அரசியல் விடுதலையும் பொருளாதார முன்னேற்றமும்
araciyal viṭutalaiyum poruḷātāra muṉṉēṟṟamum
இங்கிலாந்து, பிரான்சு, செருமனி, ஆலந்து, பெல்சியம் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், கி.பி.
இங்கிலாந்து, பிரான்சு, செருமனி, ஆலந்து, பெல்சியம் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், கி.பி. 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் ஆசியா ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் அமெரிக்க மண்டல நாடுகள் ஆகியவற்றைத் தங்கள் தலைமையின் கீழ்க் கொண்டு வந்தன. இத்தலைமை வாணிக வளர்ச்சியினாலும் பொருளாதாரச் சுரண்டுதல் காரணமாகவும் வளர்ச்சியடைந்தது. அரசியல் விடுதலையை இழந்த இந்தியா, பர்மா, இலங்கை, அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா தென்அமெரிக்காவில் உள்ள பல நாடுகள் ஆகியவை குடியேற்ற நாடுகள் என்ற அடிமை நிலைக்குள் வந்தன. குடியேற்ற ஆட்சியில் அகப்பட்ட நாடுகள் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் அடைய முடியவில்லை. குடியேற்ற ஆட்சியாளர்கள் நாட்டைச் சுரண்டிச் செல்வத்தைத் தங்கள் நாடுகளில் குவித்ததன் காரணமாக மக்களிடையே வெறுப்புணர்ச்சி தோன்றியது.
உரிமை இழந்த நாடுகளுக்கு மேலாதிக்கத்தின் கீழ் இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேர்வு செய்வதற்குரிய உரிமை, இந்நாடுகளுக்கு இல்லை. குடியேற்ற நாடுகள் மூலப் பொருள்களை மட்டும் உற்பத்தி செய்யும் நாடுகளாக இருந்தன. இவை குடியேற்றச் சக்திகளின் உற்பத்தித் தொழில் துறைகளுக்கு வேண்டிய மூலப்பொருள்களை மட்டும் வழங்கி வந்தன. மேலும், குடியேற்றச் சக்திகள், இந்நாடுகளைத் தாங்கள் உற்- பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கான அங்காடிகளாகப் பயன்படுத்தின. குடியேற்ற நாடுகளில் தொழில் துறைகள் ஊக்குவிக்கப்படவில்லை. வழிவழியாக வந்த தொழில்களை நசுக்கி, மிகுந்த கட்டுப்பாடுகளைப் புகுத்தின. இக்கட்டுப்பாடுகள் வல்லரசுகள் உற்பத்திசெய்யும் பொருள்களோடு போட்டி போட்டு விற்கக் கூடிய விலை, தரம் ஆகியவற்றை இழக்கச் செய்தன.
வல்லரசுகளின் நிருவாகத்திற்கு உதவுகின்ற முறையிலேயே கல்வி முறை உருவாக்கப்பட்டது. அக்கல்வி முறை, மரபு வழிக் கல்வி முறையையும் நாட்டின் ஆற்றல், தொழில்நுட்பம் முதலியவற்றையும் சீர்குலையச் செய்தது. அது மக்கள் பிற்பட்ட நிலையில் வாழுமாறும் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்குமாறும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டது. தொழில்துறை முன்னேற்றம், தொழில்நுட்ப முன்னேற்றம், வேளாண்மை முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அக்கல்வி முறை எந்தவித முதன்மையும் அளிக்கவில்லை. இங்கிலாந்து தன் கீழடங்கிய நாடுகளில் இரவில்வே அமைப்புகளையும் நிருவாக முறைகளையும் சாலை வசதிகளையும் செய்தித் தொடர்புகளையும் தன் தலைமையை நிலை நாட்டும் வகையில் தன்னல நோக்குடன் ஏற்படுத்திக் கொடுத்திருந்தன என்பதில் எந்தவித ஐயமுமில்லை. எனினும், இவை பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அடிப்படை நிலையில் சிறிதும் வேரூன்றவில்லை. இந்த நிலை, அரசியல் விடுதலை பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகத் தேவை என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி எழுச்சியை உண்டுபண்ணியது. இந்த எழுச்சியைப் பெற்ற நாடுகளில் முதலிடம் பெற்றது இந்தியா. இதனைப் பின்தொடர்ந்து இந்தோனேசியா, பர்மா, இலங்கை, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் உரிமை வேட்கை தோன்றியது. சீர்குலைந்த பொருளாதார நிலை, வறுமை, பசி, பட்டினி, நோய் ஆகியலையே விடுதலை வேட்கைக்கு மூல காரணமாயிருந்தன, அரசியல் விடுதலையே பொருளாதார விடுதலைக்கு வழிவகுக்கும்; பொருளாதார விடுதலையே முன்னேற்றத்தை அடையச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அரசியல் அடிமை நிலைதான், பின்தங்கிய பொருளாதார நிலைக்குக் காரணம் என்பதைக் குடியேற்ற நாட்டு மக்கள் உணர்ந்தனர். அரசியல் விடுதலையைப் பெற்றுவிட்டால், விரைவான பொருளாதார முன்னேற்றம் உறுதியாக ஏற்படும் என்ற உணர்வு பெரும்பான்மையான குடியேற்ற நாட்டு மக்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலை எப்பொழுதும் உண்மையாய் இருப்பதில்லை. இங்குச் சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கு உரிய நல்ல அடிப்படையை ஏற்படுத்தி உள்ளது. தன் தேவையில் சிக்கன எல்லையைப் பெற்றுள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம் மிகுதியாக ஏற்பட்ட போதிலும், உணவு உற்பத்தி ஏறத்தாழ மூன்று மடங்காகப் பெருகி உள்ளது. பசுமைப் புரட்சியின் விளைவாகப் புதுவகை நெல், கோதுமை, சோளம், தினை ஆகியவற்றின் உற்பத்தியில் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, ஏறக்குறைய எல்லா வகையான உணவுத்தானியங்களின் உற்பத்தியும் பெருகியுள்ளது. இரும்பு, நிலக்கரி, சிமெண்டு, எந்திரக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் அடிப்படைத் தொழிற்சாலைகளும், அவற்றோடு தொடர்புடைய தொழிற்சாலைகளும் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டி உள்ளன. இதே முன்னேற்ற நிலையை நுகர்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளும் எய்தி உள்ளன. மக்களுக்குத் தேவையான எல்லா வகை நுகர்பொருள்களையும் உற்பத்தி செய்வதில் இவை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இவற்றோடு கூட எந்திரப் பொருள்கள், துணி உற்பத்திக்கு உரிய எத்திரப் பொருள்கள், மின்னியக்கப் பொருள்கள் போன்ற எண்ணற்ற பொருள்களை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
வழிவழியாக அனுப்பி வரும் பொருள்களாகிய தேயிலை, சணற் பொருள்கள், இலைபோன்று ஏனைய முதன்மையான பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அரசியல் விடுதலை எவ்வாறு பொருளாதார முன்னேற்றத்தை உண்டுபண்ணும் என்பதற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். உலகிலுள்ள தொழில் துறை நாடுகளுள் இந்தியா பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணங்கள் முன்னேற்ற வழிமுறைகளே. இந்தியா பெரும்பாலான புதுவகைக் கருவிகளையும் இணைத்து உருவாக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது. அன்றியும், படைகளுக்குத் தேவையான பொருள்களைத் தானே உற்பத்தி செய்கிறது. போர்க் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேற்றங் கண்டுள்ளன.
பல குடியேற்ற நாடுகளின் முன்னேற்ற வழிமுறைகளை ஆராயும்போது, இந்தியா முதன்மையான எடுத்துக்காட்டாகத் திகழவில்லை. இந்தியாவை விட முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதற்கு வேறு சில நாடுகள் சான்றுகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு சான்றுகளாகத் திகழும் நாடுகளுள் ஒன்று மலேசியா. இங்குப் பொருளாதார முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவு ஏற்பட்டுள்ளது. ஒரு நகரம் மட்டுமாகவே அமைந்த நாடு, எவ்வாறு மிக விரைவாக முன்னேற முடியும் என்பதற்குச் சிங்கப்பூர் தலைசிறந்த எடுத்துக்காட்டாகும். இதற்கு எதிரிடையாக, இந்தோனேசியா முன்னேற்ற நிலையில் மந்தமாக உள்ளது. உணவு உற்பத்தியில் தன் தேவையை நிறைவு செய்யக் கூடிய நிலையைப் பெற்றிருந்தாலும், பர்மா இன்றும் மிகப் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. விடுதலை பெறுவதற்கு முன்னால், அரிசி ஏற்றுமதி செய்வதில் பர்மா மிகப் பெரிய நாடாகத் திகழ்ந்தது. இப்பொழுது அந்த நாட்டினுடைய ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. சுற்றுலாப் போன்ற துறைகளில் இலங்கை சில முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், அதனுடைய தோட்டத் தொழிலிலும் தொழில் துறைகளிலும் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க வேண்டுமோ அவ்வளவு முன்னேற்றமில்லை. அடுத்து 1971இல் உருவான பங்களாதேசமும் மிகப் பின் தங்கிய நிலையில் உள்ளது.
ஆப்பிரிக்காவின் நிலை மிகவும் வளராநிலையுடையது. பின்தங்கிய நிலைக்குப் பழைய குடியேற்ற ஆட்சியாளர்களே காரணம் என அவர்கள் மீது அடிக்கடி குற்றம் சுமத்தப்படுகிறது. பின்தங்கிய நிலைக்குக் குடியேற்ற ஆட்சியாளர்கள்தாம் காரணம் என்பது முழுமையான உண்மை அன்று. நைசீரிய நாடு பல ஆண்டுகள் விடுதலையுடன் இயங்கியும் தரமான, மிகுந்த எண்ணெய் வளம்பெற்றிருந்தும். இலட்சக்கணக்கான நைசீரிய மக்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்; நகரத்தில் பிச்சைக்காரர்கள் காணப்படுகிறார்கள். இது மிக்க வியப்பை உண்டுபண்ணுகிறது. நாட்டின் முதன்மையான நகரம் நீர் ஓடைகள் குறைபாடுடையனவாகவும், நல்ல சாக்கடை வசதி இல்லாதனவாகவும், மருத்துவ வசதி, கல்வி வசதிகள் ஆகியவற்றில் பற்றாக்குறை உடையனவாகவும் காணப்படுகிறது. இவ்வளவு பற்றாக்குறைகள் இருந்த போதிலும், புதிய தலைநகருக்கான கட்டுமானப் பணிகள் 1600 கோடி தாலர் செலவில் தொடங்கப்பட்டுள்ளன. அரசியல் விடுதலை பெற்ற நாட்டை எதிர்நோக்கியுள்ள முக்கிய சிக்கல்களுல் இதுவும் ஒன்று. எவற்றிற்கு முதலில் தலைமை தரப்பட வேண்டுமோ, அவற்றிற்கு முதலில் தலைமை தரப்படவில்லை. நைசீரியா இப்பொழுது மிகத் தாழ்ந்த பொருளாதார நிலையில் உள்ளது. வேளாண்மை புறக்கணிக்கப்பட்டமையால் மக்கள் பிழைப்புத் தேடி நகர் நோக்கிச் செல்கின்றனர்.
அரசியல் விடுதலை, பொருவாதார முன்னேற்றத்திற்கு வழி காட்ட வேண்டும். தான்சானியாவில் சூலியசு நயரேர் (Julius Nyrere) போன்ற தன்னலமற்ற தலைவரால் கூடத் தேவையான அளவு பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதில் வெற்றி காண முடியவில்லை. உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதற்காக அவர் வேளாண்மையில் மேற்கொண்ட சோதனைகள் உற்பத்திக்கு எதிராக அமைந்துவிட்டன. பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகளில் குடியேற்றச் சக்திகளால் நன்கு அமைக்கப்பட்ட சாலைகளும், சிறப்பாக அமைக்கப்பட்ட இரயில்வேக்களும், ஏனைய சாதனங்களும் இப்பொழுது பழுதுபட்ட நிலையை அடைந்துள்ளன. தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்குத் தேவையான எந்திரங்களின் உதிரிப்பாகங்களை வாங்குவதற்கும், தேவைப்பட்ட பிற பொருள்களை வாங்குவதற்கும் உரிய அயற் செலாவணிப் பற்றாக்குறை அங்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் விடுதலை அடைந்த பிறகும் செல்வ வளம் நிறைந்த குடியேற்ற நாடு ஒன்று ஒழுங்கற்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறது என்பதற்கு உகாண்டா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அங்கு எவ்வகைப்பட்ட பொருளாதார முன்னேற்றமும் இல்லை. சயரே (காங்கோ) என்ற நாடு சிறிதளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கென்யாவில் கூடச் சில கடினமான பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளன. குடியேற்ற ஆட்சியாளர்களைக் குறை கூறுவது என்பது எளிது. ஆனால், இவ்வாறு குறை கூறுவதனால் பொருளாதாரச் சிக்கல் தீர்ந்துவிடாது. ஐவரி கோசுட்டு (Ivory Coast) போன்ற சில நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் அதனால் வளமோடு வாழ்கின்றனர்.
அரசியல் விடுதலை, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழியமைக்க முடியும். ஆனால், இதற்கு உயர்ந்த அரசியல் பொறுப்புணர்வு தேவை. அதே நேரத்தில் எது முதலில் செய்யப்பட வேண்டும், எது அடுத்துச் செய்யப்பட வேண்டும் என்ற முறையான ஒழுங்கும் தேவைப்படுகிறது. எது தங்களால் இயலும் என்பதை அறிந்து கொள்ளுதற்கும், நாட்டின் சக்திக்கு ஏற்ற செயல் எது என்ற நோக்கவுணர்வுக்கும் இது வழிகாட்டும். எங்கெங்கு எளிமை தேவைப்படுகிறதோ, அங்கங்கு அவை வற்புறுத்தப்பட வேண்டும்; அவற்றை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்; நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். உயர்ந்த சேமிப்பும் தக்க முதலீடும் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் என்பது கனவே. இன்றைய உலக அரங்கில், குறிப்பாக மேலை நாடுகளிலும் முன்னேற்றம் அடைந்த நாடுகளிலும் கல்வி, கடின உழைப்பு, தொழில் துறை, பொருளாதார நிலை பற்றிய உயர் ஆராய்ச்சி ஆகியவை அந்நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியுள்ளன. வளர்ந்து கொண்டிருக்கிற பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
பொருளாதார முன்னேற்றம் மக்களிடையே ஒரு முழுமையான குறிக்கோளையும் சூழ்நிலையையும் உருவாக்கல் வேண்டும். இவ்வித நிலைக்கு வித்து விடுதலை. அவ்விடுதலை இராணுவ ஆட்சியையோ வல்லாட்சி முறையையோ உருவாக்கினால் பொருளாதார முன்னேற்றம் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். உண்மையான பொருளாதார முன்னேற்றம் எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கும்; முதலீடு மிக்க வேலை வாய்ப்புகளை உண்டுபண்ணும்; ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும்; மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் முழுமையாகப் பங்கேற்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் வசதிகளும் செல்வமும் குவியாமல் எல்லா மக்களுக்கும் கிடைக்கும் ஒரு சூழ்நிலை உருவாகும்.
ஒவ்வொரு ஒன்றியமும், அதன் உறுப்பினர்கள் மூலம் தங்கள் தேவைகளை நன்கு அறிந்து தண்ணீர் வசதி, கல்வி, பாசன வசதி, சிறு தொழில்கள் வளர்ப்பு, வேலைவாய்ப்பு, சாலை அமைப்பு ஆகியவை போன்ற காரியங்களை மக்களாட்சி முறையில் விவாதித்து முடிவெடுத்து, திட்டங்கனைத் தீட்டி நிறைவேற்றும். ஆனால், முற்றிலுமாக ஒன்றியங்கள் நன்முறையில் செயற்பட அவற்றிற்குச் செயலுரிமையும் பண வசதியும் கொடுக்கப்படவில்லை. எனவே இச்செயல்களில் குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், காலப்போக்கில் இவ்வித மக்களாட்சிக் கொள்கை நாடு முழுவதிலும் பரவுமானால் அது நல்ல பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவருமென்பதில் எவ்வித ஐயமுயில்லை.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் இன்றியமையாதது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குச் சிறந்த காரணம் மக்களாட்சி முறை. இதனைப் பேணிக் காத்து எதிர்காலத்தில் கூடுதல் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டியது மக்களின் கடமையாகும்.டி.கே.சா.சு
துணை நூல்கள்
Benjamin Higgins, “Economic Development”, W.W. Norton and Company, New York, 1959.
Singh, S.P., “Underdevelopment to Developing Economics”, Oxford University Press, Bombay, 1978.
Tarlok Singh, “India's Development Experience”, Macmillan & Company, New Delhi, 1979.
Das. A., “Foundations of Gandhian Economics”, Allied Publishers, New Delhi, 1979.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 709)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95e3aqd3/
தமிழ்“அரசியல் விடுதலையும் பொருளாதார முன்னேற்றமும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/95e3aqd3/APA
Oliyon Research. (2026). அரசியல் விடுதலையும் பொருளாதார முன்னேற்றமும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95e3aqd3/MLA
"அரசியல் விடுதலையும் பொருளாதார முன்னேற்றமும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/95e3aqd3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment