பாண்டிய நாட்டில் உள்ள திருவாசகத் தலங்களுள் தலைமைச் சிறப்புடைய தலமாகும். இத்தலத் திருக்கோயில் சேது சமத்தானத்தைச் சேர்ந்த திருக்கோயில்களுள் ஒன்று. தொன்மையும் சிறப்பும் பெற்ற இவ்வூர் இராமநாதபுரத்தில் இருந்து, தென்மேற்கே 10 கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயில் மிகப்பெரியது. இறைவன் திருப்பெயர் மங்களேசுவர நாதர். இறைவியின் திருப்பெயர் மங்களேசுவரி, தேவார முதலியான மூவரும் பாடாத ஒரு சில சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. திருப்பெருந்துறையில் இறைவனால் தீட்சை செய்யப்பெற்ற மாணிக்கவாசகர் திருச்சதகம் பாடினார். பின்னர்த் திருஉத்தரகோச மங்கை வந்தடைந்தார். திருக்கோயிலுள் இறைவனைக் காணாது வருத்தமுற்று ‘நீத்தல் விண்ணப்பம்’ பாடி அருளினார். அப்பொழுது இறைவன் தம் திருமேனி காட்டி அருள்புரிந்தார் என்பர். ‘தெங்குலவு சோலைத் திரு உத்தர கோசமங்கைத் தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி’ என்னும் ‘திருப்பொன்னூசல்’ பாடற் பகுதியால் இறைவன் அருள் செய்தமை அறியத் தகும். ‘திருப்பொன்னூசல்’ பத்துப் பாடல்களும் திரு உத்தரகோச மங்கை பற்றியதாகும். இக்கோவிலில் மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு. கூத்தப் பெருமான் வீற்றிருக்கும் பகுதிக்கு ‘ஆதி சிதம்பரம்’ என்பது பெயர். நடராசர் திருமேனி மரகதத்தால் ஆயது. ஆண்டுதோறும் மார்கழித் திருவாதிரையில் நடைபெறும் வழிபாடு கண்டு மகிழத்தக்க சிறப்புடைய ஒன்றாகும். திருத் தசாங்கத்தில் இறைவன் வாழும் ஊர் எது என்ற வினாவிற்குச் ‘சிம்பரம் போலச் சிறப்புடைய திருஉத்தரகோச மங்கை’ என்று விடையளிப்பதாக மாணிக்கவாசகர் பாடியிருப்பது இவ்வூரின் சிறப்பை உணர்த்தி நிற்கும். கோயில் வளாகத்தில் ஒருகல்தேரும் உயர்ந்த கல் தூணும் இருக்கின்றன. தேர்ச் சக்கரங்கள் ஏழ் இசை எழுப்பவல்லன. உத்தரகோச மங்கை இவ்வூரைப் பற்றித் திருஉத்தரகோச மங்கைப் புராணம் என்னும் தலபுராணம் பாடப்பட்டுள்ளது. அ.வி.