அடிக்கூறுகள்
aṭikkūṟukaḷ
மொழி ஆராய்ச்சியில் தனித்து இயங்கக்கூடிய சொற்களைப் பல விதமாகப் பிரிக்கலாம்.
மொழி ஆராய்ச்சியில் தனித்து இயங்கக்கூடிய சொற்களைப் பல விதமாகப் பிரிக்கலாம். மேலை நாட்டு மொழி அறிஞர்கள், பெயர், பெயரடை, வினை, வினையடை, முன்னுருபு (Preposition), இணைப்புச் சொற்கள் (Conjunction), வியப்புச்சொற்கள் (interjection), பதிலீட்டுப் பெயர்கள் (Pronouns) என்று எட்டு வகையாகப் பாகுபாடு செய்வார்கள். இவைகளைப் பொதுவாகச் சொல்வகைப்பாடு (parts of speech) என்று குறிப்பிடுவார்கள். இவை கருத்து அடிப்படையில் தோன்றியவை. அப்படி இல்லாமல் சொற்களை அவை ஏற்றுவரும் சிறப்பு விகுதிகளைக் கொண்டு பிரிப்பதே அமைப்பு அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே இன்றைய மொழி ஆராய்ச்சியில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வேற்றுமை உருபு ஏற்பன பெயர் என்றும் கால விகுதி ஏற்பன வினை என்றும் பெரும்பாலான மொழிகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் ஒப்பு விகுதி (Comparative suffix) ஏற்பன பெயரடை என்று குறிப்பிடப்படும். ‘டால்’ (tall) என்பது பெயரடை, அது ‘டாலர்’ (taller) என்று அர் (er) ஒப்புமை விகுதி ஏற்று வந்துள்ளது. இப்படிச் சொற்களை அமைப்பு அடிப்படையில் பாகுபடுத்தும் விகுதிகளைத் திரியொட்டுக் கூறு (Inflectional category) என்றும் கூறுவர். சில இலக்கணக் கூறுகள் சொல்லில் வரும் விகுதியால் மட்டும் தெரிவதில்வை. தொடரில் பயன்படும் விதத்தையும் அங்குள்ள மாறுபாட்டையும் பொறுத்து அமையும். எழுத்துக்காட்டாகத் திணை-பால் என்பது ஓர் இலக்கணக் கூறு. அது பெயர்ச் சொல்லில் பெரும்பான்மையாக வெளிப்படுவதில்லை. ஆனால் வினைமுற்றோடு வரும். வினை திணை, பால் கட்கு ஏற்ற விகுதியை ஏற்றுவரும். ‘காளை’ என்ற சொல் இளைஞனைக் குறித்தால் காளை வந்தான் என்றும் மாட்டைக் குறித்தால் காளை வந்தது என்றும் சொல்லப்படும். எனவே திணை-பால் என்ற இலக்கணக்கூறு வினைமுற்றில் வெளிப்பட்டு விடுகிறது. ஆனால், பெயரெச்சமாகவோ (வந்த காளை) வினையெச்சமாகவோ (காளை வந்து...) வரும்பொழுதோ, வேற்றுமை உருபை ஏற்று வரும்பொழுதோ (காளையை) என்ன திணை - பால் என்று உணர்ந்து கொள்ள முடியாது. ஆயினும் தமிழ்மொழி அமைப்பை இலக்கணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் திணை - பால் என்ற இலக்கணக்கூறு இருக்கிறது என்ற உண்மையைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலே குறிப்பிட்ட வினைமுற்று விகுதியைச் சரியாகப் பயன்படுத்த முடியாது. மேலும், சரியான பதிலீட்டுப் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு முடியாது. காளை என்பது மனிதனைக் குறித்தால் அவன் என்றும் மாட்டைக் குறித்தால் அது என்றும் சுட்டுப் பெயர்களாகக் கையாள வேண்டும். ஆனால் பெயர்ச் சொல்லில் திணை - பாலை உணர்த்தும் விகுதிகள், அஃதாவது ஒவ்வொரு பாலுக்கும் உரிய சிறப்பு விகுதிகள் எதுவும் கிடையாது. மகள், மக்கள், தேள் மூன்று சொற்களும் ளகரத்தில் முடிந்தாலும் மகள் என்பது பெண்பால், மக்கள் - பலர்பால், தேள் - ஒன்றன்பால் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம் அவை கொண்டு முடியும் வினைமுற்றுகளே. வினைமுற்றுகட்கு ஏற்பச் (மகள் வந்தாள்; மக்கள் வந்தார்; தேன் வந்தது) சுட்டுப்பெயர்களும் முறையே அவள், அவர், அது என மாறுபட்டு விடுகின்றன. எனவே தமிழில் பெயர்ச் சொற்களில் திணை - பால் என்ற இலக்கணக் கூறு இருந்தும் அதை அந்தச் சொல்லின் வடிவம் காட்டுவதில்லை; சில சமயத்தில் சில தொடர்களும் கூடக் (பெயரெச்சத் தொடர், வினையெச்சம், வேற்றுமைத் தொடர்) காட்டா. ஆனால், வினைமுற்றும் சுட்டுப்பெயரும் அவற்றினுடைய சரியான திணை - பாலைப் புலப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு இலக்கணக் கூறுகளை அந்தச் சொல்லின் ஈற்றெழுத்தும் சில தொடரும் காட்டா- மல், வேறு முறையில் சில தொடர்களில் புலப்படுமாயின், அவ்வகைத் தொடரமைப்பை அடிக்கூறு (Selective category) என்று குறிப்பிடுகிறார்கள்.
ஏதாவது ஒன்றிரண்டு இலக்கணக் கூறுகளில் இந்த முறை காணப்படும். இசுபானிசு மொழியில் பால் என்பது அடிக்கூறாகவே கருதப்படுகிறது. ஏனெனில் லாப்பிசு (Lapiz) என்னும் பென்சிலைக் குறிக்கும் சொல் பெண்பால், மன (mana) என்னும் கையைக் குறிக்கும் சொல் ஆண்பால். அதன் பால் வேறுபாடு, அடைகளை ஏற்கும்போதே வெளிப்படுகிறது. ‘எல்லாப்பிசு’ ‘அந்தப்பென்சில்’ என்றும், ‘லமன’ என்றால் ‘அந்தக் கை’ என்றும் கூற வேண்டும். எனவே, இசுபானிசு (Spanish) மொழியில் பால் என்ற இலக்கணக் கூறு பெயர்ச் சொல்லின் அடிக்கூறாகவே கருதப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியர் வினைச் சொற்களுக்கு மட்டும் திணை – பால் விகுதிகளை விதந்து கூறிவிட்டுப் பெயர்ச் சொற்களுக்கு ‘உரியவை உரிய பெயர் வயினான’ (பெயரியல்: 7:2) என்று குறிப்பிடுவது, அடிக்கூறு என்ற கருத்தின் அடிப்படைதான்.
அடிநிலை இலக்கணக் கூறுகள்
என்பது, மொழியியலில் சொல் பற்றிய வரையறைக்கண் அமையும் ஒரு பெயராகும். ‘சொல்’, கலைச் சொல்லாகப் பயன்படும்போது தனக்கெனப் பொருள் உடையதாகவும் தனித்து இயங்கக் கூடியதாகவும் இடை நிறுத்தத்திற்குப் (pause) பிறகு வரக்கூடியதாகவும் (தலை, மரம், பார், ஓடு) இருக்கும் என்று வரையறுத்துள்ளார்கள். இவைகளையே அடிநிலை இலக்கணக் கூறுகள் (Primary grammatical categories) என்றும் குறிப்பிடுவார்கள். இதற்கு மாறாகக் கட்டுண்டு, தமக்கெனப் பொருள் இவ்வாத உருபன்களை (ஐ-இரண்டாம் வேற்றுமை உருபு; வாள்-வாளை; ந்த - இறந்தகால இடைநிலை - வாழ்ந்தான்) துணை நிலை இலக்கணக் கூறுகளின் அடிப்படையிலேயே கருதப்படும். அடிநிலை இலக்கணக் கூறுகளைச் சொல்வகைப்பாடு (parts of speech) என்றும் கூறுவார்கள்.
மேலை நாட்டைப் பொறுத்த வரையில் பிளேட்டோவேதான் பெயர், வினை என்ற அடிநிலை இலக்கணக் கூறுகளை முதலில் அமைத்தார். அவருடைய மாணவரான அரிசுடாட்டில் பொருளின் தன்மையைக் குறிப்பவை என்றும் (பெயர்), பயனிலையாக வருபவை என்றும் (வினை), இவைகளை இணைப்பவை (connectives) என்னும் மூன்று பெரும் பிரிவு செய்து, கருத்து (notion) அடிப்படையில் பிரித்துச் சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் இடயோனிசியசு திரேக்சு (Dionysius thrax) என்பவர்தான் பெயர், வினை, எச்சம் (particles), சுட்டுகள் (articles) பதிலீட்டுப் பெயர்கள் (pronouns), முன்னுருபுகள் (prepositions), வினை அடைகள் (adverb), இணைப்புச் சொற்கள் (conjunction) என எட்டுவகையான பிரிவை ஏற்படுத்தினார்.
பொதுவாக அடிநிலைக் கூறுகளின் எண்ணிக்கை எல்லா மொழிக்கும் பொதுவானது அன்று. இவைகளின் எண்ணிக்கையும் சில பண்பும்கூட மொழிக்கு மொழி மாறுபடும்.
தமிழில் தொல்காப்பியர் ‘சொல் எனப்படுப் பெயரே வினை என்று, ஆயிரண்டு என்ப அறிந்தி சினோரே’ என்றும், ‘இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப’ என்றும் கூறியிருப்பதால், சுப்பிரமணிய சாத்திரி போன்ற அறிஞர்கள், பெயர், வினை என்பனவற்றைத் தாம் சொல்வகைப்பாடாகத் தொல்காப்பியர் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் இந்தக் கருத்தை ஒத்துக்கொண்டு உரிச்சொல் என்பது பொருள் உள்ளவை (contentives) என்றும் இடைச்சொல் என்பது இலக்கணப் பொருள் உள்ளவை (functors) என்றும் கொள்ளலாம் என வாதிட்டுள்ளார். ஆனால், டாக்டர் இசரயேல் இடைச் சொற்களில் அசைநிலைக்கிளவி, இசைநிறைக் கிளவி, உவம உருபுகள் போன்றவற்றை ஒரு நிலைச்சொற்கள் (Particles) என்று கூறியுள்ளார். இவை பெயர்ச் சொல் வேற்றுமையையும், வினைச்சொல் கால விகுதியையும் தமக்குரிய சிறப்பான இலக்கணக் கூறுகளாகப் பெற்றிருப்பது போலப் பெற்றிராவிட்டாலும், இவை ஏ.ஓ. உம் போன்ற ஒட்டிகளைப் (Clitics) பெற்று வருவதும், தமக்கெனப் பொருளை உடையனவாய் இருப்பதும் ஆகிய காரணங்களால் தனிச் சொல் வகைபாடாகக் கருதத் தகுந்தவையே. ஆயினும் திட்ட வட்டமாகத் தமிழில் அடிநிலை இலக்கணக் கூறுகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா அறிஞர்களும் பெயர், வினை என்ற அடிநிலை இலக்கணக் கூறு இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள். ஏனனயவற்றைப்பற்றி இன்னும் தெளிவு ஏற்படவில்லை.
இங்கு இன்னோர் உண்மையையும் சுட்டிக் காட்டலாம். ஒரு மொழியில் அடிநிலை இலக்கணக் கூறாக இருப்பது இன்னொரு மொழியில் அப்படி இருக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் பெயரடை (adjectives) ஒரு தனி அடிநிலை இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், ஆங்கில மொழியில் பெயரடை என்பது ‘எர்’ (er) என்ற ஒப்பு விகுதியை ஹை (high), ஹையர் (higher) என்றாற்போல ஏற்று வருவதுதான். தமிழில் பெரிய, நல்ல போன்- றவை வினையைப் போலக் கால விகுதி ஏற்பதில்லை. ஏனைய, பெயரெச்ச விகுதிகளையும் வினையெச்ச விகுதிகளையும் (பெரும், நன்கு) வினைமுற்று விகுதிகளையும் (பெரியன், பெரியர், பெரிது; நல்லேன், நல்லாய் முதலியன) ஏற்று வருகின்றன.
தமிழில் உறு, தவ, நனி போன்ற அடைகள் இருந்தாலும். அவை சிறப்பாக எந்த இலக்கணக் கூறுகளையும் ஏற்று வருவதில்லை. எனவே அவற்றை வெறும் அடைச்சொற்கள் என்று கருத வேண்டுமா என்பது ஆராயத் தகுந்தது. இப்படிப் பட்டவைகளை உரையாசிரியர்கள் வினைப்போலி, பெயர்ப்போலி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எப்படியாயினும் இன்றைய நிலையில் தமிழில் உள்ள அடிநிலை இலக்கணக் கூறுகளின் எண்ணிக்கை திட்டவட்டமாக அறிஞர்களால் வரையறுக்கப்படவில்லை என்பதுமட்டும் கூற இயலும்.செ.வை.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 243)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99p7gn26/
தமிழ்“அடிக்கூறுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/99p7gn26/APA
Oliyon Research. (2026). அடிக்கூறுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99p7gn26/MLA
"அடிக்கூறுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/99p7gn26/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment