இந்திய இசையில் பெரும்பாலும் வழங்கிவரும் இசை முறை இன்னிசை எனப்படும். இதனை மேனாட்டு இசை வல்லுநர்கள் இன்னிசை (Melody) என்று குறிப்பிடுகின்றனர். இன்னிசையில் ஒற்றைச்சுரங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக இசைக்கப்படுகின்றன. இந்தச் சுரங்கள் இராகங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இந்துசுத்தானி இசையிலும் இன்னிசை முறையே பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இசை வல்லுநர்கள் பாடும் பொழுதோ இசைக்கருவிகளை இசைக்கும் பொழுதோ நாம் உற்றுக் கவனித்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதேனும் ஒரு சுரத்தைத் தான் கேட்க முடியும். ஒரு சில நேரங்களில் மட்டும் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவியாளர் மேல் ஒலி எல்லையிலும் (உச்சத்தாயி) கீழ் ஒலி எல்லையிலும் (கீழ்த்தாயி) சில சுரங்களை ஒரே நேரத்தில் இசைக்கின்றனர். இது இசைபாடுவோரின் குரல் வளத்திற்கு நயமும் வன்மையும் ஊட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. (காண்க: இசை)