தத்துவ போதக சுவாமி என்னும் பெயரால் தமிழகத்துக்கு அறிமுகமான கிறித்தவத் தமிழ்த் தொண்டராவார். இவர் இத்தாலி நாட்டில் தசுக்கனி (Tuscany) மாகாணத்திலுள்ள உரோமாபுரியில் கி.பி. 1577–ஆம் ஆண்டு உயர்ந்த பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். நேப்பில்சு (Naples) நகரிலும் உரோமாபுரி நகரிலும் தத்துவ சாத்திரம், வேத சாத்திரம் போன்றனவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தம் 15–ஆம் வயதில் அருந்துறவுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட நொபிலி (Robert–de–Nobili) 26–ஆம் வயதில் குருப் பட்டம் பெற்றார். நேப்பில்சு நகரத்திலிருந்த இயேசு சபையிற் (Society of Jesus) சமயக் கல்வி பயின்ற இவர், பயிற்சியின் இறுதியில் இந்தியாவுக்கு வந்து தமிழ் நாட்டில் கிறித்தவச் சமயப் பணி செய்ய விருப்பம் தெரிவித்தார். இவர் கி.பி. 1605–ஆம் ஆண்டு இந்தியாவில் கோவா நகர் வந்தடைந்து, பின்னர்க் கொச்சி சென்றார். இவர் தமிழ் நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார். நொபிலி தமிழ் நாட்டிற்கு வந்த நோக்கம் தமிழ்நாட்டு உயர்குல இந்துக்களைக் கிறித்தவ சமயத்தில் சேர்க்க வேண்டும் என்பதேயாகும். அதனால், தம் கிறித்தவச் சமயம் பரங்கியர்களின் சமயம் அன்று எனவும், அதுவே உண்மையான சமயம் எனவும் கூறினார். கிறித்தவச் சமயத்தைச் ‘சத்திய வேதம்’ என்று குறிப்பிட்ட இவர், தம்மை ‘இராணா சந்நியாசி’ என்றும் கூறிக் கொண்டார். தம் இயற்பெயரைத் ‘தத்துவ போதகர்’ என்று தமிழில் மாற்றி அமைத்துக் கொண்டார். தம் நடையுடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்து சமயத் துறவியர்களைப் போல அமைத்துக் கொண்டார். அதனால் புலால் உணவை நீக்கிச் சைவ உணவை உட்கொள்ளல், நெற்றியில் சந்தனமும் மார்பில் பூணூலும் அணிதல் ஆகிவற்றை மேற்கொண்டொழுகினார். ஐந்து புரியாக அமைக்கப்பட்டிருந்த பூணூலில் பொன்னாலான மூன்று புரிகள் கிறித்தவர்களின் மும்மூர்த்தங்களைக் குறிப்பனவென்று விளக்கம் தந்தார். பூணூலில் சிலுவையும் இடம் பெற்றிருந்தது. புதுமுறையிலமைந்த இவரது திருமறைப் பணியால் தமிழ் நாட்டில் அந்தணர் உள்ளிட்ட உயர்குல இந்துக்கள் பலர் கிறித்தவச் சமயத்தைத் தழுவினர். தத்துவ போதகரின் சமயப்பணி மதுரை, திருச்சி, சேலம், சத்தியமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றது. மதுரையில் சமயப்பணி ஆற்றியபோது இவர்க்கும் இவர்தம் பணிக்கும் தொல்லைகள் பல தோன்றின. அப்போது மதுரையைத் திருமலை நாயக்க மன்னர் ஆட்சி புரிந்தார். ஆட்சியில் திடீரென ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளாலும், தத்துவ போதகரின் சமயத் தொண்டில் காணப்பட்ட குறைபாடுகளினாலும் இவரும் இவரைச் சார்ந்த கிறித்தவர் பலரும் ஆட்சியாளரால் பன்முறை சிறை செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்தம் சமயப் பணிக்கு ஏற்பட்ட இடையூறுகள் மேலும் பெருகின. தத்துவ போதகர் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுத் தேர்ந்து அம்மொழிகளில் நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ் மொழியில் இவர் எழுதிய நூல்கள் யாவும் உரைநடை நூல்களே. இவை யாவும் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. அயராத உழைப்பும், சமய வாழ்வின் இறுதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்களும் தத்துவ போதகரின் உடல்நலத்தினைச் சிதைத்தன. தமிழகத்தில் 42 ஆண்டுகள் சமயப் பணியாற்றிய இவர், கி.பி. 1656–ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் காலமானார்.ஆர்.ஜெ.