உலகிலுள்ள பெருங்கடல்களுள் ஒன்று. இது இந்தியப் பெருங்கடலைவிடப் பெரியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கும் இது கடல்வழியாய் அமைந்துள்ளது. உலகிலுள்ள நீண்ட ஆறுகள் அட்லாண்டிக்குப் பெருங்கடலிலோ (Atlantic Ocean) அதனுடன் தொடர்புள்ள கடல்களிலோ கலக்கின்றன. உலகில் தொழில்வளம் மிக்க அட்லாண்டிக்குப் பெருங்கடல் நாடுகள், இக்கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. உலக வாணிகப் பெருக்கத்திற்கு இக்கடல் பெரிதும் உதவி புரிகிறது. இப்பெருங்கடலில் உவர்ப்புத் தன்மை மற்றைய கடல்களைவிட மிகுந்துள்ளது. அட்லாசு மலைத்தொடரை (Atlas Ranges) அடுத்திருக்கின்றமையால், இதற்கு அட்லாண்டிக்குக் கடல் என்று பண்டைய உரோமானியர் பெயரிட்டனர். அட்லாண்டிக்குப் பெருங்கடலின் பரப்பளவு 8,16,62,000 ச.கி.மீ. வளைகுடாக்கள், விரிகுடாக்கள், இப்பரப்பளவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உலகில் தென்படும் நீர்ப்பரப்பினுள் மூன்றில் ஒரு பங்கு அட்லாண்டிக்குப் பெருங்கடலாகும். ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் இதன் கிழக்குக் கோடியிலும் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இதன் மேற்குக் கோடியிலும் அமைந்துள்ளன. இப்பெருங்கடலின் வட தென் எல்லைகளைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. வடக்கில் ஆர்க்டிக்குப் பெருங்கடலுடனும், தெற்கில் அண்டார்டிக்குப் பெருங்கடலுடனும் இப்பெருங்கடலின் பகுதிகள் இணைகின்றன. வட அமெரிக்காவில் உள்ள பிளாரிடாவிலிருந்து (Florida) ஐரோப்பாவில் இசுபெயின் (Spain) வரை அட்லாண்டிக்குப் பெருங்கடலின் அகலம் 6679 கி.மீ; கிழக்குக் கடற்கரையில் நீளம் 51,300 கி.மீ; மேற்குக் கடற்கரையின் நீளம் 88,500 கி.மீ. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இக்கடலின் கடற்கரை ஒழுங்கற்றும், ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒழுங்காகவும் தென்படுகிறது. நார்வேக்கடல், வடகடல், பால்டிக்குக் கடல், மத்திய தரைக்கடல், கருங்கடல் போன்றவை இப்பெருங்கடலின் கிழக்குப்பகுதி நீர் நிலைகள்; செயின்ட்டு இலாரன்சு வளைகுடா, மெக்சிகோ வளைகுடா, கரீபியக் கடல் போன்றவை மேற்குப் பகுதி நீர் நிலைகள், பிரித்தானியத் தீவுகள் (British Islands), அசோரசு (Azores), கானரித் தீவுகள் (Canary Islands), வெரிடிமுனைத் தீவுகள் (Verde Cape) வட அட்லாண்டிக்குப் பெருங்கடலைச் சார்ந்தவை. இதன் ஆழம் சராசரி 4270 மீ.