உயிரிகள் அனைத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களால் ஆக்கப் பட்டவை. உயிரிகளின் அனைத்துச் செயல்களுக்கும், அமைப்பிற்கும் செல்களே அடிப்படையாக உள்ளன. செல்களின் உள்ள மைப்பு மற்றும் செயல்கள் போன்றவற்றைப் பற்றிய விலங்கியல் பிரிவுக்குச் செல்லியல் அல்லது செல் உயிரியல் (cell biology) என்று பெயர். தக்கை பல செல்களால் ஆக்கப்பட்டுள்ளது எனும் கருத்தை இராபர்ட் ஹூக் வெளியிட்டார். லீவென் ஹாக் தாம் கண்டு பிடித்த நுண்ணோக்கியின் உதவியால், ஒரு செல் உயிரிகளையும், அவற்றில் உள்ள ஒரு சில செல் உறுப்புகளையும் கண்டார். மிர்பெல், ஓக்கென். லாமார்க், டுட்ரோஷெட், டர்பின் போன்றோர் செல் பற்றி மேலும் ஆராய்ந்தனர். இறுதியில், ஷ்லெய்டன் எனும் தாவரவியல் வல்லுநரும், ஷ்வான் எனும் விலங்கியல் வல்லுநரும் செல் பற்றிய ஒரு தெளிவான கோட்பாட்டை வெளியிட்டனர். அனைத்து உயிரிகளும், செல்களால் ஆனவை; செல் பகுபடுதலின் மூலமே, செல்கள் உண்டாகின்றன. என்பவை இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துகள் ஆகும். உயிர் வேதியியல் வளர்ச்சியடைந்த பிறகு, ஒரே அடிப்படை அமைப்பைக் கொண்டுள்ள இவற்றின், வேதியியல் பொருள்களும் ஒரே தன்மையுடையன என்பது தெரிய வந்தது. ஓர் உயிரியின் செயல்கள் அனைத்தும், அதன் பல்வேறு பகுதிகளிலுள்ள செல்கள் யாவும் ஒன்றிணைந்து இயங்குவதாலேயே நடை பெறுகின்றன. கோலிக்கர் என்பார் விந்தணுச் செல்லும், சினையணுச் செல்லும் இணைந்தே கரு முட்டை (zygote) உருவாகிறது என்பதை விளக்கினார். பிரவுன் என்பார், செல்லின் உள்ளேயுள்ள நியூக்ளியசே செல்லின் அமைப்பு மாறாப் பகுதியென்றும், செல்லின் அனைத்துச் செயல்களையும் அதுவே தீர்மானிக்கிறது என்றும் முடிவு செய்தார். ஜார்டின், ஷுல்ட்ஸ், புர்கின்ஜி, வான் மோல் ஆகியோர் செல்லில் உள்ள பொருளுக்குப் புரோட்டாப்பிளாசம் என்று பெயரிட்டனர். புரோட்டோப்பிளாசத் திரளே ஒரு சவ்வினால் சூழப் பட்டு, நியூக்ளியசைப் பெற்றுள்ள செல்லாக அமைந்துள்ளது எனும் கருத்து, காலப் போக்கில் உருவாகியது. நியூக்ளியசிலுள்ள புரோட்டாப்பிளாசம் நியூக்ளியோப்பிளாசம் எனவும், செல் சவ்வுக்குள் நியூக்ளியஸ் வெளியே உள்ள புரோட்டாப்பிளாசம், சைட்டோபிளாசம் எனவும் பெயரிடப் பட்டன. செல்களின் நேர்முகப் பகுப்பை இராமாக் என்பார் விவரித்தார். ஃபிளமிங் என்பார், விலங்குகளிலும், ஸ்ட்ராஸ்பர்கர் என்பார், தாவரங்களிலும் மறைமுகச் செல் பகுப்பைக் கண்டறிந்தனர். பின்னர், மறைமுகப் பகுப்பின் போது, குரோமோசோம்கள் எனும் நியூக்ளிய இழைகள் உண்டாகின்றன என்று வால்டெயரால் கண்டறியப் பட்டது. சைட்டோப்பிளாசத்திலுள்ள செல் மையத்துகள் என்னும் பகுதியை, வான் பெனிடன், போவெரி ஆகியோரும், மைட்டோகாண்டிரியாவை ஆல்ட்மென், பென்டா ஆகியோரும், வலைப் பின்னல் அமைப்பைப் போர்ட்டா. பலேடு, தாம்சன் ஆகியோரும், சுரத்தலில் பெரும் பங்கு பெறும் கொள்கை அமைப்பைக் கோல்கை (Golgi) என்பாரும் கண்டு பிடித்தனர். எலெக்ட்ரான் நுண்ணோக்கி எக்ஸ் கதிர் விளிம்பு விலகல் முறை ஆகியவை கண்டு பிடிக்கப் பட்ட பின்னர், செல்லியலில் மிக நுட்பமான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. உடற்செயலியல், உயிர் வேதியியல் ஆகியவை செல் பற்றிய விபரங்களை நுட்பமாக அறியத் துணை புரிந்தன. ஒ. ஹெர்ட்விக், ஹெச்.ஃபோல், ஸ்ட்ரார்பார்கர் ஆகியோர் கருவுறுதலை ஆராய்ந்து, பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்வதற்குச் செல்லின் நியூக்ளியசே இயற்பியல் அடிப்படை எனும் கருத்தை உணர்த்தினர். ரூக்ஸ் என்பார், நியூக்ளியசிலுள்ள உட்கரு இழைகளே (chromatin) குரோமோசோம்களாக மாறுகின்றன என்பதை விளக்கினார். இக்குரோமோசோம்களே கடத்தப் படும் பொருள்களை உள்ளடக்கிய அடிப்படை அலகுகள் என்று வீஸ்மென் விளக்கினார். 1865இல் செல்லியல் அடிப்படைகளை அறியாமலேயே, கிரகர் மென்டல் என்பார், மரபியல் விதிகளை வகுத்தார். செல்லமைப்பு இவ்விதிகளின் படிச் செயல் படுவது பின்னர், தெளிவாக்கப் பட்டது. உடற்செல்களில் இரு மடங்கு குரோமோசோம்கள் இருப்பதும், இனப் பெருக்கச் செல்களில் ஒரு மடங்கே குரோமோசோம்கள் இருப்பதும் இதை நிறுவின. மார்கன், ஸ்ட்ர்டிவான்ட், பிரிட்ஜஸ் போன்றோர் குரோமோசோம்களிலுள்ள ஜீன்களே பாரம்பரிய அலகுகளைப் பெற்றுள்ளன என்பதையும், அவை குரோமோசோம்களில் நிலையான இடங்களில் உள்ளன என்பதையும் விளக்கினார். வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வுகளின் அடிப்படையில், செல் வேதியியல் உருவானது. இது செல் மூலக் கூறு அமைப்பையும், செல் இயக்கத்தையும் விளக்குகிறது. —கோ. நாராயணன்