைய அமைப்பு, கோல்கை அமைப்பு ஆகியவை நுண்ணுறுப்புகள் ஆகும். இவை தவிர, நியூக்ளியசும் அகப் பிளாசத்தில் காணப் படும் நுண்ணுறுப்பாகக் கருதப் படுகிறது.இவை யாவும் செல்லின் செயல்பாடுகளில் பெரும் பங்கு கொள்கின்றன. மேலும், இவை அனைத்துச் செல்களிலும் காணப் படும் அடிப்படைப் பொருள்களாக அமைகின்றன.
ரிபோசோம்கள். அகப் பிளாச வலையிலும், அகப் பிளாசத்திலும் காணப்படும் நுண் துகள்களை (microsomes) முதன் முதலில் கிளாட் என்பார் கண்டறிந்தார். பின்னர், பேலேட் என்பார் 1955இல் இத்துகள்களில் ரிபோநியூக்ளியிக் அமிலம் உள்ளமையைக் கண்டறிந்து, இவற்றிற்கு ரிபோசோம்கள் (ribosomes) என்று பெயரிட்டார். எலெக்ட்ரான் நுண்ணோக்கி வழியாகக் காணும் போது, இத்துகள்கள் 150–200 ஆங்க்ஸ்ட்ராம் விட்டமுடைய அடர் துகள்களாகவும் (dense granules), அகப் பிளாச வலையில் ஒட்டியும், அகப் பிளாசத்தில் சிதறியும் காணப்படுகின்றன.
ரிபோசோம்கள் அனைத்து வகைச் செல்களிலும் காணப் படுகின்றன. இத்துகள்கள் நியூக்ளியஸ், மைட்டோகாண்ட்ரியங்கள், பச்சையங்கள் ஆகியவற்றிலும் காணப் படுகின்றன. மேலும், இவை ஈஸ்ட் செல்கள் (yeast cells), வளர் கருச் செல்கள் (embryonic cells), புற்று நோய் செல்கள் (cancerous cells) போன்ற மிகு செயற் செல்களில் (active synthetic cells) மிகுதியாகக் காணப் படுகின்றன. ஸ்வெட்பெர்க் (Swedberg) அலகுகளைக் கொண்டு ரிபோ துகள்களை 70 S ரிப்போ துகள்கள். 80 S ரிபோ துகள்கள் எனப் பிரிக்கலாம். முன்னவை, நியூக்ளியசற்ற செல்களிலும், பின்னவை, நியூக்ளியசற்ற செல்களிலும் காணப் படுகின்றன. 80 S ரிபோசோமில் 60 S பெரிய துகளும், 49 S சிறிய துகளும் உள்ளன; 70 S ரிபோசோமில் 50 S பெரிய துகளும், 30 S சிறிய துகளும் உள்ளன.
இத்துகள்களின் உருவ அமைப்பு, ஸ்டோஃபியர் விட்மனின் போலிச் சமச் சீர் மாதிரியாலும், லேகின் சமச் சீரற்ற மாதிரியாலும் விளக்கப் படும். ரிபோசோம்கள் புரதச் சேர்க்கையில் பெரும் பங்கு கொள்கின்றன. மேலும், அவை, தாது ரிபோஸ் நியூக்ளிய அமில முன்னோடி இழைகளை (m RNA filament) நியூக்ளியேசின் நியூக்ளிய நொதிச் செயலிலிருந்து பாதுகாக்கின்றன. வாட்சன் என்பார் 1955இல் ரிபோ துகள்கள் நியூக்ளியோலசிலிருந்து தோன்றின எனக் கூறினார்.
அகப் பிளாச வலை. அகப் பிளாச வலை தாவரச் செல்களிலும், விலங்குச் செல்களிலும் காணப் படுகிறது. எனினும், முதிர்ந்த குருதிச் சிவப்பு வடிவங்களிலும், நியூக்ளியசற்ற செல்களிலும், அகப் பிளாச வலை காணப் படுவதில்லை. எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம், அகப் பிளாச வலையைக் காணும் போது, சிறு இழைகளாலான வலை போன்று, நியூக்ளியசிலிருந்து செல் சவ்வு வரை பரவலாகக் காணப் படுகிறது. போர்ட்டர்கால்மன் என்பார் 1952இல் இந்நுண்ணிய வலைக்கு அகப் பிளாச வலை எனப் பெயரிட்டார். இது துகளுடையது (granular), துகளற்றது (agranular) என இரு வகைப் படும். இது மடிப்புகளாகவும் cisternae) நுண் குழல்களாகவும், (fabules), நுண் பைகளாகவும் (vesicles) காணப் படும். இவ்வலையின் சவ்வுகள்,. செல் பிளாசத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றன. சுரத்தல் பொருள்கள், உட் கழிவுப் பொருள்கள், விழுங்கு பொருள்கள் (phagoeytic material) ஆகியவற்றை உள்ளடக்கியது ஒரு பகுதியாகும், மைட்டோகாண்ட்ரியங்கள், ரிபோசோம்கள், செல் நுண் பொருள்களை உள்ளடக்கியது மற்றொரு பகுதியாகும், இவ்வலை 50 ஆங்க்ஸ்ட்ராம் தடிமனுடைய சவ்வுகளால் ஆனது. இது பிளாஸ்மா சவ்வை விட மெல்லியது. செல்கள் அரைக்கப்பட்டு, மைய விலக்கு விசைக்கு (centrifugation) உட்படுமேயானால், நுண் துகள்களாகக் காணப் படுபவை பெரும்பாலும், அகப் பிளாச வலைத் துகள்களேயாகும். அகப் பிளாச வலை, அகப் பிளாசத்தின் தாங்கு பொருளாக அமைகிறது. ரிபோசோம்கள் ஒட்டியுள்ள அகப் பிளாச வலை புரதச் சேர்க்கைக்கும், கிளைக்கோஜன், கொழுப்பு ஆகியவற்றின் ஆக்கத்திற்கும் பெரிதும் பயன் படுகிறது. கொழுப்புச் சேமிப்பிலும், கொழுப்பை ஏனைய செல் நுண் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதிலும், அகப் பிளாச வலையே பயன் படுகிறது. ஸ்டீராய்டு ஹார்மோன்களுக்கு (steriod hormones) முன்னோடியாகக் கருதப் படும் கொலஸ்ட்ரால் ஆக்கமும், அகப் பிளாச வலையில் நடை பெறுகிறது. மேலும், பெர் ஆக்சிடேஸ் (peroxidase) மிகுந்துள்ள நுண்ணமைப்புகளின் ஆக்கமும், அகப் பிளாச வகையில்தான் நடை பெறுகிறது. பல உயிரியச் செயல்கள், அகப் பிளாச வலை வாயிலாகவே நடை பெறுகின்றன.
மைட்டோகாண்ட்ரியங்கள். மைட்டோகாண்ட்ரியங்கள், செல்லின் ஆற்றல் ஆலைகளாகச் (power centres) செயல் படுகின்றன. அனைத்து வகைச் செல்களிலும் இவை காணப் படுகின்றன. கோலிகர் என்பார், இவை துகள்கள் போன்றவை எனக் கூறினார். 1882இல் ஃபிளமிங் என்பார், மைட்டோ காண்ட்ரியங்கள் இழைகள் போன்றுள்ளன என்று கூறினார். 1898இல் பென்டா என்பார், இவை நூல்கள் போன்று காணப் படுவதால், நூல் துகள்கள் அல்லது மைட்டோகாண்ட்ரியங்கள் என்று பெயரிட்டார். 1940இல் பேலேடும், 1950இல் ஜோஸ்ட்ரேண்டும் மைட்டோகாண்ட்ரியங்களின் நுண் அமைப்பை, எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் விளக்கினர்.
மைட்டோகாண்ட்ரியங்கள் நொதிகள் நிறைந்தவை; செரித்த உணவுப் பொருள்கள் இவற்றில் ஆக்சிஜனேற்றம் அடைவதால், ஆற்றல் வெளிப் படுகிறது. மைட்டோகாண்ட்ரியங்கள் 3–4 மைக்ரான் நீளமும், 0.5–1 மைக்ரான் விட்டமும் உடையவை. இவை பல உருவங்களில் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை செல் வகைக்கேற்பவும், செல்லின் ஆக்கச் சிதை மாற்ற நிலைக்கு (metabolic rate) ஏற்பவும் அமையும். இவை பாக்டீரியாக்களில் காணப் படுவதில்லை.
விந்தணுக்களில் இவை 20–24 வரை காணப் படுகின்றன. சினையணுக்களில், 300000 வரை காணப் படுகின்றன. கயாஸ் கயாஸ் (Chaos chaos) என்ற முன்னுயிரியில் (protozoa) 500000 மைட்டோ காண்ட்ரியங்கள் காணப் படுகின்றன. பொதுவாக, உயிரணுக்களின் அகப் பிளாசத்தில் மைட்டோ காண்ட்ரியங்கள் ஒரே சீராகப் பரவியுள்ளன. எனினும், செல்களின் தன்மைக்கு ஏற்ப, அவை சில இடங்களில் மிகுதியாகவும், வேறு சில இடங்களில் குறைவாகவும் உள்ளன. ஒரு சில செல்கள் தவிர, ஏனையவற்றில் நகரும் தன்மை பெற்றுள்ளன.
எலெக்ட்ரான் நுண்ணோக்கி வாயிலாக, மைட்டோகாண்ட்ரியத்தைக் காணும் போது, அது இரு சவ்வுகளால் ஆக்கப்பட்டமை தெரிய வரும். புறச் சவ்விற்கும், அகச் சவ்விற்கும் இடையில் உள்ள இடைவெளிக்குச் சவ்விடை வெளி (inter membrane space) என்று பெயர். இது 40–70 ஆங்க்ஸ்ட்ராம் அகலமுடையது. இதைச் சூழ்ந்து, ஒரு நீர்மம் உள்ளது. அகச் சவ்வில், பல உள் மடிப்புகள் உள்ளன. அம்மடிப்புகளுக்கு மைட்டோகாண்டிரிய கிரிஸ்ட்டே (cristae) என்று பெயர். இம்மடிப்புகளுக்கிடையில் உள்ள இடைவெளிகளுக்கு அக அறைகள் என்று பெயர். இவற்றினுள் செல்லிடைப் பொருள் உள்ளது. இதனுள், அடர் துகள்களும், ரிபோ துகள்களும், மைட்டோ காண்டிரிய டி ஆக்சிரிபோநியூக்ளியிக் அமிலங்களும் காணப் படுகின்றன.
மைட்டோகாண்ட்ரியங்கள் 5–10 நாள்கள் மட்டுமே வாழ்கின்றன. இவற்றின் பிறக்கம் (origin) குறித்து, மூன்று வகையான கருத்துகள் நிலவுகின்றன. அவை ஏனைய சவ்வுகளிலிருந்து தோன்றல், பகுபடுதல் வாயிலாகப் புதியன தோன்றல், புதிதாக ஆக்கப் பட்டுத் தோன்றல் என்பனவாகும். மைட்டோ காண்டரியங்களே செல்லின் உயிரியக்கச் செயல்களுக்குத் திறன் தருபவை. இங்குதான் பொருள்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து, ஆற்றல் வெளிப்படுத்தப் படுகிறது. ஆற்றல் வெளியேற்றத்திற்காக உள்ளேற்கப் பட்ட உணவுப் பொருள்கள் பல வேதி மாற்றங்களை அடைகின்றன.
செல்லின் பல செயல்களுக்கு, மைட்டோகாண்ட்ரியங்கள் காரணமாக உள்ளன. செல் சுவாசம், பைருவிக் அமிலம் ஆக்சிஜனேற்றம் அடைதல், கிரெப் சிட்ரிக் அமிலச் சுழற்சி, ஆக்சிஜனேற்ற பாஸ்ஃபோரிலேற்றம் (oxidative phosphorylation) ஆகிய உயிரியச் செயல்கள் மைட்டோகாண்ட்ரியங்களிலேயே நடை பெறுகின்றன. செல் சுவாசித்தலின் போது, ஏற்படும் ATP மூலக் கூறுகள் எங்கு ஆற்றல் அதிகம் தேவையோ, அங்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. கொழுப்பாக்கத்திலும் மைட்டோகாண்ட்ரியங்கள் பங்கு கொள்கின்றன.
தன்னழிவுப் பைகள் (lysosomes). 1949ஆம் ஆண்டு மைய விலக்கு விசைக்கு உட்படுத்தப்பட்ட போது, ரிபோசோம்களுக்கும், மைட்டோகாண்ட்ரியங்களுக்கும் இடைப்பட்ட சில அடர் துகள்கள் காணப் பட்டன. அவற்றிற்குப் பெரிகேனாலிகுலர் நுண்ணமைப்புகள் (pericanalicular bodies) எனப் பெயரிட்டனர். பின்னர் 1955இல் திதுவே என்பார் இத்துகள்களில் உள்ள நொதிகள் செல் நண்ணுறுப்புகளை அழிக்கும் ஆற்றல். படைத்தவை என்பதை அறிந்து இவற்- றிற்குத் தன்னழிவுப் பைகள் எனப் பொருள் படும் லைசோசோம் (lysosome) என்று பெயரிட்டார்.
லைசோசோம்கள் அகப் பிளாச வலையிலிருந்தோ, கோல்கை அமைப்பிலிருந்தோ, தோன்றுகின்றன. பின்னர், இவை உட்குழிவினாலோ, தன்விழுங்கு முறையினாலோ, ஏற்படும் பைகளுடன் இணைகின்றன. கோல்கை அமைப்பிலிருந்து தோன்றும் முதனிலைத் தன்னழிவுப் பைகளில் (primary lysosomal bodies), நீரேற்றிப் பிரிக்கும் நொதிகள் (hydrolytic enzymes) காணப் படுகின்றன. 1960இல் நோவிகாஃப் என்பார், லைசோசோம்கள் உட்குழிவுப் பைகளிலிருந்து உண்டாகின்றன என்று கூறினார். தன்னழிவுப் பைகளில் உள்ள நொதிகளைச் சூழ்ந்துள்ள சவ்வு, அதனுள் உள்ள நொதிகளால் பாதிக்கப் படுவதில்லை; இச்சவ்வு மிக மெல்லியதாக உள்ளது. இச்சவ்விலிருந்து நொதிகள் வெளிப்படுமேயானால், செல்லில் உள்ள அனைத்து நுண் உறுப்புகளையும் அழித்துச் செல்லையும் அழித்து விடும். எனவே, இவற்றைத் தற்கொலைப் பைகள் எனலாம். ஏறத் தாழ, 40 வகை நொதிகள் தற்கொலைப் பைகளினுள் காணப் படுகின்றன.
ஒரே செல்லில், இவை பல உருவங்களில், காணப் படுகின்றன. இவற்றிலுள்ள நொதிகள் செல்லிடைச் செரிமானத்திற்கும், செல்லுள் செரிமானத்திற்கும் (intra cellular digestion) பயன் படுகின்றன. மேலும், இவை ஹார்மோன் சுரத்தலிலும், பங்கு கொள் கின்றன. கருவுதலின் போது, விந்துணுக்களில் உள்ள அக்ரோசோம்களில் உள்ள தன்னழிவுப் பைகள் உடைந்து வெளிப்படும் நொதிகள், முட்டை உறையை கரையச் செய்கின்றன.
நுண்ணிழைகள் (microfilaments). நியூக்ளியசுள்ள உயிரணுக்களின் அகப் பிளாசத்தில் பல நுண்ணிழைகளும், நுண் குழல்களும் காணப் படுகின்றன. இவை நியூக்ளியசற்ற செல்களில் காணப் படுவதில்லை. நுண்ணிழைகள் இரு வகைப் படும். அவை 1.50–70Å விட்டமுடைய நுண்ணிழைகள், 2,100 Å விட்டமுடைய நுண்ணிய நரம்பிழைகள் (neuro filaments ) என்பன. முன்னவை செல் பகுபடுதலின் போது, உண்டாகும் பிளவுப் பள்ளம் ஏற்படவும், தாவரச் செல்களில் புரோட்டாபிளாச இயக்கத்திற்கும் பயன் படுகின்றன; பின்னவை, பொருள்களை ஆக்க மையத்திலிருந்து, ஆக்சானின் நுனி வரை கடத்தப் பயன் படுகின்றன.
நுண் குழல்கள். டீராபர்ட்டீசும், பிராங்கையும் 1953இல் நரம்புச் செல்லின் சைட்டோப் பிளாசத்தில் இவற்றைக் கண்டு பிடித்தனர். இவை நியூக்ளியசுள்ள செல்களின் செல் பிளாசத்தில் மட்டும் காணப் படுகின்றன. அமீபாவின் போலிக் கால்களிலும் மறைமுகப் பகுப்பின் கதிர் இழைகளிலும் (mitotic spindle), காணப் படும் நுண் குழல்கள் நிலையானவையாக உள்ளன. இக்குழல்கள், பொதுவாக விறைப்பான தன்மை வாய்ந்தனவாக அமைந்து, செல் சட்டமாகக் (cytoskeleton) காணப் படுகின்றன. நுண் குழல்கள், செல் நுண் உறுப்புகள் பலவற்றில் காணப் படுகின்றன. நீளிழைகள், குற்றிழைகள், மையத் துகள்கள், அடித் துகள்கள் (basal bodies), நரம்புச் செல்கள், முன்னுயிரிகளின் ஆக்சோபோடியங்கள் (axopodia). குச்சிப் போலிக் கால்கள், குருதி நுண் தட்டுகள் (blood platelets), மறைமுகப் பகுப்பின் இழைகள், உணர் செல்கள் (sensory cells) போன்றவற்றில் இவற்றைக் காணலாம்.
நுண் குழல்கள் நீளக் குழல் போல உள்ளன. புற விட்டம் 250Å ஆகும். குழல் சுவரின் தடிமன் 50Å ஆக உள்ளது. குழலின் விட்டம் 150 Å: நீளம் பல மைக்ரான் வரை உள்ளது. நுண் குழல்கள் 13 சிற்றலகுகளால் ஆனவை. அவற்றிற்கு முன்னிழைகள் (protofilaments) என்று பெயர். நுண் குழல்கள் செல்களின் உருவத்தை நிலைப் படுத்தவும், செல் சவ்வின் இயக்கத்திற்கும், குற்றிழை, நீளிழைகளின் இயக்கத் திற்கும், செல் பகுப்பின் போது, குரோமோசோம்களின் இடப் பெயர்ச்சிக்கும், செல் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும், கரு வளர்ச்சியின் போது, நடை பெறும் உருவத் தோற்றத்திற்கும் (morphogenesis), உணர்வு அலை மாற்றத்திற்கும் (sensory transduction) பயன் படுகின்றன.
மைய அமைப்பு. இவ்வமைப்பு, மையத் துகள்களை (centrioles) உடையது. இது, பெரும்பாலும் நியூக்ளியாசின் பக்கத்தில் கோல்கை அமைப்பிற்கு நடுவில் காணப் படுகிறது. இவ்வுறுப்பு உயர் விலங்குகளில் செல் பகுபடும் போது, செயல் படுகிறது.மையத் துகள்கள் உருவ அமைப்பில், நீளிழைகளில் காணப் படும் அடித் துகள்களை ஒத்துள்ளன. இவற்றின் தலையாய செயல் அசைவு இயக்கமாகும். மறைமுகப் பகுப்பில் செல் பகுபடும் போது, குரோமசோம்கள் இரு தொகுதிகளாகப் பிரிக்கப் பயன் படுகின்றன. முதிர்ந்த மையத் துகள்கள் 1600–2500 Å விட்டமும், 1600–8000Å வரை நீளமும் உடையன. பெரிய மையத் துகள்கள் சினையணுக்களில் காணப் படுகின்றன. செல் பகுபடுதலில், மையத் துகள்கள் பெரும் பங்கு கொள்கின்றன.
கோல்கை அமைப்பு. கேமில்லோ கோல்கை (Camillo golgi) என்பார், 1898இல் இந்நுண்ணுறுப்பைச் செல்களில் கண்டு பிடித்ததால் இதற்குக் கோல்கை அமைப்பு என்று பெயரிடப்பட்டது. இது துகள்களற்ற அகப் பிளாச வலையால் ஆக்கப் பட்டுள்ளது. இதில் காணப்படும் சவ்வுகள், கொழுப்புத் துகள்களால் ஆக்கப் பட்டவை. இதற்கு டிக்டியோ சோம் (dictyosome) என்றும் ஒரு பெயர் உண்டு.
தாவரச் செல்களிலும் விலங்குச் செல்களிலும் உள்ள கோல்கை நுண்ணுறுப்பு உருவத்தாலும், செய- லாலும் ஒத்திருக்கும். பெரும்பாலும், கோல்கை நுண்ணுறுப்பு நியூக்ளியசுக்கு மேற்பகுதியில் மைய அமைப்பைச் சூழ்ந்து, மெல்லிய சவ்வுகளால் ஆக்கப் பட்டதாகும். இது சுரத்தலில் ஈடுபட்டுள்ள செல்களில் (secretory cells) பெரும்பான்மையாகக் காணப் படுகிறது. சில செல்களில் இந்நுண்ணுறுப்பு, ஒரு குறிப்பிட்ட இடத்திலும், வேறு சிலவற்றில் செல் பிளாசம் முழுதும் துகள்களாகவும் காணப் படும்.
எலெக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு பிடித்த பின்னரே, கோல்கை நுண்ணுறுப்பின் உருவ அமைப்பையும், அதன் செயல்பாடுகளையும் நன்கு விளக்க முடிந்தது. பொதுவாக இவ்வுறுப்பு மூன்று வகை அமைப்புகளாகக் காணப் படுகிறது. அவை தட்டையான பைகள் (cisternae). நுண் குழல் கொத்துகள் அல்லது பைகள், துகள்கள் நிறைந்த அல்லது துகளற்ற குமிழ்கள் என்பன ஆகும். பெரும்பாலும், தட்டைப் பைகள், இணையாக ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன. இப்பைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே, 20–30 நானோ மீட்டர் வரை (நானோ மீட்டர் = 10-6மி.மீ.) இடைவெளி உள்ளது. இப்பைகள் பெரும்பாலும், மிக நெருக்கமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு செல்ளிலும் 3–7 பைகள் உள்ளன. எனினும், சில பாசிகளில் 10–20 பைகளும் காணப் படுவதுண்டு.
கோல்கை நுண்ணுறுப்பு, செல்களின் பல உயிரியக்கச் செயல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக, சுரத்தலில் ஈடுபடும் இவ்வமைப்பு, புரதச் சேர்க்கையிலும் பங்கு கொள்கிறது. பாலி சாக்கரைடுகளின் ஆக்கத்திலும், இது பங்கு பெறுகிறது. சல்ஃபேட் சிதை மாற்றங்கள், பிளாஸ்மாச் சவ்வு ஆக்கம் போன்ற செல் செயல்பாடுகளிலும் பங்கு கொள்கிறது. தாவரச் செல்களின் செல் சுவர், கோல்கை உறுப்பிலிருந்து உண்டாகிறது. ஸ்டீன், ஸ்டீன் ஆகியோர் கதிரியக்கப் பதிவு முறையை 1967இல் பயன் படுத்திச் செரிக்கப்பட்ட கொழுப்புப் பொருள்கள் கோல்கை உறுப்பு வாயிலாக, ஏனைய நுண்ணுறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதை அறிந்தனர்.
விந்தணுக்களின் அக்ரோசோம் கோல்கை நுண்ணுறுப்பால் ஆனது. தன்னழிவுப் பைகள் கோல்கை உறுப்பிலிருந்து உண்டாகின்றன என்பதை, நோவிகாஃப்பும், அவருடன் பணியாற்றிய ஏனைய உயிரியல் அறிஞர்களும் கண்டறிந்தனர். முதுகெலும்பிகளிலும், முதுகெலும்பற்றவையிலும் உள்ள நரம்பிய சுரப்புத் துகள்கள் (neuro secretory granules) கோல்கை நுண்ணுறுப்பின் பக்கத்தில் மிகுதியாகக் காணப் படுவதால், இத்துகள்கள் சுரக்கப் படுதலில் கோல்கை நுண்ணுறுப்பு பெரும் பங்கு கொள்வதாகக் கருதப் படுகிறது. மெலானின் நிறமித் துகள்கள் சுரக்கப் படுதலிலும், இது பங்கு கொள்கிறது. கீழ் நிலைப் பின்னுயிரிகளிலும் (lower metazoa) முன்னுயிரிகளிலும் நீர்மச் சம நிலைப் பேணுதலுக்குக் கோல்கை நுண் உறுப்பே காரணமாக உள்ளது.
நியூக்ளியஸ். தெளிவுற அமைந்த நியூக்ளியசற்ற உயிரிகள் (prokaryotes) தவிர, ஏனைய உயிரிகள் அனைத்திலும் உள்ள செல்களில் நியூக்ளியஸ் காணப் படுகிறது. பொதுவாக, இது செல் பிளாசத்தின் மையத்தில் காணப் படுகிறது. ஆனால், சில செல்களில் அடிப் பகுதியில் காணப் படுகிறது. நியூக்ளியஸ் பொதுவாக, வட்டமாக, முட்டை வடிவாக அல்லது தட்டு வடிவாகக் காணப் படுகிறது. ராபர்ட் பிரவுன் என்பார், 1835இல் செல்களின் நியூக்ளியசைப் பற்றிய செய்திகளை வெளியிட்டார்; நியூக்கிளியசின் அளவு செல்களின் வகைக்கு ஏற்ப மாறு படுகிறது. அதன் அளவிற்கும், அதனுள் காணப்படும் செல் பிளாசத்திற்கும் உள்ள விகிதத்தை நியூக்ளிய செல் பிளாசக் குறியீட்டால் (nucleoplasmic index) குறிப்பிடுகின்றனர். இதைக் கீழ் வரும் வாய்பாட்டால், ஹெர்ட்விக் என்பார், 1906இல் விளக்கினார்.
ஒளி நுண்ணோக்கி மூலம் பார்க்கும் போது, நியூக்ளியசைச் சூழ்ந்து, ஒரு சவ்வு காணப் படுகிறது. இது ஒரே சவ்வால் ஆனது போலத் தோன்றுகிறது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி வாயிலாகக் காணும் போது, இச்சவ்வு இரு சவ்வுகளால் ஆனது என்றும், இரு சவ்வுகளுக்கிடையே உட்கருச் சூழ்வெளி (perinuclear space) காணப் படுகிறது என்றும் கண்டறிந்தனர். மேலும், இச்சவ்வு துளைகளுடையது என்பதும் தெரிய வந்தது. ஒவ்வொரு துளையும் ஒரு வளையத்தால் (annulus) சூழப் பட்டுள்ளது.
எலெக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே, நியூக்ளியசின் நுண் பகுதிகளும், செயல்களும் விரிவான முறையில் விளக்கப் பட்டன. பொதுவாக, நியூக்ளியசை நான்கு பகுதிகளாகப் பிரித்து விளக்கலாம். அவை நியூக்ளியச் சவ்வு, நியூக்கிளியப் பிளாசம் (nucleoplasm), குரோமேட்டின் இழைகள் (chromatin fibres), நியூக்ளியோலஸ் என்பன ஆகும்.
நியூக்ளியச் சவ்வு. நியூக்ளியசைச் சூழ்ந்து காணப் படும் துளைகளுடைய இரு சவ்வினால் ஆகிய சவ்விற்கு, நியூக்ளியச் சவ்வு என்று பெயர். இது நியூக்ளியசைச் செல் பிளாசத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது. இச்சவ்வில் காணப்படும் துளைகள் வாயிலாகப் பல இன்றியமையா நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. பெரிய மூலக் கூறுகள் செல் பிளாசத்தி- லிருந்து இத்துளைகள் வழியாகவே, நியூக்ளியசுக்குள் செல்கின்றன. எனினும், இத்துளைகளை விடப் புரத மூலக் கூறுகள் சிறியவாயினும், அவற்றின் வழிச் செல்வதில்லை.
நியூக்ளியப்பிளாசம். நியூக்ளியசின் உட்பகுதி, ஒளி ஊடுருவத் தக்க துகள்களுடைய கூழினால் நிரப்பப் பெற்றுள்ளது. இதில் நியூக்ளிய அமிலங்களும், நியூக்ளியப் புரதங்களும், சில நொதிகளும் காணப் படுகின்றன. DNA, பாலிமெரெஸ், அடினோசின் டை அமினேஸ், நியூக்ளியோசைடு, பாஸ்ஃபோரிலேஸ் போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தக்கன.
குரோமேட்டின் இழைகள். நியூக்ளியப் பிளாசத்தில் காணப் படும் நூல் போன்ற சுருண்ட இழைகளுக்குக் குரோமேட்டின் இழைகள் என்று பெயர். இவ்விழைகள் செல் பகுபடும் போது, தடித்துக் குட்டையாகக் காணப் படுகின்றன. அவற்றிற்குக் குரோமோசோம்கள் என்று பெயர். குரோமேட்டின் இழைகளில் டி ஆக்சிரிபோ நியூக்ளியிக் அமிலம், ரிபோநியூக்ளிக் அமிலம் ஆகியவையும், புரதங்களும் காணப் படுகின்றன.
ஹெட்டிரோ குரோமேட்டின். இறுகிய நிலையிலுள்ள குரோமேட்டிக் இழைகளைக் கொண்ட ஹெட்டிரோ குரோமேட்டின் பகுதிகள், யூக்குரோமேட்டிடை விட, இரண்டு அல்லது மும்மடங்கு அதிகமான DNAஐப் பெற்றிருந்தாலும், RNA தயாரிப்பில் ஈடு படுவதில்லை.
நியூக்ளியோலஸ். ஃபாண்ட்டனா என்பார், 1781இல் நியூக்ளியசில் நியூக்ளியோலஸ் உள்ளமையைக் கண்டறிந்தார். செல்களின் செயல் திறனுக்கு ஏற்ப, நியூக்ளியோலசின் அளவு வேறு படுகிறது. விந்தணுக்களிலும், தசை நார்களிலும் நியூக்ளியோலஸ் சிறியதாக உள்ளது. சுரக்கும் செல்களில், நியூக்ளியோலஸ் பெரியதாக உள்ளது. இனத்திற்கு இனம் நியூக்ளியோலசின் எண்ணிக்கை வேறு படும். பெரும்பாலும், ஒரு செல்லில் நியூக்ளியோலஸ் 1–4 வரை காணப் படும். இது நியூக்ளியசின் மையப் பகுதியினின்று விலகியே அமைந்துள்ளது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி கண்டு பிடிக்கப் பட்ட பின்னர், நியூக்ளியோலசில் மூன்று பகுதிகள் உள்ளன என்பது தெரிய வந்தது. அவை, துகளுடைய பகுதி (granular region). இழைப் பகுதி (fibrillar region), துகளற்ற பகுதி (amorphous region) என்பனவாகும். நியூக்ளியோலசில் புரதமும், ரிபோ புரதமும் காணப் படுகின்றன. மேலும், அமில பாஸ்ஃபட்டேஸ் நியூக்ளியோசைடு பாஸ்ஃபோரிலேஸ் நொதிகளும் உள்ளன. செல்களில் காணப் படும் ரிபோ நியூக்ளியிக் அமிலத்தில், 70–90 நியூக்ளியோலசால்தான் ஆக்கப் படும். புரதச் சேர்க்கையும், நியூக்ளியோலசில்தான் நடை பெறுகிறது. ரிபோசோம்களும், நியூக்ளியோலசிலிருந்தே உண்டாகின்றன.
நியூக்ளியசின் செயல்பாடுகள். செல்களின் செயல்பாடுகள் அனைத்தும் நியூக்ளியசிலிருந்தே கண்காணிக்கப் படுகின்றன. பாரம்பரியப் பொருளை ஒரு செல்லிலிருந்து மற்றொன்றுக்கு எடுத்துச் செல்ல, நியூக்ளியசே காரணமாகும். நியூக்ளியஸ் இல்லையெனில், செல்கள் தொடர்ந்து செயல் படுவதில்லை. —ச. சம்பந்தம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 837)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9aqxf8t2/
தமிழ்“செல் அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9aqxf8t2/APA
Oliyon Research. (2026). செல் அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9aqxf8t2/MLA
"செல் அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9aqxf8t2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment