இலாலா இலசபதி ராய்
ilālā ilacapati rāy
‘பஞ்சாபின் சிங்கம்’ என்று போற்றப்பட்ட தேசபக்தர்.
‘பஞ்சாபின் சிங்கம்’ என்று போற்றப்பட்ட தேசபக்தர். இந்திய விடுதலைக்காகப் பல இன்னல்களை அஞ்சாது எதிர்நோக்கிய வீரர், இலாலா இலசபதி ராய் (Lala Lajpat Rai) கி.பி. 1865–ஆம் ஆண்டு பஞ்சாபு மாநிலத்தைச் சேர்ந்த உலூதியானா மாவட்டத்திலுள்ள சாக்ரான் (Jagraon) என்னும் ஊரில் பிறந்தார். இலசபதிராய் கி.பி. 1888–ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். இந்தியத் தேசிய காங்கிரசின் கருத்துக் கோட்பாட்டை எடுத்துக் கூற இவர் 1905–ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஆங்கில அரசு 1907–ஆம் ஆண்டு பர்மாவிலுள்ள மாண்டலே என்னும் ஊரில் இவரைச் சிறையிலடைத்தது. மீண்டும் இலசபதிராய் 1914–ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் புறப்பட்டுச் சென்று 1920–ஆம் ஆண்டுவரை தங்கி இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்டார். இந்தியாவுக்குத் திரும்பிய இராய் சுயராச்சியக் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றினார். மக்கள் ஊழியர் கழகம் (Servants of People Society) என்னும் இயக்கத்தை இவர் அமைத்தார். இலாலா இலசபதி ராய் பாலசுங்காதரதிலகரின் தீவிரவாதக் கருத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு, திலகர் அரசியற் கருத்துப் பள்ளியையும் தொடங்கினார். தேசிய உணர்ச்சியைப் பரப்பும் நோக்குடன் இலாசூரில் தேசியக் கல்லூரியையும் இவர் உருவாக்கினார். பஞ்சாபு தேசிய வங்கி என்னும் பெயரில் நிதி நிலையம் ஒன்றை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு, ‘வந்தே மாதரம்’ ‘மக்கள்’ என்னும் இதழ்களை வெளியிட்டுப் பதிப்- பித்த இவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார். ‘நாடு கடத்தப்பட்ட என் வரலாறு’ (The History of my Deportation), ‘ஆரிய சமாசம்’ (Arya Samaj), ‘இந்தியாவில் இங்கிலாந்தின் கடன்’ (England's Debt in India), ‘இளம் இந்தியா’ (Young India) போன்ற நூல்களை இவர் எழுதினார். சைமன் குழுவுக்கு எதிராக இலாகூரில் நடைபெற்ற கிளர்ச்சியில் குடிமக்களின் அணிவகுப்பொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்ற இவர் காவல் துறையினரின் தடியடிக்கு ஆளானார். இந்நிகழ்ச்சி 1928–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ஆம் நாள் அவ்வூரில் நிகழ்ந்தது. இதன் விளைவாக நோய்வாய்ப்பட்ட இலாலா இலசபதி ராய் அதே ஆண்டு நவம்பர் மாதம் 17–ஆம் நாள் உயிர்துறந்தார், ‘இந்திய வானில் சூரியன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வரை இலாலாசி போன்ற பெருமக்கள் சாவதில்லை’ என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டினார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 382)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/97k4qb8h/
தமிழ்“இலாலா இலசபதி ராய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/97k4qb8h/APA
Oliyon Research. (2026). இலாலா இலசபதி ராய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/97k4qb8h/MLA
"இலாலா இலசபதி ராய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/97k4qb8h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment