நான்கு அல்லது ஐந்து லீப் ஆண்டுகளைக் கொண்ட 18 ஆண்டுகள் 11 நாள்கள் அல்லது 10 நாள்களுக்குச் சமமான நாள்கள் 6585 ஆகும். சூரியனைப் பொறுத்து, மேற்கிலிருந்து கிழக்காக ஒரு முறை நகருவதற்குச் சந்திரன் எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் (lunation) எனப்படும். ஒரு சந்திர மாதம் 29.53 நாள்களையுடையதாகும். 223 சந்திர மாதங்களின் நாள்கள் ஏறக்குறைய 6585 ஆகும். மேலும், சூரியன் ஒரு கோள் சந்தியிலிருந்து (node) புறப்பட்டு, மீண்டும் அதே கோள் சந்தியை அடையும் காலம் 346.62 நாள்களாகும். ஆகவே, கோள் சந்திகளின் 19 ஞாயிற்று வழிக் கால வட்டங்களின் (synodic period) நாள்களும் ஏறக்குறைய 6585 ஆகின்றது. இதிலிருந்து 19 ஞாயிற்று வழிக் கால வட்டங்களுக்கும் 223 சந்திர மாதங்களுக்கும் தோராயமாக 6585 நாள்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கால வட்டத்தில், கோள் சந்திகள் பின்னணியில் சூரியன், சந்திரன், புவி மூன்றும் மீண்டும், மீண்டும் அதே இடங்களில் வந்தமையும். 6585 நாள்களுக்கு முன்பு சூரியன், சந்திரன் ஒளி மறைப்பு எவ்வாறு எந்த அளவில் ஏற்பட்டதோ, அவ்வாறே அதே மறைப்பு அதே அளவில் 6585 நாள்களுக்குப் பின்பும் எத்தகைய மாற்றமுமிலாது நிகழும். இவ்வாறாக, ஒரு முறை 6585 நாள்களில் ஏற்படும் மறைப்புகளைக் கணக்கிட்டுத் தெரிந்து கொண்டால், அடுத்தடுத்த கால வட்டங்களில் நிகழக் கூடிய மறைப்புகளைக் குறிப்பிடலாம். இதைச் சால்டிய நாட்டு வானியல் அறிஞர்கள் முதன்முதலாகக் கண்டு பிடித்து, அக்கால வட்டத்திற்கு, சாரோஸ் (saros) எனப் பெயரிட்டனர். சாரோஸை மறைப்புக் கால வட்டம் எனவும் கூறுவர். சால்டிய நாட்டினர் கண்டுபிடித்ததால் கால வட்டத்தை, சால்டியனின் சாரோஸ் (saros of the chaldeans) என்றும் குறிப்பிடுவர். 19 ஞாயிற்று வழிக் கால வட்டத்தில், மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் போது, 6585.78 நாள்களும், 223 சந்திர மாதங்களில் 6585.32 நாள்களும் உள்ளமையால், மறைப்புகளின் கணிப்பு நேரத்தில் மட்டும் சிறு மாறுதலிருக்கலாம். பொதுவாக, ஒரு சாரோஸ் கால வட்டத்தில் 71 சூரியன் மறைப்புகளும், ஏறக்குறைய 45 சந்திர மறைப்புகளும் நிகழும். —பங்கஜம் கணேசன்