உமையது கலிபாக்கள்
umaiyatu kalipākkaḷ
இசுலாமிய வரலாற்றின் இரண்டாம் ஆளும் வமிசமான உமையாக்களின் ஆட்சியை கி.பி.
இசுலாமிய வரலாற்றின் இரண்டாம் ஆளும் வமிசமான உமையாக்களின் ஆட்சியை கி.பி. 661–இல் முவா விய்யா (Mu’awiyyah) என்பார் தொடங்கி வைத்தார். இவ்வமிசத்தினர் குலபா–யி–இராசிதின் என்று அழைக்கப்பட்ட நான்கு கலிபாக்களின் ஆட்சிக்குப் பின்னரும், அப்பாசிகள் என்றழைக்கப்பட்ட கலிபாக்களின் ஆட்சிக்கு முன்னரும் இசுலாமிய உலகை ஆட்சி புரிந்துவந்தனர். உமையா என்ற தங்கள் மூதாதை ஒருவரின் பெயரையே தங்கள் வமிசத்திற்கு வைத்துக் கொண்ட இவர்களது ஆட்சி கி.பி. 661–இல் முவாவிய்யாவுடன் தொடங்கி இரண்டாம் மர்வான் (Marwan II) என்பவருடைய ஆட்சியுடன் முடிவடைந்தது. உமையாக்களின் ஒரு கிளையினர் மர்வான்கள் எனப்படுவர். உமையா ஆட்சியின் இறுதியில் அவர்களுள் ஒருவர் அப்பாசிகள் நடத்திவந்த படுகொலைகளுக்கு ஆளாகாது தப்பி, இசுபெயினுக்கு ஓடிச்சென்று படிப்படியாக முன்னேற்றமுற்று, உமையாக்களின் ஆட்சியை அங்கே நிறுவிக்கொண்டார்.
இவ்வமிசம் தனக்கென சில சிறப்பியல்புகளைப் பெற்றுத் தனக்குமுன்பு ஆட்சிபுரிந்த ஆட்சியினரிடமிருந்து வேறுபட்டிருந்தது. பின்னவர்களின் காலத்தில் கலிபா மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை கையாளப்பட்டு வருகையில், உமையா வமிசத்தை உருவாக்கிய முவாவிய்யா அம்முறையைக் கைவிட்டு, வாரிசுரிமை முறையைக் கடைப்பிடித்தார். தவிரவும், வைதிகக் கலிபாக்களின் காலத்தில் பைத்–அல்–மால் அல்லது பொதுக் கருவூலம் பொதுமக்களின் சொத்தாக விளங்கி வருகையில், முவாவிய்யாவின் காலந்தொட்டு அது ஆட்சியாளர்களின் சொந்தச் சொத்தாகிவிட்டது. மேலும், வைதிகக் கலிபாக்களின் காலத்தில் கலிபாவுக்கு உதவியாகச் சான்றோர் அவை ஒன்று பணியாற்றி வந்தது. தவிரவும், நபி பெருமானாரின் போதனைகளின் விளைவாகக் குடியாட்சியின் பொழுது இனப் பொறாமை உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கையில் உமையாக்களின் காலத்தில் இனவெறி மீண்டும் தலைதூக்கியது. வைதிகக் கலிபாக்கள் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு ஏழை எளியோரால் அணுகக் கூடியவர்களாக நடந்து கொண்டிருக்கையில், உமையாக் கலிபாக்கள் அந்த எளிய வாழ்கையைக் கைவிட்டுப் பகட்டான ஆட்சி நடத்தி வந்தனர்.
இவ்வமிசத்தைச் சேர்ந்த பதினான்கு அரசர்களுள் ஒருசிலர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். முதல் கலிபா முவாவிய்யா இசுலாமிய நாட்டைக் கட்டுப்பாடற்ற அதிகாரங்களுடன் பெரும் மாட்சிமையுடனும் ஆடம்பரத்துடனும் ஆண்டுவந்தார். நாட்டுக்குள் தோன்றியிருந்த பல கட்சிகளை ஒடுக்கி உள்நாட்டுச் சிக்கல்கள் பலவற்றையும் தவிர்த்ததற்குப் பிறகு ஆப்பிரிக்காவை அடிபணிய வைத்தார். பைசாண்டியத்தின் (Byzantium) மீது படையெடுத்து அதன் தலைநகரான கான்சுடாண்டி நோபிலைக் கைப்பற்றப் பெரும் முயற்சி எடுத்தார். எனினும் வெற்றி பெற முடியவில்லை. கிழக்கில் எராட்டு (Herat), காபூல் (Kabul), கசுனா, பால்க்கு (Balkh), கந்தார், புகாரா (Bukhara), சமர்கண்டு (Samarkand), திர்மிது ஆகியவை இசுலாமியப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்பட்டன. மாபெரும் கப்பற்படை ஒன்றினை உருவாக்கிய பெருமை அவருக்குரியதாகும். அதனைக் கொண்டு அவர் சைப்பிரசு, உரோட்சு மற்றும் ஏனைய கிரேக்கத் தீவுகளை வென்றார்.
அவருக்குப் பின்னர்ப் பதவி வகித்த அவருடைய மகன் முதலாம் யசித்தின் (Yazid I) காலத்தில், நான்காம் கலிபாவான அலியின் மகன் இமாம்உசைனுடன் கர்பலா (Carbela) என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் பின்னவர் தோற்கடிக்கப்பட்டு உயிர் நீத்தார். புனிதத் தியாகிகளின் மாபெரும் தலைவர் என இமாம்உசைனுக்குப் புகழ்பெற்றுத் தந்த அந்தக் கர்பலாப் போர் இசுலாமிய வரலாற்றில் சிறப்புப் பெற்ற போராயிற்று. முசுலிம் சமுதாயத்தைச் சுன்வர்கள், சியாக்கள் என ஏற்கனவே பிரித்திருந்த பிளவினை அந்தப் போர் மேலும் வலிபுறுத்தியது.
அடுத்த முக்கிய கலிபா அப்துல் மாலிக்கு (Abdul–Malik) என்பவர் இன்னல்கள் பலவற்றை எதிர்நோக்க நேரிட்டது. ஆனால் அவர் அஞ்சா நெஞ்சத்துடன் அவற்றை ஏற்றுப் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வந்த போர்களில் வெற்றிபெற்று, ஒரே செங்கோலின் கீழ் முசுலிம் பேரரசைக் கொண்டுவந்தார்; ஈராக்கு, இசாசு (Hijaj) ஆகியவற்றின் மீது படையெடுத்தார்; உரோமானியர்களுடன் போர் புரிந்தார். ஆப்பிரிக்காவில் இசுலாமியர்களில் ஆட்சி மேலும் முன்னேறியது. அவருடைய ஆட்சிக் காலத்திலும் அவருக்கு அடுத்து ஆட்சி புரிந்த அவருடைய ஆண்மக்கள் நால்வரின் ஆட்சிக் காலத்திலும் உமையாக்களின் ஆட்சி தலைநிமிர்ந்து விளங்கியது. அல்வலீத்து, இசாம் (Hisham) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இசுலாமியப் பேரரசு மேலும் விரிவுற்று இருந்தது. அதன் எல்லைகள் அட்லாண்டிக்குப் பெருங்கடல், பிரன்னீசு மலைகள் ஆகியவற்றிலிருந்து, சிந்து ஆறு மற்றும் சீன எல்லைகள் வரையிலும் பரவியிருந்தன. அது போன்ற பரப்பளவினைப் பழங்காலத்தில் மற்றெந்தப் பேரரசும் கொண்டிருக்கவில்லை. இக்காலத்திலும் பிரிட்டிசு மற்றும் உருசியப் பேரரசுகள் மட்டுமே அதற்கு நிகராக இருந்தன. உமையாக்களின் புகழ் ஓங்கி நின்ற அக்காலத்தில் அவர்களுடைய பேரரசு மாபெரும் சாதனைகளைப் புரிந்தது. திரான்சோக்கியானா அடிபணிய வைக்கப்பட்டது; ஆப்பிரிக்கா மீண்டும் வெல்லப்பட்டது; அங்கு அமைதியும் நிலை நாட்டப்பட்டது. அராபியர்கள் தங்கள் வசத்தில் வைத்திருந்த மிகப்பெரிய ஐரோப்பிய நாடான இசுபெயின் அவர்களுடைய பேரரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதே காலத்தில் நிருவாகம் அராபிய குணவியல்புகளைப் பெற்றது. தொன்மையான அராபிய நாணயம் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது. செருசலத்தில் பாறைக் கவிகைமாடம் (The Domb of the Rock) என்ற மாபெரும் நினைவுச்சின்னம் ஒன்றும் நிறுவப்பட்டது. அப்துல் மாலிக்கு நாணயங்களை இசுலாமிய மயமாக்கியதும் நிருவாகத்தை அராபிய மயமாக்கியதும் அவரது ஆட்சியின் சாலச் சிறந்த சாதனைகளாகும்.
அவருக்குப் பின்னர் ஆண்ட இரண்டாம் உமர் (Umar II) கலிபா கடவுள் பக்தி மிக்கவர் (தசுசாலெக்) என்றழைக்கப்பட்டார். இவருடைய வைதிகம் பொதுவாக உமையாக்களின் சமயப் போக்கிற்கு மாறானதாக இருந்தது. செயற்கைத் தன்மையற்ற இவரது தெய்வ பக்தி, நீதி வழங்குவதில் இவர் கொண்டிருந்த நாட்டம், குடிமக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று இவர் கொண்டிருந்த ஆர்வம் ஆகிய அனைத்தும் அக்காலத்திய உமையாக்களின் உலகியல் வாழ்க்கைக்கும் போக்கிற்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தன. ஆகவேதான் இவர் உமையா மகான் என்று கருதப்பட்டார். இவருடைய வைதிகக் கொள்கை, பொது மக்கள் பால் இவர் புகுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவையெல்லாம் உமையா வமிசத்தைத் தீவிரமாகப் பாதித்து, அதன் இறுதி வீழ்ச்சிக்குக் காரணமாயின் என்று பேராசிரியர் இட்டி (Hitti) போன்ற வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.
அடுத்துக் குறிப்பிடத்தக்க கலிபா இசாம் (Hisham) என்பவர் பதவி ஏற்ற காலத்தில் பேரரசு இனச் சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தது. எங்கும் குழப்பமும் தொல்லைகளும் மல்கிக் கிடந்தன. ஒரு புறத்தில் உள்நாட்டுத் தொல்லைகளும் மற்றொரு புறத்தில் வெளிநாட்டுச் சிக்கல்களும் பேரரசின் நிலையை மிகத் தீவிரமாகப் பாதித்து இருந்தன. அத்தருணத்தில் அந்நிலையை எதிர் கொள்ள மிகவும் தகுதி வாய்ந்த ஒருவர் ஆட்சியாளராக வந்திருக்க வேண்டும். ஆனால் இசாமோ பகட்டான வாழ்வை விரும்பாதவராகவும், கஞ்சத்தன்மை படைத்தவராகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவராகவும், எவரையும் ஐயுற்று நோக்குபவராகவும் இருந்தார். தலை தூக்கிக் கொண்டிருந்த சதிகளை ஒடுக்கவும் சதி சூழ்ச்சிகளை முறியடிக்கவும் தம் பணியில் இருந்த தகுதியற்றவர்களையே இவர் நம்பி இருந்தார்.
இருபது ஆண்டுக் காலம்வரை நீடித்த இவரது ஆட்சிக் காலத்தில் முசுலிம் படைகள் ஆசக்சு ஆற்றுக்கு அப்பால் இருந்த பகுதியில் பல தோல்விகளை அடைய நேரிட்டது. குரேசானில் (Khorasan) மூவாதிகளுக்கும் இம்யார்களுக்குமிடையே ஏற்பட்ட கடும் மோதல் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு ஒடுக்கப்பட்டது. வட பாரசீகத்தில் அர்மீனியாவும் ஆசர்பைசானும் இசாமின் சகோதரர் மசுமாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. இப்பகுதியின் மீது படையெடுத்த துருக்கியர்கள் தோல்விக்கு இலக்காகி விரட்டியடிக்கப்பட்டனர்.
முசுலிம் படைகள் ஆப்பிரிக்காவிலும் இசுபெயினிலும் பெருந்தோல்வியை அனுபவிக்க நேரிட்டன. ஆப்பிரிக்காவின் கடலோரங்களில் வசித்து வந்த பெர்பர்கள் (Berbers) கி.பி. 734–இல் கிளர்ந்தெழுந்தனர். அவர்கட்கும் முசுலிம் படைகளுக்குமிடையே மூண்ட கடும்போரில் ‘சிலை உருவங்களின் போர்க்களம்’ என வரலாற்றில் புகழ் பெற்றுள்ள அப்போரின் இறுதியில் முசுலிம்கள் வெற்றி கண்டனர். மற்றுமோரிடத்தில் நிகழ்ந்த மோதலில் எண்ணற்ற அராபியத் தலைவர்கள் உயிரிழந்ததனால் ‘பிரபுக்கள் போர்’ என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவைச் சார்ந்த நாடாக இருந்த இசுபெயின் அங்கு நடைபெற்ற கிளர்ச்சியின் விளைவாகப் பெரும் சிக்கலில் மூழ்கிக் கிடந்தது. அதன் படையின் தலைவராகப் பதவி ஏற்றிருந்த அப்துர் இரகுமான் (Abhdur Rahman) என்ற மாபெரும் வீரர் பிரன்னீசு மலைத் தொடரைக் கடந்து பிரான்சுக்குள் நுழைந்து, தூர்சுக்கும் (Tours) பாய்டியர்சுக்கு (Poitiers) மிடையே இருந்த ஓரிடத்தில் சார்லசு மார்ட்டல் (Charles Martel) என்னும் பிரெஞ்சு மன்னருடன் கடும் போரில் ஈடுபட்டு, மிகத்தீவிரமாகப் போரிட்டு இறுதியில் மடிந்தார். இந்தப் போர் ஐரோப்பிய வரலாற்றில் மிகச் சிறப்பான போராகும் என இக்கால வரலாற்றறிஞர்கள் கருதுவர். இப்போரில் சார்லசு தோல்வியுற்றிருப்பாராயின் ஐரோப்பா முழுவதும் முசுலிம்கள் வசமாகி இருக்கும். ஐரோப்பியப் பண்பாடுகளுக்குப் பதிலாக இசுலாமியப் பண்பாடுகள் எங்கும் பரவியிருக்கும். ஆக்சுபோர்டு போன்ற மாபெரும் கல்விநிலையங்களில் கிறித்தவத் தத்துவமல்லாது இசுலாமியத் தத்துவம் போதிக்கப்பட்டு வந்திருக்கும் என்றெல்லாம் கிப்பன் (Gibbon) போன்ற வரலாற்றறிஞர்கள் கூறுவர்.
இறுதியாக ஆட்சி புரிந்த கலிபா இரண்டாம் மர்வான் (Marwan II, கி.பி. 744–750) என்பார் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியவரானார். பதவிக்கு வந்து அவர் முதன் முதலாக எடுத்த நடவடிக்கை தலைநகரைத் திமசுக்கிலிருந்து அர்ரானுக்கு (Harran) மாற்றியதாகும். ஆங்காங்கே தலை தூக்கிய கிளர்ச்சிகளையும் கலகங்களையும் அவர் கடுமையாக ஒடுக்கினார்.
இந்த இக்கட்டான நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அப்பாசிகள் குரேசானில் கிளர்ந்தெழுந்தனர். அவர்களுக்கு ஆதரவு அளித்த அபுமுசுலிம் என்பவர் தம் உரைகளின் மூலமாகவும் கூர்மதியினாலும் மக்கள் உணர்ச்சிகளை உமையாக்களுக்கெதிராக எழச் செய்தார். குரேசானின் ஆளுநரான நசர் என்பவர் எவ்விதமான ஆதரவையும் பெற முடியவில்லையாதலால் கதாபா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். கதாபாவும் அவர் மகன் அசனும் ஈராக்கு ஆளுநரைத் தோற்கடித்துக் கூபா நகரைக் கைப்பற்றிக் கொண்டனர். இத்தோல்வியைப் பற்றிக் கேள்வியுற்ற மர்வான், குரேசானில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு, இறுதியில் அர்ரானில் சிறையடைக்கப்பட்டிருந்த இப்ராகீமைக் கொன்று விட்டார். ஆனால் கொல்லப்படுவதற்கு முன்னர் இப்ராகிம், சகோதரர் அபுல் அப்பாசு அப்துல்லாவைத் தமது வாரிசாக நியமித்திருந்தார். அப்பாசிகளின் சார்பாகப் பழிவாங்க உறுதி கொண்டிருந்த அபுல் அப்பாசு தம் சகோதரரின் சாவிற்குப் பிறகு கூபா நகருக்கு ஓட்டம் பிடித்துக் கூபாவைக் கதாபா கைப்பற்றும் வரை அங்கேயே மறைந்து வசித்து வந்தார். கூபா பிடிபட்டவுடன் அபுமுசுலிமும் மற்றும் பல தலைவர்களும் கூபா மசூதியில் கூடி, அபுல் அப்பாசை அல்–சப்பா என்ற பட்டப் பெயருடன் கலிபாவாகவும் இமாமாகவும் தேர்ந்தெடுத்தனர். இவ்விதமாக உமையாக்களின் ஆட்சி மறைந்து அப்பாசிகளின் ஆட்சி உருவாயிற்று.
இவையெல்லாம் கேள்வியுற்ற மர்வான் ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு எதிரிப் படையை சாபு (Zab) என்ற இடத்தில் சந்தித்தார். அங்கு நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க போரில் அவர் தோல்வியுற்றார். அப்போர் உமையாக்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிட்டது. அப்பாசிகளின் ஆட்சிக்கு வழி வகுத்தது.
உமையாக்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்
உமையாக்களின் தகுதியின்மையும் குணச்சீர்கேடும் அவர்களுடைய அமைச்சர்களின் சுயநல மனப்பான்மையும் படை வீரர்களின் துரோகச் செயல்களும் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாயின. மூவாதிகளுக்கும் இம்யார்களுக்குமிடையே நடைபெற்று வந்த சச்சரவுகள் பேரரசின் வலிமையை மேலும் குலைத்தன. திட்டவட்டமான வாரிசுரிமைச் சட்டமின்மையும் பல தொல்லைகளை உருவாக்கிற்று. அரசாங்கம் அராபியர்களை நடத்தியதைப் போல் அராபியரல்லாதாரை நடத்தத் தவறியது மற்றொரு குறையாகும். அராபியர்களுக்காகப் பல தியாகங்களைப் புரிந்து, பல்வேறு போர்களில் போரிட்டு அப்பேரரசைக் காப்பாற்றிய அந்த அராபியரல்லாதாரை அரசு அராபியர்களுக்குச் சரிசமமாக நடத்தத் தவறியதனால் எங்கும் மனக்குறை நிலவியது. எந்நிலையிலும் உமையாக்களைத் தொலைத்துவிட வேண்டும் என மனஉறுதி பூண்டிருந்த சியாக்கள் தங்கள் பலத்தைப் படிப்படியாக மிகுதியாக்கிக் கொண்டு தக்க வாய்ப்பிற்காகக் காத்திருந்தனர். அவ்வாய்ப்புக் கிட்டியதும் அவர்கள் விரைவாகச் செயற்பட்டு உமையாக்களைத் தொலைத்துவிட்டுத் தங்கள் ஆட்சியை நிறுவிக் கொண்டனர்.
உமையாக்களின் ஆட்சியில் அரசு, சமூகம் கல்வி, பண்பாடு ஆகியவற்றின் நிலை
திமசுக்கைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட உமையாக்களின் பேரரசில் சிரியா, பாலசுத்தீனம், அல்–ராக்கு, பாரசீகம், அர்மீனியா, அல்–இசாசு, கர்மான், எகிப்து, இப்ரிகோ, அல்-எமன் ஆகிய ஏழு நிருவாகப் பிரிவுகள் அடங்கியிருந்தன. வாரிசுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசர் பதவி ஏற்றார். நிருவாகம், வரித்தண்டம் செய்தல், சமயத்தலைமை ஆகிய மூன்று அரசப் பொறுப்புகளும் மூன்று தனிப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நீதித்துறை முசுலிம்களுக்கு நீதியை வழங்கிவந்தது. போர்களை நடத்தப் படை தேவைப்பட்டதனால் சிறந்த படை ஒன்றையும் அவர்கள் அமைத்திருந்தனர். சமுதாயம் என்பது ஆளும் முசுலிம் தலைவர்கள், கலிபாவின் குடும்பத்தினர், புதிதாக முசுலிம்களானவர்கள், சிம்மிகள் எனப் பொதுவாக அழைக்கப்பட்ட புறச்சமயத்தினரான கிறித்தவர்கள், யூதர்கள், சேமியர்கள், சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருந்த அடிமைகள் என்னும் பிரிவுகளைக் கொண்டிருந்தது.
உமையாக்களின் காலம் இசுலாமிய வரலாற்றில் பல்வேறு சமய தத்துவ இயக்கங்கள் தோன்றியதொரு காலமாகும். அவ்வியக்கங்கள் பின்னாளில் இசுலாமின் வேர்களையே ஆட்டி வைப்பதாக இருந்தன. முதசிலா என்னும் பகுத்தறிவுக் கோட்பாடு ஒன்று தோன்றியது. கதரிகள் இயக்கம், தன்விருப்பக் கோட்பாடு, காரிசிகள் இயக்கம் என்ற இயக்கங்களும் தோன்றின. உமையாக்களின் காலத்தில் சியா சமயப் பிரிவு மேலும் வலிமைபெற்றது.
உமையாக்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. சொற்பொழிவு ஆற்றல் காணப்பட்டது. கலையில் எக்காலமும் கண்டிராத ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கடிதங்கள் துறையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. அதுபோன்றே கவிதை இயற்றும் கலையும் உச்ச நிலையை அடைந்திருந்தது. இசுலாமிய சமயம் அக்கலைக்குச் சாதகமாக இருக்காவிடினும், உலகியலில் முசுலிம்கள் மிகுதியாக ஈடுபடத் தொடங்கியதும் பாட்டு, கவிதை ஆகியவை தம் பழைய நிலைக்கு வந்துவிட்டன. காதலைப் பற்றிப் பாடும் கவிஞர்கள் பலர் தோன்றலாயினர். கசிதாக்கள் எனக் குறிக்கப்பட்ட நீண்ட பாடல்கள், கசல்கள் (Gazals) ஆகியவை இயற்றப்பட்டன. இலைலா–மசுனூன் என்னும் நீண்ட பாடல் உணர்ச்சிப் பாடலுக்கும் அழியாக் காதலுக்கும் ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. அரசியல் கவிதை எழுதும் பாணியும் தோன்றிற்று. சிறப்புப் பெற்ற பாடல் பள்ளிகளும் விளங்கலாயின.
ஒழுங்காக அமைக்கப்பட்ட கல்வித்திட்டம் என்று ஏதும் இருக்கவில்லையாயினும், ஆற்றல், துன்ப வேளையில் பொறுமை, அயலார்களின் உரிமை காத்தல், ஆண்மை, இரக்கக் குணம், விருந்தோம்பலியல்பு, பெண்கள்பால் மதிப்பு வைத்திருத்தல், வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் ஆகிய பண்புகளை வளர்த்தல் கல்வியின் முக்கிய நோக்கங்கள் எனக் கருதப்பட்டன. ஆசான்களுக்குப் பெருமதிப்பு அளிக்கப்பட்டு வந்தது. கிரேக்கர்களின் அறிவியலுக்கு உமையாக்கள் புத்துயிர் அளித்தனர். மருத்துவக் கலைக்குப் பெரும் ஆதரவு அளிக்கப்பட்டது. உண்மையில் அக்கலை உமையாக்களின் காலத்தில் மிக உச்ச நிலையை அடைந்திருந்தது. காலித்–பின்–யசீத் என்பவர் இராமாயணத்திலும் மருத்துவக் கலையிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். இரண்டாம் உமரும் அறிவுக்கும் அறிவாளிகளுக்கும் அதிக ஆதரவு தந்தார். அலியின் பேரன் தன் புதல்வரான சாபர் என்பவர் அக்காலத்திய அறிவுத் துறையில் பெரும் புலமை பெற்று விளங்கினார்.
கட்டடக் கலையிலும் உமையாக்கள் அதிக நாட்டங்கொண்டிருந்தனர். மினாராக்களைக் (தூபிகள்) கட்டும் முறையை அவர்கள் தொடங்கிவைத்தனர். கட்டடப் பாணியில் பல புதியவற்றை அவர்கள் புகுத்தினர். பாறைக் கவிகை மாடம் அக்காலக் கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாயிற்று. திமசுக்கின் மசூதி அக்காலக் கட்டடக் கலையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாயிற்று.
ஈராக்கின் இரட்டை நகரங்களான கூபாவும் பசுராவும் (Basra) அறிவாற்றலின் மாபெரும் மையங்- களாக விளங்கின. பேரரசின் பல்வேறு பகுதிகளினின்றும் மாணவர்களும் அறிஞர்களும் அந்நகரங்களில் திரண்டனர். அராபிய மொழியின் பண்பாடு இந்நகரங்களில்தான் உருவாயிற்று என்று கூறுவர். அராபிய மொழியின் இலக்கணம், அகராதி ஆகியவையெல்லாம் இந்நகரங்களில் தங்கள் புகழின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தன. உமையாக்களின் காலத்தில் பசுராலில் நிலைபெற்றிருந்த பள்ளியில் அசன்–அல்–பசுத்நி, முகம்மது இப்சி சீரின் ஆகியோர் மாபெரும் அறிஞர்களாக விளங்கினர். அவ்விரு அறிஞர்களும் அக்காலத்தில் பசுராவின் தலையாய அறிவுச் சுடர்களாக விளங்கினர்.
பசுராவாசிகளைப் போன்றே கூபா நகரவாசிகளும் அராபியப் பண்பாட்டினை வளர்த்துப் பெருக்குவதில் புகழ்பெற்றவர்களாக விளங்கினர். அந்நகரின் பண்பாட்டின் வரலாற்றில் அப்துல்லா–பின்–மசூது என்பவர் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றார். திருக்குர் ஆனை ஆழ்ந்து கற்றறிந்த அவர் திருக்குர் ஆனுக்குச் சரியான விளக்கங்களை அளிப்பதில் மாபெரும் வல்லுநராகக் கருதப்பட்டார். பின்னாளில் திருக்குர் ஆனைக் கற்றுப் புகழ் பெற்று விளங்கியவர்களுள் பலர் அப்துல்லா மசீதின் சீடர்களாவர். அவர்கள் சட்ட நிபுணர்களுமாவர்.
இசுபெயினில் உமையாக்களின் ஆட்சி
உமையாக்கள் ஆட்சி கி.பி. 750–இல் பதவி ஏற்றபொழுது உமையா வமிசத்தினர், பலரைச் சிறிதளவும் ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தனர். அப்துர் இரகுமான் என்ற ஒருவர் மட்டுமே அப்படுகொலையினின்றும் தப்பினார். இவர் திமசுக்கில் பத்தாம் கலிபாவாக இருந்த இசாம் என்பவரின் பேரன் ஆவர். இருபது வயதினை எட்டியிருந்த இவர் மயிரிழையில் உயிர் தப்பி, ஐந்து ஆண்டுக் காலமாக மாறு வேடந்தரித்துப் பாலசுத்தீனம், எகிப்து, வட ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலெல்லாம் அலைந்துத் திரிந்து இறுதியில் இசுபெயினுக்கு வந்து சேர்ந்தார். ஆங்காங்கே ஆதரவை இவர் நாடிப் பெற்றுப் படிப்படியாக முன்னேறிக் கார்டோவா நகரை அடைந்தார். இசுபெயினிலிருந்த செவில்லின் (Seville) எமனித் தலைவரான அபு–அல்–சப்பா அல்–யக் சூபி என்பவர் பச்சைத் தலைப்பாகை ஒன்றை எடுத்து, ஈட்டியில் மாட்டிக் கொடியாகப் பறக்கவிட்டார். இங்ஙனம் தோன்றியவையே இசுபெயினில் உமையாக்களின் கொடியும் ஆட்சியாகும்.
கிளர்ச்சிகள் பலவற்றில் மூழ்கிக் கிடந்த இசுபெயினை அப்துர்–ரகுமான் முயன்று அவற்றிலிருந்து விடுவித்து, அவரை முறியடிக்கப் பிரன்னீசு மலைத் தொடரைக் கடந்து இசுபெயினுக்குள் நுழைந்த பிராங்கிய அரசன் சார்லமேனைச் சர்கோசாவில் முறியடித்துத் தம் நிலையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார்; முப்பத்து மூன்று ஆண்டுக்காலம் ஆட்சி புரிந்து கி.பி. 685–இல் உயிர் நீத்தார். அவருக்குப் பின்னர், முதலாம் இசாம், அக்கம் ஆகியவர்கள் ஆட்சி புரிந்தனர். அக்கமுக்குப் பின்னர்ப் பதவிக்கு வந்த இரண்டாம் அப்துர் ரகுமானின் ஆட்சி சீரும் சிறப்புமுற்று விளங்கிற்று.
இசுபெயினில் ஆட்சி புரிந்த கலிபாக்களுள் தலைசிறந்தவர் மூன்றாம் அப்துர் ரகுமான் (Abdur Rahman III, கி.பி. 912–961) என்பவராவார். இருபத்து மூன்று வயதிலேயே அரசப் பதவி ஏற்ற அவர் மாபெரும் தலைவர்களுக்குரிய உயர் பண்புகள் பலவற்றையும் பெற்றிருந்தார். ஆற்றல், மனஉறுதி, கபடமின்றி வெளிப்படையாகப் பேசுந்திறன் ஆகியவற்றையெல்லாம் பெற்றிருந்த அவர் தலைசிறந்த ஆட்சியாளராகச் செயற்படத் தொடங்கினார்; உள்நாட்டுச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்தார்; அயல்நாட்டுப் பகைவர்களை அடக்கினார். ஆக, அவர் இசுபெயினில் அமைதியை மீண்டும் நிலைநாட்டி, அமீர்–வுல்–மோமினீன் என்ற பட்டப் பெயரையும் புனைந்து கொண்டார். செருமனி, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் அரசர்களும் பைசாண்டியாவின் பேரரசரும் தங்கள் தூதர்கள் மூலமாக அவருடைய அரசவையுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வரசவையை உள்ளடக்கிக் கொண்டிருந்த கார்டோவா நகரம் சீரும் சிறப்பும் பெற்றதொரு தலைநகரமாக விளங்கிற்று. அப்துர் ரகுமானைப் போன்று கடுமையற்றவரும் அறிவு படைத்தவருமான மற்றெந்த ஓர் அரசரும் இசுபானிய நாட்டு அரியணையில் ஒருபொழுதும் அமர்ந்திருக்கவில்லை. அவருடைய மென்மையான தன்மை, கருணை குணம், நீதி வழங்குவதில் அவருக்கு இருந்த ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஆகியவற்றையெல்லாம் அவர் தம் நண்பர்களும் எதிரிகளுமாகிய அனைவருமே புகழ்ந்தனர். தாம் உருவாக்கிய கப்பற்படையைக் கொண்டு, அவர் மத்திய தரைக்கடற் பகுதியைத் தமது ஆட்சிக்குட்படுத்துவதற்காகப் பாத்திமாவமிசத்தினருடன் கடுமையாகப் போரிட்டார். எனவே அவரை இந்தியாவின் மொகலாயப் பேரரசர் அக்பர், அராபியாவின் முதலாம் உமர், பாக்தாதின் ஆரூன்–அல்–ரசீது ஆகியவர்களோடு ஒப்பிடலாம். உண்மையில் அவர் வரலாற்றில் உலகத்துச் சிறந்த அரசர்களுள் ஒருவராக விளங்குகின்றார். அவர் அமைத்த நகரங்களும் அவற்றில் அவர் கட்டிய மாட மாளிகைகளும் அமைத்த நூலகங்களும் அவருடைய பெருமைக்கும் புகழுக்கும் சான்று பகர்கின்றன.
கார்டோவா நகரின் சிறப்பு
இசுபானிய நாட்டை ஆண்ட உமையாக்களின் தலைநகரான கார்டோவா உலகத்திலேயே மிகச் சிறந்த நகரங்களுள் ஒன்றாகும். அக்காலத்தில் மாபெரும் நகரங்களாக விளங்கிய பாக்தாது, கான்சுடாண்டிநோபில் ஆகியவற்றுக்கு நிகராகவே கார்டோவாவும் விளங்கியது. ஐந்து இலட்சம் குடிமக்களையும், 3000 பொதுக்குளியல் அறைகளையும் கொண்டிருந்த அந்த மாபெரும் கார்டோவா நகரம், ‘இது பாக்தாது நகரமா’ என வியப்புற்றுக் கேட்கும் அளவுக்கு அமைந்திருந்தது. அதன் புகழ் தொலைவிலிருந்த நாடான செருமனிக்கும் எட்டியிருந்தது. இரோசுவிதா என்னும் பெண் துறவி அதனை ‘உலகத்தின் அணிகலன்’ என்று புகழ்ந்துள்ளார். ‘அது அண்டலூசியாவின் மணப்பெண்’ என்று அதனை அராபிய ஆசிரியர் ஒருவர் புகழ்கின்றார்.
மாபெரும் கலிபாக்களின் ஆட்சியில் கார்டோவா தலைநகரம் அனைவராலும் போற்றப்படும் நகராக இருந்தது. அதன் எழில், அதன் கட்டடங்களின் அழகு, அதன் குடிமக்களுடைய பகட்டும் மென்மையும் வாய்ந்த வாழ்க்கை, அவர்களுடைய அறிவுத்துறை சார்ந்த சாதனைகள் ஆகியவற்றோடு ஐரோப்பிய நகரம் எதுவுமே போட்டியிட முடியாது. அதனை நிருவகித்து வந்த அராபிய ஆளுநர் அங்கே பல அழகிய கட்டடங்களைக் கட்டி அவற்றிற்கு அழகூட்டியிருந்தார். இருப்பினும் அதனை ஒழுங்குற அழகுபடுத்திய பெருமை முதற்கண் முதலாம் அப்துர் ரகுமானுக்குரியதாகும். சுற்றுப்புறத்தில் இருந்த குன்றுகளினின்றும் தலைநகருக்குக் குடிநீர் கொண்டு வருவதற்காக அவர் வாய்க்கால் ஒன்றை வெட்டினார். சிறப்பான கட்டடங்களைக் கொண்டிருந்த அந்நகரத்தில் உயர்குடி மக்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்காக 50,000 மனைகளும், பொதுமக்களுக்காக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகளும், எழுபதுக்கு மேற்பட்ட நூலகங்களும் கணக்கற்ற நூல் விற்பனை நிலையங்களும் காட்சியளித்தன. மூன்றாம் அப்துர்-ரகுமான் தம் அன்புக்குரிய மனைவியான அல்–சகீராவுக்காகக் கட்டிய அரண்மனை உலகத்து அதிசயங்களுள் ஒன்றாக விளங்கிற்று. புகழ்வாய்ந்த இந்த அரண்மனை உலகத்துப் பல்வேறு பகுதிகளிலிருத்தும் வரவழைக்கப்பட்ட தூய பளிங்குக் கற்களால் கட்டப்பட்டதாம். பயணிகள் அதன் அழகினைக் கண்டு பாராட்டினார்கள்.
கார்டோவாவின் அரண்மனைகளும் பூந்தோட்டங்களும் கவனத்தை ஈர்ப்பது போன்றே அதன் அறிவு வளர்ச்சியும் மக்கள் கவனத்தைக் கவர்கின்றது. அதில் புகழ் பெற்று விளங்கிய பேராசிரியர்களும் ஆசான்களும் அறிஞர்களும் அந்நகரை ஐரோப்பியப் பண்பாட்டின் மையமாக்கி விட்டனர். அங்கே கல்வி பெறுவதற்தாக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் திரண்டனர். அறிவியலின் அனைத்துக் கிளைகளும் மிகவும் கவனத்துடன் ஆராயப்பட்டன. குறிப்பாக, மருத்துவத் துறையில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. கார்டோவாவில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்த கலிபாக்கள் இலக்கியத்திற்கும் பெரும் ஆதரவு அளித்தனர். அந்நகரம் பண்பாட்டிற்கு மட்டுமே மையமாக அமையாமல் நலிந்தோர், பெண்கள் போன்றோரிடம் இரக்கங் காட்டும் பண்பிற்கும் மையமாகத் திகழ்ந்தது.
கலைத்துறையில் அண்டலூசியா தலையாய நிலையைப் பெற்றிருந்தது. ‘அழகுமிக்க நகர்’ என்று சொல்லப்பட்ட கார்டோவா மசூதியை அந்நகரின் கை வினைஞர்கள் உருவாக்கினர். பட்டு நெய்யும் கலை அண்டலூசியாவின் மிகச் சிறந்த தொழிலாகும். கார்டோவாவில் ஓர் இலட்சத்து முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் இருந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த மாபெரும் கார்டோவா நகருக்குப் போட்டியாக மற்றொரு நகரையும் அப்துர் ரகுமான் அமைத்தார். அந்நகரை அவர் குவாடல்குயிர் ஆற்றினை எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது போல் அமைந்திருந்த சீரா மோரினா என்னும் மலையின் மேல் அமைத்தார். நூறு அறைகளும், பல்லாயிரக்கணக்கான அடிமைகள், பாதுகாப்பாளர்கள் ஆகியோர் குடியிருப்பதற்காகத் தனித்தனி மனனகளும் அந்நகருக்குள் கட்டப்பட்டிருந்தன.
அப்துர் ரகுமானுக்கு அடுத்துப் பதவி ஏற்ற அவர்தம் மகன் இரண்டாம் அக்கீம் என்பவர் பேரரசில் அமைதியை நிலைநாட்டி, அறிவு வளர்ச்சிசெய்வதில் மிகத் தீவிரமாக முனைந்திருந்தார். அறிவு வளர்ச்சித் துறையில் அவருடைய சாதனை உண்மையில் நிகரற்றதாக இருந்தது. அவருடைய காலத்தில் கார்டோவாவில் இருந்த பேரரசர் நூலகத்தில் நான்கு இலட்சத்திற்கும் மேலாக நூல்கள் திரட்டப்பட்டிருந்தன. கார்டோவாப் பல்கலைக்கழகம் உலகத்திலேயே மிகவும் சிறந்த கல்வி நிலையமாகப் புகழ் பெற்று விளங்கிற்று. அவருடைய காலத்தை அராபியாவின் அகசுடசு காலம் என வரலாற்றறிஞர்கள் கருதுவர். அவருடைய இறப்புடன் அப்பேரரசின் புகழும் அழிவுற்றது. இருப்பினும் அப்புகழை அந்தப் பேரரசு மீண்டும் ஒருமுறை அசூப்–அல்–மன்சூர் என்பவரின் காலத்தில் ஓரளவிற்குப்பெற்றது. இறுதியில் சுலைமான் என்பவரின் நலிந்த ஆட்சியுடன் அப்புகழ் மறைந்தது. உ.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 943)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89trkyma/
தமிழ்“உமையது கலிபாக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/89trkyma/APA
Oliyon Research. (2026). உமையது கலிபாக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/89trkyma/MLA
"உமையது கலிபாக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/89trkyma/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment