சூல் காலக் குருதி நோய்கள்
cūl kālak kuruti nōykaḷ
சூலடைந்த 28 வாரங்களில் பொலிவடைந்த கரு, கருப்பையகத்தில் நிலை பெறும் போதும், கருச் சிதைவு, வேற்றிடச் சூல், முத்துப் பிள்ளை நிலை, கருப்பைக் கழுத்து நைவு, யோனி அழற்சி ஆகியவற்றின் போதும், குருதிப் பெருக்கு ஏற்படக் கூடும்.
சூலடைந்த 28 வாரங்களில் பொலிவடைந்த கரு, கருப்பையகத்தில் நிலை பெறும் போதும், கருச் சிதைவு, வேற்றிடச் சூல், முத்துப் பிள்ளை நிலை, கருப்பைக் கழுத்து நைவு, யோனி அழற்சி ஆகியவற்றின் போதும், குருதிப் பெருக்கு ஏற்படக் கூடும். டிரோஃபோபிளாஸ்ட், கருப்பையகத்தில் நிலை பெறும் போது, குருதிப் பெருக்கு ஏற்படலாம். மாத விடாய் வந்த நாள் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்நிலை ஏற்படலாம்.
கருவுச் சிதைவுக்கான காரணங்கள் பல வகைப் படும். அவை பொலிவடைந்த முட்டையின் கோளாறு, மன உளைச்சல், தந்தையின் குரோமசோம் கோளாறு ஆகியவையாகும். கருச் சிதைவு ஏற்படப் போகும் அச்ச நிலை, தவிர்க்க முடியாத கருச் சிதைவு, வழக்கமான கருச் சிதைவு, முழுமையடையாத கருச் சிதைவு, மருத்துவம் சார்ந்த கருச் சிதைவு, குற்றஞ் சார்ந்த கருச் சிதைவு, சீழ் நிலையடைந்த கருச் சிதைவு ஆகிய அனைத்திலும் குருதி வெளிப்பாடு இருக்கும். முத்துப் பிள்ளையிலும், கருப் பைப் புறத் தோல் (chorion) புற்று நோய், கருக் குழலில் சூல், வயிற்றுள்ளுறுப்புகளில் ஏற்படும் சூல் ஆகியவற்றிலும் குருதிக் கோளாறு உண்டாகலாம். மேலும் கருப்பைக் கழுத்தில் தோன்றும் தொங்கு தசை, சூல் பைக் கழுத்தின் அரிப்புப் புண், அதன் புற்று நோய் ஆகியவையும் குருதிப் பெருக்கின் காரணமாக அமையலாம். முன் நிலைச் சூல் ஒட்டு (placenta), இயல்பான சூல் ஒட்டு ஆகியவையும் குருதிக் கோளாறுகளை உண்டாக்கும். குருதி உறை சிக்கல்களும் ஏற்பட்டுக் குருதி நாளத்தின் உள்ளேயே உறைவு ஏற்பட்டு, மேலும் பல சிக்கல்கள் உண்டாகலாம். சிறுநீரகப் பாதிப்பின் போது, குறைந்த அளவில் சிறுநீர் பிரிந்தும், பிரியாமலும் இருக்கலாம். கல்லீரல் பாதிப்பில், மஞ்சள் காமாலையும், நுரையீரல் பாதிப்பில் கடின மூச்சும், நீலம் பூரித்தலும், மூளைப் பாதிப்பின் போது, வலிப்புகளும், மயக்க நிலையும் உண்டாகலாம். பளிங்குப் படல மைய குருதி நாள உள் உறைவால், விழித் திரை பாதிக்கப்பட்டுப் பார்வை இழப்பு ஏற்படலாம். பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டு ஷீஹான் கூட்டியம் (syndrome) உண்டாகலாம். குருதி நாளத்தினுள் குருதி உறையும் போது, ஃபைப்ரினோஜன் குறைந்து, குருதி உறைவுக் கூறுகளான II V & VIII திராம்பின் எதிர்க் கூறு III ஆகியவையும் குறைகின்றன. இதனால், நுண் தட்டுகளின் எண்ணிக்கையும் குறைவதால், குருதி உறையாமல், பெருமளவில் குருதிப் பெருக்கு ஏற்படுகிறது.
குருதி உறைவுக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க, பின் வரும் ஆய்வுகள் தேவை. அவை: குருதி ஆய்வு, நுண் தட்டு எண்ணிக்கை, குருதி உறைவு நேரம், ஃபைப்ரினோஜன், புரோதிராம்பின் நேரம், திராம்பின் நேரம் என்பன.
தீவிர சிறுநீரகச் செயலிழப்பு, ஷீஹான் கூட்டியம் (முன் பிட்யூட்டரி சிதைவு), பேறு காலத்திற்கும் பின் வரும் குருதிப் பெருக்கு, உயிரிகளின் தாக்கம், சோகை, உள வயக் கோளாறுகள் அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குருதிக் கோளாறுகளுக்கான காரணத்தைக் கண்டு பிடித்து, ஆவன செய்ய வேண்டும். —அ. கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 660)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8thtggew/
தமிழ்“சூல் காலக் குருதி நோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8thtggew/APA
Oliyon Research. (2026). சூல் காலக் குருதி நோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8thtggew/MLA
"சூல் காலக் குருதி நோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8thtggew/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment