வட இந்தியாவில் நிலவும் சாதிகளுள் ஒரு பிரிவு. பெரும் செல்வம் படைத்த வணிகர்கள் அகர்வாலாக்கள். சுறுசுறுப்பிற்கும் கடுமையான உழைப்பிற்கும் பெயர் பெற்ற இவர்களில் சிலர் சமண சமயத்தைச் சார்ந்திருக்கின்றனர். எனினும் சமணர்களல்லாத வைணவக் குடும்பங்களில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அகர்சென் அல்லது உக்கரசென் என்னும் அரசரால் நிலைநாட்டப் பெற்ற அகரக அல்லது அகரோக என்னும் ஊரைச் சார்ந்தவர்களாதலால், இவர்கள் அகர்வாலாக்கள் எனப்பட்டார்கள். இவர்களுள் பெரும்பாலோர் சைவர்கள்; பாம்பினைப் புனிதமாகக் கருதுகிறார்கள். சமயப் பற்றுமிக்கவர்களாயினும், அண்மைக் காலத்தில் இவர்கள் மேல்நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுகிறார்கள். அகர்வாலாக்களுள் சிலர் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களாகத் திகழ்கிறார்கள்; நல்ல பணிகளுக்குப் பெரும் செல்வத்தை வாரி வழங்குகிறார்கள்; அனைத்துச் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டுகிறார்கள்.