இலக்சம்பர்க்கு
ilakcamparkku
ஐரோப்பாவின் மிகப் பழமையானதும், சிறியதுமான சுதந்தர நாடுகளுள் ஒன்று; வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப் பழமையானதும், சிறியதுமான சுதந்தர நாடுகளுள் ஒன்று; வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது மேற்குச் செருமனி, பிரான்சு, பெல்சியம் போன்ற நாடுகளின் இடையில் உருவாகியுள்ள சிறு நாடு.
இலக்சம்பர்க்கு
பரப்பு: இலக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 ச.கி.மீ. இதன் மேற்கில் பெல்சியமும், தெற்கில் பிரான்சும், கிழக்கில் செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு எனப்படும் மேற்குச் செருமனியும் எல்லைகளாக உள்ளன. இது கடல்களால் சூழப்படாத உள்நாட்டுச் சிறுநாடு.
மக்கள்தொகை: இலக்சம்பர்க்கின் மக்கள் தொகை 1981–ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 3,64,000 ஆகும். இலக்சம்பர்க்கு நகரமே இந்நாட்டின் தலைநகருமாம். இந்நகரத்தின் மக்கள்தொகை 79,000.
மக்கள்: இலக்சம்பர்க்கு மக்களுக்குப் பெல்சியம், பிரான்சு, மேற்குச் செருமனி ஆசிய நாட்டு மக்களோடு நெருங்கிய தொடர்புண்டு. எனினும், இவர்கள் தமக்கென்ற சுதந்தர உணர்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதும் உண்மை. வளமான நல்வாழ்வு வாழும் இவர்கள் சிறந்த உணவு, வாழ வசதியான வீடு, வீட்டுக்குதவும் பல்வகை எந்திரக் கருவிகள் முதலியவற்றைக் கொண்டு வாழ்கிறார்கள். பன்றி இறைச்சி, மீன் போன்றவை இவர்கள் சுவைத்து உண்ணும் உணவு வகைகள், பீர், திராட்சைச் சாற்றில் உருவாகும் சாராயம் இவர்களின் குடிவகைகள். மக்கள் அழகான கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களின் பேச்சு மொழி இலெட்சுபர்க்கிசு என்னும் செருமானியக் கலப்பு சொாழியாகும்.
நிலம்: இலக்சம்பர்க்கில் ஆர்டன்சு (Ardennes), பான்பேய்சு (Bonpays) என்று பிரிக்கப்படும் இருவகை நிலப்பிரிவுகளைக் காணலாம். ஆர்டன்சு பிரிவு இலக்சம்பர்க்கின் வடபகுதியின் மூன்றில் ஒரு பங்கை ஆட்கொண்டுள்ளது. ‘பான்பேய்சு’ என்றால் நன்னிலம் என்று பொருள்படும். ஆர்டன்சில் உள்ள புர்க்பிளாட்சு 550 மீ. உயரமுள்ள மலையுச்சியாகும். இந்நாட்டின் மிக உயர்ந்த பகுதியும் இதுதான். பான்பேய்சு நிலப்பிரிவில் பாயும் ஆறுகளின் பலனாக இங்குப் பண்ணைகள் உள்ளன.
தட்பவெப்பநிலை: இலக்சம்பர்க்கின் பெரும் பகுதி குளிர்ந்த, ஈரக்கசிவான தட்பவெப்பநிலையைக் கொண்டது. தென்மேற்கு இலக்சம்பர்க்கில் 100 செ.மீ. வரையிலும், தென்கிழக்கில் 30 முதல் 40 செ.மீ. வரையிலும் மழை பொழிகிறது.
பொருளாதார நிலை: இரும்புத்தாதுவே இலக்சம்பர்க்கின் விலைமதிப்பற்ற உலோகமாகும். தென்பகுதிச் சுரங்கங்களில் இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்களுள் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உருக்கு ஆலைகளில் பணியாற்றுகின்றனர். பான் பேய்சில் உள்ள உழவர்கள் ஓட்சு, உருளைக்கிழங்கு, கோதுமை போன்ற பயிர் வகைகளைப் பயிரிடுகின்றனர்.
வரலாறு: இலக்சம்பர்க்கின் வரலாறு கி.பி. 963–ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆர்டினசைச் சார்ந்த சிக்பிரிடு பிரபு முதன்முதல் இலக்சம்பர்க்கு நகரம் இருக்குமிடத்தில் கோட்டையொன்றைக் கட்டினார். என்றி என்பாரின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1308–ஆம் ஆண்டில் இலக்சம்பர்க்குச் சிறப்புப் பெற்றது. என்றியின் பேரர் நான்காம். சார்லசு இதனை ஒரு பெருங்குடி மக்கள் ஆட்சிப்பகுதியாக (Duchy) மாற்றினார். இது கி.பி. 1443 வரை அவர்கள் கைவசம் இருந்தது. பின்னர், இலக்சம்பர்க்கு நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. ஏறத்தாழ 450 ஆண்டுகள் அவர்களின் ஆட்சியில் இருந்தது.
வியன்னா மாநாடு கி.பி. 1815–ஆம் ஆண்டில் கூடியது. அது இலக்சம்பர்க்கை நெதர்லாந்தின் ஆட்சிக்குட்படுத்தியது. இலக்சம்பர்க்கு கி.பி. 1839–ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்றது. எனினும், தச்சு அரசர்கள் கி.பி. 1890–ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆண்டார்கள். வில்கெல்மினா என்ற தச்சு அரசியார் காலத்தில் தச்சிய (The Dutch) ஆட்சி இங்கு முடிவுற்றது.
இலக்சம்பர்க்கு நகரம்
மீண்டும் பெண்ணொருத்தி 1912–ஆம் ஆண்டில் அரசியாக ஆட்சி செய்யும் சட்டமாற்றம் செய்யப்பட்டது. கார்லெட்டு என்பாரின் ஆட்சி 1964 வரை நடைபெற்றது. பின்னர், இளவரசர் சீன் (Prince Jean) என்பார் புகழ் பெற்ற கோமகனாகப் (Grand Duke) பதவி ஏற்றார்.
முதல் உலகப் போரின் போதும் இரண்டாம் உலகப் போரின் போதும் செருமானியர்கள் இலக்சம்பர்க்கைக் கைப்பற்றிக்கொண்டனர். வரலாற்றுப் புகழ் பெற்ற, 1944–45–ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைவுப் போர் (Battle of the Bulge) வட இலக்சம்பர்க்கில்தான் நடைபெற்றது. இப்போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஆம் (Hamm) என்னுமிடத்தில் புதைக்கப்பட்டனர். இலக்சம்பர்க்கு 1945–ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடாயிற்று. பென்லக்சு (Benelux) எனப்படும் பெல்சியம், நெதர்லாந்து, இலக்சம்பர்க்குப் பொருளாதார ஒன்றியத்தில் இந்நாடு 1948–இல் சேர்ந்தது. வட அட்லாண்டிக்கு உடன்படிக்கை இயக்கத்திலும் இந்நாடு 1949–இல் சேர்ந்து கொண்டது. இந்நாடு 1950–இல் ஐரோப்பிய நிலக்கரி உருக்குக் குழுவின் உறுப்பு நாடாகியது. மேற்கூறப்பட்ட மூன்று இயக்கங்களும் 1967 இல் இணைந்து உருவானது தான் ஐரோப்பியப் பொருளாதாரக் குழு (EEC) என்பதாகும். இக்குழுவின் நீதிமன்றம் இலக்சம்பர்க்கில் உள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 302)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gxx485t/
தமிழ்“இலக்சம்பர்க்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8gxx485t/APA
Oliyon Research. (2026). இலக்சம்பர்க்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8gxx485t/MLA
"இலக்சம்பர்க்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8gxx485t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment