இலாவோசு
ilāvōcu
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று. நீண்டு நெடிதுயர்ந்த மலைகளும் அடர்ந்த பருவக்காற்றுக் காடுகளும் கொண்டது இலாவோசு நாடு. இலாவோசு கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் திறன்மிக்க அரசரால் ஆளப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இப்பேரரசு நலிந்து மெலிந்-
இலாவோசு நீர்வழி தது. இலாவோசு கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பிரான்சின் குடியேற்றப் பகுதியாகி, 1953 வரை விடுதலை பெறவில்லை. இந்தோசீனாவில் போர் நடைபெற்றபோது இலாவோகம் அதில் பங்கு பெற வேண்டியதாயிற்று. முடியாட்சி நாடாக 1975 வரை விளங்கிய இலாவோசின் ஆட்சியைப் பொதுவுடைமைக் கட்சி கைப்பற்றியது. மக்கள் சனநாயகக் குடியரசு என்னும் பெயரில் 1975 திசம்பர் 2–ஆம் நாள் இலாவோசின் (Laos) ஆட்சி நிலைநாட்டப்பெற்றது.
எல்லை
இலாவோசின் வடக்கில் சீனாவும், கிழக்கில் வியட்நாமும், தெற்கில் கம்போடியா எனப்படும் கம்பூச்சியாவும், மேற்கில் தாய்லாந்தும் பர்மாவும் எல்லைகளாகவுள்ளன.
பரப்பு
இலாவோசின் பரப்பு 2,36,800 ச.கி.மீ.
மக்கள் தொகை
இங்கு 35,20,000 மக்கள் (1979) வாழ்கிறார்கள் என்று கருதப்படுகிறது.
நிலம்
இந்தோசீனா தீபகற்பத்தின் உள்ளே கரடுமுருடான மலைத் தொடர்களுடன் அமைந்திருப்பது இலாவோசு நாடாகும். அன்னாமிய மலைத் தொடருக்கும் மீகாங்கு ஆற்றுக்கும் இடையிலுள்ள மீகாங்கு வடநிலத்தில் இருக்கும் இலாவோசில் கரடுமுருடான பீடபூமிகளும் மலைத்தொடர்களும் உள்ளன. கிழக்கு எல்லையோர மலைத்தொடர் 150 முதல் 1200 மீட்டர் வரை உயரமுள்ளது. நடு இலாவோசில் உள்ள பியா மலை உச்சி (Mount Bia) 2817 மீட்டர் உயரமுள்ளது. இதுவே இந்நாட்டின் மிக உயர்ந்த மணைச்சியாகும்.
மீகாங்கு ஆறும் அதன் துணையாறுகளும் பாயும் தாழ்நிலங்களை அடுத்துள்ள பண்ணைநிலம் செழுமை மிக்கதால் அங்குச் சிறப்பாகப் பல பொருள்கள் விளைகின்றன. பொன், கிளிஞ்சல், ஈயம், வெள்ளி, தகரம், துத்தநாகப் படிவங்கள் இலாவோசில் மிகுதியாக உள்ளன. இந்நாட்டுக் காடுகளில், தேக்கு மரங்களும் விலை மதிப்புள்ள ஏனைய மரங்களும் கிடைக்கின்றன.
மே முதல் செப்டம்பர் மாதம் வரை தென் மேற்குப் பருவக்காற்றால் மாதம் 25 செ.மீ. மழை பொழிகிறது. நவம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை மாதம் 2.5 செ.மீ. மழைபொழிகிறது. வெப்பநிலை 22° செண்டிகிரேடிலிருந்து 28° செண்டிகிரேடு வரை உள்ளது.
பொருளாதாரம்
வளர்ச்சியுறாத பொருளாதாரத்தைக் கொண்டு இலாவோசு விளங்குகிறது. இந்நாட்டின் கனிமப் பொருள்கள் போதுமான அளவு வளர்ச்சியுறாமையால், செய்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிற் சாலைகள் மிகக் குறைவு. வேளாண்மையே இலாவோசு நாட்டில் முக்கியத் தொழிலாகும். ஆயினும், தொன்மையான உழுபொருட் கருவிகளும் முறைகளும் சாகுபடியை உயர்த்தவில்லை.
அரிசியே இலாவோசின் சிறப்பான உற்பத்திப் பொருளாகும், காப்பி, தானியம், பருத்தி, புகையிலை போன்றனவும் உற்பத்தியாகின்றன. இலாவோசியர்களுள் சிலர் அபினியை வளர்த்து ஏற்றுமதி செய்து பெரும்பொருள் திரட்ட முற்படுகிறார்கள். இது சட்டத்திற்கு மாறான நடவடிக்கையாகும்.
இலாவோசுப் பெண்கள்
மீகாங்கு ஆறும் அதன் துணையாறுகளுமே இலாவோசின் மிகச் சிறப்பான போக்குவரத்து வழிகளாகும். நாட்டில் பயன்படுத்தப்படும் சாலைகளில் பெரும்பாலானவை கோடைக்காலத்தில் மட்டும் போக்குவரத்திற்குப் பயன்படுபவை. பல பகுதிகளில் வானவூர்திகள் மூலமாக மட்டுமே உள்நாட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. இலாவோசில் உள்ள இருப்புப்பாதைத் தொடர் ஒன்று, நாங்காயை (Nong Khai) மீகாங்கு ஆற்றின் குறுக்காக வியண்டியானேவுடனும் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்குடனும் இணைக்கிறது.
வரலாறு
தாய் மக்களின் மூதாதையர்களான இலாவோ, கி.பி. 9–ஆம் நூற்றாண்டளவில் இலாவோசிற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் சிறுசிறு அரசுகளை நிலைநாட்டினர். அவற்றை இளவரசர்கள் ஆண்டனர். முவாங்கு சுவா (இக்காலத்தில் உலுவாங் பிரபாங்கு) என்னும் ஊரின் அரசர் கி.பி. 1353–இல் இன்றைய இலாவோசுப் பகுதிகளை இணைத்து ஒன்றாக்கினார். இலாவோசு என்ற பெயர் வரும் முன்னர் இதனை இலான் சாங்கு (Lan Xang) என்றனர். இலான் சாங்கு என்பது, பத்து இலட்ச யானைகளை கொண்ட நாடு என்று பொருள்படும். இலாவோசில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியில் தனித் தனியாக இயங்கிய மூன்று முடியாட்சி அரசுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவை உலுவாங் பிரபாங்கு, வியண்டியானே, சம்பாசக்கு என்பனவாம். இலாவோசு கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டின் காப்பாளர் ஆட்சிக்குட்பட்டு இந்தோசீனாவின் பகுதியாயிற்று.
இலாவோசு விடுதலைக்குழு, மூன்று இளவரசர்களான பிட்சரத்து (Phetsarat), சுவன்ன பூமா (Souvanna Phouma), சவுபனவுலாங்கு (Souphanouvang) என்பவர்களின் தலைமையில், 1947–இல் முதல் அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கப் பிரான்சுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியது. பிரான்சு ஒன்றியத்துடன் இணைந்த சுதந்திரத்தை இலாவோசு 1949–ஆம் ஆண்டில் பெற்றது. ஆனால், இளவரசர்கள் தமக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் பிரித்து பிளவுற்றனர். சவுபனவுவாங்கு வடகிழக்கு இலாவோசுப் பக்கம் சென்று ஓ–சி–மின் என்னும் வட வியட்நாமியப் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த தலைவருடன் தொடர்புகொண்டார். அதன் விளைவாக எழுந்ததுதான் பாதட்டு இலாவோ இயக்கமாகும்.
ஓ–சி–மின்னின படையினர், 1954–இல் பிரெஞ்சுக்காரர்களைத் தியன் பியன் பூ (Dien Bien Phu) என்னுமிடத்தில் தோற்கடித்தனர். இந்த இடம் வியட்நாமில் உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டிலிருக்கும் செனிவாவில் கூட்டப்பெற்ற அமைதி மாநாடு இலாவோசை நடுநிலைமை வகிக்கும் நாடாக நிலைநாட்டியது. பொதுவுடைமை நாடான வடவியட்நாமுக்கும் பொதுவுடைமைச் சார்பற்ற தாய்லாந்திற்கும் இடையில் இலாவோசு இருந்தது. இலாவோசு 1955–இல் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடாகியது. அரசுகள் பல இலாவோசை 1954க்கும் 1960க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஆண்டன.
இலாவோசியப் படைத் தலைவரான காங்குலீ (Kong Le) என்பார் 1960–ஆம் ஆண்டில் மேலை நாடுகளுக்குத் துணை நின்ற அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, நடுநிலைமை அரசாங்கத்தை நிலைநாட்டும் கோரிக்கையை விடுத்தார். இதன் பயனாக இலாவோசில் உள்நாட்டுக் கலகம் மூண்டது. காங்குலீயும் பாதட்டு இலாவோ இயக்கத்தினரும் வட இலாவோசு முழுவதையும் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கைப்பற்றிக் கொண்டனர். போர் நிறுத்த ஒப்பந்தமொன்று இருசாராருக்குமிடையே 1964–இல் கையெழுத்தாயிற்று. எனினும் போர் தொடர்ந்தது. இலாவோசில் கூட்டு அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமென 1962–இல் 14 நாடுகளில் மாநாடு ஒன்று செனிவாவில் கூடி முடிவு செய்தது. சுவன்ன பூமா நடுநிலைமையாளராக இலாவோசின் தலைமை அமைச்சரானார். இளவரசராகிய பவுன் ஓம் என்னும் பெயர் கொண்ட பொதுவுடைமைக்கட்சி எதிர்ப்பாளரும், இளவரசர் சவுபனவுவாங்கு என்பாரும் அமைச்சரவையில் அமைச்சர்களாயினர். பன்னாட்டுக் குழு ஒன்றின் மேற்பார்வையில், இலாவோசின் நடுநிலைமையை உறுதிப்படுத்தச் செனிவா உடன்படிக்கை வழிவகை செய்தது. இவ்வுடன்படிக்கை இலாவோசில் இருந்த அயல்நாட்டுப்படைகள் அனைத்தும் வெளியேற வேண்டுமெனக் கட்டளையிட்டது.
சவுபனவுவாங்கு 1963–இல் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். மீண்டும் பாதட்டு இலாவோவினருக்கும் அரசாங்கப் படைவீரர்களுக்குமிடையே போர் மூண்டது. பாதட்டு இலாவோவினருக்குச் சீனா, உருசியா இராணுவ ஆலோசகர்களும் ஆயிரக்கணக்கான வட வியட்நாமியப் படைவீரர்களும் உதவி செய்தனர். தாய்லாந்து, தென் வியட்நாம் படைவீரர்களும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆலோசகர்களும் இலாவோசு அரசாங்கத்திற்கு உதவினர். பூமாவின் அரசாங்கப் படைவீரர்கள் 1970–ஆம் ஆண்டு அளவில் மேற்கு இலாவோசுப் பகுதிகளை மட்டும் தம் கட்டுப்பாட்டின்கீழ்ச் கொணர்ந்தனர். பாதட்டு இலாவோவின் வீரர்கள் சவுபனவுவாங்கின் தலைமையில் லாவோசைக் கைப்பற்றிக் கொண்டனர்.
வியட்நாமியப் போரின்போது இலாவோசிலிருந்த வட வியட்நாமியர் ஓ–சி–மின்னின் படைவீரர்களையும் கம்பூச்சியாவின் படைவீரர்களையும் தளவாடங்களையும் தென் வியட்நாமுக்கும் அனுப்பினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானங்கள் தென் வியட்நாமுக்குள் வந்த படைகளையும் இலாவோசின் பிற பகுதிகளையும் குண்டுபோட்டுத் தாக்கின. தென்வியட்நாமியப் படைவீரர்கள் 1971–இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குண்டுகளேந்திய விமானங்கள், எலிகாப்டர் விமானங்கள் ஆகியவற்றின் துணையால் இலாவோசின்மீது படையெடுத்துத் தாக்கிப் பொதுவுடைமை நாடுகளிலிருந்து வந்த தளவாடங்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
இலாவோசிய அரசாங்கமும், பாதட்டு இலாவோவினரும் 1973–இல் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். மீண்டும் கூட்டு அரசாங்கத்தை உருவாக்கவும் இணங்கினர். சுவன்ன பூமாவைத் தலைமை அமைச்சராகவும் சவுபனவுவாங்கை ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் கொண்ட புதிய அரசாங்கம் 1974-இல் பதவியேற்றது. பொதுவுடைமைக் கட்சிக்கு 1975–இல் ஆதரவு கொடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாகப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பற்ற அரசாங்க அலுவலர்கள் பலர் பதவிகளைத் துறக்கவே, அவர்களிடத்தில் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்தவர்கள் அமர்த்தப்பட்டனர். அரசாங்கம் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வந்தது. அதே சமயம், பாதட்டு இலாவோவினரும் பெருமளவில் நிலங்களைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.
வியட்நாம் போர் 1975–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் முடிவுற்றது. அதன் விளைவாகத் தென்வியட்நாம் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வந்தது. அதே மாதத்தில் கம்போடியா எனப்பட்ட கம்பூச்சியாவிலும் பொதுவுடைமை ஆட்சி வந்தது. பாதட்டு இலாவோவினர் 1975–இல் இலாவோசைக் கைப்பற்றிக் கொண்டனர். திசம்பர் மாதத்தில் கூட்டு அரசாங்கம் அகற்றப்பட்டது. முடியரசும் ஒழிந்தது. இலாவோசு பொதுவுடைமை நாடாகத் திகழ்கிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 383)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nwpy2m8/
தமிழ்“இலாவோசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nwpy2m8/APA
Oliyon Research. (2026). இலாவோசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nwpy2m8/MLA
"இலாவோசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nwpy2m8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment