உடல் நலக் கல்வி
uṭal nalak kalvi
உயிர் வாழ்வதற்கு உடல் இன்றியமையாதது.
உயிர் வாழ்வதற்கு உடல் இன்றியமையாதது. உறுதியான, நோயற்ற வாழ்வே இன்பமான வாழ்க்கைக்கு முதற்படியாகும். எனவே உடல் நலம் மிகவும் இன்றியமையாதது. உடல் நலத்தினைப் பற்றிய கல்வி உடல் நலக் கல்வியாகும். உடல் உறுப்புகள் பற்றிய செய்திகள், அவற்றின் அமைப்பு, வேலை செய்யும் முறைகள், ஒழுங்காக அவை வேலை செய்வதற்கு ஒருவர் பின்பற்ற வேண்டிய விதிகள், ஒருவர்க்கு வரும் நோய்கள் பற்றிய செய்திகள், அவற்றைத் தீர்க்கும் முறைகள் ஆகியவை பற்றிய கல்விதான் உடல் நலக் கல்வி.
உடல் நலக் கல்வியை எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும். ஆனால் அவர்களின் வயதிற்குத் தகுந்தாற்போல் கற்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நன்மையான உடல் நலக் கல்வியைக் கற்பிக்கலாம். சிறு குழந்தைகளுக்குப் பெற்றோர்களே உடல் நலம் பற்றிய செய்திகளைக் கற்பிப்பது மிகச் சிறந்ததாகும்.
பின்பு பள்ளியில் ஆசிரியர் பாடத்தின் வாயிலாக உடல்நலக் கல்வியியைக் கற்பிக்கலாம். அரசாங்கம் தன்னுடைய பலவகைத் திட்டங்கள் மூலமும் வானொலி, திரைப்படங்கள், தொலைக்காட்சி (Television), வீடியோ கேசெட்டு (Video Cassettee) ஆகியவற்றின் மூலமும் இக்கல்வியைக் கற்பிக்கலாம். தனிமனிதத் தூய்மை, பொது இடத்தூய்மை, மனிதனுக்கு வரும் நோய்கள், நோய்கள் வருவதற்கான அறிகுறிகள், அவற்றைத் தீர்க்கும் எளிய வழிமுறைகள் போன்றவற்றைச் சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாகக் கற்பிக்கலாம்.
மூன்று வயதிலிருந்து ஏழு வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு நன்றாகப் பல் துலக்குவது, குளிப்பது, உடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, குறித்த காலத்தில் உணவு உட்கொள்வது போன்றவற்றின் இன்றியமையாத் தன்மையை எடுத்துச் சொல்லலாம். திறந்த வெளியில் மூடப்படாமல் இருக்கும் உணவுப் பண்டங்களைத் தின்பதைத் தவிர்க்கச் சொல்லலாம்.
ஏழு முதல் பதினைந்து வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளின் அமைப்பு வேலை செய்யும் முறை பற்றிச் சொல்லிக் கொடுத்து, அவை நன்கு வேலை செய்யத் தேவையான சத்துணவுகளை (Nutritious Foods) உண்ணச் செய்யலாம். உடல் நலத்தை வளர்ப்பதற்குரிய சிறந்த வழி நல்ல, சத்தான உணவை உண்பதே என்பதும் நோய்கள் வருவதற்குரிய ஒரே காரணம் தவறான உணவு வகையே என்பதும் கர்னல் இராபர்ட் மெக்காரிசனின் கருத்தாகும். இக்கருத்தை மனத்திற் கொண்டு, சத்துள்ள உடம்பிற்கேற்ற உணவுகள் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கலாம். கீரைகள், பழங்கள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளச் செய்யலாம். பீடி, சிகரெட்டு போன்றவற்றைப் பிடிப்பதனால் வரும் தீமைகள் பற்றியும் சொல்லி, அவற்றைத் தவிர்க்கச் செய்யலாம். உடலை நன்கு வைத்துக் கொள்ள உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றை நாடோறும் செய்யச் சொல்லலாம்.
பதினைந்து வயது முதல் இருபத்தைந்து வயது வரையுள்ளவர்கட்குப் பாலியல் கல்வி (Sex Education) கற்பிக்கலாம். தவறான பால் உறவுகளால் ஏற்படும் நோய்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும். மக்கள் தொகை பற்றிய கல்வி (Population Education)யும் மக்கள் தொகைமிகுவதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். மேலும் மனிதர்க்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்க இயற்கையோடு இயைந்த எளிமையான முறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக, மண் குளியல் (Mud Bath), இலைக் குளியல் (Leaf Bath), உடலைப் பிடித்துவிடும் கலை ஆகியவை பற்றித் தெரிவிக்கலாம். இயற்கை மருத்துவ நிலையங்கள் இந்தியாவில் பெங்களூர், கோயம்புத்தூர், சிவசைலம் போன்ற இடங்களில் உள்ளன.
மேலும், இவ்வயதினரான (15–25) மகளிர்க்கு மகப்பேறும் குழந்தை வளர்ப்பும் (Pregnancy and Child Care) பற்றிய கல்வி, நல்ல சத்தான உணவை எளிய முறையில் சமைக்கும் முறை ஆகியவற்றைக் கற்பிக்கலாம். காய்கறிகளை மிகுதியாக வேக வைப்பதால் அவற்றின் சத்துகள் வெளியே சென்று விடுகின்றன. சோற்றின் தண்ணீரை வடித்து விடுவதாலும் சத்துகள் வெளியே சென்று விடுகின்றன. இவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். புட்டிப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது. சிறு குழந்தைகள் இறப்பு விகிதம் மிகுந்துள்ளதற்கு இது ஒரு காரணமாகும். எனவே தாய்ப்பால் கொடுப்பதன் (Breast Feeding) இன்றியமையாமையை வலியுறுத்த வேண்டும். வீட்டையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் எளிமையான யோகாசனங்களைச் செய்யவும் கற்றுத் தரலாம்.
இருபத்தைந்து வயதுக்கு மேல் நாற்பது வயது வரையில் உள்ளவர்களுக்கு மது, புகைபிடித்தல் வெற்றிலை பாக்கு போடுதல் ஆகியவற்றால் நோய்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு வருவதற்கான காரணங்கள் ஆகியவை பற்றியும், அவற்றைத் தடுக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் தேவையைப் பற்றியும் கற்பிக்க வேண்டும். உடற்பயிற்சியினையும் யோகாசனங்களையும் ஒழுங்காகச் செய்வதன் மூலம் இதய வலியினையும் (Heart Attack) ஒரு சில நீரிழிவு நோய்களையும் இளைப்பு (Asthma), இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் தவிர்த்துவிடலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நோயற்று வாழும் வழிமுறைகள்
உண்ணும் உணவைப் பொறுத்தே உடல் வளர்ச்சி ஏற்படுகிறது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதைத்தான் டாக்டர் எச்.வி. மென்கெல் ‘எதை எவ்வளவு உண்பது’ என்ற புத்தகத்தில் பின்வருவாறு குறிப்பிட்டுள்ளார். ‘மிகுதியாகச் சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது, மாவுச் சத்து மிகுதியாக உள்ள உணவுகளையும் சர்க்கரை, புரதங்கள் ஆகியவை மிகுதியாகவுள்ள உணவுகளையும் மிகுதியாக உண்பது ஆகியவற்றால் நோய்கள் பல உண்டாகின்றன’ என்று தெரிவிக்கிறார். ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றியுணின்’ என்பது திருவள்ளுவர் வாக்கு. எனவே அளவாகக் குறித்த காலத்தில் உணவு உண்டால் நோயற்று வாழலாம்.
பழங்கள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், கொழுப்புச்சத்து இல்லாத உணவு வகைகள், குறைவான எண்ணெய்ப் பதார்த்தங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை அளவுடன் உண்ணுதல் மூலம் நம் உடலை உறுதிப்படுத்த முடியும். கொதிக்க வைத்து ஆறின நீரைப் பருகுவதாலும் காற்றோட்டமான இடங்களில் வசிப்பதாலும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
‘குருட்டுத்தன்மை, உடல் மெலிந்து இருப்பது போன்றவற்றிற்குக் காரணம் சத்தில்லாத உணவு உட்கொள்ளுவது தான். ஏழ்மையான நாடுகளில் சத்துள்ள உணவினை உண்பதன் மூலம் இத்தகைய நோய்களை இன்னும் 10 ஆண்டுகளில் இல்லாமல் செய்து விடலாம்’ என்று சி. கோபாலன் தம்முடைய ஏழ்மையான என்ற ‘நாடுகளில் சத்துணவுச் சிக்கல்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஆ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 786)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rzyqvyf/
தமிழ்“உடல் நலக் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8rzyqvyf/APA
Oliyon Research. (2026). உடல் நலக் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rzyqvyf/MLA
"உடல் நலக் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8rzyqvyf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment