ஃபேசிகிள் (fascicle) அல்லது ஃபேசிகுலஸ் (fasciculus) என்னும் லத்தீன் சொல்லுக்குச் சிறிய கற்றை என்று பொருள். பொதுவாக, இது நரம்பிழைகளுக்கே பொருந்தும். மூளையின் நான்காம் அறையின் (4th ventricle) அடித்தளத்தில் கேள் நரம்பிழைகளின் தொகுதி காணப்படுகிறது. ஏட்ரிய—மூளையறைத் தொகுப்பும் ஒரு சிறிய கற்றையாகும். பெருமூளைத் தண்டு வட நரம்பிழைத் தொகுதியே பிரமிடு பாதை (pyramidal tract) எனப்படும். இந்நரம்பிழைகள் பெருமூளைப் புறணியின் முன் புறமாக அமைந்துள்ள மைய மேட்டில் பிரமிடாகத் தொடங்கி, முகுளம் வழியாகச் சென்று தண்டு வடத்தில் முடியும். பெருமூளைப் புறணியையும், தலாமசையும் (thalamus) இணைக்கும் சிறிய நரம்பிழைக் கற்றை பெருமூளைத் தலாமஸ் சிறிய கற்றை எனப்படும். இவற்றில் முன் மடலிலிருந்து வரும், கீழிறங்கும், மேலேறும் கிளைகள், சாம்பல் பகுதியின் பின்புறக் கொம்புக்கும், தண்டு வடத்தின் பரப்பிற்கும் இடையில் காணப்படுகின்றன. முன்புறத் தண்டு வடச் சிறு மூளைப் பாதையும், நரம்பிழைகள் கொண்ட கற்றை ஆகும். தண்டு வடத்தின் பின்புறப் பகுதிகளின் உள் பகுதியில், மேலேறும் இழைகள் காணப்படுகின்றன. இவை முகுளம் வழியாகச் சென்று, தண்டு வட நரம்புத் திரள்களை அடைகின்றன. —மு.கி. பழனியப்பன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு முடிவுற்றது. இங்கு புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->