அரசியல் அதிகாரத்துவம்
araciyal atikārattuvam
அரசியல் அதிகாரத்துவம் என்பது அதிகாரம் முழுவதும் ஒரே ஆளும் நிறுவனத்திடமோ அல்லது ஒரே ஆளிடமோ குவிக்கப்பட்ட அரசாங்க முறையைக் குறிக்கும்.
அரசியல் அதிகாரத்துவம் என்பது அதிகாரம் முழுவதும் ஒரே ஆளும் நிறுவனத்திடமோ அல்லது ஒரே ஆளிடமோ குவிக்கப்பட்ட அரசாங்க முறையைக் குறிக்கும். இந்த அரசாங்க அமைப்பின் முக்கியக் கூறு, இதில் ஆளுபவர், ஒழுங்காக அமைக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்தாலும்,– அது நீதிமன்றம், சட்டமன்றம், சமய நிறுவனம், பொருளாதார நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதனால் உண்டாகும் எந்தத் தடைக்கும் உள்ளாகாமல் இயங்குவதே ஆகும். இந்த அரசியல் அதிகாரத்துவ (Political Authoritarianism) ஆட்சி முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கி.பி. 1643 முதல் 1715 வரை ஆண்ட பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயியின் ஆட்சியைக் கூறுவர். இவன் ஒரு முறை “அரசு என்பது என்ன? நானே அரசு” என இறுமாப்புடன் கூறிய தொடர், அதிகாரத்துவ ஆட்சி முறையைக் குறிப்பிடுகிறது. இவனுடைய அதிகாரங்களுக்கு அந்நாட்டில் எவ்விதத் தடையும் இல்லை. பாசிச, நாசிச, கம்யூனிச, எதேச்சாதிகார அமைப்புகள் அரசியல் அதிகாரத்துவத்திற்கு இக்கால எடுத்துக்காட்டுகள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் இத்தொடர், மேற்கத்திய குடியாட்சி அரசாங்க முறைக்கு நேர்மாறான இயல்புடைய அரசாங்க அமைப்பைக் குறிக்கிறது. மேற்கத்திய குடியாட்சி முறையில் அரசாங்கமானது, சுதந்திரமான தேர்தல்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. வரலாற்றின் தொடக்கத்தில் இந்த இயல்புடைய அரசாங்கம், முடியாட்சியில் அதாவது அரசனுடைய எதேச்சாதிகார ஆட்சியில் காணப்பட்டது. இடைக்காலத்தில் திருச்சபை, நிலமானியப் பிரபுக்கள், சில வழக்கங்கள் ஆகியவற்றை அரசர் கட்டுப்படுத்தினார். கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் அரச எதேச்சாதிகாரம் தோன்றி, கி.பி. 1718–இல் நன்கு வளர்ந்திருந்தது.
கோட்பாட்டளவில் அரசர்களுடைய அதிகாரம் கடவுளிடமிருந்து பெறப்படுகிறது என்ற கருத்தும், மனிதருடைய தீவினைகளுக்காகக் கடவுள் கொடுங்கோலரசனுடைய ஆட்சியை ஒரு தண்டனையாக நிறுவுதல் கூடுமென்ற கருத்தும், அதிகாரத்துவத்துக்கு அடிப்படையாக அமைந்தன. புதிய தேசிய அரசர்கள் அரசின் தலைமையையும், திருச்சபையின் தலைமையையும் ஒருங்கே பெற்றனர். ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் இன்றியமையாது வேண்டப்படுவது, யாவரும் ஒரு ஆட்சியாளருக்கு முழுவதும் கீழ்ப்படிதலே. இதற்கு மாறுபட்ட நிலை குழப்பம்தான். இக்குழப்பமும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாலும் அல்லது பிரிப்பதாலும் தோன்றுகிறது. உயிரும், உடைமையும் திறமாகப் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் முழுமையான, வரம்பற்ற அதிகாரம் (அல்லது அதிகாரத்துவம்) இருந்தல் வேண்டும். இந்தப் பொருளிலேதான் ஆப்சு (Hobbes) என்பவர் சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டிற்கு விளக்கம் எழுதும்போது, தன்னலத்துக்காகத்தான் மக்கள் அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிகிறார்களென்று குறிப்பிட்டார். பொதுநல விருப்பம் என்பது (General Will) முழு அதிகாரமுடையது என்று உரூசோ (Rousseau) குறிப்பிட்டார். அது மக்களுடைய பெயரால், முழுமையான அல்லது வரம்பில்லாத அதிகாரத்தோடு ஆளுகிற ஒரு தலைமைத் தன்மையையே நடைமுறையில் குறிப்பிடுகிறது.
இந்த நூற்றாண்டில் அதிகாரத்துவத்தின் வடிவங்களாகக் கருதப்படும் பாசிச, நாசிச, பொதுவுடைமை அமைப்புகள் அரச நிலைகளில் உள்ளவை அல்ல; ஆயினும் அவையெல்லாம் அரசுக்கு உரிமையாக்கப்படுகிற முழு அதிகாரத்தின் வடிவங்களே; அல்லது அவை அரசைக் கட்டுப்படுத்தும் சமூக, பொருளாதார இயக்கத்- துக்குக் கொடுக்கப்படுகிற முழு அதிகாரத்தின் வடிவங்களே. அதிகாரக் குவிப்பு என்பதில் இந்த நூற்றாண்டின் அமைப்புகள், பண்டைய அரச எதேச்சதிகார வடிவங்களை ஒத்திருந்தாலும், அவை ஒரு வகையில் புதுமையாகவும் இருக்கின்றன; அதாவது அவை வரம்பில்லா அரசில் அதிகாரத்தைச் சமூகம் முழுவதும் பரவச் செய்வதாகவும், தனி ஆட்களின் வாழ்வில் தாக்கத்தை (impact) உண்டுபண்ணுவதாகவும் இருக்கின்றன. எனவே எதேச்சாதிகாரிகளுக்கு மக்களாதரவைத் தேடிக்கொள்ளும் முயற்சியும் இக்கால அதிகாரத்துவத்தில் காணப்படுகிறது.
எவ்வடிவிலிருந்தாலும், குடியாட்சி அரசாங்கமுறைக்கும் எதேச்சாதிகார அரசாங்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு, அரசாங்க முடிபுகளுக்கு இருக்கும் மக்களுடைய ஆதரவின் அளவிலேயே (Degree) காணப்படுகிறது. எதேச்சாதிகாரிகள் வரம்பற்ற அதிகாரங்களைக் கையாளுகிறார்கள்; குடியாட்சி அமைப்புக்களோ அரசியலமைப்புகளுக்குட்பட்ட செயல்முறைகளைக் கொண்டு (Constitutional practices) செயற்படுகின்றன. எதேச்சாதிகாரத்தில் காணப்பட முடியாத ஒன்று, அரசியலதிகாரத்தைக் கையாளுதலில் கட்டுப்பாடு அல்லது தடை என்பது இல்லாமையே ஆகும். ஆட்சியாளர் செயல்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசியலமைப்பு நிறுவனம் எதுவும் அதில் கிடையாது. மாற்று ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய சுதந்திரமுடைய வாக்காளர் எவராலும், சருவாதிகார நாட்டில் ஆட்சியாளர் தடைப்படுத்தப்பட மாட்டார். அதுமட்டுமன்று, ஆட்சியாளருடைய சொந்த விருப்பத்தைத் தவிர, வேறு மேலான எந்த ஒரு சட்டமோ அல்லது வழக்கமோ அவரைக் கட்டுப்படுத்தாது. அவ்வரசாங்க முறையில் சட்டம் என்பது ஆளுவோருடைய விருப்பம் ஒன்றிலிருந்துதான் தோன்றுகிறதாகையால், நீதி அல்லது முறைமை என்பதும் இவ்வாறு ஆளுபவருடைய விருப்பத்தினின்றும் தோன்றிய சட்டத்தைத் தவிர வேறு அன்று. எதேச்சாதிகார ஆட்சியாளர் முழு உண்மையை அறிந்தவராதலின், அவர் அத்தகைய ஆட்சி செலுத்தத் தகுதியுடையவர் என்றும் ஒரு காரணம் காட்டப்படுகிறது. சரியானது, நீதியானது என்பது என்ன என்று முழுமையாக அறிந்தவருக்கு அதிகாரப்பங்கீடு, அதிகாரக் கட்டுப்பாடு முதலிய விதிகளெல்லாம் தேவை இல்லை.
அரசின் எதேச்சாதிகாரம் என்னும் கருத்து, எகல் என்ற செருமானியச் சிந்தனையாளரால் வகுக்கப்பட்டது. அரசின் அதிகாரக் குவிப்பால் பல நன்மைகள் செய்யப்பட்டிருந்தாலும், அதனால் பெரும் அழிவைத் தரும் போர்களும் வலியோர் மெலியோரை அடிமைப்படுத்துதலும் நிகழ்ந்துள்ளன என்பதனை வரலாறு காட்டுகிறது. அதிகாரத்துவம் அடிமைத்தனத்தை வளர்க்கும்; குடியாட்சிப் பண்பு மக்களுக்கு இயல்பான சுதந்திர உணர்வையும், தள் விருப்பத்தின் பேரில் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் இயல்பையும் வளர்க்கும். அரசுக்கு வல்லந்தம் மட்டும் ஆதாரம் ஆகாது, மக்களுடைய விருப்பமும் ஆதாரம் ஆகும்.பா.சூ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 674)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8g2tgsu5/
தமிழ்“அரசியல் அதிகாரத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8g2tgsu5/APA
Oliyon Research. (2026). அரசியல் அதிகாரத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8g2tgsu5/MLA
"அரசியல் அதிகாரத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8g2tgsu5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment