உத்திகள்
uttikaḷ
உத்தி என்பது இலக்கண நூல்களில் (தொல்.
உத்தி என்பது இலக்கண நூல்களில் (தொல். மரபு. 100, 112; நன்னூல் 14, 15) காணப்படும் கூறாகும். நூலிலக்கணம் ஐந்தனுள் ஒன்றாக இதனைத் தொல்காப்பியர் குறித்துள்ளார் (மரபு. 100). இச்சொல் வடசொல்லின் சிதைவாகும். இது நூலமைப்பைப் பற்றிக் கூறுதலால் தந்திரவுத்தி எனப்படுகிறது. எடுத்துக்கொண்ட நூற்பொருளை உலக வழக்கோடும் சான்றோர் நூல்வழக்கோடும் தொடர்புபடுத்திக் காட்டி, ஏற்ற தலைப்புகள் தந்து அவற்றிற்குத் தக்க இடம் இது எனத் திட்பநுட்பம் செறிய முடிவு செய்து தக்கவாறு நடத்துவது தந்திரவுத்தி (நன். 15).
உணர்த்தப்படும் பொருள் இது என்று அறிதற்கும், நூற்பொருளை அதிகார முறைமைப்படுத்தித் தருதற்கும், செய்திகளைத் திரட்டிக் கூறுதற்கும், திரட்டிக் கூறியவற்றை விரித்துக்கூறி அதனால் ஒரு பயன் உண்டென அறிதற்கும் உத்திகள் இன்றியமையாதன. மேலும், முதல்நூற் பொருளை உணர்தற்குரிய கருவிகள் உத்திகளே. அவை சூத்திரச் சுருக்கத்திற்கும் ஏதுவாமென்பது பேராசிரியர் கருத்து. அவை நூல் செய்வார்க்கும் நூலை நுணுகிப் பயில்வார்க்கும் பெரிதும் பயனாவன. உத்திகள் புலப்பாட்டு நெறியாகக் கொள்ளத்தக்கன. உத்திகளை இலக்கணச் சார்போடு உரையாசிரியர்கள் விளக்கியிருப்பினும் ஈண்டு அவை பொதுவகையாகவே விளக்கப்படுகின்றன.
உத்திவகைகளைக் குறிப்பதில் தொல்காப்பியமும் நன்னூலும் வேறுபடினும் இரண்டும் 32 உத்திகளையே குறிக்கின்றன. தொல்காப்பியம் கூறும் உத்திவகைகள் சிலவற்றை (தொகுத்துச்சுட்டல், வகுத்துக்காட்டல், பிறன்கோட்கூறல்) அப்படியே நன்னூல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈண்டு இளம்பூரணர் கொண்ட பாட அடிப்படையில் உத்திகள் விளக்கப்படுகின்றன.
:: நுதலியது அறிதல்: நூலாசிரியர் என்ன கருதி ஒன்றினைக் கூறுகிறார் என அறிதல்.
:: அதிகார முறை (மை): முதலில் சொல்லிய ஒரு செய்தியைப் பின்வரும் இடங்களிலும் பெற வைத்தல்.
:: தொகுத்துக் கூறல்: செய்திகளைத் திரட்டிக் கூறுதல் (அல்லது) நிரல்படக் கூறப்பட்ட செய்திகளின் முடிவில் இதுவரை பேசப்பட்ட பொருள் இதுவெனக் கூறல்.
:: வகுத்துமெய்ந்நிறுத்தல்: திரட்டிக் கூறப்பட்ட பொருளைத் தனித்தனியாக விரித்துக் கூறல்.
:: மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்: சிக்கல் தோன்றுமிடத்து முன்கூறப்பட்ட பொருளினின்று மாறுபடா வகையிற் பொருள் கொள்ளுதல்.
:: மொழியாததனை முட்டின்றி முடித்தல்: நூலுள் ஒருசெய்தி விளக்கமாகக் கூறப்படாதிருப்பினும் சூழல்நோக்கி ஏற்புடைய விளக்கம் தந்து இடர்ப்பாடின்றி அறிதல். இவ்விரண்டினையும் பேராசிரியர் ஓர் உத்தியாக்கி விளக்குவர்.
:: வாராததனால் வந்தது முடித்தல்: ஒரு பொருண்மை பற்றிய எல்லாச் செய்திகளும் நிறைவுறக் கூறப்படா நிலையில் உள்ள செய்தியின் துணைகொண்டு சிக்கலுக்குத் தீர்வு காணல்.
:: வந்ததுகொண்டு வராததுமுடித்தல் (உணர்த்தல்): ஒருசேர வைத்து எண்ணப்பட்ட பொருள்களுள் ஒன்றற்கு ஒரு முடிவு கூற, அதுகொண்டு முன் கூறப்பட்ட பிற பொருள்களுக்கும் பொருந்தும் முடிவு காணல்.
:: முந்துமொழிந்ததன் தலைதடுமாற்று: முன்னொருகால் ஒரு செய்தியை ஒரு முறையில் விளக்கிப் பின்னோரிடத்து அதனின்றும் முரண்படுவதுபோலக் கூறுதல்.
:: ஒப்பக்கூறல்: ஒப்பில்லாத இரு பொருள்களுக்கு இடையில் ஒப்புள்ளதுபோல இணைத்துக் கூறல் (அல்லது) ஒன்று கூறுங்கால் இருபொருட் குறித்தது என்று இரட்டுறக் கூறல்.
:: ஒருதலைமொழி(தல்): கவர்ந்த பொருள் தருமிடங்களில் ஒரு பொருளைத் துணிந்து கொள்ளுதல்.
:: தன்கோட்கூறல்: பிற நூலாசிரியர்களின் நெறியைப் பின்பற்றாமல் ஆசிரியன் தன் கோட்பாட்டைக் கூறுதல்.
:: உடம்பொடுபுணர்த்தல்: ஓரிடத்து ஒன்றற்கு வரையறை கூறி, பிறிதோரிடத்து அவ்வரை- யறை மீறலாக ஒரு செய்தியை வைப்பின் அவ்வைப்பையே இலக்கணமாகக் கோடல். பேராசிரியர் இதனை ஒருதலைமொழிதலுக்கு இனமாக்கி முறைபிறழாமை என்ற உத்தியை இன்னிடத்தில் கூறுவர்.
:: பிறனுடம்பட்டது தானுடம்படுதல்: பிற நூலாசிரியர்க்கு உடன்பாடான உண்மையை நூலாசிரியரும் உடன்பட்டுக் கூறுதல்.
:: இறந்தது காத்தல்: முதலில் ஒரு செய்தியை விளக்குமிடத்துக் கூறாது விட்ட உண்மையைப் பின்னர் ஏற்ற இடத்தில் அமைத்துக் காத்தல்.
:: எதிரது போற்றல்: பின்னால் சொல்லப்பட வேண்டிய செய்தியைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பத் தொடக்கச் செய்தியை அமைத்தல்.
:: மொழிவாமென்றல்: ஒரு பொருள் பற்றிய எல்லாச் செய்திகளையும் கூறாது அவற்றுள் ஒன்றனைப் பின்னால் இன்ன இடத்துக் கூறுவேன் என்றல்.
:: கூறிற்றென்றல்: முன் கூறிய ஒரு மெய்ம்மையினைப் பிறிதொன்றற்கும் விதித்துக் கூற நேர்ந்தால் அவ்விடத்து மீண்டும் அதனை விளக்காது முன் கூறப்பட்டுள்ளது எனல்.
:: தான்குறியிடுதல்: நூலாசிரியன் தன் கருத்தைப் புலப்படுத்துதற்கு உரிய சொற்களை உலகவழக்கினின்று எடுத்துக் கொள்ளாமல் தானே படைத்தளித்தல்.
:: ஒருதலையன்மை முடிந்தது காட்டல்: ஒரு பொருளை ஓதியவழிக் கூறிய மெய்ம்மை அதற்கு மட்டுமன்றிப்பிறபொருட்கும் பொதுவாக முடிந்தமைகாட்டல். இவ்வுத்தியைப் பேராசிரியர் இரண்டாகக் காட்டுவார்.
:: ஆணை கூறல்: நூலாசிரியர் தன் கருத்து இது எனக் கூறுமிடத்து காரணங்காட்டி நிறுவாமல் ஆணையிட்டுக் கூறுதல்.
:: பல்பொருட்கேற்பின் நல்லது கோடல்: பல பொருள்படுமாறு ஒன்று கூறப்பட்டிருப்பின் அவ்விடத்திற்குப் பொருத்தமான நல்ல பொருளைக் கொள்ளுதல்.
:: தொகுத்த மொழியான் வகுத்தவர் கோடல்: தொகுத்துக் கூறிய செய்தி ஒன்றின் வழியே அதன் விரிவுகளை வகுத்துக் கொள்ளுதல்.
:: மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல்: பிற நூலாசிரியர்ப் பொருண்மையைக் கெடுத்துத் தன் முடிபைக் கூறுதல்.
:: பிறன்கோட் கூறல்: பிற நூலாசிரியன் கோட்பாட்டைத் தன் நூலுள் கூறுதல்.
:: அறியாது உடம்படல்: நூலுள் கூறப்பட்ட செய்தியேயன்றி ஒப்புடைப் பிற செய்திகள் இருப்பின் அவற்றையும் அமைத்துக் கொள்க எனக் கூறுதல்.
:: பொருள் இடையிடுதல்: ஒரு பொருளை நிரல்படத் தொகுத்துக் கூறுமிடத்து இடையில் வேறு பொருள் பற்றிய செய்தியையும் கூறுதல்.
:: எதிர்பொருள் உணர்த்தல்: இனிக் கூறவேண்டியது இது என்றோ நூலுட் கூறிய பொருள் எதிர்காலத்தில் மாறுதலாகலாம் என்றோ கூறுதல்.
:: சொல்லின் எச்சம் சொல்லியாங்குணர்தல்: செய்தியை வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லாற்றலால் பெறவைக்கும் இடங்களில் எடுத்தோதிய நெறி நின்று பொருளை உணர்தல்.
:: தந்து புணர்ந்துரைத்தல்: பொருள் நிலையை முன்னும் பின்னும் நோக்கி இடைநின்ற ஒன்றினை விளக்குதல் (அல்லது) உள்பொருள் அல்லதனை உளபோலத் தந்துரைத்தல்.
:: ஞாபகங்கூறல்: சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலின்றி அரிதின் முயன்று பொருள் கொள்ள வைத்து, அவ்வழியே வேறு பல பொருள்களும் கொள்ளவைத்தல் (அல்லது) இரட்டுற மொழிந்து இருபொருள் கொள்ள வைத்தல்.
:: உய்த்துக் கொண்டுணர்தல்: நூற்செய்தியில் பொருந்தாமை தோன்றுமிடத்துப் பொருத்துமாறு விசாரித்தறிதல். கோ.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 892)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tyb7cnu/
தமிழ்“உத்திகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8tyb7cnu/APA
Oliyon Research. (2026). உத்திகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tyb7cnu/MLA
"உத்திகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8tyb7cnu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment