கருவிலுள்ள குழந்தை மூச்சு விடவும், ஊட்டச் சத்துப் பெறவும் கழிவுப் பொருள்களை அகற்றவும் உதவும். உறுப்பு சூல் ஒட்டு (placenta) எனப்படும். நுரையீரல், இரைப்பைக் குடல், சிறு நீரகங்கள், தோல் ஆகியவற்றின் பணிகளைச் சூல் ஒட்டு செய்கிறது. செனிப்பக ஹார்மோன்கள், ஈஸ்ட்ரோஜன்கள், புரோஜெஸ்டிரான் ஆகியவை சூல் ஒட்டில் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதில் ஹைட்ரோ கார்டிசோன், வளர்ச்சி ஹார்மோன், அட்ரினோகார்டிகோ டிரோபிக் ஹார்மோன் ஆகியன உள்ளன. புரதம், மாவுப் பொருள், கொழுப்பு, பாஸ்ஃபேட், வைட்டமின், நுண் பொருள். இரும்புச் சத்து முதலிய பொருள்கள் சூல் ஒட்டுத் திசுவில் காணப்படுகின்றன. அடிப்படை உதிர் படலத்திலிருந்தும், நன்கு வளர்ச்சியடைந்த கோரியானிக் வில்லையிலிருந்தும் சூல் ஒட்டு உருவாகிறது. சூல் ஒட்டின் பெரும் பகுதியான விரலிகள், மரக் கிளைப் போல் காணப்படுகின்றன. பெரிய விரலிகளின் உள்ளே காணப்படும் குருதி நாளங்களும், கிளைகளாகப் பிரிந்து, புதிய விரலிகளில் நுழைகின்றன; இறுதி விரலிகளில் தந்துகி ளையங்களே காணப்படுகின்றன. வெளிப்புற உறையில் காணப்படும் புரோட்டோபிளாஸ்மத் தொகுப்பில் உட்கருக்கள் காணப்படுகின்றன. இந்த அடுக்கையே ஒன்றிய குழியம் என்பர். செல்களையும், உதிர் படல நாளங்களையும் கரையச் செய்யும் திறன் இதற்கு உண்டு. ஒன்றிய குழியத்தின் அடியில் சைட்டோடிரோபோபிளாஸ்ட் செல்கள் காணப்படுகின்றன. சில விரலிகள், அடிப்படை உதிர் படலத்துள் வளர்ச்சியடைகின்றன. இவ்விரலிகள், சூல் ஒட்டின் கருப் பகுதியுடனும், தாய்ப் பகுதியுடனும் தொடர்பு கொண்டுள்ளன. பல நுண்ணிய விரலிகள், விரலி இடைப் பள்ளத்திலுள்ள குருதி ஓட்டத்தில் தள்ளப் படுகின்றன. ஒன்றிய குழியத்தால் அழிக்கப்பட்ட சூல் ஒட்டின் குருதி, நாளங்களிலிருந்து விரலிகளிடையே பெறப் படுகிறது. விரலிகளில் காணப்படும் தாய்ப் பகுதி குருதி உறைவதில்லை; அவ்வாறே, விரலியுள் காணப்படும் கரு குருதியில் கலப்பதில்லை. விரலிகளைக் கழுவிக் கொண்டிருக்கும் தாய்ப் பகுதிக் குருதிக்கும், நாளங்களுள் விரலி ஓடிக் கொண்டிருக்கும் குருதிக்கும் இடையே நிலையான பரிமாற்றம் உண்டாகிறது. தாய்ப் பகுதி குருதியிலிருந்து, குழந்தை ஆக்சிஜனையும், ஊட்டத்தையும் பெறுகிறது. கழிவுப் பொருள்களும், கார்பன் டைஆக்சைடும், கருவின் உடலிலிருந்து தாய்ப் பகுதிக் குருதிக்குச் செல்லும். தோற்றத்தில் சூல் ஒட்டு ஒரு பருமனான முட்டை வடிவ அப்பம் போன்று இருக்கிறது. (இலத்தீன் மொழியில் பிளசெண்டா என்றால், தட்டையான அப்பம் என்று பொருள்). சூலின் இறுதியில் மகப் பேற்றின் பின்னர், சூல் ஒட்டின் விட்டம் 15–18 செ.மீ. ஆகவும், பருமன் 2–3 செ.மீ. ஆகவும், எடை 500–600 கிராம் ஆகவுமிருக்கும். சூல் ஒட்டில் சூல் பைச் சுவருக்கு அருகேயுள்ள தாய்ப் பரப்பு பனிக் குடக் குழிவை உள் நோக்கியுள்ள கருப் பரப்பு என இரண்டு பரப்புகள் உள்ளன. கருப் பரப்பில், மழமழப்பான ஒளிர் படலத்தின் அடியில் கோரியானிக் குருதி நாளங்கள் காணப்படுகின்றன. அவை ஆர வட்டத்தில் கொப்பூழ் இணைப்பிலிருந்து, சூல் ஒட்டுப் புறப் பரப்பிற்குச் செல்கின்றன. சூல் ஓட்டின் சாம்பல் நிறச் சிவந்த சூல் பைப் பரப்பு சில ஆழ்ந்த பள்ளங்களால் பல மடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெல்லிய உதிர் படலத்தால், தாய்ப் பரப்பிற்குச் சாம்பல் நிறம் கிடைக்கிறது. இது சூல் ஓட்டின் பெரும் பகுதியை அமைக்கும் விரலிகளின் மேல் காணப்படும். இயல்பாகச் சூல் ஓட்டு சூல் பையின் மேற்பகுதியுடன் ஒட்டியுள்ளது. அதன் முன் புற அல்லது பின் புறச் சுவர் அரிதாகச் சூல் பையின் அடிக் குழி அல்லது குழல்கள் பொருந்தியுள்ள இடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. —அ. கதிரேசன் நூலோதி. Alexander Rosinkin, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983.