உடன்படிக்கை
uṭaṉpaṭikkai
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளைப் பன்னாட்டுச் சட்டத்தின்படி இணைத்து வைக்கின்ற அல்லது கட்டுப்படுத்தி வைக்கின்ற எழுத்து வடிவத்தில் உள்ள ஓர் ஒப்பந்தம் அல்லது ஒரு முறைதான் உடன்படிக்கை (Treaty) எனப்படும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளைப் பன்னாட்டுச் சட்டத்தின்படி இணைத்து வைக்கின்ற அல்லது கட்டுப்படுத்தி வைக்கின்ற எழுத்து வடிவத்தில் உள்ள ஓர் ஒப்பந்தம் அல்லது ஒரு முறைதான் உடன்படிக்கை (Treaty) எனப்படும். இக்கால அரசியலுறவு வழக்கிலே உடன்படிக்கை என்ற சொல் மிக முக்கியமான பன்னாட்டு ஒப்பந்தங்களையே குறிப்பிடுகிறது. ஆனால் இவற்றைப்போல முக்கியமல்லாத தாழ்ந்த நிலை ஒப்பந்தங்களெல்லாம் வழக்கங்கள் (Conventions), ஒப்பந்தங்கள் (Agreements), ஏற்பாடுகள் (Arrangements) என்று சொல்லப்படுகின்றன.
உடன்படிக்கை செய்யப்படும் முறையும் அது நடைமுறைக்கு வருதலும்
முதலில் எந்தெந்த அரசாங்கங்கள் தமக்குள் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருகின்றனவோ அவற்றில் முழு உரிமை பெற்ற தூதுவர்களால் (Plenipotentiaries) தத்தம் அரசாங்கங்கள் விடுத்துள்ள ஆணை வரம்புகளுக்கு உட்பட்டு உடன்படிக்கைகளின் பிரிவுகள் பேசி முடிக்கப்படுகின்றன. இவ்வுடன்படிக்கைப் பிரிவுகளெல்லாம் அவ்வரசாங்கங்களால் ஒப்புதலளிக்கப்பட்ட பின்னர் (Ratification), உடன்படிக்கை அதனைப் பேசிமுடிக்கும் தூதுவர்களுடைய கையெழுத்தைப் பெறுகிறது; சில சமயங்களில் தூதுவர்களின் கையெழுத்துத் தேவை இல்லையென்றும் விதிக்கப்படலாம். உடன்படிக்கைக்கு அரசாங்க ஒப்புதல்கள் அளிக்கப்படுதல் வேண்டுமென்பது கட்டாயம் ஆகும். பின்னர் அவ்வொப்புதல்களுடன் கூடிய உடன்படிக்கை மேற்படி அரசாங்கங்களால் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுதல் (Exchange of Ratifications) வேண்டும். அப்பொழுதுதான் உடன்படிக்கை அவ்வரசரங்கங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுகிறது. முதற்போரினிறுதியில் செய்யப்பட்ட 1919–ஆம் ஆண்டு வெர்சே (Versailles) டன்படிக்கை, இரண்டாம் உலகப் போரினிறுதியில் பேசி முடிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் 1945–ஆம் ஆண்டுப் பட்டயம் (U.N. Charter, 1945) முதலியவை எல்லாம் பன்முக உடன்படிக்கைகள் (Multilateral Treaties) ஆகும்; இவை பன்னாட்டுத் தூதுவர்களின் மாநாட்டில் பேசி முடிக்கப்பட்டு, இறுதியில் அவர்களால் கையெழுத்திடப்படுகின்றன. உடன்படிக்கை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில்தான் செய்யப்படுதல் வேண்டுமென்பதில்லை. அது ஓர் ஒப்பந்தவடிவத்திலும் (Contract) அமையலாம். அப்போது அதில் சேரும் ஒவ்வொரு கட்சியும் தான் நிறைவேற்றவேண்டிய பணிகளைத் தான் நிறைவேற்றுவதற்காக ஒப்புக்கொள்ளுகிறது; இவ்வுடன்படிக்கை ஒரு கூட்டு அறிக்கை (A Joint Declaration) என்ற வடிவத்திலோ ஒன்றுக்கொன்று குறிப்புப் பரிவர்த்தனை செய்து கொள்ளுதல் (Exchange of Notes) என்ற வகையிலோ அமையலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவும் பிரிட்டனும் (Great Britain) அமெரிக்கப் பெரிய ஏரிகளில் (Great Lakes) படைகளை வைப்பதில்லை என்று ஒன்றுக்கொன்று செய்து கொண்ட கி.பி. 1818–ஆம் ஆண்டைய உருசு–பேகட்டு உடன்படிக்கையைக் (Rush-Bagot Agreement) கூறலாம். பொதுவாக எல்லா முக்கியமான உடன்படிக்கைகளும் ஒரு திட்டவட்டமான வடிவத்தில்தான் வரையப்படுவது வழக்கமாகும். அதாவது, உன்படிக்கையின் தொடக்கத்தில் ஒரு முன்னுரை (Preamble) கூறப்படுகிறது. இதில், உடன்படிக்கை செய்துகொள்ளும் உயர்நிலைக் கட்சிகளின் பெயர்கள், சிறப்பியல்புகள், தங்களுடைய பொதுவான நோக்கங்கள், உடன்படிக்கையைப் பேசி முடிப்பதற்கு அமர்த்தப்பட்ட தூதுவர்களின் பெயர்கள், பதவிகள், மேற்குறிக்கப் பெற்ற தூதுவர்களுடைய முழு அதிகாரங்களும் சரிபார்க்கப்பட்டுவிட்டன (Verified) என்ற அறிக்கை ஆகியனவெல்லாம் கூறப்படுகின்றன. பின்னர், உடன்படிக்கையின் பிரிவுகள் (Articles) கூறப்படுகின்றன; அவை ஒவ்வொன்றிலும் இரு சாராராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் (Stipulations) கூறப்படுகின்றன. அடுத்து, இவ்வுடன்படிக்கை எவ்வளவு கால அளவுக்குச் செல்லுபடியாகக்கூடியதோ அந்தக் காலவரையறை குறிப்பிடப்படுகிறது. உடன்படிக்கையானது எக்காலத்துக்கும் நிலையானதாகக் கருதப்படுமாயின், அவ்வுடன்படிக்கையை எந்த ஒரு கட்சியும் தான் விரும்பினால் நீக்கிவிடும் பொருட்டு முன்னறிவிப்புச் (Notice) செய்வதற்கு வழிவகுக்கும் பிரிவு கூறப்படுகிறது. அடுத்து, உடன்படிக்கைக்கு அதனோடு தொடர்புள்ள அரசாங்கங்கள் ஒப்புதலளித்தல் வேண்டுமென்று கூறும் பிரிவும், அவ்வொப்புதல்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட வேண்டிய இடத்தையும் காலத்தையும் குறிப்பிடும் பிரிவும் கூறப்படுகின்றன. இறுதியில் இவ்வுடன்படிக்கைக்குச் சாட்சியாக அந்தந்த அரசாங்கங்களின் தூதுவர்கள் தங்களுடைய பெயர்களையும், முத்திரைகளையும் (Seals) பதித்துள்ளனர் என்று கூறும் பிரிவும் உள்ளது. இதனை அடுத்தே இடமும் நாளும் குறிப்பிடப்பட்டுக் கையெழுத்துகள் இடப்படுகின்றன. உடன்படிக்கையோடு கூடுதலான பிரிவுகள் (Additional Articles) பின்னர்த் தூதுவர்களால் சேர்க்கப்பட்டுக் கையெழுத்து இடப்படுதலும் கூடும்; அவ்வாறு கூடுதல் பிரிவுகள் இணைக்கப்படும் போது, தூதுவர்கள் உடன்படிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளவை ஒத்த ஆற்றலும் மதிப்பும் உடையவை என்று எழுத்து வடிவத்தில் அதில் உறுதி கூறிச் சேர்க்கின்றனர்.
உடன்படிக்கைகளின் வகைகள்
பன்னாட்டுச் சட்ட அறிஞர்கள் உடன்படிக்கைகளைப் பல்வேறு கொள்கைகளின்படி வகைப்படுத்தியுள்ளனர்; இரு நாட்டு உடன்படிக்கை (Bilateral Treaty), பலநாட்டு உடன்படிக்கை (Multilateral) முதலிய உடன்படிக்கை வகைகளைத் தவிர, ஒரு நிலப்பகுதியை வழங்குதற்கு வழி செய்தோ போர் நிறுத்தம் போன்ற ஒரு நடத்தை விதியை வலியுறுத்தியோ உடன்படிக்கை செய்யப்படுதலும் கூடும். உடன்படிக்கைகளின் நோக்கங்களைப் பொறுத்து அவற்றை (1) அரசியல் ஒப்பந்தங்கள், (2) வணிக உடன்படிக்கைகள், (3) அரசியலமைப்பு, ஆட்சிஇயல் உடன்படிக்கைகள், (4) குற்ற இயல் நீதி ஒப்பந்தங்கள், (5) குடிமை இயல் நீதி ஒப்பத்தங்கள், (6) பன்னாட்டுச் சட்டத்தொகுப்பு ஒப்பந்தங்கள் என்று வகைப்படுத்தியுள்ளனர். அமைதி ஏற்படுத்துதல், நட்புறவு செய்தல், நிலப்பகுதி வழங்குதல், வழக்குகளை அமைதியாகத் தீர்த்தல், படைக்குறைப்பு முதலியவற்றுக்கு வகை செய்தல் ஆகியன அரசியல் உடன்படிக்கைகள் (Political Treaties) ஆகும். சுங்கவரிக் குறைப்பு, மீன் பிடித்தல், வணிகத் தூதுவர் பரிமாற்றம், கப்பல் போக்குவரவு முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்பவை வணிக உடன்படிக்கைகள் (Commercial Treaties) ஆகும். பன்னாட்டுக் குற்றங்களை எடுத்துக்கூறி, குற்றவாளிகள் ஒப்படைவுக்கு (Extradition) வழி செய்யும் ஒப்பந்தம் குற்றவியல் நீதி உடன்படிக்கை ஆகும். மனித உரிமைகள், வணிகக் குறியீடுகள், நூல் பதிப்புரிமை, அயல் நாட்டு நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்குக் குடிமை இயல் நீதி உடன்படிக்கைகள் (Treaties Relating to Civil Justice) வழி செய்கின்றன. பன்னாட்டுத் தகராறுகளை அமைதியாகத் தீர்த்தற்குரிய விதிமுறைகள், போர்முறை விதிகள், அரசுகளின் உரிமைகளும் கடமைகளும் பற்றிய இலக்கணங்கள் ஆகியவை எல்லாம் அடங்கியது பன்னாட்டுச் சட்டத் தொகுப்பு உடன்படிக்கை (Treaties Codifying International Law) ஆகும்.
உடன்படிக்கை செயலற்றுப் போதல்
உடன்படிக்கையில் சேர்ந்துள்ள ஏதேனுமொரு நாடு அழிக்கப்படும்போதோ உடன்படிக்கையின் முக்கிய நோக்கமே நடைமுறையிலில்லாமல் மறைந்துவிடும் போதோ உடன்படிக்கையாளர்களே அவ்வுடன்- படிக்கையைத் தள்ளுபடி செய்து விட்டு வேறொன்றைச் செய்யும்போதோ. உடன்படிக்கையிலேயே உடன்படிக்கையாளர்களுக்கு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர்களுள் ஒருவர் உடன்படிக்கையை நீக்கிவிடும் அதிகாரத்தைக் கையாளும் போதோ உடன்படிக்கையானது செயலற்றுப் போகும். உடன்படிக்கை நாடுகளுக்கிடையே போர் ஏற்படுமாயின் அப்போது உடன்படிக்கையானது செயற்படாமல் நிறுத்திவைக்கப்படும்; முழுமையாக நீக்கப்படுதல் பெரும்பாலும் இல்லை; ஆகையால், அவ்வுடன்படிக்கையானது அமைதி உடன்படிக்கையின் வாயிலாக மீண்டும் தோற்றுவிக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கமாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 810)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/92ukq533/
தமிழ்“உடன்படிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/92ukq533/APA
Oliyon Research. (2026). உடன்படிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/92ukq533/MLA
"உடன்படிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/92ukq533/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment