சமூக நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்து அறிவதனை நோக்காகக்கொண்டது. அரசியல்சார் சமூகவியலின் வளர்ச்சிக்குக் காரல் மார்க்சு (Karl Marx) முன்னோடியாக விளங்கினார். வகுப்புச் சமூக அமைப்புகளை ஆராய்ந்த மார்க்சு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே வகுப்புப் பிரிவினையை மனித வரலாற்றில் முதன்முதலில் தோற்றுவித்தன என்றார். மக்களுள் சிறு பிரிவினரான பெருஞ் செல்வர்கள் (Bourgeoise), பெரும்பிரிவினரான பாட்டாளி மக்களை (Proletariat) அடக்கி ஆண்டு, தங்கள் நலனுக்காக அவர்களை உழைக்கக் கட்டாயப்படுத்தும் நிலைமை தோன்றும்போதுதான், சமூகத்தில் சிறைச்சாலைகள், காவற் படைகள், இராணுவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வன்முறை தோன்றுகிறது. பாடுபடும் பாட்டாளிகளைக் கட்டாயப்படுத்துவதாக அரசு செயற்படுகிறது என்று மார்ச்சு குறிப்பிடுகிறார். அரசு என்பது, வகுப்பு ஆட்சிக்கான வன்முறையோடு ஒடுக்குவதற்கான உறுப்பு ஆகும். வகுப்புகளுக்கிடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் லாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையானதாக்கி, நிலையான ஆதிக்க ‘ஒழுங்கை’ உருவாக்குவதே அரசு என்பது மார்க்சின் கொள்கையாகும். நிலையான இராணுவமும், காவல் படையுமே அரசு அதிகாரத்தின் முதன்மையான கருவிகளாகும். ஆண்டைகளும், அடிமைகளுமே சமூக வரலாற்றில் முதலில் தோன்றிய வகுப்பினர் என்பது மார்க்சின் கருத்தாகும். காலப்போக்கில், பெரும்பாலான நாடுகளில் அடிமைமுறை பண்ணை அடிமை முறையாக (Farm Slavery System) வளர்ந்தது. இங்கே நிலக்கிழார்களும் (Feudal Lords) பண்ணை அடிமைகளும் (Farm Slaves) முதன்மையான வகுப்புகளாக விளங்கினர். பின்னர். இந்தச் சமுதாயத்தில் வணிகம் வளர்ச்சியுற்று அதன் விளைவாக உலகச் சந்தை (World Market) தோன்றியது. உற்பத்திக்கான அடிப்படைப் பொருள்களைத் (Means of Production) தம் கைகளில் குவித்துக் கொண்ட ஒரு வகுப்பு, உழைப்பையே நம்பி வாழும் மற்றொரு வகுப்பைப் பயன்படுத்திப் பெரும்பொருள் ஈட்டத் தொடங்கிற்று. இதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிலமானிய முறை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இவ்வாறு முதலாளி தொழிலாளர் வகுப்புகள் நிலைபெற்றன. வகுப்புச் சமூகத்தின் வெவ்வேறு வடிவங்களான அடிமைச் சமூகம், நிலமானியச் சங்கம், முதலாளிச் சங்கம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே ஆளும் வகுப்பின் வல்லாட்சி என்கிறார் மார்க்சு. முதலாளித்துவ சங்கத்தில் இது பெரும்பாலும் மக்களாட்சியாக இருக்கலாம்; இது அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தல்களையும் அனுமதிக்கலாம்; ஆயினும் இது இன்னும் ஒரு வல்லாட்சியாகவே இருக்கின்றது. நாடாளுமன்ற வடிவங்கள் என்ற முகமூடி அணிந்த முதலாளி வகுப்பு வல்லாட்சியே இது என்று இதனை இலெனின் (Lenin) விளக்குகிறார். முடிவில் பாட்டாளி வகுப்புப் புரட்சியினால் அரசியல் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றுவரென்றும் உற்பத்திக்கான மூலப்பொருள்களை, சாதனங்களை அரசுடைமையாக்குவரென்றும், அந்த நிலையில் வகுப்பிலாப் பொதுவுடைமைச் சமுதாயம் அமையும் என்றும் வருங்கால நிகழ்வை மார்க்சு கணிக்கிறார். அரசியல் கொள்கைகள், பொருளாதார அடிப்படையில் எழுகின்றவையே எனும் கருத்தினை மார்க்சு வலியுறுத்துகிறார். ஆதலின், எந்தக் கட்டத்திலும் ஆளும் வகுப்பினரின் கருத்துகள் அரசின் கருத்துகளாகும் என்றும், சமுதாயத்தின் பொருளாற்றலைக் கட்டுப்படுத்தும் வகுப்பே அறிவாற்றலையும் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்றும் கூறுகிறார். அரசியல் ஒழுங்குமுறை என்பது, அரசையும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையுமே சார்ந்திருக்கும் என்கிறார். சமூகத்தில் அரசியல் சட்டங்கள் சிறப்பிடம் பெற்றவை. அவை அரசியல் ஒழுங்குமுறையை நிலைபெறச் செய்கின்றன என்றும் குறிப்பிடுகிறார். ஆன்பவர்களும் அரசு இயங்குமுறைகளும் சட்டங்களும் ஆளும் வர்க்கத்தினரின் விருப்பத்திற்காகவே செயற்படுகின்றன என்பது மார்க்சின் கருத்தாகும். அரசியலுக்கும் சமூகவியலுக்கும உள்ள தொடர்பினைச் செருமானியச் சமூகவியலறிஞரான மேக்சு வெபரின் (Max Weber) சமூகப் படிநிலை (Social Stratification) பற்றிய விளக்கத்தில் காணலாம். சமூக ஏற்ற நிலை (Social Status), உடைமைகள் (Property) ஆகியவற்றின் அடிப்படையில்தான் வகுப்புகள் உருவாகின்றன என்பது வெபரின் கருத்தாகும். பல ஏற்ற நிலைக் குழுக்கள் (Status Groups) அரசு இயங்கு முறைகளைக் கட்டுப்படுத்தும் நிலைக்குப் போட்டியிடுகின்றன என்றாலும் அவை செல்வாக்கு மிக்குடையனவாக இருப்பதில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகளும் ஏற்றநிலைக் குழுக்களும் தோன்றுவதற்கு அரசின் அதிகார வருக்க ஆட்சிமுறை (State Bureaucracy) ஊக்கமளிப்பதுடன் நாட்டுவளர்ச்சியிலும் செல்வாக்கை உண்டாக்குகிறது என்கிறார். அதிகாரவருக்கத்தாருக்கும் அரசிற்கும் அரசின் அலுவலர்களுக்குமிடையே போராட்டங்கள் ஏற்படுகின்றன என்னும் இவருடைய கருத்து, மார்க்சின் வகுப்புப் போராட்டக் கொள்கையினின்றும் மாறுபடுகிறது. இத்தகைய போராட்டங்கள் சில சமயங்களில் குழுக்களை ஈடுபடுத்தி அரசியல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் என வெபர் குறிக்கிறார். அரசும் அதன் நிறுவனங்களும் ஒரு தனிப்பட்ட வகுப்புக் கட்டுப்பாட்டின் கீழ் வாராவென்றாலும், இக்கால அரசில் பெரும்பான்மையான பதவிகள் வழக்கறிஞர்களால் ஏற்கப்படலாம் என்று கூறுகிறார். கல்வி அறிவுடன் அரசியலையும் சட்ட நுணுக்கங்களையும் அறிந்து, அரசியல் அறிவுடையவர்களாக அவர்கள் இருப்பதுதான் இதற்குக் காரணமெனக் கூறும் அவர், வழக்கறிஞர்கள் இல்லாமல் இருக்கும் மக்களாட்சி போலியானதாகும் என்றும் சுட்டுகிறார். திறமையுள்ள, பொறுப்புடைய ஆட்சியாளர்கள்தாம், சிறந்த மக்களாட்சியின் தலையாய கூறுகளாவர் என்பது இவரின் கருத்தாகும். பண்டைக் கிரேக்கத்தின் நேரடி மக்களாட்சியிலிருந்து (Direct Democracy) இன்றைய மக்கள் திரள் ஆட்சி (Mass Democracy) வரையில் சீர்தூக்கிப் பார்த்தால், சிறு பான்மையினரான மக்களாட்சி, மேட்டுக் குடியினரால் (Democratic Elitist) வழக்கறிஞர்கள் துணையுடன் ஆளப்படும் ஆட்சியாக உள்ளதென்றும் அதுவே ஆற்றல் வாய்ந்ததாக இருக்குமென்றும் குறிப்பிடுகிறார். இத்தகைய வாய்ப்பு அளிக்கப்படவில்லையென்றால் அரசு சிறப்புற அமையாதென்றும் நம்புகிறார். தலையாய இரு வழிமுறைகள் வாயிலாக அரசியல் தலைவர்கள் தேர்தெடுக்கப்படுவர். ஒன்று, வலுவான அரசியல் கட்சிகள் திறமையான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேர்தல் முறையைப் பின்பற்றுவதாகும். மற்றொன்று, தேர்தலின்றி அவர்களை நாடாளுமன்றத்திலிருந்தே விரும்பித் தேர்தெடுப்பதாகும். ஆட்சியாளர்கள் நிருவாகக் கருவிகளான தண்டித்தல், தண்டத்தொகை விதித்தல், வரி வாங்குதல், போர்முறை போன்றவைகளால் மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி, அவர்களைக் கீழ்ப்படிய வைக்கிறார்கள். இதுபோவவே அவர்கள் பொருள் திறம் (Material), குறியீட்டுப் பண்பு கொண்ட பட்டம், பதவி போன்றவற்றின் கட்டுப்படுத்தும் தன்மையால் தங்கள் கீழ்ப் பணிபுரியும் பணியாளர்களிடமும் ஆதிக்கம் செலுத்துவர். முறைமை நிலையென்னும் (Legitimacy) கோட்பாட்டினைப் பயன்படுத்தி வெபர் மூன்றுவகைத் தலைமைகளை (Leadership) விளக்குகிறார். அவை (1) மரபுவழியிலான (Traditional) முறைமைநிலை. இதில் தலைவர்கட்குத் தொண்டர்கள் கீழ்ப்படிந்து நடப்பர். (2) கவர்ச்சி நோக்கின் (Charismatic) அடிப்படையிலான முறைமை நிலை. இதில் தொண்டர்கள் தலைவரிடம் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வர். (3) பகுத்தறிவுச் சட்ட அடிப்படையிலான (Rational–Legal) முறைமை நிலை. இதில் தலைவர் சட்டப்படி செல்வாக்குடையவராக இருப்பார். அவர் கீழ்ப் பணிபுரிபவர்களும் சட்டத்துக்குட்பட்டுத் தலைவருக்குக் கீழ்ப்படிவர். அமெரிக்கச் சமூகவியலறிஞரான தால்காட் பார்சன்சு (Talcot Parsons) அரசியல் ஒழுங்குமுறை, சமூக ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாகும் என்று உணர்த்துகிறார். அது பயன் மதிப்புகள் (Values) ஏற்புத்தரங்கள் (Norms), பங்குகள் (Roles) ஆகியவற்றை அமைப்புக் கூறுகளாகக் (Structural Elements) கொண்டிருப்பதுடன், தனக்கென ஒரு எல்லையையும் பெற்றிருக்கிறது என்கிறார். அரசியல் ஒழுங்குமுறையின் இன்றியமையாச் சூழ்நிலைகள் சமுதாயத்தின் மற்றைய துணை அமைப்புகளே (Sub–systems) என்றும், அவை குறிக்கோளினை அடைதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயலாற்றுகின்றன என்றும், வளங்களைப் (Resources) பக்குவமாக மற்றத் துணை அமைப்புகளிடம் பரிமாறிக் கொள்வதை நிலை பெறச் செய்வதற்கு அவை அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். வளர்ந்த நாடுகளில் அதிகாரம் எல்லோருக்கும் பரவலாக வழங்கப்பட்டிருக்கிறது என்று பார்சன் குறிப்பிடுகிறார். உரிமைகளும் கடமைகளும் அதிகாரம் உள்ளவர்கள் அது இல்லாதவர்கள் ஆகியோர்களுக்கான பங்குகளை இணைக்கின்றன என்றும், இதனால் முன்னவர்களின் பங்குகள் பின்னவர்களின் பங்குகளைக் கட்டுப்படுத்துகின்றனவென்றும், பின்னவர்கள் முன்னவர்களுக்குக் கீழ்ப்படிதல் கடமையாகுமென்றும், இதுவே சிறந்த சமூக மதிப்பீடாகுமென்றும் விளக்குகிறார். கிரேக்க அறிஞரான அரிசுடாட்டில் (Aristotle} தம் அரசியல் (Politics) என்னும் நூலில் பல ஆட்சி முறைகளைத் தெளிவுபடுத்துகிறார். முடியாட்சி (Monarchy), உயர்குடி ஆட்சி – பிரபுக்கள் ஆட்சி (Aristocracy), ஆட்சி அமைப்பு முறை (Polity) என்று அரசுமுறைகளை அவர் மூன்றாகப் பகுக்கிறார். இதற்கு மாறான கொடுங்கோலாட்சி (Tyranny), சிறு குழு ஆட்சி (Oligarchy), மக்களாட்சி (Democracy) ஆகியவற்றையும் விளக்குகிறார். இதில் முடியாட்சியும் உயர்குடி ஆட்சியும் முழுமை பெற்ற, நேர்மையான, சிறந்த அரசு முறைகள் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், பின்னர்க் குறிப்பிட்ட மூன்றுவகை ஆட்சி முறைகளும் சீர் கெட்டவைகளாக இருந்தபோதிலும் மக்களாட்சி மட்டுமே பொறுத்துக் கொள்ளக் கூடியதென்றும் உணர்த்துகிறார். இருவகை ஆட்சிமுறைகளை இருபதாம் நூற்றாண்டில் காணலாம். அவை புதிய மக்களாட்சியும் (Modern Democracy), வல்லாட்சியும் (Totalitarianism) ஆகும். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆட்சி முறை, சார் மன்னர்கள் ஆண்ட உருசியா, இட்லரின் ஆட்சியில் இருந்த செருமனி ஆகிய நாடுகளில் இருந்து வந்தது. புதிய மக்களாட்சியைப் பற்றி இரு வகைக் கருத்துகள் நிலவி வருகின்றன. அவற்றுள் ஒன்று, பண்டைய கிரேக்கக் கருத்தினை ஒத்திருக்கிறது. பல்வேறு காலங்களில் மக்களாட்சி வளர்ச்சி பெற்று வந்ததனை வரலாறு விளக்கும். மக்களாட்சிச் சமுதாயத்தை உருவாக்கிய அரசியல் அறிஞர்கள் கி.பி. 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உரூசோ (Rousseau), மான்டெசுகியூ (Montesquieu), சான் இசுடூவர்ட்டு மில் (John Stuart Mill) போன்றோராவர். இதற்கு 20–ஆம் நூற்றாண்டினர்களான சான் தூயி (John Dewey), இராபர்ட்டு மெக்கைவர் (Robert Maclver) போன்றோர்களும் துணை நிற்கிறார்கள். இரண்டாவது, புதிய மக்களாட்சியின் கருத்துகளைப் பற்றியதாகும், அறவியல் நோக்குடைய மக்களாட்சியில் பொதிந்துள்ள பொதுவான கருத்துகள், பெர்னார்டு பிரில்சன் (Bernard Berelson), இராபர்ட்டு தால் (Robert Dahl), சோசப்பு கிம்பிடர் (Joseph Schimpeter) ஆகியவர்களின் விளக்கங்களில் வெளிப்படுகின்றன. நாடும் மக்களும் ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியாலும் அதைக் கட்டுப்படுத்துபவர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் என்னும் கருத்தே வல்லாட்சியியலாகும். காரல் பிரடரிக்கு (Carl Friedrich), செபிக் நியூவ் பிரிசிசின்சுகி (Zbigniew Brzezinski) எனும் அறிஞர்கள் வல்லாட்சி நிலவும் சமுதாயங்களைப் பற்றி விரித்து விளக்கியுள்ளார்கள். அரசியலில் அதிகாரத்தைச் சிறந்ததாக அரசியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். அதிகாரமெனும் வாய்ப்பு வளத்தினைப் பொதுவான முடிவெடுப்பதற்கு மக்கள் பயன்படுத்தலாம். கருந்து வேறுபாடுகள் இருந்தாலும் சிறுபான்மையினர், அரசியலில் வாய்ப்பு வளங்களைக் கட்டுப்படுத்துவதுடன் சமுதாயத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். இந்த வாய்ப்பு வளங்களின் இயல்புகள் எண்ணிக்கைகள் சமுதாயத்திற்குச் சமுதாயம் மாறுபடுவதாக இருப்பினும், மக்களைக் கட்டுப்படுத்தும் மேட்டுக் குடியினரின் போக்கு மாறுபடுவதில்லை, அரசியல் வாய்ப்பு வளங்களைப் பெற்றிருக்கும் குடிமக்கள் ஒன்றாகச் செயற்பட்டால், மேட்டுக் குடியினரின் அதிகாரத்தையும் அவர்கள் வாய்ப்பு வளங்களையும் எதிர்க்கும் திறம் பெறலாம். ஆனால் குடிமக்கள் வாய்ப்பு வளங்களான வாக்குரிமை, கூட்டமைப்பதற்கான திறமை, பொதுவான முடிவுகளைப் பற்றிப் பேசும் ஆற்றல் ஆகியவைகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குக்கூடக் கையாளுவதில்லை. இது புதிய மக்களாட்சியின் பெருங்குறையாக இருக்கிறது. இதனைச் செப்பமிடுதல் குடிமக்களின் பொறுப்பு ஆகும்.கோ.க.