அஃறிணை என்பது அல், திணை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். உலகத்தில் உள்ள பொருள்களை மக்கள், மக்கள் அல்லாத பிற என்று பாகுபாடு செய்வது பெரும்பாலான மொழிகளில் காணப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் மக்கள், மக்கள் அல்லாத பிற என்னும் வேறுபாடு, திணை வேறுபாடு எனப்படும். மக்களைக் குறிப்பிடும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் என்றும், பிறவற்றைக் குறிப்பிடும். பெயர்கள் அஃறிணைப் பெயர்கள் என்றும் கூறப் பெறும். அஃறிணை என்பது உயர்வு அல்லாத திணை என்று பொருள்படும். சங்க காலத்தில் அஃறிணைப் பெயர்கள் யாது, எவன் என்ற சொற்களையும், இக்காலத்தில் எது, என்ன என்ற சொற்களையும் வினாவாக ஏற்றுவரும். எல்லா மொழிகளிலும் திணைப் பாகுபாடு இருந்தாலும், தமிழில் அது சிறப்பான இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. இதற்கு இரண்டு சிறந்த காரணங்கள் உள்ளன. ஒன்று, பெயர்ச்சொற்களில் குறிப்பாகச் சுட்டுப் பெயர்களில் வேறுபாடு இருப்பது; மற்றொன்று, வினைமுற்றிலும் அந்த வேறுபாடு அமைந்து, எழுவாயாக வரும் பெயருக்கும், வினைமுற்றில் இறுதியாக அமையும் விகுதிக்கும் இயைபு (Concordance) இருப்பது. அதாவது, எழுவாய் உயர்திணை ஆண்பால் என்றால், லினைமுற்றில் ஆன் விகுதி பெற்று ‘வந்தான்’ என்பது போன்றே பயனிலை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு: கண்ணன் வந்தான். தமிழில் திணை என்பது, பால் என்னும் மற்றோர் இவக்கணக் கூறோடு சேர்த்து சுட்டுப் பெயரிலும் வினைமுற்றிலும் காணப்படுகிறது. எனவே உயர்திணையை அதன் ஒருமை நோக்கியும், பால் வேறுபாடு நோக்கியும், ஆண்பால், பெண்பால் என்றும், அவற்றின் பன்மை நோக்கிப் பலர்பால் என்றும் பிரிக்கின்றனர். அஃறிணையை அதன் எண்ணிக்கை நோக்கி ஒன்றன்பால் பலவின்பால் என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இதற்குக் காரணம், மேலே குறிப்பிட்டவாறு சுட்டுப் பெயர்களில் அவன், அவள், அவர், அது, அவை என்று ஐந்து வகையும், வினைமுற்றில் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன என்று ஐந்து வகையும் காணப்படுவதுதான். இவ்வாறு மொழி அமைப்பில் வேறுபாடு இருப்பதால்தான் இலக்கணத்தில் திணைப்பாகுபாடும், பால் பாகுபாடும் சேர்ந்து ‘திணை – பால் பாகுபாடு’ என்று வழங்கப்படுகிறது. அஃறிணையைப் பொறுத்தவரை தமிழ் மொழியில் இரண்டு செய்திகள் சுட்டிக் காட்டத் தக்கன. ஒன்று, உயர்திணையில் ஆண், பெண் என்று வேறுபாடு செய்யப்பட்டதுபோல, அஃறிணையில் செய்யப்படாமை; இரண்டு, அஃறிணையில் எண் அடிப்படையில் ஒன்றன்பால், பலலின்பால் என்னும் வேறுபாடு மட்டும் செய்யப்பட்டுள்ளமை. உலகப் பொருள்களைப் பொறுத்தவரை, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகிய உயிருள்ள பொருள்களில் ஆண், பெண் என்னும் வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வேறுபாடு, தமிழ்மொழி அமைப்பில், மேலே குறிப்பிட்டதுபோலச் சுட்டுப் பெயர்களில் உயிருள்ள அஃறிணைப் பொருள்களைக் குறிப்பதற்கென்று ஒரு சொல்வோ, அஃறிணைப் பொருளைக் குறிப்பதற்கென்று மற்றொரு சொல்லோ இல்லாமல் ‘அது’ என்னும் ஒரு சுட்டுப்பெயரே இருப்பதாகும், அதனால்தான், விலங்கு பறவை போன்ற உயிருள்ள பொருளையும் வீடு, கல் போன்ற உயிரற்ற பொருளையும் குறிப்பதற்கு, ‘அது’ என்னும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: பறவை அழகானது; அது வானத்தில் பறக்கிறது. வீடு பெரியது; அது அழகாக இருக்கிறது. இங்கு உயிருள்ள பொருளும் உயிரற்ற பொருளும் ஓரே சுட்டுச் சொல்லினையே கொண்டுள்ளதனைப் பார்க்கலாம். இதைப் போலவே, வினைமுற்றிலும் உயிருள்ள பொருனைக் குறிக்கும் சொற்களும் உயிரில்லாத பொருளைக் குறிக்கும் சொற்களும் ஒரே வினைமுற்று விகுதி கொண்டு முடிவதை மேலே காட்டிய எடுத்துக் காட்டால் அறிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி இலக்கணம் பற்றிய ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு மொழியின், இலக்கணம் என்பது, அந்த மொழியில் அமைந்துள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படுமே தவிர, உலகப்பொருள்களில் உள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படாது என்பதே. அஃறிணையில் பொதுவாக ஒருமை பன்மை வேறுபாடு இருந்தாலும், சுட்டுப் பெயர்கள் ஒழிந்த பிற பெயர்ச் சொற்களில் (இதைத் தொல்காப்பியர் ‘அஃறிணை இயற்பெயர்’ என்று குறிப்பிடுவார்) வடிவத்தில் ஒருமை பன்மை வேறுபாடு கொள்ளாது வினைமுற்றில் மட்டும் வேறுபாடு கொள்வது உண்டு. மரம் என்பது அஃறிணை ஒருமைச்சொல்; மரங்கள் என்பது அஃறிணைப் பன்மைச் சொல்; ஆனால், மரம் என்பதனையே ஒருமையாகவும் பன்மையாகவும் பயன்படுத்தலாம். பன்மையைக் குறிக்கவேண்டுமாயின், பன்மை வினை முற்றைத் தவறாது பயன்படுத்த வேண்டும். ஆகவே, ‘மரம் விழுந்தது’ என்பது அஃறிணை ஒருமை வினைமுற்று வாக்கியமாகவும். ‘மரம் விழுந்தன’ என்பது அஃறிணைப் பன்மை வினைமுற்று வாக்கியமாகவும் அமையும். அஃறிணைப் பன்மை வினைமுற்று வாக்கியத்தில் எழுவாயாக வந்துள்ள பெயர் ஒருமை வடிவமாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஆகவே, ‘பால்பகா அஃறிணைப்பெயர்கள்’ என்று சுட்டுப் பெயர் அல்லாத பிற பெயர்கள் இலக்கணத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஒருமை, பன்மை பகுத்து அறிய முடியாத அஃறிணைப் பெயர்கள் என்பது இதற்குப் பொருள், ஆனால், இன்றைய தமிழில் பன்மைப் பெயர்கள் பெரும்பாலும் ‘கள்’ விகுதி சேர்த்தே பயன்படுத்தப்படுகின்றன. செ.வை.ச.