இளைய இத்தாலியர் சங்கம்
iḷaiya ittāliyar caṅkam
சோசப்மாட்சீனீ என்னும் இத்தாலியத் தேசியவாதியால் கி.பி.
சோசப்மாட்சீனீ என்னும் இத்தாலியத் தேசியவாதியால் கி.பி. 1831–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பிரான்சிலுளை மார்செயில்சு நகரில் இச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கத்தைப் போன்ற பல சங்கங்கள் இத்தாலியில் இதற்கு முன்னரே அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மிகவும் சிறப்பானது கார்போனரியாகும். அது ஓர் இரகசியத் கழகமாகும். இத்தாலி கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்நாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டிருக்கவில்லை. மக்களிடம் தேசிய உணர்ச்சி தோன்றவில்லை. இத்தாலியின் பெரும் பகுதி அயலார் ஆட்சியின் கீழ் இருந்தது. இத்தாலிய நாடு- களை ஆண்டு வந்தவர்கள் அனைவருமே வல்லாட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். ஒருசில பகுதிகளில் மட்டிலுமே குடியரசு அமைக்கப்பட்டிருந்தது. அந்நிலை கி.பி. 1870–ஆம் ஆண்டிற்குள் மாற்றப்பட்டு விட்டது. அயல் ஆட்சியாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். எல்லாப் பகுதிகளும் ஒரே ஆட்சியில் கீழ்க்கொண்டுவரப்பட்டன. இந்த நிலை ஏற்படுவதற்கு உறுதுணையாக இருந்த பல்வேறு ஆற்றல்களுள் ஒன்றே இளைய இத்தாலியர் சங்கமாகும். இதனுடைய தோற்றம் இத்தாலிய மறுவாழ்வு (Risorgimento) இயக்கத்தின் ஒரு திருப்புக்கட்டமாக அமைந்துள்ளது.
மாட்சீனீ கி.பி. 1827–இல் கார்போனரியின் உறுப்பினராகச் சேர்ந்தார். அதன் சார்பில் நடத்தப்பட்ட கிளர்ச்சியில் பங்கு கொண்ட காரணத்தால் அவர் சிறைபுக நேர்ந்தது. அவர் சிறை வாழ்க்கையை மேற்கொண்டிருந்தபோதுதான் அவருடைய அரசியல் கருத்துகள் முதிர்ச்சியடையத் தலைப்பட்டன. அப்போதுதான் கார்போனரிக்கு வேறு பல இரகசியக் கழகங்களின் குறிக்கோள், பணிகள் ஆகியவற்றை ஆராய்ந்து அறியக்கூடிய வாய்ப்பும் நேரமும் கிடைத்தன. அப்போது இரகசியக் கழகங்களின் தோல்விக்குரிய காரணங்கள் அவருக்குப் புலப்பட்டன. முதலாவதாக, அவற்றின் உறுப்பினர்கள் ஒருசில வகுப்புகளைக் (குறிப்பாக உயர்குடியைச்) சார்ந்தவர்களாக இருந்தனர். அவை அறிவாளிகளின் கழகங்களாகச் செயற்பட்டனவேயன்றிப் பாமர மக்களுடைய கழகங்களாகக் காட்சியளிக்கவில்லை. இரண்டாவதாக, அவற்றின் தலைவர்கள் திறமையற்றவர்களாக இருந்தனர். தலைவர் தேர்தலில் ஒருவருடைய திறமைக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. மாறாக அவருடைய சமுதாய நிலை, அவர் உறுப்பினராகப் பணியாற்றிய காலம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. மூன்றாவதாக, அவற்றிற்கு உயரிய நோக்கம் ஏதும் இல்லை. கொடுங்கோலாட்சியை ஒழிப்பதே அதன் தலையாய நோக்கமாகும். அதுவன்றித் தொழிற் சுதந்திரம், ஏற்றுக்கொள்ளத்தக்க சட்டத்தொகுதி, கல்விமுறை ஆகியவற்றைப் பெறுவது அவற்றின் நோக்கமாக இருந்தது. அவைதவிர ஆக்க முறையிலமைந்த திட்டம் எதனையும் அவை அறிவிக்கவில்லை. நான்காவதாக, அவை கையாண்ட முறைகளும் சரியாக அமையவில்லை. புரட்சியின் வாயிலாக அவை அவற்றின் திட்டத்தை நிறைவேற்ற எண்ணின. ஆனால் அப்புரட்சி எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே தலைமையின் கீழ் நடத்தப்பெறவில்லை. அவற்றின் நோக்கத்தில் ஒற்றுமை இருந்தது. எனினும், அதனை அடைவதற்கான முயற்சி மேற்கொள்ளுவதில் அவற்றிற்கிடையே ஒற்றுமையில்லை. ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த ஆட்சிக்கு எதிராகச் சமயச் சூழ்நிலைக்கேற்ப அவை கிளர்ச்சிகளை நடத்தின. அவற்றைப் பிற்போக்குச் சக்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அடக்கி விடுவதில் எந்த விதமான இடைஞ்சலையும் எதிர் கொள்ளவில்லை. எனவே, இக்குறைகள் அனைத்தும் நீக்கப்பட்ட ஒரு மாற்றுச் சங்கம் அமைத்தாலன்றி இத்தாலிக்கு மறுவாழ்வு கிடைக்காது என்று மாட்சீனீ உணர்ந்தார். புரட்சிக் கருத்துகளைக் கைவிட மறுத்தமையால் அவர் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்ட அவர் முதலில் பிரான்சில் வாழ நேர்ந்தது. அங்கிருந்தபோதுதான் இளைய இத்தாலியர் சங்கத்தை நிறுவினார்.
இளைய இத்தாலியர் சங்கம் என்ற பெயருக்கேற்ப அச்சங்கத்தில் இளைஞர்கள் பெரும்பான்மையினராகச் சேர்க்கப்பட்டனர். மாட்சீனீக்கு இளைய தலைமுறையினரிடம் அளவுகடந்த நம்பிக்கையுண்டு. அவர்களுடைய இதயங்களில் பொதிந்துள்ள வலிமையின் இரகசியத்தை அறிந்தவர் அவரேயாவார். புரட்சிக்குத் தலைமை தாங்க இளைஞர்களே தகுதி பெற்றவர்கள் என்பது அவர் கருத்து. நாட்டில் பெரியதொரு பங்கு அவர்களுக்கு உண்டு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இளைஞர்களே வலிமை பெற்றவர்கள் என்றவாறு பேசி, இத்தாலியின் பெரிய எதிரியான ஆசுத்திரியாவின் பக்கம் அவர்களைத் திருப்பிவிட்டால், அயலார் ஆட்சி இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்று மாட்சீனீ எண்ணினார். மேலும், அவர் தாம் கற்பனை செய்திருந்த கருத்துகளைப் பரப்ப இளைஞர்களே தகுதியானவர் என்று உணர்ந்தார். இளைஞர்களின் குரலில் தோன்றும் மந்திர ஆற்றலுக்கு அடிமையாகாதவர் எவரும் இருக்கமுடியாது என்பது அவர் தம் கருத்து. அவர் இளைஞர்கள் தாம் கொள்கையில் பற்றுறுதியுடன் இருக்க இயலும்; அவர்களாலேயே எல்லாச் சோதனைகளையும் இன்னல்களையும் நன்கு தாங்கிக்கொண்டு செயலாற்ற இயலும்; தாம் மேற்கொண்ட பணிக்குத் தேவையான அயரா உழைப்பையும் அவர்களிடம்தான் காணமுடியும்; நாட்டுப்பற்று அவர்களுடைய இதயங்களில்தான் கொழுந்துவிட்டெரியும் என்று எண்ணினார். மாட்சீனீயின் நம்பிக்கை வீண் போகவில்லை. சாதாரணக் குடும்பங்களைச் சார்ந்த ஒருசில இளைஞர்கள், ஊர்பேர் தெரியாத இனைஞர்கள், வசதியற்ற இளைஞர்கள், வெகு விரைவில் பல அரசுகளை எதிர்க்கும் அளவிற்கு வலிமை பெற்றுவிட்ட இளைய இத்தாலியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றனர். பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 60,000 பேர் இச்சங்கத்தின் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். செனோவாவில் உருப்பினீயும், தசுகனியில் (Thscany) கொர்ராசியும், உரோமாக்னாவில் பரீனீயும், அம்பிரியாவில் குவார்டலூசியும் தலைமைப் பொறுப்பேற்றார்கள். அச்சங்கத்தினர்கள் கல்வியறிவற்ற மக்களிடம் தேசிய உணர்ச்சியை வளர்க்க மேற்கொண்ட இன்னல்கள் பல, மலைகளைக் கடந்து இத்தாலியின் ஒவ்வொரு மூலைமுடுக்குக்கும் சென்று தம் கொள்கையைப் பரப்பினர். தொழிற்கூடங்களுக்குச் சென்று தொழிலாளர்களுடைய உணவைப் பகுத்துண்டனர். அவர்களுடைய உரிமைகளை அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். இதுவரை அவற்றைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்க எவரும் முன்வரவில்லை. அவர்களுடைய முந்தைய பெருமையையும், இப்போது அயலார் பிடியில் சிக்கி அவர்கள் அடைந்துள்ள அவல நிலையையும் ஒப்பிட்டுக் காட்டும்போது, தங்களை அறியாமலேயே அவர்களிடம் நாட்டுப்பற்று மேலிட்டெழுந்தது. நாட்டுக்காக எந்தவிதக் கொடையினையும் தரத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டனர். அது மட்டுமன்றி, இதுகாறும் தனித்தனியே வாழ்ந்து வந்த இத்தாலியர் உள்ளத்தில் ஒற்றுமை உணர்ச்சியும் வளர்ந்தது. அவ்வளவிற்கும் முதற்காரணமாக விளங்கியவை அதில் பங்கேற்ற இளைஞர்களின் துடிப்பான செயல்களேயாகும். இரண்டாவதாக, அதனைத் தோற்றுவித்தவரின் மாசற்ற நடத்தையைக் குறிப்பிடலாம். மூன்றாவதாக, அவருடைய நாவன்மையையும் எழுத்துவன்மையையும் கூறலாம். நாட்டிற்கு வெளியே இருந்து கொண்டே தமது இலக்கியப் படைப்புகளின் வாயிலாக மக்களை ஊக்கிய பெருமை அவரைச் சாரும். அது மட்டுமன்றி அவர் இளைய இத்தாலி என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அவருடைய கருத்துக்களைப் பரப்ப அது ஒரு பெருங் கருவியாகத் திகழ்ந்தது.
ஏனைய இரகசியக் கழகங்களைப் போன்றே இளைய இத்தாலியர் சங்கமும் இரகசியமாகச் செயற்பட்டு வந்தது. வெளிப்படையாக அது செயற்படத் தொடங்கியிருப்பின் பிற்போக்கு ஆற்றல்கள் அதனை நசுக்கிவிட்டிருக்கும். அதே காலத்தில் அது ஒரு தீங்கு செய்யும் குழுவாக மட்டும் விளங்கக் கூடாது என்று மாட்சீனீ கருதினார். எனவே, அதன் உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக யாருக்கும் கீழ்ப்படிந்து நடக்கலாகாது என்றும், அதனுடைய கொள்கையில் தாமாகவே நம்பிக்கை வளர்த்துக் கொண்டவர்களே அதில் சேரவேண்டும் என்னும் சுருத்துத் தெரிவித்தார்.
இளைஞர் இத்தாலியர் சங்கம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருடைய சங்கம் அன்று; அறிவாளிகள் மட்டும் அடங்கிய சங்கமும் அன்று. எளிதில் சென்றடைய முடியாத சிற்றூர் மக்கள் முதல் பெரிய நகரங்களில் பணிபுரியும் தொழிலாளிகள் வரை எல்லா வகைக் கல்வியறிவற்ற மக்களும் அதன் கொள்கையில் பற்றுக் கொண்டனர். சுருங்கக்கூறின், அது கல்வியறிவற்ற மக்களுடைய இயக்கமாகச் செயற்பட்டது. புரட்சிகள் மக்களால் மக்களுக்காக நடத்தப்பட்டாலொழிய, அவை வெற்றி பெற இயலா என்பது மாட்சீனீயின் திடமான கருத்தாகும். இளைய இத்தாலியர் சங்கத்தின் வாயிலாக இத்தாலிய விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றியமைத்த பெருமை அவருக்கே உரியதாகும்.
இளைஞர் இத்தாலியச் சங்கத்தின் திட்டத்தைச் சங்க விதிகளில் மாட்சீனீ தெளிவாக விளக்கியுள்ளார். அந்த விதிகள் அவருடைய கட்டுரைத் தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பொதுவான குடியுரிமையோ தேசியநாடோ தேசியக் கொடியோ பெற்றிராத இத்தாலிய மக்களை ஒரு தேசிய இனமாக அமைப்பது அச்சங்கத்தின் நோக்கமாகும். ஒரு நாட்டினுடைய வலிமை அதனுடைய மக்களின் ஒற்றுமையில்தான் அடங்கியிருக்கிறது. ஆகவே மக்கள் தங்களிடம் ஏற்பட்டிருந்த வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஒரே இனமாகச் செயற்பட வேண்டும் என்று மாட்சீனீ கூறினார். இத்தாலியில் ஒரு கிராம மக்கள் மற்றொரு கிராம மக்களை அயலாராகக் கருதி வந்த காலத்தில் அவர்கள் அனைவரையும் ஒரு தேசிய இனமாக அமைக்கமுடியும் என்று முதல் முதலில் கற்பனை செய்து பார்த்தவர் மாட்சீனீயாவார். இத்தாலி ஒரு தேசிய நாடாக மாற விரும்புகிறது. என்றேனும் ஒருநாள் அது தேசிய நாடாக மாறப்போகிறது என்று அழுத்தம் திருத்தமாக முதன்முதலில் அறிவித்தவர் அவரேயாவார். கற்பனையில் தாம் கண்ட ஒன்றுபட்ட இத்தாலியின் உருவத்தை எல்லா மக்களின் இதயங்களிலும் பொறித்து வைக்க இளைய இத்தாலியர் சங்கம் பெரிதும் உதவியது. அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் இத்தாலியத் தேசிய இனத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிமொழி தந்தனர். அவர்களுடைய எண்ணங்களும் செயல்களும் அந்தக் குறிக்கோளையடையச் செலவிடப்படும் என்றும் உறுப்பினர்கள் உறுதியளித்தனர். இத்தாலி என்ற பெயர் தவிர வேறெந்தப் பெயரிலும் எழுச்சி கொள்ளக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது.
அடுத்தது, இத்தாலியைச் சுதந்திர நாடாக மாற்றி அமைப்பதாகும். அச்சுதந்திரத்திற்கு இடையூறாக நிற்பது ஆகத்திரிய நாடாகும். ஆகவே அதனுடன் போராட மக்கள் தங்களை ஆயத்தப் படுத்- திக் கொள்ளவேண்டுமேயொழிய அயலாருடைய உதவியை எதிர் பார்க்கக்கூடாது என்பது அறிவிக்கப்பட்டது.
இளைய இத்தாலிய சங்கத்தின் மற்றொரு நோக்கம், இத்தாலியை ஒரு தேசியக் குடியரசாக அமைப்பதாகும். கடவுள் உண்டாக்கிய மக்கள் யாவரும் சுதந்திரமாகவும், சம உரிமை பெற்றவர்களாகவும், உடன்பிறப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும் வாழவேண்டும் என்பது கடவுளுடைய ஆணை. அத்தகைய சமத்துவ நிலையைக் குடியரசில் தான் பெறமுடியும். ஆகவே அச்சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குடியரசுக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், குடியரசுத் தத்துவத்தைப் பரப்புவதாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதே நேரத்தில் அக்கொள்கையை மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்சீனீ விரும்பவில்லை. இத்தாலியில் பல முடியரசுகள் நடைமுறையில் இருந்தன. மேலும் பியட்மாண்டின் அரசர் விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டார். ஆகவே குடியரசுக் கோட்பாட்டினை வலியுறுத்துவதன் வாயிலாக இத்தாலிய ஒற்றுமை கைகூடாமற் போகக்கூடாது என்பதனாலும், மக்கள் உரிமையில் தமக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தமையாலும் மாட்சீனீ குடியரசுத் தத்துவத்திற்கு மிகுதியான மதிப்பை அளிக்கவில்லை. நாட்டை ஒற்றுமைப்படுத்திய பிறகு மக்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியைத் தாமே தேர்ந்தேடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். நாட்டு மக்களுடைய ஒருமித்த முடிவிற்கேற்பத் தனிப்பட்டவர்களுடைய கருத்து மாற வேண்டும் என்ற கோட்பாட்டில் மாட்சீனீ அசையா நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஐக்கிய இத்தாலியில் கி.பி. 1871–இல் மன்னராட்சி நிறுவப்பட்டது என்பது ஈண்டுக் குறிப்பிடுதல் இன்றியமையாததாகும்.
இளைய இத்தாலியர் சங்கம் கூட்டாட்சியில் நம்பிக்கை கொள்ளவில்லை. இத்தாலியைச் சுற்றிலும் வலிமை வாய்ந்ததும் பொறாமை நிறைந்ததுமான நாடுகள் இருந்தன. அவற்றை எதிர்கொள்ள ஒரு வலிமையான அரசு தேவைப்பட்டது. ஆட்சி அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால் நாட்டின் வலிமை குறைந்துவிடும். ஆகவேதான் அச்சங்கம் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சியை ஆதரித்தது.
இத்தாலியைப் பிணைத்திருந்த அடிமை விலங்கை அகற்றி, அதனை ஒரு தேசிய நாடாக அமைப்பது மட்டும் இளைய இத்தாலியர் சங்கத்தின் நோக்கமன்று. அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, கல்வியறிவற்ற மக்களின் சமுதாய நிலையை உயர்த்த வேண்டும். அவர்களிடமிருந்து அறியாமையை அகற்றவேண்டும் என்பது அறிவிக்கப்பட்டது. மக்களுடைய ஆன்மிக உணர்வுகளைத் தட்டி எழுப்ப அது முற்பட்டது. அறமுறை சார்ந்த சக்தியாகவும் சமய நிறுவனமாகவும் அது செயற்பட்டது. கடவுட் பற்றுக்கும் மனிதாபிமான உணர்ச்சிக்கும் பெருமதிப்பளிக்கப்பட்டது. சீரழிந்துள்ள இத்தாலியச் சமுதாயத்தை மீட்டுப் பெறுவது மட்டும் அதன் நோக்கமன்று. உலகில் உள்ள எல்லா மக்களையும் சீர்குலைவிலிருந்து காப்பாற்றவேண்டும் என்பதும் அச்சங்கத்தின் நோக்கமாகும். எனவேதான் அச்சங்கத்தின் நோக்கங்களைக் கடவுள், மக்கள், இத்தாலி என்னும் மூன்று சொற்களில் அடக்கிவிடலாம் என்று கூறுகின்றனர். உலக மக்களின் மீட்புப் பணியில் இத்தாலியின் பங்கு எதுவாக அமையவேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையான பணியினைத் தங்கள் நாட்டில் இத்தாலியர்கள் முதலில் தொடங்கி வைக்கவேண்டும். பிறகு அதனை அண்டைநாடுகளில் தொடங்கவேண்டும். அவ்வாறு செய்யின் இத்தாலியின் சிக்கல் உலகச் சிக்கலாக மாறும். அதன் காரணமாக இத்தாலியின் மதிப்பும் உயரும். இத்தாலியை உலக மக்கள் தங்கள் வழிகாட்டியாகக் கொள்வார்கள். பண்டைய காலத்தில் உரோமாபுரி பேரரசின் மையமாகத் திகழ்ந்தது. இடைக் காலத்தில் போப்பின் அதிகாரம் ஐரோப்பா முழுவதும் பரவியபோது, அவர் வாழ்ந்துவந்த உரோமாபுரி மீண்டும் செல்வாக்குப் பெற்றது. இப்போது தன் முயற்சியால் இளைய இத்தாலியர் சங்கம் இத்தாலியர்களுடைய சுதந்திரத்தை நிலைநாட்டிய பின்னர், ஏனைய மக்களையும் தேசிய சமுதாயங்களாக மாற்றியமைக்க முயற்சி செய்யவேண்டும். அந்தத் தேசிய சமுதாயங்களின் ஒத்துழைப்பைப் பெற்று மனித இனத்தையே இழி நிலையிலிருந்து மீட்க வேண்டும். அவ்வாறு செய்து முடிப்பின் மனித இனம் எல்லையற்ற முன்னேற்றப்பாதையில் சென்று, தெய்வத் தன்மை பொருந்திய ஒரு சமுதாயமாக மாறும். அந்த நிலை ஏற்படும்போது உரோமாபுரி மீண்டும் மனித இனத்தினரிடையே செல்வாக்குப் பெறும் என்பது அச்சங்கத்தின் கருத்தாகும். மேற்கூறியவற்றிலிருந்து இளைய இத்தாலியர் சங்கம் வெறும் அரசியல் நோக்குடன் அமைக்கப்பட்ட சங்கம் அன்று என்பதும், இத்தாலியின் முன்னேற்றத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட சங்கம் அன்று என்பதும், மனித இனத்திற்கே மறுவாழ்வு அளிக்க ஏற்படுத்தப்பட்ட சங்கம் என்பதும் தெளிவாகும். அது ஒரு சமய நிறுவனமாகத் திகழ்ந்தது என்று கூறின், அக்கூற்று மிகையாகாது.தி.அர.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 495)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9a3vbn4z/
தமிழ்“இளைய இத்தாலியர் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9a3vbn4z/APA
Oliyon Research. (2026). இளைய இத்தாலியர் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9a3vbn4z/MLA
"இளைய இத்தாலியர் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9a3vbn4z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment