அருங்கலச் செப்பு என்பது தமிழிலுள்ள அறநூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெளிவாகத் தெரியவில்லை. திருவாரூருக்கருகில் இருந்த தீபங்குடியில் விளங்கிய அருங்கலான் வயத்தாரால் இது எழுதப்பட்டது. அருங்கலான் வயம் என்பது தென்னாட்டுச் சைன சங்கங்களிற் சிறப்புற்று விளங்கிய நந்தி கணத்தின் ஒரு பிரிவாகும். இந்நூலைப் பின்பற்றியே ‘அறநெறிச் சாரம்’ எழுதப்பட்டதால் இதன் காலம் அறநெறிச் சாரத்தின் காலமாகிய கி.பி. 13–ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாகலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இது சமந்தபத்ராசாரியரால் இயற்றப்பெற்ற ‘இரத்தின கரண்டகம்’ என்னும் நூலின் வழி நூலாக அமைந்துள்ளது என்பர். சமண சமயத்தைச் சேர்ந்த இல்லறத்தாருக்குமிய ஒழுக்கங்கள் இந்நூலில் வரையறுத்துத் தரப்பெற்றுள்ளன. ‘அரிய அணிகலப் பெட்டி’ என்றும் பொருள்படும் தொடராகிய ‘அருங்கலச் செப்பு’ என்பது, அரிய அணிகலன்கள் போல்வனவாகிய ஒழுக்கங்களை எடுத்துரைக்கும் நூலுக்கும் பெயராக அமைக்கப் பெற்றிருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. அருகன் துதியோடு சேர்த்து இந்நூல் 182 குறள் வெண்பாக்களால் இயன்றது; நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்ற அறம் மூன்றினையும் விரித்துப் பேசுகிறது. நற்காட்சிக்குரிய நிலையான பொருள்கள், நற்காட்சியின் எண்வகை உறுப்புகள், மூவகை மூடம், நற்காட்சியின் பயனும் சிறப்பும், நற்காட்சியுடையார் மாட்சி, நல்ஞானம் ஆகியன முதற்கண் கூறப்பட்டுள்ளன. நல்லொழுக்கம் இருடிகட்குரியதும் மனையார்க்குரியதும் என இருவகைப்படும். அணுவிரதம், குணவிரதம், திசை விரதம் என்று மனையார்க்குரிய ஒழுக்கம் மூன்று வகைப்படும். பெரிய கொலை, பொய், களவு, காமம், பொருள் வரைதல் என்னும் ஐந்தும் அணுவிரதம் ஆகும். கள், தேன், புலால் ஆகிய மூன்றும் உண்ணாமை குணவிரதம் ஆகும். ஆறு, மலை, கடல், அடவி என்னும் நான்கும் திசை விரதமாகும். இவை விரிவாக இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளன. சிறிய கொலை, பொய், களவு, காமம், பொருள் ஆகிய ஐந்தனையும் முற்றத் துறத்தல் மாவிரதம் எனப்படும். அனர்த்த தண்ட விரதம், போக–உபபோக பரிமாண விரதம், சாமாயிக்கு விரதம், போசத உபவாசம், தேசாவகாசிக விரதம், அத்தி சம்விபாக விரதம், பூசனை, சல்லேகனை, அறத்தின் பயன், இல்லறத்தாரின் பதினோரு நிலைகள் ஆகியனவும் விளக்கப் பெற்றுள்ளன. இறுதியில் நூலின் சிறப்பும், பயனும் உரைக்கப் பெற்றுள்ளன.ந.மா.