சீழ்க் கட்டி
cīḻk kaṭṭi
உடலின் எப்பகுதியிலும் சீழ் சேர்ந்து உருவாவது சீழ்க் கட்டி எனப்படும்.
உடலின் எப்பகுதியிலும் சீழ் சேர்ந்து உருவாவது சீழ்க் கட்டி எனப்படும். பொதுவாக, தோல், நுரையீரல், மூளை, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றில் இது தோன்றும். வலிமையான உறுத்திகள் (strong irritants) குறிப்பிட்ட பகுதியில் இருப்பதே சீழ்க் கட்டிகள் தோன்றுவதற்குக் காரணமாகும். சான்றாக, ஸ்டெஃபைலோகாக்கஸ் என்ற பாக்டீரியா தோலில் உள்ள மயிர் இடுக்கு வழியே, ஊடுருவிக் கொப்புளத்தை உருவாக்குதல்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், நோய்த் தொற்று (infection) உருவாகும் போது, அவ்விடம் நோக்கிப் பெருமளவில் நியூட்ரோஃபிலிக் வெள்ளணுக்கள் கூடுகின்றன. இவை செரிக்கும் புரத நொதிகளை (proteases) வெளியிடுவதால், அவ்விடத்தில் உள்ள திசுக்கள் அழிந்து, கூழ்ம நிலையை (semilucid) அடையும்; இதையே சீழ் என்பர்.
சீழ்க் கட்டி என்பது உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் சீழ் மற்றும் அந்தச் சீழைச் சுற்றி ஏற்படும் அழற்சித் திசு ஆகியவற்றின் கூட்டாகும். திசு—உறுத்தி இருக்கும் வரை, திசு அழிவு ஏற்படுவதுடன் வெள்ளணுக்களையும் அவ்விடத்திற்கு ஈர்க்கும். பிறகு, மேலும் புரதச் சிதைவு ஏற்பட்டுச் சீழ் மிகும் போது, அவ்விடத்தில் அழுத்தம் மிகுதியாகிறது. இதனால், சுற்றுப்புறத் திசுக்களிலிருந்து சீழ்க் கட்டிக்குப் பெருமளவில் நீர் ஈர்க்கப்பட, அதிலுள்ள சீழ் குறை எதிர்ப்புள்ள இடம் நோக்கிப் பாயத் தொடங்கும். இறுதியாகச் சீழ் வெளிப்புறம் நோக்கி வரத் தொடங்கும். தானாகவே சீழ் திசுக்களினூடே புகுந்து, வெளி நோக்கி வரும் போது, பெருமளவில் திசு அழிவு ஏற்படும். திசு அழிவைக் குறைப்பதற்காக, பெரும்பாலும் சீழ்க் கட்டியைக் கீறி, சீழ் எளிதில் வெளியேற வழி செய்யப்படுகிறது. சீழ் உருவாகும் போது, திசு அழிவு பழைய நிலையை அடைய இயலாது. இருப்பினும், அந்தப் புண் ஆறி வடுவாகத் தோன்றும்.
சில சமயங்களில், சீழ் வெளியேறத் தொடங்குவதற்கு முன்னர், சீழ்க் கட்டி உண்டாகக் காரணமான திசு உறுத்தியை இயற்கையான எதிர்ப்புகள் அழித்து விடுகின்றன . இந்நிலையில் அவ்விடத்தில் உருவான குறை அளவான சீழ் உடலிலேயே உள் உறிஞ்சப்படுகிறது. ஆனால், சீழ் மிகுதியாக இருக்கும் போது, ஒரு நீர்மப் பையாக (cyst) உருவெடுத்துத் தங்கி விடும் அல்லது சீழ் மேலும் வற்றி நாரியல் திசுக்கள் சூழ்ந்த கட்டியாக விளங்கும். துளைத்துச் செல்லும் காயங்கள், அண்மைத் தொற்று, நிண நீர், குருதி ஆகியவற்றால் சீழ் உருவாவதற்குக் காரணமான நுண்ணுயிரிகள், சீழ் உருவாகும் இடத்தை அடையலாம். நோய்க் குறிகள். சீழ்க் கட்டியின் பரிமாணம், பாக்டீரியாவின் வீரியம், கட்டியினுள் காணப்படும் அழுத்தம் இவற்றைப் பொறுத்து, நோயாளி குத்தல் வலியை உணர்வார். காய்ச்சல், நடுக்கம் போன்றவையும் காணப்படும். கட்டி உள்ள இடத்தில், வெப்பம், சிவப்பு நிறம், தொட்டால் வலியுணர்ச்சி, வீக்கம், செயலிழப்புப் போன்றவையும் காணப்படும்.
தடுப்பு. சில சமயங்களில் சீழ்க் கட்டி உருவாவதை நுண்ணுயிர் எதிர் மருந்துகளைக் (எ-டு: டெட்ராசைக்ளின்) கொண்டும், பாதிக்கப்பட்ட இடத்தை மேல் தூக்கிய நிலையில் இருத்தியும், போதிய அளவு ஓய்வு கொடுத்தும் தடுக்க முடியும்.
மருத்துவம். சீழ் இருப்பதைக் கண்ட உடனே, அந்தக் கட்டி கீறப்பட்டு, சீழ் வெளியேற்றப்பட வேண்டும். பாக்டீரியாவைக் கண்டு, அதற்கேற்ற எதிர் மருந்து தர வேண்டும். —கு. சிவஞானம் நூலோதி. J.E. Anderson, Pathology, Eighth Edition, The C.V. Mosby Co., St. Louis, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 441)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8twngquu/
தமிழ்“சீழ்க் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8twngquu/APA
Oliyon Research. (2026). சீழ்க் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8twngquu/MLA
"சீழ்க் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8twngquu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment