தமிழில் சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை விளக்கும் சிவஞான போதம் முதலிய சாத்திரங்களின் நுட்பங்களைத் தெளிவுற விளக்கும் வகையில் தோன்றியது ‘பண்டார சாத்திரம்’ என்னும் தமிழ் நூல் தொகுப்பாகும். அது பதினான்கு நூல்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்று ‘உபாயநிட்டை வெண்பா’ என்னும் நூலாகும். இந்நூல் திருவாவடுதுறை ஆதினத்தின் மூன்றாம் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகரவர்களால் இயற்றப்பட்டது. அவர் இத்தொகுப்பில் மேலும் ஒன்பது நூல்களைச் செய்துள்ளார். அவரது காலம் கி.பி. 15–ஆம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது. இந்நூல் 46–நேரிசை வெண்பாக்களால் அமைந்துள்ளது. இவற்றின் வேறாய் நூற்பயன், சிறப்பு ஆகியவற்றைக் கூறுவனவாக நூலின் தொடக்கத்தில் ஒரு வெண்பாவும் இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளன. ஞானம் எய்துவிக்கும் வாயில்கள் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்று நான்காகும் எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. அவற்றுள் நிட்டை முடிந்த நிலை என்றும், அந்நிலையினை அடைந்தவர்கள் வீடுபேறடைவர் என்றும் சைவ சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதனைச் சிவஞான சித்தியார், ‘கேட்டலுடன் சிந்தித்தல், தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்; வீட்டை அடைந்திடுவர் நிட்டை மேவி- னோர்கள்’ என்று (சி. சி. சுபக்கம் 276) கூறுகிறது. நிட்டை நிலை அடைந்தவர்கள் அந்நிலையினின்றும் மீளாது அசைவின்றி நிற்றல் வேண்டும். சிலருக்கு அவ்வாறு அசைவின்றி நிற்க இயலாமல், நிட்டை கூடலும் நீங்கலுமான ஓர் அசைவுநிலை உண்டாகலாம். அந்த அசைவுநிலை அகன்று, நிட்டை நிலையில் நிலைத்திருப்பதற்குக் கூறப்படும் வழி ‘உபாய நிட்டை’ எனப்படும். அத்தகைய உபாயநிட்டையினை வெண்பாக்களால் விளக்கிக் கூறுவது இந்த ‘உபாய நிட்டை வெண்பா’ என்னும் நூலாகும். ஆன்மாவைப் பற்றி நிற்கும் மலப்பிணிப்பு, மாயையின் தொடக்கு, கன்ம வலி முதலியவற்றை அகற்றிக் கொன்றை வேணியனாகிய சிவபெருமானின் திருவடியினையும், ஆன்மாவினையும் விளங்கக் காட்ட வல்லது உபாயநிட்டை என்று இந்நூற் பொருள் பற்றிப் பழைய செய்யுள் ஒன்று குறிப்பிட்டுளைது. ‘......... பொன்னிகர் இதழியந் தொடைப் புனிதன், பொலங்கழல் தன்னையும் தனையும் புகலுறக் காட்டல் உபாயநிட்டையதாம்’ என்பது அச்செய்யுட் பகுதியாகும். இந்நூல், பற்றற்றுத் தன்னையும் தலைவனையும் காணும் உபாயமுறையினைக் காட்டுவதாகும். வாழும் உடம்பு சிவன் அன்று என்று கூறுபவர்களைப் பாவி என்றும், அவர்கட்கு இந்நூலைக் கூறவேண்டாம் என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், உயிர் செயலற்று ஒடுங்கும்போது அது ஈசன் செயல் என்று கூறுவோர்க்கு இந்நூலை உரைத்தல் வேண்டுமென்று இறுதி வெண்பாவில் (46) குறிப்பிட்டுள்ளார்.