இது தூள் உலோகவியலின் ஒரு முறையாகும். தூள் உலோகவியல், தூள் தயாரித்தல், தூள் கலத்தல், கெட்டிப்படுத்தல், சிட்டங்கட்டிப் போதல் (sintering) என நான்கு கட்டங்களாகச் செயல்படுகிறது. இரு வேறு பொருள்களின் கலப்பான கூட்டுப் பொருள்களை (composites) இம்முறை வாயிலாகவே தயாரிக்க முடியும். கார்பைடு கருவிகள் இழைக் கண்ணாடி, பீங்கான் உலோக வெப்பம் தடுக்கும் பொருள்கள், உலோகம் கிராபைட் உராய்வுப் பொருள்கள், பலபடி அல்லது உலோகத்தால் உள்ளூட்டம் (impregnation) செய்யப்பட்ட இழைகள் ஆகியன சிட்டங்கட்டிப் போதல் முறையில் தயாரிக்கப்படுகின்றன. உருவாக்கப்பட வேண்டிய பொருளுக்குத் தேவையான உலோகங்கள் தூளாக்கப்பட்டு, வேண்டிய விகிதத்தில் கலக்கப்பட்டு, அழுத்தத்தின் மூலம் தகுந்த அச்சுகளில் கெட்டிப்படுத்தப்பட்டு, உருவாக்கப்படுகின்றன. இந்த அச்சுக் கட்டிகளுக்குப் போதுமான உறுதியையும்,வலிமையையும் ஊட்டுதற்காகச் சிட்டங்கட்டிப் போதல் செயல்படுத்தப்படுகிறது. இம்முறையில் கெட்டிப்படுத்தப்பட்ட அச்சுக் கட்டிகள் கலக்கப்பட்ட உலோகங்களில் ஏதேனும் ஒன்றின் உருகு நிலையை விட, சற்றுக் குறைந்த வெப்ப நிலையில் குறிப்பிட்ட நேரம் உலைகளில் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் குறை உருகு நிலைப் பொருள் உருகி, முழுமையாகப் படர்ந்து ஏனைய பொருள்களையும் இறுகப் பற்றுவதால், அச்சுக் கட்டியின் உறுதித் தன்மை அதிகரிக்கிறது. பொதுவாக அனைத்து உலோகங்களும், தத்தம் உருகு நிலையின் 75% வெப்ப நிலையிலேயே சிட்டங் கட்டிப் போதலை முழுமையாக எட்டி விடுகின்றன. இதற்கான கால அளவு முப்பது நிமிடங்களில் இருந்து பல மணி நேரம் வளர ஆகலாம். சிட்டங்கட்டிப் போதல் சிறப்பாக நடைபெற, பின்வருவனவற்றின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். அவை சூடேற்றல், குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைத்திருத்தல், குளிர்வித்தல், சுழற்சிகள், சிட்டங்கட்டிப் போகும் சூழ்நிலை என்பன. உலோகங்களுக்கு ஏற்ப ஊட்டப்படும் வெப்பமும், எடுத்துக்கொள்ளப்படும் கால அளவும் வேறுபடுகின்றன. வெண்கலத்தாலான சில வகைத் தாங்கிகள் 800°C இல் ஒரு. சில நிமிடங்களிலேயே சிட்டங்கட்டிப் போகின்றன. ஆனால், இரும்பு கலந்த சில கலவைப் பொருள்கள் 1200°C இலும் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த பிறகுதான், சிட்டங்கட்டிப் போகின்றன. பொதுவாக, சிட்டங்கட்டிப் போவதற்கான வெப்ப நிலையை t எனவும், கால அளவை T எனவும் கொண்டால், இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை larger|\log(\frac{t_1}{t_2}) = \frac{Q_s}{R}(\frac{1}{T_1}-\frac{1}{T_2}) என்னும் சமன்பாட்டின் மூலம் அறியலாம். இதில், R என்பது வளிம மாறிலியையும் Q என்பது சிட்டங்கட்டிப் போகத் தூண்டும் ஆற்றலையும் குறிக்கின்றன. சிட்டங்கட்டிப் போதல் நிகழும் போது, தேவைக்கேற்ப ஏதேனும் ஓர் உலைச் சூழலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வெடித்த அம்மோனியா, வெப்பம் வெளியிடு வளிமம், வெப்பம் ஏற்கும் வளிமம், நைட்ரஜன்—ஹைட்ரஜன் கலவை போன்றவை பெரிதும் பயன்படும் சூழல்களாகும். இணைப்பு. சிட்டங்கட்டிப் போதலில், உலோகத் துகள்களுக்கு இடையேயான இணைப்பு பின் வரும் முறைகளில் ஏதாவது ஒரு நிலையில் நிகழக் கூடும். அவை: கலவையின் குறைந்த உருகு நிலை, உலோகம் உருகிப் பரவிப் பிற துகள்களைப் பற்றல், வெப்பத்தால் துகள்களுக்கிடையே உள்ள காற்றுக் குமிழ்கள் வெளியேறுவதால் துகள்கள் ஒன்றை ஒன்று நெருங்கிப் பற்றல், உருகிப் படரும் உலோகத்திற்குள் சிறைப்பட்ட உலோகம் இறுகப் பற்றல் என்பன. முன் சிட்டங்கட்டிப் போதல். சிட்டங்கட்டிப் போன பிறகு, பொருள் மிக வலிமை கொண்டுள்ளமையால், வெட்டுங் கருவிகளைக் கொண்டு எந்த மாற்றத்தையும் அதன் தோற்றத்தில் உருவாக்க முடியாது. எனவே, தூள் உலோகவியலில் உருவாக்கப்படும் பொருளில் வெட்டுங் கருவிகளால் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால், சிட்டங்கட்டிப் போவதற்கு முன்பே செய்து விட வேண்டும். சிட்டங்கட்டிப் போதலே இறுதிச் செயலாகும். எடுத்துக்காட்டாக, தூள் உலோகவியல் முறையில் உருவாகும் ஒரு பொருளில் துளையிட வேண்டுமானால், அச்சுகளில் கெட்டிப்படுத்தப்பட்ட பிறகு, சிட்டங்கட்டிப் போவதற்கு முன்பே துளையிட வேண்டும். ஆனால், அச்சுகளில் கெட்டிப்பட்ட பொருள், வெட்டுங் கருவியால் துளையிடுதலைத் தாங்குமளவு உறுதி வாய்ந்ததாக இருக்காது. இத்தகைய சூழ்நிலையில், அப்பொருளை மிகக் குறைந்த கால அளவுக்குச் சிட்டங்கட்டும் வெப்ப நிலையை விட மிகக் குறைந்த வெப்ப நிலையில் வைத்து எடுத்தல் ஓரளவு உறுதியை ஊட்டும். இம்முறையே முன் சிட்டங்கட்டிப் போதல் எனப்படுகிறது. சிட்டங்கட்டிப் போதலின் இயங்குமுறை ஒற்றை நிலைப் பொருள்களுக்கும் (single phase materials) பல் நிலைப் பொருள்களுக்கும் (multiphase materials) வெவ்வேறு ஆகும். நிறை எண்ணிக்கையிலான நுண்துகள்களின் மொத்தக் கட்டில்லா ஆற்றல், அதே மொத்த எடையுள்ள பெரிய துகள்களின் மொத்தக் கட்டில்லா ஆற்றலையும் விடக் கூடுதலானது. எனவே, துகள் திண்மமாகும் போது, கட்டில்லா ஆற்றலில் இழப்பு ஏற்படுகிறது. தாமிரம், துத்தநாகம், காரீயம் ஆகிய உலோகப் பிரிவுகளில் டிவைட்—லாயிட் சிட்டங்கட்டும் பொறி பயன்படுகிறது. —வயி. அண்ணாமலை —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Jere H. Brophy, et al., The Structure and Properties of Materials. Thermodynamics of Structure, Wiley Eastern Ltd., New Delhi, 1966.