மத்திய பிரதேசத்தில் இராய்ப்பூர் நகரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். இங்குள்ள திருமால் கோயில் கட்டடக் கலைச் சிறப்புடையது. கோயிலின் மூலவராகிய திருமால் இராசிவலோச்சனா (அழகிய கண்களையுடையவர்) எனப்படுகின்றார். பஞ்சாயதன வகையைச் சார்ந்த இக்கோயில் ஐந்து கோயில்களை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. திருமால் (இராசிவலோச்சனா) கோயிலைச் சுற்றி நான்கு துணைக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் பத்திரிநாதர், வாமனர், வராகர், நரசிம்மர் போன்ற திருவுருவங்களைக் கொண்டன. திருமால் கோயில் கருவறை, இடைசுழி, முன்மண்டபம் போன்றவற்றைக் கொண்டு திகழ்கின்- றது. முன்மண்டபம் 24 தூண்களைக் கொண்டது. தூண்களில் அழகுடன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல உள்ளன. அவற்றுள் தேவ அணங்குகள், வன தேவதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. முன்மண்டபத்திற்குச் செல்லப் படிக்கட்டுகளுடன் கூடிய நுழைவாயில்கள் முன்மண்டபத்தின் வடக்கு, தெற்குப் பக்கங்களில் காணப்படுகின்றன. இக்கோயிலின் உச்சிப் பகுதி (Sikram) அழிந்துபட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் சிற்பங்களுள் திரிவிக்கிரமர், சேட நாகன், வாமனர், யோகநாராயணன், நரசிம்மர், இரணியகசிபு போன்றவை மிகவும் சிறப்பானவை.