இந்தியாவை ஆண்ட பேரரசர்களுள் ஒருவர். இவர் கி.பி. 606 முதல் 647 வரை வட இந்தியாவை ஆண்டவர். இவருடைய ஆட்சியை அறிந்து கொள்ள உதவும் அடிப்படைச் சான்றுகளாக இரு நூல்கள் உள்ளன. அவை பாணர் என்பார் எழுதிய ‘அர்ச சரிதம்’ என்னும் நூலும், யுவான் சுவாங் என்ற சீனப் பயணி எழுதிய ‘சி–யூ–கி’ என்னும் நூலுமாகும். இலக்கியச் சான்றுகளே சிறப்பாக உள்ளன. கல்வெட்டுகளும், அர்சரின் (Harsha) காலத்தில் வாழ்ந்தவர்கள் எழுதிவைத்தவைகளும் இவருடைய ஆட்சியை அறிந்து கொள்ள ஓரளவு பயன்படுகின்றன. இவர் கால நாணயங்கள் கிடைத்தில. திபெத்தில் உள்ள சீனக் குறிப்புகள் அர்சரின் இறுதிக்காலத்தை அறிய உதவுகின்றன. அர்சர் பேரரசு அர்சரின் மரபினை நிலைநாட்டியவர் தானேசுவரத்தையாண்ட புசியபூதி என்பவராவார். அவர் ஒரு சைவர். அவர் மரபில் வந்த பிரபாகர வர்த்தனர் (கி.பி. 583–600) என்பாரே முதன்முதலாகத் தம்மை மகாராசாதிராசர் என்றும், பரம பட்டாரகர் என்றும் கூறிக்கொண்டார். அவர் பெரும் வீரர் என்பதை அர்ச சரிதம் விளக்குகிறது. அவருடைய தாயார் பெயர் மகாசேன குப்தா என்பதாகும். அவர் மனைவி- யின் பெயர் யசோமதி. பிரபாகர வர்த்தனர் கி.பி. 605–ஆம் ஆண்டில் காலமானபோது, அவர்தம் மூத்த மகன் இராச்சிய வர்த்தனர் தம் 19–ஆம் வயதில் அரசரானார். அவருடைய தங்கையின் பெயர் இராச்சிய சிரீ என்பதாகும் இராச்சிய வர்த்தனரின் தம்பியே அர்சர். இராச்சிய வர்த்தனர் மாளவத்தின் மீது படையெடுத்து அதன் அரசரைக் கொன்றுவிட்டார். எனினும் கி.பி. 606–ஆம் ஆண்டில் மாளவ அரசரின் நண்பரான சசாங்கர் என்பவரால் இராச்சிய வர்த்தனரும் கொல்லப்பட்டார். அப்போது அர்சருக்கு வயது 16. அர்சர் கி.பி. 606 ஆம் ஆண்டில் அரசராக முடி சூட்டிக்கொண்டார். அவருடைய மைத்துனரையும், அண்ணனையும் கொலை செய்யக் காரணமானவர்களைத் தண்டித்துக் கணவனை இழந்த கைம்பெண்ணான தம் தங்கை இராச்சிய சிரீயையும் அர்சர் காப்பாற்றினார். பின்னர்த் தம் பகைவர்களைத் தோற்கடித்துக் கி.பி. 612–ஆம் ஆண்டிற்குள் பேரரசராக நிலைபெற்றார். தொடக்கத்தில் இவர் சைவராக இருந்து பின்னர்ப் புத்த சமயத்தைச் சார்ந்தாரெனிலும், அர்சர் தம் படை அளவைக் குறைக்கவில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கி.பி. 606–இல் பேரரசராக முடிசூட்டிக் கொண்ட அர்சர், தம் பெயரில் ‘அர்சர் ஆண்டு’ என்னும் புதியதொரு ஆண்டினைத் தொடங்கினார். அர்சருக்கும் சாளுக்கிய மரபினைச் சார்ந்த இரண்டாம் புலிகேசிக்கும் நடைபெற்ற போரில் அர்சர் தோல்வியுற்றார். இதைச் சீனப் பயணி குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் புலிகேசியின் அய்கொளே (Aihole) கல்வெட்டுச் சாசனமும் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இப்போர் நடைபெற்ற ஆண்டினைக் குறித்துத் திட்டவட்டமான முடிவு சொல்ல இயலவில்லை. கி.பி. 612 என்பார் சிலர்; கி.பி. 630 என்பார் வேறுசிலர். கி.பி. 635–ஆம் ஆண்டில் வல்லபியை ஆண்ட இரண்டாம் துருவசேனரை அர்சர் தோற்கடித்தார். எனினும் தோற்ற அவ்வரசனுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுத்தார். கி.பி. 643–இல் அர்சர் கஞ்சம் மாவட்டத்தின் மீது படையெடுத்தார். அதே ஆண்டில் அவர் யுவான் சுவாங்கைப் பாராட்டிச் சிறப்புச் செய்து விருது வழங்கினார். அவ்வாண்டில் அவரைக் கொல்ல நடைபெற்ற சூழ்ச்சியிலிருந்தும் தப்பினார். சீனாவிலிருந்து தூதுக் குழு ஒன்று அவரைக் காண அவ்வாண்டில் வந்தது. கி.பி. 646–இல் சீனாவிலிருந்து வந்த இரண்டாம் தூதுக்குழு இந்தியா வந்து சேருமுன் அர்சர் கி.பி. 647–இல் காலமானார். அர்சரின் பேரரசு குப்தர்களின் பேரரசினைவிடப் பரப்பில் பெரிது கிழக்கே பிரும்மபுத்திரா ஆற்றிலிருந்து மேற்கில் கத்தியவார் வரையிலும், வடக்கில் இமய மலைச் சாரலிலிருந்து தெற்கில் விந்தியமலை வரையிலும் அர்சரின் பேரரசுப் பரவியிருந்தது. அதில் கலிங்கத்தைச் சேர்ந்த சஞ்சமும். குசராத்தைச் சேர்ந்த கட்சும் அடங்கியிருந்தன. இராசபுதனம், சிந்து, பஞ்சாபின் பெரும்பகுதி, நேபாளம் ஆகியவை இவருடைய பேரரசில் அடங்கவில்லை. அர்சரின் முப்பாட்டனார் சைவர்; பிரபாகர வர்த்தனரும் அவருடைய தந்தையரான ஆதித்ய வர்த்தனரும் சூரியனை வழிபட்டவர்கள். இராச்சிய வர்த்தனரும், இராச்சிய சிரீயும் பௌத்தர்கள். தம் ஆட்சித் தொடக்கத்தில் அர்சர் சைவராகவே இருந்தார். பின்னர் இவர் புத்த சமயத்தைச் சார்ந்தார். தம்மாட்சியின் பிற்பகுதியில் அர்சர் உறுதியாகப் பௌத்த சமயப் பற்றுக் கொண்டவரானார் என்பதில் ஐயமில்லை. யுவான் சுவாங்கும் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார். பௌத்த சமயம் சார்ந்த அர்சர், அதில் ஈனயானத்தைப் பின்பற்றினார் என்றும், யுவான் சுவாங்குடன் தொடர்பு கொண்ட பின்னர் அவர் மகாயான பௌத்தர் ஆனார் என்றும் அறிஞர் கூறுகின்றனர். புத்த சமயத்தைப் பரப்ப, அர்சர் பல வழிகளை மேற்கொண்டார். கௌதம புத்தரின் நினைவுச் சின்னமாகக் காச்மீர மன்னரிடமிருந்து பெற்ற பல் ஒன்றைக் காக்கக் கோவில் கட்டினார். புலால் உண்ணும் பழக்கத்தைக் விட்டொழித்தார். கங்கையாற்றின் கரையில் ஆயிரக்கணக்கான தூபிகளைக் (Stupas) கட்டுவித்தார். பயணிகள் தங்கிச் செல்லும் சத்திரங்களைப் பேரரசின் பல பகுதிகளில் கட்டினார். பௌத்தர்கள் புனிதமாகக் கருதிய இடங்களில் பௌத்த மடாலயங்கள் கட்டப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கொருமுறை மாநாடுகளைக் கூட்டுவித்துத் தாம் தொகுத்த பொருள்களைச் சமயக் கொடையாக நல்கினார். ஆண்டுக்கொருமுறை பௌத்த சமயத் துறவியர் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி, 21 நாள்களுக்கு அவர்களுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும். கொடுத்துதவினார். மடாலயங்களையும், வழிபாட்டிடங்களையும் அழகு படுத்தினார். பௌத்த சமயத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களை ஒன்றுகூட்டி, ஆய்வு நடத்தி, அவரவர் தகுதிக்கும் திறமைக்குமேற்பப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். தவறிழைத்தோர் தண்டிக்கப் பெற்றனர். ஒழுக்கத்தில் வீழ்ச்சியுற்றவர்கள் நாடு கடத்தப் பெற்றனர். அரண்மனையில் நாள்தோறும் 1,000 புத்தத் துறவிகளும், 500 அந்தணர்களும் அறுசுவை உணவுண்டனர். பேரரசர் அர்சர் நாள்தோறும் மூன்றிலொரு பங்கு நேரத்தை அரசாங்கப் பணிக்கும், ஏனைய நேரத்தைச் சமயப் பணிக்கும் செலவிட்டார். அர்சர் யுவான் சுவாங்கை வங்காளத்தில் சந்தித்தார். அப்போது அவர் கஞ்சம் படையெடுப்பிலிருந்து திரும்பி வந்தார். யுவான் சுவாங்கைப் போற்றிப் பாராட்டச் சமயப் பேரவை ஒன்றைக் கூட்ட அர்சர் முடிவு செய்தார். அதனைக் கன்னோசி மாநாடென்பர். அதில் கலந்து கொள்ள இருபது மன்னர்களும், நாலந்தாப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆயிரம் அறிஞர் பெருமக்களும், ஈனயான மகாயான பௌத்தர்கள் மூவாயிரவரும், வந்திருந்தனர். கண்ணைக் கவரும் பெரும் ஊர்வலம் நடத்தப் பெற்றுப் புத்தரின் சிலை ஒன்று நாட்டப்பெற்றது. யுவான் சுவாங் மகாயான புத்த சமயக் கொள்கைகளை எடுத்துரைத்தார். அதனை அழகியதோர் ஆய்வுக் கட்டுரையாகவும் கொள்ளலாம். அவரை எதிர்த்துப் பேசுவார் ஒருவருமின்றி, அவர் கூறிய கருத்துகள் அவையோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஐந்து நாள்களுக்குப் பின்னர் யுவான் சுவாங்கைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. அர்சர் யுவான்சுவாங்கிற்கு விலை மதிப்பற்ற பல பொருள்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார். ஆனால் அவர் அவற்றை ஏற்க மறுத்துவிட்டார். மாநாட்டின் நிறைவு நாளன்று யுவான் சுவாங் யானை மீதமர்த்தப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அர்சர் மகாயான புத்த சமயத்தை அரியணையேற்றினார் எனில் அது மிகையாகாது. அர்சரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பு நிகழ்ச்சி பிரயாகையில் (அலகாபாத்) நடைபெற்ற ஆறாம் ஐந்தாண்டு மாநாடாகும். கங்கையும், யமுனையும், சரசுவதியும் கலக்கும் முக்கூடல் சந்திப்பில் நடைபெற்ற இவ்விழாவைக் கும்பமேளாவினோடு ஒப்பிடலாம். புத்தர், சூரியன், சிவன் போன்ற தெய்வங்கள் போற்றப்பட்டன. ஐந்து இலட்சம் மக்கள் நன்கொடைகள் பெற்றனர். மேற்கூறிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கு கொண்டு விட்டு யுவான் சுவாங் நாடு திரும்பினார். நூற்றுக் கணக்கான பௌத்த சமய நூல்களையும், எண்ணற்ற புத்தரின் திருவுருவச் சிலைகளையும், சமய நினைவுச் சின்னங்களையும் உடன் கொண்டு சென்றார். அர்சரின் நிருவாகம் பெரும்பாலும் குப்தர் கால நிருவாகத்தை ஒத்திருந்தது. யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்து அவற்றை விரிவாக அறியலாம். அர்சர் ஓரிடத்தில் தொடர்ந்து தங்காமல் வெவ்வேறு இடங்களில் தங்கினார். நாடு முழுதும் சுற்றி வந்து நாட்டைப் பார்வையிட்டார். போர்த்திறன் பெற்ற அர்சர், நிருவாகத்திலும் வல்லுநராக விளங்கினார். அரசு மக்களின் நல்வாழ்வுக்கான பல முன்னேற்றத் திட்டங்களைச் செயற்படுத்தியது என்பது யுவான் சுவாங்கின் கருத்து. அரசு மக்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது. குடும்பங்கள் பதிவு செய்யப்படவில்லை. கட்டாயக் கடன்களைத் தனிப்பட்டவர் கொடுக்கத் தேவையில்லை. அரசுக்குச் சொந்தமான நில வருமானத்தின் ஒருபகுதி அரசாங்கச் செலவினங்களுக்கும், வழிபாட்டிற்கும், மற்றொரு பகுதி பொதுப் பணியில் ஈடுபட்டுள்ள பெரியவர்களுக்கும், மூன்றாம் பகுதி உயர்ந்த அறிவாளர்களுக்கும், எஞ்சிய பகுதி சமயச்சார்பு கொண்ட குழுக்களுக்குமாகப் பயன்படுத்தப்பட்டன. வரிச்சுமை குறைவாக இருந்தது. மக்கள் மரபாக வந்த தத்தம் தொழில்களையே செய்து வாழ்ந்தனர்; ஆறில் ஒரு பங்கு கடமை செலுத்தினர். கொடுங்குற்றம் புரிந்தோர்க்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. உடலுறுப்புகளை வெட்டித் தண்டனை வழங்கும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. படை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பெற்றிருந்தது. அவை காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்பனவாம். பொதுவான ஆவணங்கள் கண்காணிக்கப்பட்டன. பொருளாதார நிலை வணிகக் குழுக்கள் செயற்பட்டன. நகரங்கள் திட்டமிடப்பெற்றுக் கட்டப்பெற்றன. பாடலிபுத்திரம் நலியத் தொடங்கியிருந்தது. தானேசுவரம், மதுரா, கன்னோசி அலகாபாத்து, அயோத்தி, வாரணாசி, தாம்லுக் போன்றவை பெரு நகரங்கள்; செல்வச் செழிப்பானவை. பொன், வெள்ளி நாணயங்கள் செலாவணியில் இருந்தன. உள்நாட்டு வாணிகம் செழித்தோங்கியது. இந்தியர்கள் தென் கிழக்கு ஆசியாவின் பல இடங்களுக்குங் குடியேறிக் குடியேற்றங்களை அமைத்து, இந்தியப் பண்பாட்டையும், வாணிகத்தையும் பரப்பினார்கள். சமூக நிலை நால்வகைச் சாதிமுறை நிலைத்திருந்ததைச் சீனப் பயணி குறிப்பிட்டுள்ளார். அவர் வைசியர்களை வணிகர்கள் என்றும், சூத்திரர்களை உழவர்கள் என்றும் சுட்டுகிறார். தீண்டாமை நீடித்திருந்தது. கசாப்புக் கடைக்காரர்கள், மீனவர்கள், பொதுமேடைகளில் ஆடிப்பாடுவோர், தூக்கிலிடுவோர், கழிவறைத் துப்புரவாளர்கள் போன்றோர் தீண்டத்தகாதவர்கள். அவர்கள் ஊருக்கு வெளியே வாழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதிகளிடையே பல வகைக் கலப்புகள் ஏற்பட்டன. கைம்பெண் மறுமணம் விலக்கப்பட்டது. அந்தணரும், சத்திரியரும் எளிமையாக வாழ்ந்தனர். அரசர்கள், பிரபுக்கள், செல்வர்கள் ஆடம்பரமாகக் காலம் கழித்தார்கள். மக்கள் நேர்மையாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வாழ்ந்தார்கள். அல்வழிச் செல்வோர் அருநரகடையும் அச்சம் குடிகொண்டிருந்தது. இறந்தவர் உடலைப் புதைத்தல், காட்டில் விடுதல் போன்றவை அவர்களின் ஈமச்சடங்குகள். அர்சரே தலைசிறந்த எழுத்தாளராவார். அவர் வடமொழியில் இரத்தினாவளி, பிரியதரிசிகா, நாகானந்தம் என்னும் மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். பாணர் அர்ச சரிதத்துடன், காதம்பரி என்னும் காதல் கதையையும் வடித்துள்ளார். சுபந்து என்பாரின் வாசவதத்தை என்னும் நூலை விட இது உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. பார்வதி பரிணயம், சண்டி சதகம் என்னும் நூல்களும் பாணர் எழுதியவையே என்பாருமுளர். அவருடைய உறவினர் மயூரர் என்பார் அட்டகம் ஒன்றை எழுதியுள்ளார். அது காம சாத்திரத்தை விட சிறப்பானதெனக் கருதப்படுகிறது. மாதங்க திவாகர் என்பார் பிறிதொரு அரண்மனைக் கவிஞர். புத்த, சமய நூல்களும் இக்காலத்தில் எழுதப்பெற்றன. அர்சர் வாழ்ந்த காலத்தில் மகாயான புத்த சமயத்தைப் போதிக்க நாலந்தாப் பல்கலைக் கழகமும், ஈனயான புத்தசமயத்தைக் கற்பிக்க வல்லபி பல்கலைக் கழகமும் சிறப்பாகப் பணியாற்றின. அர்சர் சிறந்த மன்னராகப் பணியாற்றிக் கி.பி. 647–இல் காலமானார். துணை நூல்கள் Sathyanathiar, R., “History of India”, Vol. I Majumdar, R.C., and others, “An Advanced History of India”, Macmillan, 1973. Mukerji, R.K., “Ancient India”.